Thursday, March 31, 2011

ஒற்றைத் துவாரமும் ஓராயிரம் தரிசனங்களும்

முதலில் பிள்ளையின் சோற்றுப் பாத்திரத்தை நாங்கள் எடுத்தோம்.

சோமாலியாவில் பட்டினி. உணவு உண்ணாமலேயே உயிர் வாழ இப்போதே படிக்க வேண்டாமா?

பிறகு பிள்ளையின் விளையாட்டுக்களை நாங்கள் கவர்ந்தோம். வளரும்போதே இந்தக் களியாட்டங்களை ஆயுதமாக்குவார்கள் என்றனர் உளவியலாளர்கள்.

அவனுடைய அப்பாவையும் அம்மாவையும் நாங்கள் கொன்றோம். சொந்தக்காலில் நிற்க அவன் கற்க வேண்டாமா?

பிறகு அவன் வாய்விட்டுக் கத்திய போது உறக்கம் கலைந்ததற்காக அவனுக்கெதிராக வழக்குத் தொடுத்தோம்.

மேலே நீங்கள் வாசித்தது ஒரு சிறிய கதை. அதாவது சிறு கதை. அது சிறிய கதைதானே தவிர சிறுகதையில்லை என்பவர்களுடன் நான் டூ விடுவேன்.

பி.கே.பாறக்கடவு என்ற பிரபல மலையாள எழுத்தாளர் தனது நவீன கதைகளை இவ்வாறுதான் எழுதுகிறார். காலத்துக்கு ஏற்ற முறை என்பது எனது கருத்து. தவிர அது பேசும் விடயம் எத்தனை ஆழமானது பாருங்கள். வல்லரசுகளின் வக்கிரப் போக்கை நாசூக்காக அது எடுத்துச் சொல்லும் லாவகம் ஒரு நல்ல கவிதையைப் படிப்பது போல் அல்லவா இருக்கிறது. வெறும் எட்டே வரிகளில் இந்தக் கதை ஒரு நூலில் அடங்கும் விடயங்களைப் பேசி விடுகிறது. இந்தக் கதையின் தலைப்பு ‘நீதி.’

இந்தமாதிரிக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. தமிழில் இந்த முயற்சிகள் மிகக்குறைவு. வெகுஜன சஞ்சிகைகளில் ஒரு பக்கக் கதைகள் சில வரத்தான் செய்கின்றன. ஆனால் மேலே நான் எடுத்தாண்டுள்ள கதையின் உள்ளுரம் அவற்றில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இவ்வாறான கதைகளைத் தேடிப்படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அண்மையில் ஓர் அறபு மொழிக்கதை எனக்குக் கிடைத்தது. ஆங்கில வடிவில் கிடைத்த அந்தக் கதையை இங்கு தமிழாக்கித் தருகிறேன். 1931ல் சிரியாவின் டமஸ்கஸில் பிறந்தவர் ஸகரிய்யா தாமிர். அந்த நாட்டின் சிறுகதை இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் அவர் எழுதிய ‘இரை’ என்ற கதை இது. இந்தக் கதைக்கூடாகவும் நமக்கு ஆயிரம் தரிசனங்கள் கிடைக்கின்றன.

Wednesday, March 30, 2011

உனது வர்ணம்

மு.பொன்னம்பலம் அவர்கள் ‘தீர்க்க வர்ணம்’ நூலுக்கு வழங்கிய மதிப்புரை


இன்று பலர் தமிழில் பத்தி எழுத்துக்களில் ஈடுபடுவதை நான் கண்டிருக்கிறேன். அவை அநேகமாக, வாசகனை வாசிக்கத் தூண்டுவ திலிருந்து வழுவிப்போய் வெற்றுச் சுயவிளம்பரங்களாகவோ அல்லது இன்றைய ரியூற்றறிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கும் உப்புச் சப்பற்ற ரிய+ட்ஸ் கட்டுக்களாகவோ இருப்பதையே கண்டிருக்கிறேன். இதில் ஈடுபடும் எவருமே ஈர்ப்புடைய கலைப் பாங்கான வேலையாக அதைச் செய்யச் சிரமம் எடுத்துக் கொள்வதில்லை என்றே கூறலாம். இல்லை, அப்படியும் கூறமுடியாது. அவர்கள் எடுத்துக்கொண்ட சிரமத்தின் வெளிப்பாடுதான் அவர்கள் தரும் பத்தி ஆக்கங்கள், அதில் கலைப் பாங்கான செய்நேர்த்தி இல்லையெனில் அதற்கு அவர்கள் என் செய்வர்? மலடியைப் பிடித்துப் பிள்ளையைப் பெறு என்று சொல்லுகின்ற அபத்த மான ஒன்றை நாம் கோரக்கூடாது.

