சுனந்த தேசப்பிரிய
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலானது இலங்கை சமூக அரசியலில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்று வெடித்த குண்டுகளின் அதிர்ச்சி இலங்கையில் ஓயாத அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
பாதுகாப்பு தொடர்பாக சோடிக்கப்பட்டு வரும் கதையாடல்களால் பொதுவாக நாடே பீதியில் உறைந்துபோயுள்ளது. இதில் குறிப்பாக முஸ்லிம் சமூகமே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானமே வெட்கித் தலைகுனியுமளவுக்கு முஸ்லிம் சமூகத்திற்கெதிரான வன்முறை அரசியல் கலாசாரம் ஒன்று நாட்டில் தலைதூக்கி யுள்ளது.
ஜேர்மன் நாட்டை அதலபாதாளத்தில் தள்ளிய பாஸிசவாதிகளுக்கெதிராக அந்நாட்டில் தலையெடுத்த எதிரிகளை அடக்குவதற்கு பாஸிஸ்டுகளாலும் இதே பாணியிலான வெறித் தனமான அடக்குமுறைகளே கையாளப்பட்டன. இலங்கையிலும் இன்று இதே நிலையே உருவாகியுள்ளது. இந்த காட்டுமிராண்டிக் குழுவின் பின்னால் இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் துணைபோய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தேசத்துரோகிகள் என்று இப்போதே இனம்காணப்பட்டுள்ளார்கள்.
எந்தக் குற்றச் செயலும் புரியாத டாக்டர் ஷாபியை தூக்கிலிடும்படியான போராட்டங்கள் ஆங்காங்கே முடுக்கி விடப்பட்டுள்ளன. இரத்தினபுரியில் எத்தகைய முறைப்பாடுகளுமின்றி இரண்டு முஸ்லிம் வாலிபர்களுடன் கைது செய்யப்பட்ட சிங்கள வாலிபரை ஐந்து நிமிடங்களில் விடுவிக்கும்படி பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸுக்கு சவால் விடுத்துள்ளார். அவ்வாறு வெளிவிடுவதற்குக் கோரியிருப்பது கொலை செய்வதற்கென்றே குறித்த வாலிபரின் தந்தை கூறியிருக்கின்றார். சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் ரதன தேரருக்காக வீதியில் இறங்கி திரண்டிருந்தோர் முஸ்லிம் வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தால் சிங்கள சமூகத்திற்கு பேராபத்து விளைவிக்கப்படுவதாக போலிப்பிரசாரமே இதுவரையும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. மலடாக்கும் வில்லைஇ கருத்தடை போன்ற பீதியூட்டும் பிரசாரமே முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதன் உச்ச கட்டமாக சிங்கள பௌத்த தாய்மார்கள் 4000 பேர் மகப்பேறு கிடைக்காத வண்ணம் மலடாகச் செய்துள்ளதான பொய் முறைப்பாடுகள் எழுப்பப்பட்டுள்ளன. இது மற்றுமொரு கறுப்பு ஜுலைக்குத் தூபமிடும் நாசகாரச் செயலாகும். 1983 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் சமூக விரோத காடையர் கூட்ட பரம்பரையொன்று இருந்து வருவதையே இது உணர்த்துகிறது. கறுப்பு ஜுலையின் விபரீத விளைவுகள் குறித்து சிங்கள சமூகம் இது வரையும் சுயவிசாரணை செய்யத் தவறியதன் விளைவே இதற்குக் காரணமெனலாம். இலங்கை மக்கள் இதற்கு முன்னர் கண்டிராத அளவுக்கு இன மத வெறி தலைக்கேறி மதம் சமூகம் என்று மக்கள் துருவங்களாக்கப் பட்டுள்ளனர்.
