- 13 -
அவர் எனக்கு அறிமுகமானது 1983ம் ஆண்டு.
நாங்கள் பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவர்களாக 83 - 84 காலப் பிரிவில் பயின்ற காலம் அது. உள்நாட்டுப் போர் வெடித்து இனக்கலவரம் நாட்டைக் கொளுத்திய காலம்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் ஆண்கள், பெண்கள் என முஸ்லிம் ஆசிரிய மாணவர்கள் 45 பேரளவில் வௌ;வோறு துறைகளில் கற்றோம்.
நண்பர் கணிதப் பயிற்சி ஆசிரியர். மன்னாரைச் சேர்ந்தவர். சாதாரண இளைஞனுக்குரிய ஆனால் உறுதியான உடற்கட்டு. குனிந்த பார்வை. முகம் நிறையக் கரு கருவென வளர்ந்து பொங்கிய தாடி. கருத்த உதடுகள். மிக அமைதியான சுபாவம். இதுதான் எனது நண்பர். முதிர் இளைஞனாக இருந்த போதும் சுருட்டே புகைப்பார்.
முஸ்லிம் நண்பர்கள் நிறைய இருந்தார்கள். உடற்கல்வி, விஞ்ஞானம், கணிதம், விவசாயம், ஆங்கில மொழி என்று அநேகமாக எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் ஆசிரிய மாணவர்கள் இருந்தார்கள். உடற்கல்வித் துறையில் மாத்திரமே அதிகம் பேர் இருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். அப்போது எனக்கு வயது 23.
எல்லாத் துறைகளிலும் மொழியும் ஒரு பாடமாக இருந்ததைப் போல அவரவர் சமயமும் ஒரு பாடமாக இருந்தது. இஸ்லாம் வெள்ளிக் கிழமை இரண்டு பாட வேளைகள் - ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெறும். இதற்காக யாழ. பல்கலைக் கழக விரிவுரையாளரான எம்.எச். காலிதீன் மௌலவி அவர்கள் வருகை தருவார். அன்று ஒரே வகுப்பில் நாங்கள் அனைவரும் இணைவோம். கலாசாலை விடுதியில் நாங்கள் தங்கியிருந்தோம். அங்கு தொழுவதற்குத் தனியறை இருந்தது எங்களுக்கு. அது பள்ளிவாசல் என்றே அழைக்கப்பட்டது.
முதிர் இளைஞனான நண்பரிடம் நான் மிகுந்த பக்குவப்பட்ட தன்மையைக் கண்டேன். நான் மட்டுமல்ல, ஏனையோரும் அதைக் கண்டார்கள். ஆனால் அதை ஒரு தனித்துவமாக அவர் வைத்துக் கொள்ள ஒரு போதும் முனைந்ததில்லை. எங்களுடன் எல்லா நடவடிக்கைகளிலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கலந்து கொள்ளுவார். எங்களது நகைச்சுவைகளில், கிண்டல்களில் கலந்து கொண்டாடுவார். அவரும் நிறைய நகைச்சுவை சொல்லுவார். தான் ஒரு 'தாஈ' என்று அவர் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளவோ, விலகி நிற்கவோ, தஸ்பீஹ் உருட்டவோ ஏன் எங்களிடம் பிரசாரம் செய்யவோ கூட அவர் ஒருபோதும் முனைந்ததில்லை.
