Tuesday, August 8, 2023


 அல் அஸூமத் - எழுதிய இஸ்லாமிய நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் - எனது பார்வை  

- அஷ்ரஃப் சிஹாப்தீன் -

          

அல் - அஸூமத் அவர்களை முதன் முதலாக நான் சந்தித்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் என்பது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. முஸ்லிம் சேவைக்கான ஒரு கவியரங்க ஒலிப்பதிவு நிகழ்வு அது. அவரது தலைமையில்தான் அந்தக் கவியரங்கம் நடைபெற்று ஒலிபரப்பானது. கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். ஏனையவர்கள் இப்போது ஞாபகம் இல்லை. எனது கவிதையை நான் வாசித்து முடித்ததும் 'உங்களுக்கு மரபுக் கவிதை நன்றாக வருகிறது,' என்று பாராட்டினார். அவருக்கு அன்று என்னைப் பிடித்துப் போயிருக்க வேண்டும். 

அல் அஸூமத் கொழும்பு - நீர்கொழும்புப் பிரதான பாதையொட்டி அமைந்திருக்கும் மஹபாகே என்ற இடத்தில் குடியிருந்தார். திருமணத்தின் பின் நான் வத்தளை - மாபோளைக்கு வந்து சேர்ந்தேன். எனது வீட்டுக்கும் அவரது வீட்டுக்குமிடையிலான தூரம் மூன்று கிலோ மீற்றர் எனலாம். இதனால் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் நான் அவர் வீட்டுக்குச் சென்று அவருடன் உரையாடிக் கொண்டிருப்பேன்.

அவரது மூத்த புதல்வரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான இப்னு அஸூமத் (பாரூக்) எனது வயதொத்தவர். வகவத்தில் அறிமுகமாகி எனது குறிப்பிடத்தக்க நண்பர்களில் ஒருவரானவர். இதற்கப்பால் அஸூமத் அவர்களின் மூத்த புதல்வியைத் திருமணம் செய்தவர் கவிஞர் கிண்ணியா அமீர் அலி அவர்கள். அமீர் அலி எனது தாய் வழிப் பாட்டனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த வகையில் அல் - அஸூமத் அவர்கள் குடும்ப வழியிலும் ஒன்றித்தவர். இந்தக் காரணங்கள் பற்றியும் எமது உறவு நன்றாக நீடித்திருந்தது. இன்று வரை நீடித்து வருகிறது.

இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் நடத்துவது, வெளி நாடுகளில் கலந்து கொள்வது என்று அல் - அஸூமத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தாஸிம் அகமது, நான் ஆகியோர் ஒன்றாக இயங்கி வந்துள்ளோம். கடந்த 2016 ஆம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மலர், அரங்கக் கட்டுரைத் தொகுதி இரண்டையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் செம்மைப் படுத்தித் தந்தவர்.  ஒவ்வொரு புத்தகமும் 600 பக்கங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவற்றுக்கெல்லாம் அப்பால் அல் அஸூமத் நல்ல நகைச் சுவை சொல்லக் கூடியவர். எழுதவும் கூடியவர். நாங்கள் குழுவாகச் சேர்ந்திருக்கும் போதுதான் அவரது நகைச்சுவைகள் வெளி வரும்.அவற்றில் பெரும்பாலானவை இலக்கியமும் இலக்கியவாதிகளும் சார்ந்தவையாக இருக்கும்.

யாத்ரா (21 அல்லது 22 இல்) அவர் எழுதிய ஒரு சிறுகதை உண்டு. இலங்கையின் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களையும் கிண்டலடித்திருப்பார். இக்கதையை அவர் எனக்குத் தந்த போது அவர் தலைப்பிட்டிருக்கவில்லை. அக்கதைக்கு 'அலையழிச்சாட்டியம்' என்ற தலைப்பை நான் இட்டேன். வாய்ப்புக் கிடைக்குமானால் அதனைத் தேடி வாசித்துப் பாருங்கள். சிரிப்பு நிச்சயம்!