இப்பின்னணியில்தான் அஷ்ரஃப் சிஹாப்தீனின் பத்தி எழுத்துக் களின் தொகுப்பு - தீர்க்க வர்ணம் - என் பார்வைக்குக் கிட்டியது. பத்தி எழுத்து என்பது எப்படி வெற்றுத் தகவல் தரும் ஒன்றாக மட்டுமல்லாது வாசகரை வாராவாரம் படிக்க வைக்கும் ஈர்ப்புடைய கலைத் தூண்டல் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று ஒரு தரமான வாசகன் நினைப்பானேயாகில் அந்த நினைவுக்குக் குந்தகம் நேராது ‘தீர்க்க வர்ணம்’ இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். இதற்குக் காரணம், இதன் ஆசிரியர் சிறந்த கவிஞராகவும் பலதரப்பட்ட விஷயங் களோடு பரிச்சயமுடைய எழுத்தாளுமை உடையவராகவும் இருப்பது தான் போலும்.

நிகழ்வுக்கேற்ற நிறம்

இணையத் தோப்பின் இலவசக் கனிகள் - 1
  1. முன்னொரு காலத்திலே கடல் வணிகம் செய்யும் கப்பலில் ஒரு கெப்டன் இருந்தார். அவர் மிகவும் துணிச்சலான மனிதர். அவர் எதிரிகளை எதிர் கொள்வதில் ஒரு துளிதானும் பயம் அற்றவர்.
ஒரு நாள் கடற் பயணத்தின் போது கொள்ளைக்காரர்களின் கப்பல் ஒன்று தம்மை நோக்கி வருவதை கெப்டன் ப்ராவோவின் அதிகாரிகள் கண்டனர். அவர்கள் அவசர அவசரமாக கெப்டனிடம் ஓடிச் சென்று விடயத்தைச் சொன்னார்கள். கடும் கோபம் கொண்ட கெப்டன் அவர்களை நோக்கி, “எனது சிகப்புச் சட்டையைக் கொண்டு வாருங்கள்!” என்று ஆக்ரோஷமாகச் சத்தமிட்டார். உடனடியாக அவரது உதவியாளர்களில் ஒருவன் அதைக் கொண்டு வந்து கொடுத்தான். அதை அணிந்து கொண்ட கெப்டன் தனது கப்பல் அதிகாரிகளுடனும் வீரர்களுடனும் கொள்ளைக்காரர்கள் வந்த கப்பலை எதிர் கொண்டு அவர்களைத் துரத்தியடித்தனர்

மற்றொரு நாள் கொள்ளைக்காரர்களின் இரண்டு கப்பல்கள் அவர்களை நோக்கி வந்தன. அப்போதும் கெப்டன் ப்ராவோ தனது சிகப்புச் சட்டையை அணிந்து அவர்களை எதிர் கொண்டு தோல்வியடையச் செய்தார்.

Tuesday, March 29, 2011

கதவுஉங்கள் வருகைக்காய்த்
திறந்து வைக்கப்பட்ட கதவு
நீங்கள் வந்தவேளை
சாத்தப்பட்டிருந்தது கண்டு
திரும்பியதறிந்தேன்

திறக்கவும் மூடவும்
மற்றும்
பாதுகாப்புக்குமானவை
கதவுகள் என்பதை
நீங்கள் உணர மறுத்தது
உறுத்துகிறதெனக்கு

குரல் வழங்கப்பட்டிருப்பது
கூப்பிடுவதற்கும்
கைகள் தரப்பட்டிருப்பது
தட்டிப் பார்ப்பதற்கும்தான்

உள்ளே தாழிடப்பட்ட
தட்டினால் திறக்கப்படாத
கதவுகளேதும்
உலகத்தில் கிடையாது

சப்பாத்துக்குள் ஒரு சரளைக் கல்

ஏகாம்பரத்தின் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போல் ஆத்திரம் வந்தது. அதுவும் கூப்பிட்டு அறைய வேண்டும்!

