Monday, October 22, 2012

மலஜலமானி!


இனிமேல் கிணறு தோண்டினால் வரி  செலுத்த வேண்டும் என்று ஒரு செய்தி
சில தினங்களுக்கு முன்னர்  வெளியாகியிருந்தது.

செய்தியின்படி கிணற்று வரி 7500.00  முதல் 15,000.00 ரூபாய்கள் வரை  நீளும்.

இது அமுலுக்கு வந்து விட்டால் வருடாந்த  வரவு செலவுத்திட்டத்தின் போது ஆயிரம்,  இரண்டாயிரம் என்று கால ஓட்டத்தில்  அதிகரித்துச் செல்லும் சாத்தியம் உண்டு.

செய்தி வெளிவந்து இரண்டு தினங்களின்  பின்னர், அதிகாரிகள் மேற்கொண்ட இந்தத் தீர்மானத்தை அமைச்சு எதிர்க்கிறது என்று  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு  அமைச்சர் தினேஷ் குணவர்தன  தெரிவித்துள்ளார்.

அமைச்சரை விட அதிகாரிகள் அதிகாரம்  பெற்றிருக்கிறார்கள், தன்னிச்சையாகத்  தீர்மானம் எடுக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளுக்கு  ஏசி ஏசிப் பழக்கப்பட்டுப்போன நமது
ஜனங்கள் இதற்கும்  அரசியல்வாதிகளைத்தான் நொந்து  கொள்வார்கள். அதில் ஐம்பது வீதம்தான்  நியாயம் உள்ளது. மீதி ஐம்பது வீதமும்  அதிகாரிகள் மீது உள்ளது. ஆனால் அதிகாரிகள் பற்றி மக்கள் அலட்டிக்  கொள்வதில்லை. காரணம் அவர்கள்  வாக்குக் கேட்டு மக்கள் காலடிக்கு  வருவதில்லை.

நாடு சீரழிந்து போவதற்கும் அரசியல்வாதிகளே முழுக் காரணம் என்பதுதான் ஸ்ரீமான் பொது ஜனத்தின்  தீர்மானம். கண்ணுக்குப் புலப்படாமல் கதிரையில் அமர்ந்திருந்து காய் நகர்த்தும் அரச அதிகாரிகள் பற்றி அவர்கள் கண்டு
கொள்வதில்லை.

அரசியல்வாதி கொஞ்சக் காலம்  அதிகாரத்தில் இருக்கிறார், அப்புறம்  அட்ரஸ் இல்லாமலே போய் விடுகிறார். ஆனால் அதிகாரி, அரசாங்கப் பணத்தில் அதாவது மக்களின் வரிப்பணத்தில் வாழ்த்து கொண்டு அதே மக்களுக்கே ஆப்பு  வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மேற்படி கிணற்று வரி பற்றிய செய்தி  நமக்கு உணர்த்துகிறது.

ஏறக்குறைய 20க்கும் 30க்கும் இடைப்பட்ட  காலம் அரச அதிகாரத்தில் ஓர் அதிகாரி செயல்படுகிறார். எந்த அரசியல்வாதி அமைச்சுக் கதிரைக்கு வந்தாலும் இவர்களே விதிமுறைகளை எடுத்துச் சொல்லி அவர்களை வழி நடாத்திச் செல்பவர்கள். எனவே ஒரு நாடு வில்லங்கத்தில் இருக்கிறது என்றால் அதில் 50 வீத பங்கு அரச அதிகாரிகளே பொறுப்பு. அவர்களில் திட்டமிடல் குறைபாடு, ஆளுமையற்ற தன்மை, பிழையான கருதுகோள்கள்
என்பவற்றால்தான் ஒரு நாடு நாசமாய்ப் போகிறது என்பதுதான் உண்மை.

போய்த் தொலையட்டும்!

எனது முப்பாட்டன் வழியாக, பாட்டன் வழியாக, தந்தை வழியாக வந்த சொந்த
நிலத்தில் எனக்கும் எனது மனைவி, மக்களுக்கும் குடிக்கவும், குளிக்கவும் நீர்
பெறுவதற்குக் கிணறு வெட்டுவதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு எதற்கையா வரி செலுத்த வேண்டும்?

நீர் காணி தந்தீரா? சேவையர் போட்டு  அளந்தீரா? மண் வெட்டி கொண்டு குழி
வெட்டித் தந்தீரா? மண் சுமந்தீரா? சீமெந்தும் கல்லும் கொண்டு கிணற்றுச்
சுவர் எழுப்பினீரா? துலாக்கால் போட்டு நீர் இறைத்துத் தருவீரா? என்று மனோகரா படப் பாணியில் ஆவேசமாகக் கேட்க வேண்டும்  போல் உங்களுக்குத் தோன்றவில்லையா?