2

'ஜீவநதி' அல் அஸூமத் அவர்கள் பற்றிய மலரொன்றை வெளியிடுவதற்காக அவரது இஸ்லாமிய இலக்கிய, இஸ்லாம் மார்க்கம் சார் எழுத்துகள் பற்றிய ஓர் முழு ஆக்கத்தைக் கோரி என்னிடம் வேண்டுகோள் வைத்தது. எனவே இந்த ஆக்கத்தில் அவை பற்றி மட்டும் பேச வேண்டியதே எனக்குரிய வேலை என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

2000 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நபி மொழிகளை குறட்பாக்களாக எழுதிக் கொண்டிருந்தது எனக்கு  ஞாபகம் உண்டு. ஆனால் பின்னாளில் அதை மொத்தமாக இழந்து விட்டிருந்தார். அத்தோடு அது பற்றிய ஆழந்த கவலை அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் இருந்தது. இதற்கப்பால் நபிக் குறள்கள் எழுதினார். அதன் தட்டச்சுப் பிரதியை நான் பார்த்திருக்கிறேன். அது இன்னும் வெளிவரவில்லை. அதில் 1800 குறட் பாக்கள் அடங்கியிருக்கின்றன என்று அவர் எனக்குச் சொன்னது ஞாபகத்தில் உண்டு. 

அல் அஸூமத் அவர்களின் முதல் மொழிபெயர்ப்பு நூல்களில்  'பிலால்' என்ற நூலைத்தான் முதலில் நான் வாசித்தேன். அது ஒரு பரவசம். அந்தப் பரவசத்துக்குக் காரணங்களில் ஒன்று அந்நூலின் எழுத்து நடை. இரண்டு அந்த நூல் யாரை வைத்து எழுதப்பட்டதோ அந்த நபர். வாசிக்கும் போது பல இடங்களில் என்னை அழவும் மெய் சிலிர்க்கவும் வைத்த நூல் அது. 

பிலால் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அபிசீனிய பரம்பரையில் வந்த ஓர் அடிமை. நபிகளார் வழி காட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சொல்லொணாத் துன்பங்களுக்கும் ஆக்கினைகளுக்கும் ஆளானவர். கருப்புத் தோல் கொண்ட இந்த பிலால்தான் தொழுகைக்காக முதன் முதலில் அதான்' சொல்ல (தொழுகைக்கு அழைப்பு விடுக்க) நபிகளாரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டவர். நபிகளார் அவருக்கு வழங்கிய இந்த உயரிய மரியாதை, நபிகளாருடனேயே நிழல் போல் வாழ்ந்தது ஆகிய காரணங்களால் இன்று வரை உலகளாவிய முஸ்லிம்கள் அனைவராலும் கண்ணியத்துக்கும் மரியதைக்கும் உரியவராகக் கருதப்படுகிறார்.

இத்தகைய கண்ணியத்துக்குரிய பிலால் அவர்களைப் பற்றி அயர்லாந்து தேசத்தவரான எச்.ஏ.எல். க்ரேய்க் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது இந்நூல். இதன் முதல் பதிப்பு ஆங்கிலத்தில் 1977 இல் வெளிவந்திருக்கிறது. கவிஞர், நாடகத் துறையாளர், சினிமா வசன கர்த்தா என்று பல்வேறு திறமைகளைக் கொண்ட க்ரெய்க், நபித் தோழரான பிலால் இப்னு ரவாஹா பற்றி இந்த நூலை எழுதியிருப்பதே ஓர் ஆச்சர்யம்தான். அதை அதே கவித்துவ நடையில் அல் அஸூமத் அவர்கள் கொண்டு வந்திருப்பதும் மற்றோர் ஆச்சர்யம். இந்த நூல் பிரபல ஆங்கில இஸ்லாமிய நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்த தர்ஹா நகரைச் சேர்ந்த அப்த் அல் ஜப்பார் முகம்மது ஸனீர் அவர்களது முயற்சியின் பலனாகத் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டது. தமிழில் இதன் இரண்டாவது பதிப்பு 1995ல் வெளியிடப்பட்டிருக்கிறது. முதற் பதிப்பு 1988 இல் வெளிவந்திருக்கலாம் என நினைக்கிறேன். இன்றளவில் இந்த நூல் ஐந்து பதிப்புகளைக் கண்டிருப்பதாக அறிய வருகிறேன்.