ஓர் அறுபது வயது மதிக்கத்தக்க மனிதனின் கன்னத்தில் அறைய நினைப்பது முறைதானா என்று நீங்கள் கட்டாயம் என்னைக் கேட்கத்தான் செய்வீர்கள். ஏகாம்பரம் பண்ணும் கில்லாடித் தனங்களை நீங்கள் அறிய வருவீர்களானால் சில வேளை அவரது குரல்வளையைக் கடிக்க வேண்டும் என்பீர்கள். என்னை விட அதிகக் கோபக்காரர்களாக நீங்கள் இருப்பீர்களென்றால்!

எனக்கு ஏற்பட்ட கோபத்தில் விசயத்தைச் சொல்லாமல் இடையில் தொடங்கி விட்டேன் பாருங்கள். என்ன நடந்தது என்பதைச் சொன்னால்தானே எனது கோபம் சரியா பிழையா என்று உங்களால் தெரிந்து கொள்ள முடியும். சொல்கிறேன் கேளுங்கள்.

Monday, March 28, 2011

“என்னைத் தீயில் எறிந்தவள்.”

ஈழத்து முஸ்லிம்களின் தமிழ்க் கவிதைப் போக்கில் மற்றுமொரு ஆரம்பம் -
வீ.ஏ. ஜூனைத்


நவமணி பிரதம ஆசிரியர் மர்ஹ{ம் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ராஜேஷ்வரி சண்முகம் ஆகியோர் நூலாசிரியரிடம் சிறப்புப் பிரதிகளைப் பெற்ற வேளை...
ஒரு நல்ல கவிஞன் தான் வாழும் உலகுடன் ஒன்றி விடுகின்றான். காலத்துள் கரைந்து, சமூக உணர்வுகளில் சங்கமித்துப் போகின்றான். ஷயாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற விசாலப் பார்வைக்குள் வியாபித்து விடுகின்றான். அவனது படித்தரம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோட்டைத் தாண்டும்போது, அண்ட சராசரங்கள் அனைத்துமே அவனுக்காகி அனைத்திலும் அவனுமாகி.... இன,மத,இட எல்லைகளை கடந்தவனாய் இப்பிரபஞ்சத்துள் ஒளிந்து விடுகின்றான்!

இந்த உன்னத நிலைக்குள் உயர்ந்து விட்ட ஒரு கவிஞனால் மட்டும் தான் அவன் எதிர்கொள்ளும் சமூக அவலங்களையும், அவஸ்தைகளையும், ஆனந்தங்களையும், ஆவேசங்களையும் கூட நியாயமுள்ள தகுதி மிக்க உணர்ச்சிகளில் The Justice or Propriety of the Emotion வெளிப்படுத்த முடியும். அவ்வாறு ஆற்றலுடன் வெளிப்படுகின்றன அந்த உணர்ச்சி பிரவாகமே, வீரியமிக்க - அற்புதமான கவிதைகளாக மிளிர்கின்றன. இதைத்தான் "Poetry is Spontaneous outflor of Powerful feelings" என்று கூறுவார்கள்.
இப்படி, எழுதப்படும் கவிதைகள் யாருக்காக எப்படி எழுதப்படவேண்டும் என்பது பற்றிய, பிரபலங்கள் சிலரின் கருத்துக்களை வாசகர்முன் வைத்துவிட்டு. அப்பால் நகர்தலே பொருத்தம் எனப்படுகின்றது.

‘மக்களின் அவலங்களையும் உணர்வுகளையும் உள்வாங்கி, மக்களுக்காக - மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்படுவதே உண்மையான மக்கள் இலக்கியம். என்றான் உலகின் முதல்தர படைப்பாளி மாக்ஸிம் கோர்க்கி.

இதையே நம்தேசத்து ஒரு நல்ல படைப்பாளி ‘முருகையனிடம் கேட்டால்,

“எவ்வாறாயினும் வாசிப்போரின் தலைப்பு நிலையையும், உணர்திறனையும் மனதிற்கொண்டு தன் படைப்பின் அமைப்புச் சீர்மையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது படைப்பாளிகளின் பொறுப்பாகும். வேறெல்லா விதத்திலும் சிறந்தது விளங்குமேயாயினும் தான் சென்றடையக் கருதும் வாசகனின் கவனத்தை ஈர்க்கும் வல்லமை அற்றதோர் ஆக்கம், வீண்பொருளாய் தோற்றொழியும் என்கிறான்.

அயல் நாட்டு மேத்தாவை அணுகினால் -

“தனி மொழிச்சேனை, பண்டிதபவனி....

இவை எதுவும் இல்லாத - கருத்துக்கள்

தம்மைத்தாமே ஆளக் கற்றுக்கொண்ட,

புதிய மக்களாட்சி... என்று அடித்து சொல்கிறான்.

இத்தனைக்கு மத்தியலும் இன்றைய நவீன புதுக்கவிதைகளின் வளர்ச்சில் போக்கானது முற்றிலும் தலைகீழான அல்லது எதிர் வினையான திருப்பத்தை தன்னளவில் அவாவி நிற்பதையே அவதானிக்க முடிகிறது.!

படிமங்களும் குறியீடுகளும் சொற்சிலம்பமாடும் உத்திகளுமே இன்று எழுதப்படும் அனேகமான புதுக்கவிதைகளில் ஆதிக்கம் செலுத்துவதால், சாதாரண நிலையிலுள்ள எந்த ஒருசராசரி வாசகனாலும் புரிந்து கொள்ள முடியாத - புரிந்துகொள்ளக்கூடாத வகையில் எழுதப்படுவது தான் நவீன புதுக்கவிதை என்றாகி விட்டது. மற்றுமொரு வகையில், வட்டார வழக்குச் சொற்களும், விரசம் பேசும் தூசண வார்த்தைகளுமே இவர்களது கவிதை மொழியாகவும் இருப்பதால், ஊர்கடந்து அல்லது தேசம் கடந்து சொல்லும் இக்கவிதைகளுக்கும் வாசகனுக்கும் இடையிலான புரிதல் பற்றிய நேரடித்தொடர்பு இல்லாமல் போகின்றது. அண்டி வாழும் சகோதர இனத்தவன் கூட இக்கவிதைகளைப் புரிந்துகொள்ள, அடிக்குறிப்புக்களையும், பிரதேச வழக்கு அகராதிகளையும் தேடவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்படுகின்ற போது, எதிர்காலம் பற்றி பேச வேண்டியதில்லை.

Sunday, March 27, 2011

செரப்ரனிகா: சனசங்காரச் சகதி(மிக விரைவில் வெளிவரவுள்ள 25 உண்மைக் கதைகள் அடங்கிய நூலில் இடம் பெற்றுள்ள கதைகளில் ஒன்று இது.)

எனது பெயர் ஹஸன் நுஹானோவிக். பொஸ்னியாவைச் சேர்ந்தவன். வயது 38. இரண்டாம் உலகப் போரின் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த நெஞ்சு நடுங்கும் செரப்ரெனிகா படுகொலைகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் படுகொலைகளில் எனது முழுக் குடும்பத்தையும் நான் இழந்தேன்.

செரப்ரெனிகா எங்களது சொந்த இடம் அல்ல. கிழக்கு பொஸ்னியாவில் இடம் விட்டு இடம் பெயர்ந்து நாங்கள் வாழ்ந்து வந்தோம். இவ்வகையில்தான் கடைசியாக நாங்கள் செரப் ரெனிக்காவுக்கு வந்து அகப்பட்டுக் கொண்டோம். கிழக்கு பொஸ்னி யாவில் 1992க்கும் 1995க்குமிடையில் பல மோசமான நிகழ்வுகள் நடந்தேறின. எந்தவித வெளித் தொடர்புகளுமற்ற நிலையிலேயே செரப்ரெனிக்காவில் அகதிகளாக வாழ்ந்து வந்தோம். அநேகமாகவும் நாங்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தோம் என்று சொல்வதே பொருத்தமானது.

இந்த நிலையில் 1993ம் ஆண்டு ஐ.நாடுகள் சபை கனேடிய இராணுவத்தை அமைதி காக்கும் படையாக அனுப்பி வைத்தது. ஆனால் அப்படி வந்தவர்களின் தொகை வெறும் 150 மாத்திரமே. நான் அவர்களது தளத்துக்குச் சென்று அவர்களுடன் உரையாடினேன். அவர் கள் என்னை மொழிபெயர்ப்பாளனாக நியமித் துக் கொண்டார்கள். பின்னர் கனேடியர்களுக் குப் பதிலாக டச்சுப் படையினர் அங்கு அனுப் பப்பட்டனர். அவர்களின் தொகை அறுநூறாக இருந்தது. சேர்பியர்களிடமிருந்து எங்களைக் காப்பது என்ற பெயரளவில்தான் அவர்கள் செயற்பட்டார்கள். சேர்பியப் படையினரோ முழு செரப்ரனிக்கா விலும் பரந்திருந்தார்கள். செரப்ரனிக்காவின் பரப்பளவு சில சதுரகிலோ மீற்றர்கள்தான். மூன்றரை வருடங்களாக அந்தக் குறுகிய நிலப்பரப்பே எங்கள் உலகமாக இருந்தது.

Saturday, March 26, 2011

சப்தஸ்வரம்
அந்த வாகனத்தின் முன் ஆசனத்தில் ஏறி அமரும் வரை, அவ் வாறான ஓர் ஆனந்தம் மிக்க அனுப வம் நிகழும் என்று ஒரு போதும் நான் நினைத்திருக்க வில்லை.
வழமைபோல் ஏறக் குறைய இருபது நிமிடம் நீடிக்கும் அந்தப் பயணத்தில் அவ்வாகனத்திலிருந்த நாங்கள் யாரும் எந்தவொரு வார்த் தையையும் பகிர்ந்து கொள்ள வில்லை. சாரதி, நான் உட்பட மூவர் இருந்த வாகனத்தில் - ஒலிபரப்புப் பற்றிய குறியீட்டுச் சொற்கள் நிரம்பிய வழமையான உரையாடலை அன்று எங்களையறியாமல் நாங்கள் தவிர்த்திருந்தோம்.

எங்களிடமிருந்து எந்தவொரு வார்த்தையையும் வெளிவர விடாமலும் எங்களை வேறு எந்தச் சிந்தனைகளுக்கும் திரும்ப விடா மலும் அப்படியே ஆட்கொண்டிருந்தது, நாங்கள் அமர்ந்திருந்த வாக னத்தில் பொருத்தப்பட்டிருந்த வானொலியிலிருந்து வழிந்து கொண்டிருந்த இசை. மூச்சுத் திணற விடாமலும் திகட்டி விடாமலும் வாகனத்தை நிறைத்த அந்த இசை, வாகனத்துள்ளிருந்த எங்களையும் முற்று முழுதாக நனைத்தெடுத்தது. புறச் சூழலின் சிறு தாக்கங்களையும் கூட உணர்த்தாமல் உள்ளத்தை அப்படியே அநாயாசமாக வருடிக் கொண்டிருந்தது அந்த வாத்தியக் கருவியின் வாசிப்பு. இப்போது எண்ணிப் பார்க்கையில் - இலங்கையர்கோனின்யாழ்பாடியின் வாசிப்பில் கிறங்கிக் கிடந்த அரசவைப் பிரதானிகளின் நிலையில் நாங்கள் இருந்தோம் என்று சொல்லலாம்.

ஃபோட்டோ ஃபோபியா


நம்மாளு கதைகள் - 01

டாக்டர் உள்ளே வந்த தம்பதியரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தபடி தலையை அசைத்து அமரும்படி சைகை செய்தார். டாக்டருக்கு அருகில் நோயாளி அமரும் கதிரையில் கணவர் அமர சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த கதிரையில் மனைவி அமர்ந்தார்.

டாக்டர்: என்ன பிரச்சினை?

நோயாளி: ......... .............

நோயாளியின் மனைவி:. நான் சொல்கிறேன் டாக்டர்

டாக்: சொல்லுங்கள்

நோ - ம: இரண்டு வாரங்களாக தொடர்ந்து பழைய பத்திரிகைகளைப் புரட்டி வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் டாக்டர். இரவில் படுக்ககையிலிருந்து திடீரென எழுந்தும் லைட்டைப் போட்டு பத்திரிகைகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

டாக்: வாசிப்பது நல்ல பழக்கம்தானே... நிறைய வாசிப்பாரோ?

நோ - ம: என்ன டொக்டர்... ஒரே பத்திரிகையை எத்தனை நாளைக்குப் படிப்பது? கடந்த இரண்டு வாரங்களாக இரண்டு பத்திரிகைகளைப் புரட்டிப் புரட்டி வெறித்துப் பார்க்கிறார்.

டாக்: சொல்லுங்கள்!

நோ - ம: கடந்து இரண்டு வாரங்களில் இவரது ஒரு புகைப்படமாவது பத்திரிகையில் வரவில்லை... முதலில் ஒருவாரம் விட்டு ஒரு வாரம் எப்படியாவது ஏதாவது ஒரு பத்திரிகையில் ஒரு புகைப்படம் வரச் செய்து விடுவார். கடைசியாக ஒரு கல்யாணத்துக்கு வந்த அரசியல்வாதி காரில் ஏறும் போது கைலாகு செய்த படத்தை இரண்டு பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவை வரவில்லை.

டாக்: இவரைக் காட்ட நான் வேறு ஒரு டாக்டரைச் சொல்கிறேன்....

நோ - ம: இல்லை டாக்டர். அப்படிப் பிரச்சினை இல்லை. வழமையான எல்லாக் காரியங்களையும் செய்கிறார். எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. ஆனால்.... இது மட்டும்தான்....

டாக்: ஓஹ்... எல்லாவற்றையும் புகைப்படம் எடுப்பாரோ....

நோ - ம: ஆமா டாக்டர்... இந்தியாவில இருந்து வந்து ஊர் ஊரா சல்வார் கமீஸ் விற்கிற இரண்டு பேர் அன்னைக்கு வந்தாங்க... அவங்களுடன் நின்று கூட இரண்டு படம் எடுத்திருக்கார்.

டாக்: ஓஹோ....!

நோ.ம : வீட்டுல ஐம்பது சந்தன மாலை வாங்கி வச்சிருக்கார். யாராவது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டா இரண்டு மாலைய எடுத்துக்கிட்டுப் போவாரு. அங்கு வாற முக்கியமான ஆட்களாப் பார்த்து மாலையைப் போட்டு அருகில் நின்று போட்டோ எடுத்துக்குவாரு. பிறகு அதைப் பேப்பருக்குக் கொடுப்பாரு... கொஞ்ச நாளா ஒரு நிகழ்ச்சிக்கும் யாரும் கூப்பிடவில்லை. நேற்று இரண்டு சந்தனமாலைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையம் போக ரெடியாகிட்டாரு....

டாக்: ஏன்... அங்கு?

நோ - ம: யாராவது முக்கியமான நபர்கள் வெளி நாடு போவாங்கதானே... அவங்களோடு நின்று போட்டோ எடுக்கத்தான். எனக்குப் பெரிய தலையிடியா இருக்குது டொக்டர்... நீங்கதான் ஒரு வழி செய்யணும்.... சில நேரம் ஒரு போட்டோவுக்கு பத்தாயிரம் ரூபா ஆகிடும் டொக்டர். இப்பிடிப் போனா என்ன ஆகும்?

டாக்: ஓகே... இவருடன் நான் கொஞ்சம் தனியா பேசப் போகிறேன். நீங்கள் அறைக்கு வெளியில் நிற்கிறீர்களா?

நோயாளியின் மனைவி வெளியில் வந்து அரை மணி நேரமாக வெளியே நின்றார். நீண்ட நேரமாகத் தன்னை அழைக்காத படியால் சந்தேகம் தட்டியதும் மெதுவாகக் கதவைத் தள்ளித் திறந்து பார்த்தார்,

அங்கே சிரித்துக் கொண்டிருந்த நோயாளியிடம் ‘அப்போ நாம இருவரும் சேர்ந்து நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுவோமா?’ என்று டாக்டர் கேட்பது தெளிவாகக் காதில் விழுந்தது!

(குறிப்பு - இந்தக் கதையை யாரும் எங்கும் எடுத்துக் கையாள முடியும். ஆனால் எழுதிய எனது பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்)

Wednesday, March 23, 2011

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - மலேசியா


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 03
அறிமுகம்

மலேசிய இலக்கிய விழா குறித்த எனது இரண்டாவது கட்டுரைக்குப் பின்னர் ஓரளவு வரவேற்கத்தக்க மாற்றங்கள் இலங்கை சார்பில் நடந்திருப்பதை அறிய வந்தேன். அந்த விபரங்களைப் பதிந்து விடவேண்டும் என்பதும் இன்னும் மீளாய்வுகளும் திருத்தங்களும் தேவை என்பதைத் தெரிவிப்பதுமே நெடுங்கட்டுரையின் மூன்றாவது அங்கத்தின் நோக்கம்.
இதுவரை அச்சில் வெளிவந்து பலர் கவனத்துக்குக் கட்டுரைகள் செல்லாத போதும் அடைய வேண்டிய தளங்களைச் சர்வதேசிய ரீதியில் இணையம் மூலமாகவே எட்டியிருப்பது என்னையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அது தவிர இந்த விழா சம்பந்தப்பட்ட அனைவருமே கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும் வரவேற்கத் தகக்து.

இத்தொடரை 5 கட்டுரைகளுடன் நிறைவு செய்யலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இன்னும் சற்று நீண்டு ஒரு நூறு அல்லது நூற்றறைம்பது பக்க நூலாகி விடும் போல் தெரிகிறது. கூடியவரை சுருக்கிக் கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். இலக்கிய ஆர்வலர்கள் ‘சர்வதேச இஸ்லாமிய இலக்கிய மாநாடு’ என்றோ ‘மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா’ என்றோ அல்லது இந்த வார்த்தைகளில் இருக்கும் ஏதாவது ஒரு சொல்லை வைத்து இணையங்களில் சொடுக்கித் தேடினாலும் காலாகாலமாக எல்லாக் கட்டுரைகளையும் படிக்கும் வாய்ப்பு இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாற்றங்கள் அல்லது திருத்தங்கள்

Monday, March 21, 2011

மூட்டைக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதா?அன்புள்ள கடாபி மச்சான்,

நெலம ரொம்ப சிக்கலாகிக்கிட்டு வாறதாப் பேசிக்கிறாங்க. உங்களுக்கெதிரா வான் வெளித் தாக்குதல் ஆரம்பமாகிட்டு. வில்லங்கத்த வெல கொடுத்து வாங்கிக்கிட்டிங்கன்னு நெனக்கிறேன். எங்க நாட்டில பொல்லக் குடுத்து அடிவாங்கிற என்டு சொல்லுவாங்க. அதத்தான் நீங்களும் செய்திருக்கிறதாப் படுகுது எனக்கு.

நீங்க ஒரு புகழ்பூத்த தலைவன்தான் மச்சான். அதில சந்தேகமே இல்லை. இதை மறுக்கிறவனோட மல்லுக்கு நிக்கிறத்துக்கு நான் ரெடியாத்தான் இருக்கன். ஆனாப் பாருங்க மச்சான்.... எல்லாத்துக்கும் ஒரு கால எல்லை இருக்கு. அது தாண்டிட்டுண்ணு வச்சிக்குங்க.. அதுக்குப் பிறகு சடுதியா மாற்றங்கள் வரும். மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படக்குள்ளேயே நாம சுதாகரிச்சுக்கணும். இல்லைன்னு வைங்க... றோட்டால போற சொறி நாயும் நம்மளப் பார்த்து சும்மாவாலும் ‘வள்’ என்று விட்டுப் போகும் நெலம வந்துரும். அந்த நெலம இப்போ உங்களுக்கு வந்துட்டுது. நீங்க சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள்ள விழுந்திருக்கீங்க.

வரலாற்றுல இருந்து கத்துக்கிறதுக்கு நெறய இருக்கு மச்சான். துரதிர்ஷ்ட வசமா நாம அதைப்பத்திச் சிந்திக்கிறதே இல்லை. இதனாலதான் இந்தக் கதி ஏற்படுகுது. இப்ப கூட உங்களுக்கு அவகாசம் இருக்கு. இன்னும் முரண்டு பிடிக்காதீங்க மச்சான். சாட்சிக் காரன் கால்ல விழுகுறத விடச் சண்டக்காரன் கால்ல விழலாம். உங்கட மக்கள்ற விருப்பத்துக்கிணங்க நீங்க நடந்துக்கிட்டா கௌரவமா மிச்சக் காலத்தையும் வாழ்ந்து கழிக்கலாம்.

இப்ப உங்களுக்குச் சில நாடுகள் ஆதரவா இருக்கிறாங்தான். ஆனா நெலம மோசமாகினா எல்லாப் பயலுகளும் வாலச் சுருட்டிக்கிட்டு நம்ம வேலயப் பார்ப்போம்னு போயிடுவானுங்க. அதாவது உங்களக் கொண்டு நடுத் தெருவுல விட்டுப் போட்டு ஓடி ஒளிச்சிருவானுங்க.

வான் வெளித் தாக்குதல்ல குழுந்தைகள், அப்பாவிகளெல்லாம் இறந்து போனதாக் கேள்விப்பட்டு சரியான கவலையிருக்குது. நீங்க விட்டுக் குடுக்க மாட்டேன் என்று மார் தட்டினதால மேற்கத்தேய மச்சான்மார் உங்க நாட்டுக்குள்ள காலடி வைக்கப் போறான். பிடிவாதம் பிடிச்சிக்கிட்டே இருந்தீங்கன்னு வைங்க. வந்து புகுந்து உங்களையும் அள்ளிக்கிட்டுப் போய்த் தூக்குல போட்டுடுவானுங்க. அத செல் போன்ல படம் புடிச்சி ஊருலகமெல்லாம் காட்டுவான். தேவையா இது?

மூட்டைக்குப் பயந்து வீட்டக் கொளுத்துற வேலயத்தான் நீங்க எல்லாரும் பார்த்துக்கிட்டு வாறீங்க. வீட்டுக்குள்ள ஆயிரம் பிரச்சினை வரும். அதைப் பயன்படுத்திக் கள்ளன் காவாலியெல்லாம் வீட்டுக்குள்ள நுழையுறத நீங்க அனுமதிச்சா நீங்க எப்புடித் தலைவனா இருக்க முடியும்? கண்ணுக்கு முன்னால ஈராக் இருக்கு. அதை மட்டும் பார்த்தாலே போதும். நான் சொல்லுறத் சொல்லிட்டேன்... அதுக்கு மேல உங்க இஷ்டம்!

மச்சான் என்று விளிக்கிறத்துக்காக மன்னிக்கணும் தல. எல்லாம் ஒரு பாசத்துலதான்!

ஏலுமென்டா தலைமுடியையும் நல்லா எண்ணெய் வச்சு வார்ந்துக்குங்க!

Saturday, March 5, 2011

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா


மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா
முஸ்லிம்களைப் பிரிக்கிறதா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02

அறிமுகம்

அங்கம் - 2 என்று உப தலைப்பிடப்பட்டிருந்த போதும் இந்தக் கட்டுரையில் பேசப்படும் விடயங்களைப் புரிந்து கொள்ள முதலாவது கட்டுரையைப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முடிந்தவர்கள் அக்கட்டுரையையும் படித்துக் கொண்டால் ஒரு பூரணமானதும் தெளிவானதுமான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். முதலாவது கட்டுரையில் பேசப்பட்ட விடயங்களைச் சார்ந்தே இக்கட்டுரையும் பேசுகிறது. ஆனால் புதிய தகவல்களை இக்கட்டுரை உள்ளடக்கியிருக்கிறது.

முதலாவது கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட எனது கணிப்புக்களிற் சில சரியானவை என்பதற்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மற்றொன்று மீளாய்வுக்குட்படுத்தப்படுகிறது. அவற்றையிட்டுப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலேசிய விழாவா மாநாடா?

Thursday, March 3, 2011

சிறகு முளைத்த தீயாக


மட்டுவில் ஞானகுமாரனின்
சிறகு முளைத்த தீயாக
கவிதைத் தொகுதியின் மீதான பார்வை


புதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. அது எப்படியென்றால் இடறி விழுந்து நிமிர்ந்து பார்த்தால் அவன் அநேகமாக ஒரு கவிஞனாகவே இருப்பான். இந்தச் சூழலில் கணினியின் கைங்கரியத்தாலும் வசனத்தை உடைத்துப் போட்டால் கவிதை என்கிற வசதியினாலும் கவிதை என்கிற பெயரில் வெளிவரும் பல்லாயிரம் கவிதையின் வடிவ எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுப் பல நூறு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நூல்களுக்குள்ளும் ஒரு சில நல்ல கவிதைகள் இடம்பெறவே செய்கின்றன. ஒரு சில வரிகள் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன.

கவிதையின் சூட்சுமம் புரிபடாத நிலையில் எழுதப்பட்டுத் தொகுக்கப்படும் இந்த நூல்களால் கவிதையின் ஆரோக்கியமும் கெட்டுப்போயிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இதனால்தான் ஒரு சிறுகதைத் தொகுதியின் விற்பனையை விட கவிதைத் தொகுதிகள் விற்பனையில் பின்தங்கியிருக்கின்றன. அதாவது கவிதைத் தொகுதிகளைப் படிப்பது ஒரு வீண்வேலை என்ற நிலைக்கு வாசகர்கள் வந்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையைத் தோற்றுவித்தது கவிஞர்கள்தாம் அல்லது கவிதை என்று நினைத்துக் கொண்டு எழுதுபவர்கள்தாம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டியிருக்கிறது.