Wednesday, February 16, 2011

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - மலேசியா


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 01

அறிமுகம்

இவ்வருடம் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான தகவல்கள் தெரிவிக்கும் இலங்கைக்கான கூட்டம் கடந்த 5.2.2011 அன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சில கேள்விகளை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து நானும் எழுத்தாளர் மானா மக்கீனும் சில கருத்துக்களை முன் வைத்தோம். மலேசியக் குழுவைத் தலைமை வகித்துக் கூட்டி வந்த டத்தோ ஹாஜி முகம்மத் இக்பாலும் அவரது சகபாடியான சீனி நைனாரும் எமது சந்தேகங்களுக்குச் சரியானதும் போதுமானதுமான பதில்களைத் தந்திருக்கவில்லை. சீனி நைனார் ஒரு படி மேலே போய் விடயத்தை வேறு பக்கத்துக்குத் திருப்ப முயன்றார். அதனைத் தொடர்ந்து அந்த அரங்கிலிருந்து நாம் வெளிநடப்புச் செய்தோம்.

பொதுவாக இக்கூட்டத்துக்கு வந்திருந்தோருக்கு அந்நிகழ்வுகள் ‘ஏதோ ஒன்று நடந்திருக்கிறது’ என்ற எண்ணத்தையும் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அரசியல் சார்ந்தோருக்கும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் ஒரு சிலருக்கும் இந்நிகழ்வுகள் ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

Friday, February 4, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - 2011


இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களது குரல் எல்லோருக்கும் பரிச்சயமானது. இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணி புரிந்தவர். ஜாமிஆ நளீமிய்யாவின் பழைய மாணவர். இலக்கியத் தளத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் இவர் கவிதைகளுக்கான ‘யாத்ரா’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். இதுவரையில் இவரது ஐந்து புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 2008ல் கவிதைக்கான தேசிய அரச சாஹித்ய விருது பெற்றவர்.அண்மையில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இவர் இயங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.

சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹ{த்தீன்

* பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...

சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன். எழுத்தாளர் லெ.முருகப+பதி இலங்கைக்கு வந்த நேரம் மல்லிகையில் ஒரு சந்திப்பு நடந்திருக்கின்றது. அந்த சந்திப்பில் டொமினிக் ஜீவா அவர்கள் தமிழ் எழுத்தாளர்களை அதாவது தமிழில் எழுதும் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் அனைத்து எழுத்தாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்காக இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டுமென சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தின் அடிப்படையிலேயே திரு.முருகபூபதி இம்முயற்சியில் இறங்கினார். இதனை முன்னெடுத்துச் செல்ல 2010ல் சர்வதேச எழுத்தாளர் ஒன்றியம் என்ற அமைப்பு எழுத்தாளரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.தி.ஞானசேகரன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அவ்வளவுதான். வேறு எந்தப் பின்னணியும் இந்த மாநாட்டுக்கு கிடையாது.