Friday, October 19, 2012

ஓரம்போ... ருக்குமணி வண்டி வருது...!நேற்றுப் பிற்பகல்  வத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி நானும் எனது நண்பர் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.

வத்தளை - கொழும்பு வீதிதான் விமான நிலைய வீதியும் என்பதாலும் பல கிளை வீதிகள் இணையும் பெருந்தெரு என்பதாலும் எப்போதுமே வாகன நெரிசல் இருக்கும் என்பது அத்தெருவால் பயணித்த எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.

மோட்டார் சைக்கிளை நான் ஓட்டிச் சென்றேன். நண்பர் பின்னால் அமர்ந்திருந்தார்.

வத்தளைச் சந்தியைத் தாண்டிய நெரிசலுக்குள் எமக்குப்  பின்னால் சைரன் சத்தம் கேட்டது. அது எந்தப் பக்கத்தால் கேட்கிறது என்பது முதலில் புரியவில்லை.

பின்னால் அமர்ந்திருந்த நண்பரோ, “அம்புலன்ஸ் ஒன்று பின்னால் வருகிறது... நீங்கள் வழி விடுங்கள்...” என்றார்.

அது ஒரு அம்பியுலன்ஸ் வண்டியின் சைரன் ஒலியாக எனக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்த போதும் ஒதுங்கி வழி விடுவது எல்லா வகையிலும் நல்லது என்று நினைத்து ஓரங்கட்டினேன்.

அச்த வாகன நெரிசலுக்குள் மெதுவாக வாகனங்கள் நகர்ந்த போதும் குறிப்பிட்ட அந்த வாகனம் கிட்டே வந்த போது அது ஒரு முக்கிஸ்தருக்கான பாதுகாப்பு வாகனம் என்பது தெரிந்தது.

கிட்டத்தட்ட பலாத்காரமாக வாகனங்களை ஓரங்கட்டச் சொல்லி அந்த சைரன் வாகனத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வழியெடுத்து நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வாகனத்துக்குப் பின்னால் மற்றொரு வாகனம். அதற்குள்தான் முக்கியஸ்தர் அமர்ந்திருக்க வேண்டும். அவரது வாகனத்தக்குப் பின்னால் இன்னொரு பாதுகாப்பு வாகனம். ஆக மூன்று வாகனங்கள்!

ஒருவாறு பிய்த்துப் பிடுங்கி அவை மூன்றும் தாண்டிச் சென்ற விதம் இங்கிதமானதாகவோ ஏற்றுக் கொள்ளும் விதமாகவோ இல்லை.

முக்கியஸ்தர் ஓர் அமைச்சராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் அவசரமாகச் சென்று பாணின் விலையையோ ஒரு லிற்றர் டீசல், பெற்றோலின் விலையையோ ஒரு ரூபாவாலாவது குறைக்கப் போகிறார் என்றால் பரவாயில்லை. எல்லோரும் வாகனத்தை பாதையோரம் நிறுத்தி விட்டு சல்யூட் அடிக்கலாம்.

Thursday, October 18, 2012

கண்ணீர்க் கோடுகள்
லண்டன் செல்ஸீ பிரதேசத்தின் ஐவ்ஸ் தெருவில் அமைந்திருந்தது குவைத்தின் ‘அல் கப்பாஸ்’ பத்திரிகையின் பிராந்தியக் காரியாலயம். 

1987ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி அக்காரியாலயத்திலிருந்து வெளியே வரவிருந்த ஒருவருக்காகத் துப்பாக்கியை மறைத்துப் பிடித்தபடி தெருவில் காத்திருந்தான் ஓர் இளைஞன். 50 வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் தெருவைத் தொட்ட சில நொடிகளில் அவரது முகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. கீழே சாய்ந்த அந்த மனிதர் உலகப் புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர் நஜி அல் அலி.

அவரது கூடார்ந்த சித்திரங்களைப் பார்க்கும் ஆவலில் எப்போது பொழுது புலரும் என்று மத்திய கிழக்குக் காத்துக் கிடந்ததுண்டு. எழுத்தறிவற்ற அறபிகளின் அரசியல் ஆசிரியனாக, அடக்கு முறைக்குச் சிரம் பணியாத இளைஞர்களின் வழிகாட்டியாக, சமரசஞ் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக, அடக்குமுறையாளர்களின் கண்களில் விழுந்த ஒரு கந்தலாக, துரத்தப்பட்ட மக்களின் ஆன்மாவாகவெல்லாம் அவர் தோற்றங் கொண்டிருந்தார். 