இதனால் நாட்டின் இன்றைய சமூக அரசியல் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கத் தவறிய பொலிஸ்இ இப்போது முஸ்லிம் விரோத நிறுவனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த வழிபாட்டிடங்களுக்குத் தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருந்தால் பொலிஸாரும் அரச உயர்மட்டத்தினரும் வேறு விதமாகச் செயற்பட்டிருப்பார்களல்லவா? பொலிஸார் சிறுபான்மையினர் விடயத்தில் பாரபட்சமாகவே நடந்து வந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நீர்கொழும்பு குளியாப்பிட்டியிலிருந்து வாரியப்பொல வரையில் பரவிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை முன்னரே தடுத்து நிறுத்துவதற்கு அரசு எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கத் தவறியுள்ளது. அது மட்டுமல்லஇ இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சாட்சிக்கமைய மனிதாபிமானமற்ற வன்முறையாளர்களுக்கு பொலிஸாரும் துணை போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குழப்பக்காரர்கள் நால்வர் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டோரும் இணைந்தே பொலிஸார் பார்த்திருக்கையில் குளியாப்பிட்டி பள்ளிவாசல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கப்பல் சுக்கான் சின்னம் பொறிக்கப்பட்ட ஆடையுடன் காணப்பட்ட மகியங்கனையைச் சேர்ந்த பெண்இ சிங்கள யுவதியென்றால் பொலிஸார் எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள்? சின்னம் தொடர்பில் தெளிவு ஏற்பட்ட பின்னர் விடுவித்திருப்பார்கள் அல்லவா? மினுவாங்கொடையில் காட்டு மிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் நபர் மரணத்துடன் போராடிக்கொண்டிருந்த நிலையில் காட்டுமிராண்டிகளுடன் பொலிஸாரும் கூடவே அவரின் உடலை தரைவழியே இழுத்துச் சென்றார்களல்லவா? அந்நபர் ஒரு சிங்களவராக இருந்தால் பொலிஸார் இப்படி நடந்து கொள்வார்களா?
இலங்கையில் முஸ்லிமாகப் பிறப்பது பெருந்தவறு என்று எண்ணுமளவுக்கு முஸ்லிம் என்பதால் இம்சைக்குள்ளாகும் சம்பவங்கள் தொடரவே செய்கின்றன.
முஸ்லிம் பெண்களுக்கு புர்காவையும் நிகாபையும் தடைசெய்த அரசாங்கம் அதனைத் தொடர்ந்து சகல அரச பெண் ஊழியர்களும் சிங்கள பெண்மணிகள் அணியும் சாரி உடுத்து வேலைக்கு வர வேண்டும் என்று பணிப்புரை விடுத்துள்ளது. அரச நிறுவனங்களுக்கு வரும் சகல பெண் ஊழியர்களும் சாரி அணிந்தே வர வேண்டும் என்றும் சுற்றுநிருபம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் எழுந்த எதிர்ப்பினால் அந்த சுற்றுநிருபமும் வாரிச்சுருட்டப்பட்டது? இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது முஸ்லிம்களை மட்டம் தட்டுவதற்காக எல்லா வழிகளிலும் எத்தனம் நடக்கிறது என்பதுதான் தெளிவு.
தற்போது இந்நாட்டு முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியாக அநீதி இழைக்கும் முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. டாக்டர் ஷாபி ஆளுநர்களாக இருந்த ஹிஸ்புல்லாஹ் அஸாத் சாலி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோருக் கெதிராக பொலிஸார் நடந்துகொள்ளும் முறைமையை இதற்கு உதாரணமாகச் சுட்டிக் காட்டலாம். சாட்சிகள் ஏதும் இல்லாமல் அடிப்படைவாதிகளின் கோஷங்களுக்காக வேதான் இவர்கள் விடயத்தில் பொலிஸார் செயல்படுகிறார்கள். ஷாபி கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் அவருக்கெதிரான முறைப்பாடுகள் குறித்து கோரிக்கை விடுக்கின்றனர். இதே போன்றுதான் மேற்படி அரசியல்வாதிகளுக் கெதிரான முறைப்பாடுகளையும் கேட்டு கால அவகாசம் வழங்குகிறார்கள். உலகில் எந்தவொரு ஜனநாயக நாடுகளிலும் காணப்படாத புதுமையான சட்ட முறைமையே இங்கு கையாளப்படுகிறது.
பல்வேறு முறைப்பாடுகளும் சுமத்தப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்களான ஹேமசிரி பெர்ணாந்து கோதாபய ராஜபக் ஷ ஆகியோரை கைது செய்து முறைப்பாடுகளைத் தெரிவிக்கும்படி கோரிக்கை விடுக்காதது அவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதனாலா?
முஸ்லிம் விரோத அரசியலின் உச்சபட்ச சட்டத்தை ரதன தேரரின் உண்ணாவிரதம் வெளிப்படுத்தியது. ரத்ன மற்றும் ஞானசாரர் போன்ற அடிப்படைவாத பிக்குகளும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தும் சிங்கள பௌத்த அரசியல் வாதியான சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோர் ஒன்றுபட்டு முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கெதிராக எழுப்பிய கோஷத்திற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் அடிமைப் படும் நிலை ஏற்பட்டு விட்டது. அரசாங்கத்தின் இத்தோல்வியை தனிப்பட்ட ரீதியில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் வெற்றிகொள்ள முடிந்துள்ளது. கட்சி வேற்றுமை பாராது அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அரசாங்கத்திலிருந்து பதவிகளைத் துறந்ததன் மூலம் வெற்றிவாகை சூடியுள்ளனர்.
