Sunday, June 15, 2014

ஆதலினால் காதல் செய்வீர்!


Sam Hamod

தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

அவள் சொன்னாள்:-
என்னால் முடியுமாக இருந்தால்
என் இதயத்தில்
உன்னைச் சித்திரத் தையல் செய்வேன்

அவன் பதில் சொன்னான்:-
ஆம்! அப்படியானால்
அதற்கான நூல் 
என்னிலிருந்து பெறப்பட்டதாய் இருக்கும்!

அவன் சொன்னாள்:-
என்னால் முடியுமாக இருந்தால்
என்னுடைய மூச்சில்
உன்னை இழைத்துக் கொள்வேன்!

அவன் சொன்னான்:-
ஆம்! ஏற்கனவே நீ
என்னுடைய மூச்சிலே கலந்திருக்கிறாய்
நீயின்றி என்னால் சுவாசிக்க முடியாது!

அவள் சொன்னாள்:-
என்னால் முடியுமாக இருந்தால்
என்னுடைய இரத்தத்தில்
உன்னை உள்வாங்குவேன்!

அவன் சொன்னான்:-
நான் ஏற்கனவே;
உன் இரத்தத்தில் இருக்கிறேன்
உன்னுடையதே என்னுடையது!

அவள் சொன்னாள்:-
அப்படியென்றால்
நீ என்னுடையவன்
நான் உன்னுடையவள்!

அவன் சொன்னான்:-
அதுதான் உண்மை
நாம் ஒருவரே
ஒரே இரத்தம்
ஒரே மூச்சு
ஒரே இதயம்!

Thursday, June 12, 2014

ஜாபர்தீன் என்றொரு மாமனிதன்!


ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீனுடன் நான்

அன்பின் ஏவி.எம். ஜாபர்தீன் ஹாஜி,

முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

அல்லாஹ் உங்களை அழைத்துக் கொண்டான் என்ற தகவல் கிடைத்ததும் இங்கிருந்து புறப்பட்டு வந்து உங்கள் முகம் பார்த்து ஸலாம் சொல்ல முடியாமல் போனமைக்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.

தாயும் சேயுமாக அண்மித்த தேசங்களாக இருந்த போதும் எட்டிக் கடக்கும் எல்லைகளில் இருந்த போதும் நினைத்தவுடன் புறப்பட்டு வரும் வாய்ப்புகள் அற்ற நிலையில் வாழ்க்கை அமைந்ததானது நமக்கு வாழ்வில் நேர்ந்திருக்கும் துரதிர்ஷ்டங்கள்தாம்!

தங்களது வபாத் செய்தி பேராசிரியர் சேமுமு - ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வழியாகக் காதை எட்டிய போது காலை ஒன்பதரை மணியிருக்கும். உங்களது அறிமுகம் கிடைத்ததற்கும் உங்களது வபாத்துக்குமிடையிலான பதினைந்து வருடகால உறவின் ஒவ்வொரு கணமும் எனக்குள் சுழல ஆரம்பித்தது. நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

தங்களது மறைவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் ஓரு பிராந்திய இலக்கிய மாநாடு சம்பந்தமாக அனுராதபுரம் சென்று திரும்பியிருந்தோம். அந்தப் பயணத்துக்கு நான் புறப்பட்ட போது அணிவதற்கென எடுத்துச் செல்லத் தெரிவு செய்த ஷேர்ட்களில் ஒன்று நீங்கள் எனக்கு அன்பளித்தது. விமானப் பயணங்களுக்கும் சிறப்பு விழாக்களுக்கும் மாத்திரம் அணியும் அந்த ஷேர்ட்டை பயணத்துக்கு எடுத்துச் செல்லாமல் அப்படியே வைத்து விட்டேன். இதோ மடிப்புக் கலையாமல் அப்படியே அது என் கண் முன்னால் இருக்கிறது, உங்களது நினைவுகளைப் போலவே!


நான், ஜே.எம்.சாலி, ஹாஜி ஏவி.எம், அல் அஸூமத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாஸிம் அகமது (சமநிலைச் சமுதாயம் காரியாலயத்தில்)

1999ம் ஆண்டு சென்னைப் பிரசிடன்ட் ஹோட்டலில் உங்களை முதன் முதலாகப் பார்த்தேன். ஓர் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை வாழ்நாளில் இரண்டாவது முறையாகவும் இலங்கைக்கு வெளியே முதலாவது முறையாகவும் நான் கண்ட சந்தர்ப்பம் அது. மூன்றாவது தினம் இறுதி நிகழ்வுகளுக்கு முன்னர் மேடை ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் உங்கள் மீது எனது கவனம் வெகுவாக ஈர்க்கப்படுகிறது. கீழே இறங்கி வந்த உங்களை நானும் ஜின்னாஹ்வும் எதிர் கொண்ட போது எங்களைப் பார்த்துத் தரித்து மலர்ந்து புன்னகைக்கிறீர்கள். ஆர்வமேலீட்டால் உங்களை அறிமுகப்படுத்துமாறு டாக்டர் ஜின்னாஹ்விடம் கேட்கிறேன். நீங்கள் புன்னகை மாறாமல் அப்படியே தரித்து நிற்க ஜின்னாஹ் என்னைப் பார்த்து ஆச்சர்யத்துடன் கேட்டார்:- 'ஹாஜி ஜாபர்தீன்...! இவரைத் தெரிந்து கொள்ளாமலா மூன்று தினங்களாக இங்கிருக்கிறீர்கள்..? இந்த மாநாட்டை நடத்தும் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொருளாளர்!'