இழந்த மண்ணுக்கான போராட்டத்தை, அதனை அழித்தொழிப்பதற்கான வஞ்சகச் சூழ்ச்சியை, அதன் மீது நடத்தப்பட்ட அரசியலை மிகச் சாதாரண மகனும் புரிந்து கொள்ளும் விதத்தில் கூடார்ந்த சித்திரத்தில் உலகத்தின் உணர்வுக்கும் வாழ் நிலத்தை இழந்தோரின் எதிர்பார்ப்புக்கும் முன்னால் பத்திரிகைகளில் பரிமாறினார். நஜி அல் அலி ‘பலஸ்தீனத்தின் மல்கம் எக்ஸ்’ என்று சொல்லும் எழுத்தாளர் ஆமினா இஷ்தாயி, பலஸ்தீனர்களின் எண்ணத் துடிப்பாக விளங்கிய அவரை ‘இன்றும் மத்திய கிழக்கு மக்களின் இதயத்தில் வாழும் பேறு பெற்றவர்’ என்று சொல்கிறார்.

Saturday, October 13, 2012

ஜமீலாவின் கதை


சிங்கிஸ் ஐத்மத்தோவின் “ஜமீலா” என்ற சிறு நாவல் பற்றிப் போற்றி எழுதப்பட்ட பல குறிப்புகளைப் படித்தேன். அந்த நாவலின் ஆங்கிலப் பிரதியை  இணைத்தில் தேடிப் பெற்றுக் கொண்டேன்.மேலோட்டமாகப் படித்த போது சற்றுக் கடின ஆங்கில நடையாக இருந்ததால் பின்னர் பார்ப்போம் என்று அப்படியே வைத்து விட்டேன்.

 தற்செயலாக எனது புத்தகக் கட்டுக்களை வேறு ஒரு தேவைக்காகக் கிண்டிய போது.. ஆச்சரியம்... “ஜமீலா” தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தது. 1983ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டிருந்தது. கையடக்க நாவலாக பூ. சோமசுந்தரம் என்பவரால் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

ஐத்மத்தோவ் கிர்கிஸ்தானிய எழுத்தாளர். குல்சாரி, முதல் ஆசிரியன் போன்றவை தமிழில் வந்த நாவல்கள். அவரது ஈர்ப்பு மிக்க எழுத்துக்களால் புகழடைந்தவர். 14க்கும் மேற்பட்ட படைப்புக்களைத் தந்தவர். 1928ம் ஆண்டு பிறந்த ஐத்மத்தோவ் தனது 79வது வயதில் ஜூன் 2008ல் காலமானார்.

“ஜமீலா” பற்றியும் ஐத்மாத்தவ்வின் எழுத்து அழகு பற்றியும் ஆங்கிலத்தில் கிடைக்கும் குறிப்புக்கள் தரும் ஆர்வத்தை ஜமீலா - தமிழ் மொழிபெயர்ப்புப் பொய்ப்பித்து விடுகிறது. இது ஐத்மாத்தவ்வின் தவறு அல்ல. ஒரு வினோதமான தமிழ் நடையில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதுதான் அதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

ஜமீலா இளம் மனைவி. அவளது கணவன் போர்முனைக்குச் சென்று காயப்பட்டு மாதக் கணக்கில் வைத்தியசாலையில் கிடக்கிறான். ஓர் ஓவியனும் குடும்பத்தில் இளையவனுமான அவளது கணவனின் தம்பி அவளை உள்ளார நேசிக்கிறான். இடையில் எங்கிருந்தோ வரும் ஒருவனுடன் அவள் சென்று விடுகிறாள்.

நாவல் மொழி பெயர்ப்பின் கடைசி இரண்டு வரிகள் என்னைக் கவர்ந்தன.

“எனது தூரிகையின் ஒவவோர் இழுப்பிலும் தானியாரின் இன்னிசை ஒலித்திடுக. எனது தூரிகையின் ஒவ்வோர் இழுப்பிலும் ஜமீலாவின் இதயத் துடிப்பு எதிரொலித்திடுக!”

Monday, October 8, 2012

நாடகப் பயிற்சிப் பட்டறை


சமூக வலுவூட்டலுக்காக வானொலியைப் பயன்படுத்துதல் என்ற தொனிப் பொருளின் கீழ் வானொலி நாடகங்கள் மூலமாக சமூக வலுவாக்கம் என்ற அடிப்படையில் வானொலி நாடகங்களை எழுதுவது சம்பந்தமான பயிற்சிப் பட்டறையின் முதலாவது அங்கம் கண்டி மொண்டிஃபானோ நிறுவனத்தில் கடந்த 5,6,7ம் திகதிகளில் நடைபெற்றது.

