எல்லோருக்குமாக வாழ்வதில்
இருக்கும் இன்பம்
தனக்காக மட்டும் வாழ்வதில் இருப்பதில்லை
தனக்காக வாழ்வது சுயநலம்
பிறர்க்காக வாழ்வதாகச் சொல்வது
பொய்
தனக்கும் சேர்த்து
எல்லோருக்குமாக வாழ்வதே சுகம்
ஆதி மனிதர்கள்
ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக வாழ்ந்தார்கள்.
அங்கு
கபடத்தனமும் இருக்கவில்லை
கலகமும் இருக்கவில்லை
நதியோரங்களுக்கு வந்த பின்னர்
நாகரிகங்களுக்கு நழுவினார்கள்
நாகரிகம் வந்த பிறகுதான்
நாறிப் போனது மனித இனம்
அரசர்கள் ஆகினர்: அடிமைகள் ஆகினர்
இனங்கள் ஆகினர்: மதங்கள் ஆகினர்
ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக
என்பது
எல்லோரும் ஒருவருக்காக என்றானது
மன்னர் ஆண்டார்: மற்றவர் மாண்டார்
மன்னர்கள் ஆசை மட்டுப்படாதது
மற்றவனின்
மண்ணைப் பிடித்தார்கள்
சிலர் அவர் பெண்ணையும் பிடித்தார்கள்
கலகங்கள் வந்தன
தலைகள் உருண்டன
இனங்கள் என்றொரு இழையைக் கீறினர்
எங்களுக்காக நாங்கள் என்றனர்
அவரவர் நினைத்ததை அவரவர் செய்தனர்
சில மனிதர் வாழ்ந்தார்
பல மனிதர் வீழ்ந்தார்
மகத்துவமான மனிதர் தோன்றினர்
மதங்கள் தோன்றின
சிலர் மதங்கள் வழியே மாண்புற்றெய்தினர்
பலர் மதங்களை வைத்தே மல்லுக் கட்டினர்
இன்று வரைக்கும் இதுவே நம்கதை
ஒருவருக்காக எல்லோரும் என்பதைப்
பின்னர்
மக்களுக்காக மக்கள் என்றோம்
மக்களை மக்கள் ஆள்வது என்றோம்
மன்னர்கள் வீழ்ந்தனர்
மக்கள் தலைவர் மன்னர்களாயினர்
மக்களாட்சியில் மயங்கி நின்றோம்
வாக்கு என்பது வல்லமையென்றோம்
மானிடர் யாவரும் சமனெனக் கொண்டோம்
இனத்துவ இழைகளை இறுக்கிப் பிடித்து
மதமெனும் மதத்தை முன்னிலைப்படுத்தி
மக்களுக்காக மக்கள் என்று
மது அருந்தாமலே மயங்கிக் கிடந்தோம்
மன்னர் ஒருவன் கீழே வீழ்ந்தான்
மக்களின் தலைவர்கள் அரியணை ஏறினர்
கொள்ளையன் ஒருவன் வீழ்த்தப்பட்டான்
கொள்ளையர் நூறுபேர் அரியணை யேறினர்
மக்களாட்சியின் மகோன்னதத்தாலே
மக்கள் தேர்ந்த மாபெரும் தலைவர்கள்
மாறுவேட மன்னர்களாயினர்!
முடியாட்சியில் ஒருவனே கொள்ளையன்
குடியாட்சியில் ஒரு நூறு கொள்ளையர்கள்!
மக்களின் மன்னர்கள் வாழ்வாங்கு வாழ
மக்கள் என்றும் ஏமாந்து நிற்கிறார்
இன்று வரைக்கும் இதுவே நம்கதை
ஜனநாயகம் என்பது
ஒரு கேலிக் கூத்து
ஜனநாயகம் என்பது
கூத்தாடிகளின் கும்ப மேளா
ஜனநாயகம் என்பது
சட்டப்படி கொள்ளை கொள்வது
ஜனநாயகம் என்பது
நவீன உலகின் முகமூடி
ஜனநாயகம் என்பது
எல்லோருக்குமாகவே நாங்கள் என்கிற
ஏமாற்று வித்தையின் இயங்கு தளம்
எல்லாத் தேசங்களிலும்
ஜனநாயகம் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்
மக்கள்
குனிந்து நடக்கவே கோரப்படுகிறார்கள்
நீதி
ஆளுக்கு ஒன்றாய் அர்த்தம் தருகிறது
வாக்குகள்
கொள்ளையிடப்படுகின்றன
மனித உரிமை
மன்னர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது
மக்களரசுகள்
வல்லரசாவத்ற்கே வாஞ்சையுறுகின்றன
எல்லாத் தேசங்களிலும்
ஜனநாயகம் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்
ஆனால் அவை
ஆயுதம் வாங்குவதற்கே ஆசைப்படுகின்றன
ஒரு தேசம்
நீ எனக்காகவே என்று மற்றொரு தேசத்திடம்
சொல்லிக் கொண்டிருக்கிறது
உனது வளம்
எனது தேசத்துக்காகவே என்று அச்சுறுத்துகிறது
நான் சொல்வதைக் கேட்கவில்லையெனில்
நீ கற்காலத்துக்குப் போய்விட வேண்டும் என்று
பயமுறுத்துகிறது
எல்லாத் தேசங்களிலும்
ஜனநாயகம் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்
அத்தேசங்களிலெல்லாம்
இரத்த ஆறே ஓடிக் கொண்டிருக்கிறது...
பத்திரிகைகளில் அடிக்கடி வரும்
படங்களில் இருப்போரைக் காண
எனக்குப் பயமாக இருக்கிறது
அவர்கள்
தொலைக்காட்சிகளில் வரும்போது கூடத்
தூர அமர்ந்து கொள்கிறேன்
அவர்கள்
உயிர் பெற்று வந்து
என் குரல்வளையைக் கடித்து விடுவார்களோ
என்று அச்சப்படுகிறேன்
இந்த அச்சம் பரவி
யாருடையவாவது குரல்வளையை
நான் கடித்து விடுவேனோ என்று
எனக்கு அச்சமாக இருக்கிறது
சிந்தித்துப் பார்த்தேன்
இப்போது
ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக
வாழ்வதாக இல்லை
காதலனோ காதலியோ
ஒருவரிடம் ஒருவர்
திருமணத்துக்கு முன்பாகவும்
அரசியல்வாதிகள்
தேர்தலுக்கு முன்பாகவும்
சொல்லிக் கொள்கிறார்கள் -
உனக்காகவே வாழ்கிறேன் என்று!
(கவியரங்கு ஒன்றில் படிக்கப்பட்ட கவிதை)