முஸ்லிம்களுக்கெதிராக தாக்குதல் நடத்தியோர் எத்தகைய தராதரமும் பாராது தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அரசியல்வாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி தீர்த்து வைக்கும்படியும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு தம் செய்தியை எத்தி வைத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பலம்வாய்ந்த இஸ்லாமிய நாடுகளின் அமைப்பும் அறிக்கையொன்றை வெளியிட்டு இவர்களது கோரிக்கைக்கு உரம் சேர்த்துள்ளது.
பித்துப் பிடித்த சிங்கள பௌத்த அரசியல்வாதிகளால் தூண்டப்படும் முஸ்லிம் விரோதப் போக்கினால் பெருமளவில் முஸ்லிம்கள் மீதான கலவரம் வெடிக்குமானால் சர்வதேச ரீதியில் இலங்கை மிகவும் பாரிய நஷ்டஈட்டை செலுத்தவேண்டி வரும். சுமார் பத்து இலட்சம் இலங்கையர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவதில் இதுவே பிரதான பங்கு வகிக்கிறது. அத்துடன் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு ஏற்கனவே உள்ள அவப்பெயர் மேலும் சீர் கெட்டுப் போவதற்கும் இது வழிவகுத்துவிடும்.
தேசிய ரீதியில் இந்நாட்டில் முஸ்லிம்கள் மூன்றாவது சமூகமாக இருந்து எத்தனை இன்னல்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? வன்முறைக் கொடுமைகள் மட்டுமல்லஇ முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் நுகர்வுக்கான தடை ஹலால் சான்றிதழ் இல்லாமலாக்கல் பர்தாவுக்கான தடை முஸ்லிம் சர்வகலாசாலை மாணவ மாணவிகளுக்கான விடுதிகள் வழங்காமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு உடந்தையானவர்கள் என்று ஊடகங்கள் ஊடாக புகைப்படத்துடன் காட்சிப்படுத்தல் முஸ்லிம் வைத்தியர்களை நாடாது சிங்களவர்களைத் தடுத்தல் – இத்தகைய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் சமூகம் தொடர்ந்தும் தலைகுனிந்து கொண்டிருக்குமா?
இந்நாட்டு முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. அத்துடன் சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாதம் தொடர்பாக முஸ்லிம்கள்தான் முறைப்பாடு செய்துள்ளார்கள். ஐ.எஸ். பயங்கரவாதத்தை இந்நாட்டு முஸ்லிம்களிடமிருந்து பிடுங்கியெறிவதற்குஇ சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளின் குரல்களுக்கு தலைசாய்ப்பதன் மூலம் சாதித்துவிட முடியாது.
முஸ்லிம்களுக்கு சமமான அந்தஸ்தை வழங்கிஇ அவர்களும் உரிமையோடு வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலமே சாதிக்கவேண்டும்.
விடயம் இவ்வாறிருக்கையில் முஸ்லிம்களுக்கு சமஉரிமைஇ பாதுகாப்பு வழங்குவதில் ஜனாதிபதி சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறவே தவறியுள்ளனர். ராஜபக் ஷ ரதன தேரர் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கி நிலைமையை மேலும் உக்கிரமடையவே வழிசெய்கின்றனர். முஸ்லிம் எதிர்ப்பு மேலும் பற்றியெரிவதற்கு ரதனஇ ஞானசாரஇ மெல்கம்இ சம்பிக்க ஆகிய நால்வரும் மேலும் எண்ணெய் வார்த்து ஜனாதிபதி தேர்தலிலே கண் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இனங்களுக்கிடையேயான சமநிலை மற்றும் நேர்மைப் பண்புகளை நிலைநாட்ட வேண்டிய சவாலையே இன்று இலங்கை எதிர்கொண்டுள்ளது. இனவாதஇ வன்முறை அரசியல் தோற்கடிக்கப்படவேண்டும். இவற்றிலிருந்து நாம் வெற்றி கொள்ளத் தவறுவோமானால் நாடு என்ற வகையில் இலங்கையும் படுநாசத்தில் தள்ளப்படும்.
இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது எவரது அரசியல் களியாட்ட வண்டியிலோ அல்லது பென்ஸ் வண்டியிலோ ஏறுவதா? அல்லது எங்களுக்கென்ற சுயாதீன வண்டியொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதா?
(From Face book page of AL Thavam)