- 29 -
'என்னிடம் ஓரழகான குடையிருந்தது - அதை நீ அபகரித்தாய் - நான் குடைக்கீழிருந்து வெளியேகினேன். வெயிலெனக்கு அவஸ்தையாயிற்று - சூரியன் உச்சந் தலையிற் குறியிட்டான் - அக தீ எனலாய்! ஆகாயம் இடித்து முழங்கி இறங்கிற்று - நானதில் நனையவேண்டியாயிற்று - காயம்பட்டு! நனைதலும் காய்தலும் - இன்று என் இருப்பென்றாயிற்று!'
துயரொழுகும் இக்கவிதை பிறப்பதற்குக் காரணமான நிகழ்வு நடந்து இன்று கால் நூற்றாண்டு கடந்து விட்டது. வடபுலத்திலிருந்து துரத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான முல்லை முஸ்ரிபா என்ற கவிஞனின் பேனாவின் - ஆத்மாவின் கண்ணீர் இது!
1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினர் மூன்று கட்டங்களாக வடபுலத்திலிருந்து முஸ்லிம்களைத் துரத்தியடித்தனர். யாழ்ப்பாண முஸ்லிம்களை 3 மணி நேரத்தில் முதலிலும் முல்லைத் தீவு மாவட்ட மற்றும் மன்னார் - வவுனியா மாவட்ட முஸ்லிம்களை 3 தினங்களிலும் வெளியேற்றினர். மறுத்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதால் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர்கள் அடம்பெயர்ந்து வந்தார்கள். 'எமது பெண்களின் பின் புறங்களில் பிரம்புகளினால் தட்டிப் பரிசோதித்தார்கள்' என்று ஒரு கவிதையில் றஷ்மி எழுதியிருந்ததைப் படித்தது ஞாகபமிருக்கிறது.
'தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில் புதைந்து போன ஒரு வீர மரபு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது!' - வே. பிரபாகரன்
வடபுலத்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் யாழ். உஸ்மானியாக் கல்லூரியில் கட்டப்பட்டிருந்த பெனரிலே காணப்பட்ட வாசகம்தான் இது. அதாவது தமது இனத்துக்கு விடுதலை கோரியப் போராடிய பிரதானப் போராட்டக் குழு, இந்தத் தேசத்தின் மற்றொரு சிறுபான்மையை வேரோடு கல்லி வீசிவிட்டுப் பேசிய பெருமை மிக்க வார்த்தை இதுதான். ஆனால் வெளியுலகுக்கு தங்களது தலைமைத்துவத்துக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயமே தெரியாது என்றுதான் பலர் ஒரு பெரும் பூசனிக்காயை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைத்துக் கொள்ள முன்றார்கள் என்பதையும் நாம் கண்டோம்.
90,000 புத்தகங்களை எரியூட்டப்பட்ட போது பதறியடித்தவர்கள், நியாயம் பேசியவர்கள், ஒரு லட்சம் மக்கள் உடுத்திருந்த உடையோடு வெளியேற்றப்பட்ட போது மௌனித்திருந்தார்கள் என்று நண்பர் கலைவாதி கலீல் ஒரு முறை எழுதியிருந்தார். அவரும் துரத்தப்பட்ட மக்களின் ஒரு பிரதிநிதிதான்!
ஒரு மனிதனுக்கு மாறாத மன வலியைத் தரும் விடயம் ஒன்று இருக்குமென்றால் அது நிச்சயமான அவன் பிறந்து வளர்ந்த சூழலை இழக்க நேர்வதும் அவனது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுமேயாகும். அவனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் அது பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அவனுடைய நிழலைப் போல அது பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இந்த வதையோடுதான் வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் சிதறி அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வதையோடும் தமது வாழ்நிலம் செல்லும் ஏக்கத்தோடும் அவர்கள் வாழ ஆரம்பித்து இன்று 25 வருடங்கள் கழிந்து போயிருக்கின்றன.
25 வருடங்கள் கழிந்த நிலையிலும் 30 வீதமான முஸ்லிம்களே மீள்குடியேறியுள்ளதாக அறியக் கிடைக்கிறது. மீதியாயுள்ளோரது வாழ்க்கை, காய்தலும் நனைவதுமாகவே கழிந்து கொண்டிருக்கிறது.
'தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவர்கள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி, அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,' என்கிறார் டி.எஸ்.பி.ஜெயராஜ்.
கவிஞர் யாழ் அஸீம் 'மண்ணில் வேரோடிய மனசோடு' என்று ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டுள்ளார். தனது மண்ணின் மீதான பிரிவும் பரிவும் ஏக்கமும் கொண்ட கவிதைகளைக் கொண்டது அத் தொகுதி. அதில் உள்ள ஒரு கவிதையின் பகுதி இது. துரத்தியோரைப் பார்த்து அவர் கேட்கிறார்:-
'வல்லவன் அவன் எழுதும் வரலாற்றுக்கு
முற்றுப் புள்ளி நீ வைப்பதா?
நீயே அவனிட்ட காற்புள்ளி.
எனக்கென்ன முற்றுப் புள்ளி நீ வைப்பது?
உனக்கும் அவனன்றோ முற்றுப் புள்ளி வைப்பது?'
இக்கவிதை எழுதப்பட்டு 3 வருடங்கள் நிறைவுறுவதற்குள் ஒரு புள்ளி விழத்தான் செய்தது.
துரத்தப்பட்ட முஸ்லிம்களின் அகதிக் கோலம் அகற்றும் முற்றுப் புள்ளி என்று விழும் என்றுதான் காத்திருக்கிறோம்!
நன்றி - மீள்பார்வை