இன்று இஸ்லாமியப் பிரசாரம் பல கிளைகளை விரித்து விட்டது. அறிவுபூர்வமாகவும் விசால சிந்தனைகளோடும் களமாடும் அதிகம் பேரை இன்று நான் காண்கிறேன். பலரைத் தூர இருந்தும் அவதானித்து வருகிறேன். ஒளிவட்டங்களோடும் இறுமாப்போடும் செயல்படுவோர், கண்டும் காணாதவர்போல் விலகிச் செல்பவர்கள், நேருக்கு நேர் சந்திதால் ஸலாத்தைக் கூட ஒரு வில்லனைப் போல் நிமிர்ந்து பார்த்துத் தடிப்பு மிகுந்த வார்த்தைகளால் சொல்லுவோர், உனக்கு என்னைப் பற்றி என்ன தெரியும் என்கிற தினிசில் நடப்பவர்கள், கதைப்பவர்கள், தன்னால் மாத்திரமே அதை விளங்கப்படுத்த முடியும் என்று எண்ணும் மனப்போக்குடையவர்கள், காலாகாலமாக வெய்யிலும் மழையும் குளித்த பாறையைப் போல் கடின முகத்துடையோர், வாய்ப்புக்கும் வசதிக்கும் வளைந்து கொடுப்போர் என்று ஏராளமானோரைப் பார்க்கிறேன். அதே வேளை மென்மையாகவும் புன்னகையோடும் அணைந்து செல்பவர்களையும் அமைதியும், நேர்மையும் கொண்டவர்களையும் காண்கிறேன்.
இற்றைக்கு நண்பருடனான நட்புக்கு 30 வருடங்கள் கழிந்து போய் விட்டன. அவர் வடக்கிலிருந்து துரத்தப்பட்டுப் பல்வேறு இடங்களில் அகதியாக அலைந்து திரிந்து ஒவ்வோர் இடங்களில் வாழ்ந்து வந்தார். இந்தக் காலப் பகுதிக்குள் இரண்டு முறை கொழும்பு வந்து என்னை வந்து சந்தித்து அதே உற்சாகத்துடன் உரையாடிச் சென்றார்.
ஒரு நாள் நாங்கள் அவரைச் சுற்றி வளைத்திருந்து அவரையும் தப்லீக் ஜமாஅத்தையும் மொத்தமாகக் கழுவி ஊற்றினோம். வினாவுக்கு மேல் வினா எழுப்பினோம். இன்றைய நிலையில் அந்தக் கேள்விகளுக்கொத்த கேள்விகளை ஏதாவதொரு அழைப்பு இயக்கச் சகோதரரிடம் நாங்கள் எழுப்பியிருப்பாமானால் அது நிச்சயமாக ஒரு கொலையில் முடிவுற்றிருக்கும். ஆனால் அவர் செய்ததெல்லாம் எல்லாவற்றுக்கும் அமைதியான ஒரு புன்னகையுடன் பதில் தந்தது மட்டுமே!
30 வருடங்கள் கழிந்து அனுபவங்களும் அதிகரித்த இன்றைய நிலையில் அவரைப் பற்றிச் சிந்திக்கும் போது எனக்குப் பிரம்மிப்பாக இருக்கிறது. பெரும் பொறுமையும், அமைதியும், பக்குவமும் அக்காலப் பிரிவிலேயே அவரிடம் எப்படி ஏற்பட்டது என்று எனக்குள் கேள்வி எழும் போதெல்லாம் வியப்பாகவே இருக்கிறது.
இஸ்லாம் என்ற வாழ்க்கை வழியை அவர் மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்தார் என்பதே இன்று எனக்குள் கிடைத்த விடையாக இருக்கிறது. புரிந்து கொள்ளாமல், தெளிவு இல்லாமலே மற்றவர்களைப் புரிந்து கொள்ளவும் மார்க்கத்தைப் புரிந்து கொள்ளவும் மற்றவர்களுக்குத் தெளிவு படுத்தவும் ஆரம்பிக்கின்ற போது அது ஒரு வேடிக்கையான செயற்பாடாக மாறி விடுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
எனது வாழ்க்கைக் காலத்தில் நான் சந்தித்த 'தாஈ'க்களில் மறக்க முடியாமலே எனது நண்பர் றபீக் மனதில் பதிந்து போகக் காரணம் நடைமுறைப் பண்புகளில் அழகிய நடைமுறையைப் பிரதிபலித்த அவரது பக்குவம்தான்.
பக்குவம் இல்லையென்றால் எதுவுமே ருசிக்காதுதானே!
(நன்றி - மீள்பார்வை)