- லத்தீப் பாரூக் -
மூன்று ஆண்டுகளுக்கு முன், 2010, மே மாதம், 8 ஆம் நாள். பிற்பகல் வேளை. பாதுகாப்பமைச்சின் கீழ் இயங்குகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பின் மத்திய பகுதியான கொம்பனித் தெரு மீவ்ஸ் வீதியில் இருக்கின்ற வீடுகளைத் தரை மட்டமாக்குவதற்காக, பொலிஸ் மற்றும் விசேட துருப்பினரைக் களத்தில் இறக்கியது.
தமிழர் ஒருவரினால் உரிமை கொள்ளப்பட்டிருந்த ஒரு வீடு தவிர, இவற்றில் ஏனைய சகல வீடுகளுமே முஸ்லிம்களுடையவையாகும். அவர்களது உடமைகள் பாதையில் தூக்கி எறியப்பட்ட நிலையில், அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுகிறார்கள்.
காணி உரிமைப் பத்திரம், வீடுகள் சட்டபூர்வமானவை என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும், பல தசாப்தங்களாக தாம் இவ்விடத்தில் வசித்து வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்கள் பணி புரிந்ததும், அவர்களது பிள்ளைகள் பாடசாலை சென்றதும் இதன் சுற்று வட்டாரத்தில்தான்.
மனிதாபிமானம் அற்ற முறையில் அவர்களது வீடுகள் தகர்க்கப்பட்ட போது,அவர்களது கனவுகளும் இரவோடிரவாகத் தகர்ந்து போயின. மட்டக்குலியில் பலகையால அமைக்கப்பட்ட தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
இவ்வெளியேற்றத்தை நியாயப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் விடுத்திருந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. “மீவ்ஸ் தெருவில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைப் பாடசாலை (Defence Services School)உடன் இணைந்த காணியில் வசித்து வந்த, அனுமதி வழங்கப்படாத குடியிருப்பாளர்களை அகற்றும் பணி, மிகவும் நீதியான, மனிதாபமான, சட்ட ஒழுங்குகளுக்கு இயைபான முறையில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த இந்நிலம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) சொந்தமானதாகும். முறையான அனுமதி பெறாத நிலையில் குடியிருப்பாளர்கள் வசித்து வந்த போதிலும், மனிதாபமான ரீதியான காரணங்களைக் கருத்திற்கொண்டு, அவர்கள் நஷ்டஈடு வழங்கப்பட்டதோடு,நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டோடு, மாற்றுத் தங்குமிடங்களும் வழங்கப்பட்டன. சட்ட விரோதக் குடியிருப்பைக் காலி செய்யுமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்த போதும், அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், நஷ்டஈடும், மாற்றுக் குடியிருப்புக்களும் வழங்கப்பட்டு, மே 7 ஆம், திகதி, 2010 வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
நாட்டைப் பயங்கரவாதத்திடம் இருந்து பாதுகாப்பதற்காக சுயநலமற்ற உறுதியோடும், தியாகத்தோடும் செயல்பட்ட பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்குப் போதுமான கல்வி வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கத்துடன், சில ஆண்டுகளுக்கு முன்பு Defence Service Schoolஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையின் தற்போதைய வசதிகளை மேம்படுத்தி, அதனை அபிவிருத்தி செய்வதற்கு, குறித்த நிலத்தை சுவீகரிப்பது அவசியமானதாக இருந்தது. எனவேதான், அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்தது. அது மிகவும் நீதியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது”. இவ்வாறு அவ்வூடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே, வீடுகள் தகர்க்கப்பட்ட போது, பதட்ட நிலையொன்று உருவானது. குடியிருப்பாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் நடந்தமோதலில்,பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்தார். சில நாட்கள் கழித்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், இருக்கமான பாதுகாப்பிற்கு மத்தியிலும், வீட்டு உரிமையாளர்கள் வீதிப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். மே, 14, 2010 அன்று இது தொடர்பாக பின்வருமாறு டெய்லி மிரர் செய்தி வெளியிட்டிருந்தது. “லிப்டன் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசுகையில், நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் ‘நகர அபிவிருத்தி அதிகார சபையை வழிநடாத்துகின்ற பாதுகாப்புச் செயலாளருக்கு மக்களைப் பலவந்தமாக வெளியேற்ற எந்த உரிமையும் இல்லை. அவர் தனது சகோதரர் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துபவரே அல்லாமல், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்லர். இம்மக்கள் வெளியேற்றப்பட்ட முறை கருணையற்றதாகும். இரண்டு மணித்தியாலத்திற்குப் பதிலாக குறைந்த பட்சம் ஒரு மாதமாவது இவர்கள் காலக்கெடு வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்”.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தார்கள். தெமடகொடவில் மாற்று இட வசதி செய்து தருவதாக இதன் போது, நகர அபிவிருத்தி அதிகார சபையும் இணங்கியது. புதிதாகக் கட்டப்பட்டு வந்த தொடர்மாடிக் குடியிருப்பில் , இவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என சட்டமா அதிபர் அவர்களும் இணங்கியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் சொன்ன மாதிரி தெமடகொடையில் வீடுகளை அமைத்தது. துரதிஷ்டவசமாக ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் ஆதரவாளர்களான பொரல்லையைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அவை பங்கு வைக்கப்பட்டன.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, கொழும்பு மேயர் A.J.M. முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிகழ்வில், மிஹிந்து சேன்புர என்ற இந்த வீட்டுத் தொகுதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. முன்பு கொழும்பில் சிறு குடில்களில் வசித்து வந்தவர்கள் மத்தியில் இவ்வீடுகள் கட்சி பேதமின்றிப் பங்கு வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.