அந்த மாநாட்டில் நீங்கள் எல்லாமாக இருந்தீர்கள் என்பதைப் பின்னாளில் நான் அறிந்து கொண்டேன். அம்மாநாட்டைப் பொறுத்தவரை நீங்களும் சேமுமுவும் செய்த நிர்வாகம்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. ஆனால் உங்களது செயற்பாடுகள்; பின்னாளில் நடந்த மாநாடுகள் சிலவற்றில் போல துருத்திக் கொண்டோ இடறிக் கொண்டோ உங்களையே பிரேமுக்குள் வைத்துக் கொண்டோ அமைந்திருக்கவில்லை என்பதுதான் என்னை இன்னும் இன்னும் உங்களருகே இழுத்து வந்து சேர்த்தது என்று சொல்ல வேண்டும்.

நீங்கள் நடத்திக் காட்டிய அந்த மாநாடுதான் அடுத்த மூன்றாவது வருடத்தில் இலங்கையில் கோலாகலமாக ஓர் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தும் எண்ணத்தையும் ஆர்வத்தையும் எனக்குள் விதைத்தது. உங்களுடன் இலக்கிய மாநாடுகள் பற்றிப் பேசும் போதெல்லாம் இதைச் சொல்லியிருக்கிறேன். அதற்கும் உங்களிடமிருந்து வார்த்தைகள் பதிலாகக் கிடைத்ததில்லை, அந்த... அதே புன்னகைதான்!

இலங்கைக்கு வருகை தந்து விட்டால் எம்மீது அளவு கடந்த பாசமும் நேசமும்காட்டும் சில படைப்பாளிகளும் படிப்பாளிகளும் இரண்டுங்கலந்த சிலரும் நாம் தமிழகத்துக்கு வருந்தோறெல்லாம் கண்டு கொள்ளாமல் போய்க்கொண்டேயிருப்பார்கள். ஆனால் வருந்தோறெல்லாம் வரவேற்று உபசரித்துக் கண்ணியமும் மரியாதையும் வழங்கும் ஒரு சிலரில் நீங்கள் முதன்மையானவராக இருந்தீர்கள். இந்த அரிய பண்புதான் உங்களை எனது மனதில் அழிக்க முடியாத ஓர் இடத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது.

2002ம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய மாநாடு பற்றிய அறிவிப்பு விடுவதற்காகவும் கலந்துரையாடுவதற்காகவும் தமிழகத்துக்கு வருகை தந்திருந்தோம். வந்த அடுத்த தினமே முக்கியஸ்தர்கள் அனைவரையும் உங்களது இல்லத்துக்கு அழைத்து எங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து தந்துவிட்டீர்கள். செய்யிது முகம்மது ஹஸன், கவிக்கோ, பேரா. சேமுமு, பேரா. அகமது மரைக்காயர், பேரா. நஸீமா அகமது என்று அழைத்து எங்களையும் இணைத்து ஒரு மாலைப் பொழுதிலேயே எங்கள் பணியை இலகுவாக்கித் தந்துவிட்டீர்கள். அடுத்த தினமே பிரசிடன்ட் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து தந்து எங்களை ஆச்சர்யப்படுத்தினீர்கள். மாநாடு முடியும் வரை பெரும் பக்கபலமாக இருந்து எங்களுக்கு வழிகாட்டினீர்கள். இதற்கெல்லாம் நன்றி சொல்ல முடியாமல் நாங்கள் திக்குமுக்காடினோம்.

2002 கொழும்பு மாநாட்டின் இரண்டாம் ஓர் இடைவெளியில் சந்தித்துக் கொண்டோம். 'சமநிலைச் சமுதாயம்' என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளியிடப்போவது பற்றி அந்த வேளை பேசினீர்கள். 'நம்ம சஞ்சிககைகள் ஒன்று பூமிக்குக் கீழே உள்ளவற்றைப் பேசுகின்றன அல்லது வானத்துக்கு மேலே உள்ளவற்றைப் பேசுகின்றன. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட உலகில் நமது கதியென்ன, நிலையென்ன என்று யார் பேசுவது? எப்போது பேசுவது? அதைத்தான் இந்தச் சஞ்சிகை செய்யும்!' என்று நீங்கள் சொன்ன போது நமது சமூகம் பற்றிய தெளிவான உங்கள் சிந்தனையை எனக்குள் ஓர் ஒளியைப் பாய்ச்சியது.