முஸ்லிம்களுக்கான செயலகத்தின் அனுசரணையுடனும் விடிவெள்ளி பத்திரிகையின் ஆதரவுடனும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இந்த வதிவிடப் பயிற்சிப் பட்டறையை நடத்தியது. நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த நாடகத்துறையில் ஆர்வம் மிக்க இருபத்தைந்து இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

அடையாளங் காணப்பட்ட சமூகப் பிரச்சினைகளை முன்வைத்து ஏறக்குறைய பதினைந்து நாடகங்கள் இந்தப் பட்டறையின் இறுதியில் எழுதி முடிக்கப்படும். அவை வானொலியில் ஒலிபரப்பப்படுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


முஸ்லிம்களுக்கான செயலகத்தின் அதிகாரி ஜனாப். சனூன் அவர்கள் முஸ்லிம்களுக்கான செயலகம் அடையாளம் கண்டுள்ள பிரச்சினைகள் குறித்துப் பயிற்சியாளர்களுக்கு விளக்கமளித்தார்.


பயிற்சி பெறுவோருடனான கலந்துரையாடல்


அடையாளங்காணப்பட்ட பிரச்சினைகளை நாடகப் பிரதிக்குள் கொண்டு வருவது குறித்து அறிவிப்பாளரும் நாடக ஆசிரியருமான எம்.சி. ரஸ்மின் தெளிவுபடுத்தினார்.


நாடகக் களம் மற்றும் பின்னணி குறித்த கலந்துரையாடல்


நாடகக் களம் மற்றும் பின்னணி குறித்த கலந்துரையாடல்


ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நாடகம் ஒன்றைச் செவிமடுத்து ரசிக்கையில்...

Tuesday, October 2, 2012

முஸல்மான் கதை - 1பகல் 12.45. கொளுத்தும் வெய்யில்!

சமந்தா தியேட்டர் சந்திக்கும் ஒருகொடவத்தைச் சந்திக்கும் இடைப்பட்ட பேஸ்லைன் வீதி!

ஒரு பக்கத்தில் மூன்று வழிப் போக்குவரத்து நடந்த போதும் வாகன நெரிசலில் அசைய முடியாதவாறு தெரு இறுகிப்போய் இருந்தது.

மூன்று வரிசை வாகனங்களுக்கு இடையே முச்சக்கர வண்டிக்காரர் ஏற்படுத்தியிருந்த நான்காவது வரிசையில் நான்காவது முச்சக்கர வண்டிக்குப் பின்னால் நான் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தேன்.

மதிய வெய்யில் மண்டையைப் பிளந்தது. கழுத்துக்குள் வியர்வையும் புழுதியும் ஏற்படுத்திய நமைச்சல் வேறு.

பதினைந்து நிமிடங்கள் ஒரேயிடத்தில் தரித்து நின்ற வாகனங்கள் சற்று நகர ஆரம்பித்தன.

ஏனைய வாகனங்களை முந்திப் போய்விடலாம் என்று நின்ற நான்காவது வரிசை இதோ நகரப் போகிறது அதோ நகரப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் நான்.

ஆனால் அந்த வரிசை மட்டும் நகரவில்லை.

மூன்று நிமிடங்கள் தாமதித்து விட்டுத் தாங்காமல் கலிமாச் சொல்லியபடி அருகே போன ஒரு கண்டைருடன் ஒட்டி உரசி மோட்டார் சைக்கிளை முன்னால் எடுத்து நகர்ந்தேன்.

மூன்று முச்சக்கர வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக எதிர்பார்ப்புடன் காத்திருக்க அவற்றுக்கு முன்னால் நின்ற நான்காவது முச்சக்கர வண்டியில் ஒருவர் சாவகாசமாக கொழும்புத் தமிழில் கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். முச்சக்கர வண்டியின் எஞ்சின் இயங்கிக் கொண்டிருந்தது.

அவரைத் திரும்பிப்பார்த்தேன்.

ஒரு மோசமான வாகன நெரிசலில் ஏனைய வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமோ பாதையில் அளெகரியமான நடந்து கொண்டிருக்கிறேன் என்ற நினைப் போ இல்லாமல் கைத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். நான் தாண்டி வந்து விட்டேன்.

சொல்ல மறந்து விட்டேன்.

அவரது வண்டியின் பின் கண்ணாடியில் இஸ்லாத்தின் தாரக மந்திரமான “லாயிலாஹ இல்லல்லாஹ்” அரபு மொழியில் வெள்ளை நிற ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழ் சவூதி அரேபிய வாள் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது!