Saturday, November 12, 2011

அறுவடைக் கனவுகள் - நாவல்


அல் அஸ_மத் எழுதிய
அறுவடைக் கனவுகள்
இலக்கியமானதும் ஆவணமானதுமான நாவல்

2010ம் ஆண்டு தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்த நல்ல நூல்களுள் அல் அஸ_மத் அவர்கள் எழுதிய ‘அறுவடைக் கனவுகள்’ நாவலும் ஒன்று. இன்னும் ஒரு வார்த்தையில் சொல்வதானால் அண்மையில் தமிழில் வெளி வந்த சிறந்த நாவல்களுள் இதுவும் ஒன்று.


ஒரு கவிஞனாக அறிமுகமாகி கவிதைத் துறையில் பெருவிருட்சமாகிப் பரந்து நிற்பது போலவே சிறுகதைத் துறையிலும் நாவல் எழுத்திலும் அவர் ஓர் அசைக்க முடியாத இடத்தைக் கொண்டிருக்கிறார். அறுவடைக் கனவுகள், அமார்க்க வாசகம், சுடுகந்தை ஆகிய மூன்று நால்களை அவர் எழுதியுள்ளார். அவரது முதல் நாவலான ‘அறுவடைக் கனவுகள்’ 1984ல் தினகரன் பத்திரிகையில் தொடர் நாவலாக வெளிவந்திருக்கிறது. 2010ல்தான் நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

2001ம் ஆண்டு அல் அஸ_மத் அவர்களின் வெள்ளை மரம் சிறுகதைத் தொகுதி அரச தேசிய சாஹித்ய விருதைப் பெற்றிருக்கிறது.

“பல சிறுகதைப் போட்டிகளில் அவருடைய படைப்புகள் முதற் பரிசு பெற்றுத் திகழ்ந்தன. குறிப்பாக 1993ல் ‘கலை ஒளி’ முத்தையா பிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுப் புதுதில்லி ‘கதா’ அமைப்புக்காக ‘சார்க்’ நாடுகளின் அமைப்பு வரை சென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புப் பெற்ற ‘விரக்தி’ என்ற கதையையும் வீரகேசரி தனது பவள விழா ஆண்டு நிறைவுக்காக நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற ‘நிலத் தாய்’ கதையையும் குறிப்பிடலாம்” என்று இந்நாவலுக்கான அணிந்துரையில் நமது முன்னோடிகளில் ஒருவரான தெளிவத்தை ஜோஸப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


மிக அண்மையில் நண்பர் மேமன் கவி முகப்புத்தகத்தில் முதுகு சொறியும் தடி பற்றிய ஒரு கவிதையைப் பதிவிட்டிருந்தார். அதுபற்றி இடம் பெற்ற இரண்டு பின்னூட்டங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன. அதில் ஒன்று தேவராசா முகுந்தனுடையது.

“அல் அஸ_மத் ‘முதுகைக் கொஞ்சம் சொறிந்து விடுங்கோ’ என்ற சிறுகதையை எழுதி ‘திசை’ சிறுகதைப் போட்டியில் (1989) இரண்டாம் பரிசு பெற்றதாக இலேசான ஞாபகம்” என்று சொல்கிறார்.

“திசையில் 22.09.89 மற்றும் 29.09.89 ஆகிய திகதிகளில் வெளியான அல் அஸ_மத் அவர்களின் சிறுகதையின் சரியான பெயர் ‘முதுகச் சொறியுங்கோ’ என்பதாகும். இருப்பினும் உங்கள் நினைவாற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை” என்று சின்னராசா விமலன் தகவலைத் தெளிவு படுத்தி மற்றொரு குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பின்னூட்டங்களை இட்ட முகுந்தனும் விமலனும் இக் கதை வெளிவந்த காலத்தில் சற்றேறக் குறைய 20 வயதுக்குட்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும். அவர்களது நினைவாற்றலை நாம் பாராட்டும் அதே சமயம் இளவயதில் அவர்களால் படிக்கப்பட்ட ஒரு கதை இன்னும் இவர்களின் மனதில் பதிந்திருக்கிறது என்றால் அதற்கு அல் அஸ_மத் அவர்களின் எழுத்தின் வலிமையும் ஒரு காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

Saturday, November 5, 2011

கே.எஸ். சிவகுமாரன் - ஓயாமல் நடக்கும் நதி


கே. எஸ். சிவகுமாரன் பற்றிப் பேசுவதை ஓர் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது. அது எப்படியிருந்திருக்கும் என்றால் எம் ஜி ஆரின் படப் பாட்டு ஒன்றில் வருவது போல் அண்ணாந்து பார்க்கிற மாளிகையாக கே.எஸ். சிவகுமாரனும் அதனருகினில் இருக்கும் ஓலைக் குடிசையாக நானும் இருந்திருப்போம்.

கே. எஸ். சிவகுமாரன் அவர்களது பவள விழா மலராக வெளி வந்திருக்கும் ஜீவநதி சஞ்சிகையின் 37 வது இதழைப் பற்றிப் பேசுமாறு நான் கேட்கப்பட்டேன். முழுக்கவும் கே. எஸ்ஸைப் பற்றிய எல்லாத் தகவல் களோடும் வந்திருக்கும் இந்த சஞ்சிகையைப் பற்றிப் பேசுவதானது இன்னொரு வார்த்தையில் கே.எஸ். சிவகுமாரனைப் பற்றிப் பேசுவதாகும்.

இலங்கையின் தமிழ் இலக்கியப்பரப்பில் பல்வேறு பட்ட ஆளுமைகளையும் பிரகிருதிகளையும் நாம் அவ்வப்போது கண்டு வந்துள்ளோம். இப்போதும் கண்டு வருகிறோம். இருபது முப்பது புத்தகங்கள், பல்வேறு துறைகள் என்று இயங்கியோர் முதற்கொண்டு நேற்றுத் தொடங்கிய இலவச இணையத்தளத்தில் பத்து வரி எழுதியவர்கள் வரை எழுத்தாளர்களாயிருக்கின்ற சூழலில் - வாழ்வியல் பிரச்சினைகள் காரணமாக ஒரு கட்டுரையை அல்லது கவிதையை அல்லது கதையை எழுதிவிட்டு ஓடிப்போனவர்கள், இரண்டு வருடங்கள் எழுதி விட்டுக் காணாமல் போனவர்கள், ஐந்து வருடங்கள் எழுதி விட்டுப் போதும் என்று ஓய்ந்து போனவர்கள், கரடி பிறைக் காண்பது போல் இருந்து விட்டு எழுதுபவர்கள் இருந்த, இருக்கின்ற சூழலில் - இரண்டு நிமிடங்கள் கே. எஸ். சிவ குமாரன் பற்றிச் சிந்தித்தால் அவரது ஆளுமை எத்தகையது என்பது புரிய வரும் என்று நினைக்கிறேன்.


இந்தச் சஞ்சிகையில் 23 வயதானவர்கள் முதற்கொண்டு அறுபது வயதைத் தாண்டியவர்கள் வரையான பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்கள் கே. எஸ். சிவகுமாரனைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இதுதான் சிவகுமாரனுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எழுத்துத் துறை சார்ந்த எல்லா வயதினரும் தமது ஜன்னலூடாக கே. எஸ் சிவகுமாரனைப் பார்த்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்திருக்கிறார்கள் என்றால் அவரிடம் பல திறமைகள் இருந்திருக்க வேண்டும். அதை இன்னும் சிறப்பான வசனங்களில் நான் சொல்வதாக இருந்தால் எழுத்துத் துறை சார்ந்த எல்லா வயதினரையும் சிவ குமாரன் தம்மைப் பார்க்க வைத்திருக்கிறார்.

Friday, November 4, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 5


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 5

சேவைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்ட பதினைந்து பேரில் இருவர் இலங்கையர், ஒருவர் மலேசியர். இந்தியர்களில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞர் சீர்காழி இறையன்பனார் ஆகியோரும் அடங்குவர். பன்னூலாசிரியர் மானா மக்கீன், என். எம். அமீன் ஆகியோர் இலங்கைசார்பிலும் டத்தோ இக்பால் மலேசியா சார்பிலும் இவ்விருது வழங்கப் பெற்றார்கள்.



விருது பெறும் என்.எம். அமீன்

அதே போல் பதிறைந்து பேருக்குத் தமிழ் மாமணி விருதுகள் வழங்கப்பட்டன. மலேசியா சார்பில் புலவர் ப.மு. அன்வர், இலங்கை சார்பில் கவிஞர் ஏ. இக்பால், கவிஞர் அல் அஸ_மத், அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் இவ்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். ஏனைய பதினொருவரில் திருமல் மீரான் பிள்ளை, திருவை அப்துல் ரகுமான், பர்வீன் சுல்தானா ஆகியோர் அடங்குவர்.



விருது பெறும் கவிஞர் அல் அஸூமத்

மலேசிய சார்பில் விருது வழங்கப்பட்ட இருவரும் வருகை தந்திருக்கவில்லை. அவற்றை அவர்கள் சார்பில் இக்பாலிடம் பணிபுரியும் பிதாவுல்லாஹ் பெற்றுக் கொண்டார்.



விருது பெறும் அஷ்ரஃப் சிஹாப்தீன்

கவிஞர் ஏ. இக்பால் வருகை தந்திருக்காத காரணத்தால் அவருக்குரிய விருதை அவர் சார்பில் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பெற்றுக் கொண்டார்.