இந்த நூலை ஓர் இஸ்லாமிய இலக்கிய நூலாக நான் கருதிய காரணத்தால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான முஸ்லிம் சேவையில் நான் நடத்தி வந்த 'இலக்கிய மஞ்சரி' நிகழ்ச்சியில் போர்கள் பற்றிய ஓரிரு அத்தியாயங்கள் தவிர, ஏனையவற்றை வாசித்து ஒலிபரப்பி வந்தேன். (ஒலிபரப்பான காலத்தில் போர்கள் பற்றிப் பேசுவது தவிர்க்கப்பட்டிருந்தது,) இந்த அத்தியாயங்களை வாசிக்கக் கேட்ட பலர் இந்த நூலை எங்கே வாங்குவது என்று கேட்டு என்னிடம் விபரங் கோரியிருந்தார்கள். அதில் ஒருவர் தன்னை முச்சக்கர வண்டி ஓட்டுனர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது மனைவி இந்த நூலைப் பெற்றுத் தரக் கோரியதாக என்னிடம் சொல்லி வினவியது கொண்டு இந்த நூலின் அடைவு எழுத்தழகு மேலும் என்னைப் பிரமிக்கச் செய்தது.

இந்த நூலை க்ரெய்க் அவர்களின் மொழிக்கு அப்பால் அதாவது தனித் தமிழ்க் காப்பியமாக உருவாக்கவே முதலில் அல் அஸூமத் அவர்கள் ஆரம்பிதததாகவும் மொழி பெயர்க்கப் பொறுப்பளித்தவர் க்ரெய்க் அவர்களின் மொழிப் போக்கிலேயே அதை விரும்பியதனால் தமிழ்க் கவிதைப்படுத்தும் முயற்சியை ; நிறுத்த வேண்டி வந்ததாகவும் அல் அஸூமத் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

ஆயினும் பின்னர் 'பிலால்' தமிழ்க் காவிய நூலை எழுதி முடித்த அல் அஸூமத் அதனை 2020 ஆம் ஆண்டு 240 பக்க நூலாக வெளியிட்டார். க்ரெய்க் அவர்களின் நடைப்போக்குக்குக் குறையாமல் இந்தத் தமிழ்க் காப்பியம் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியின் தனி அழகோடு இந்த நூலை வாசித்து இரசிக்க முடியும்.

க்ரெய்க் அவர்களின் நூலின் மொழிபெயர்ப்பில் பிலால் அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் விதமான முதற் பந்தி இப்படி அமைந்திருக்கும்:-

'நான் ஓர் அடிமை. என் பெயர் பிலால். என் தாய், தந்தையரும் அடிமைகள். பிறப்பிலேயே அடிமையான நான் எனது எஜமான் உமையா என்னைக் கொன்று விட முடிவெடுத்த நாள் வரையும் அடிமையாகவே இருந்தேன்.'

பின்னால் வந்த பிலால் காவியத்தில் இந்த வரிகள் இப்படி இருக்கும்:-

அடிமையர் குழந்தை ஆய பிலால் யான்

அடிமைத் துவத்துள் அவதரித் தென்றன்

உடையான் வணிகள் உமையா எனைக்கொல

முடிவுகொள் நாள்வரை தொடர்ந்ததில் இருந்தேன்

3

மொழிபெயர்ப்புக்கு அப்பால் அல் அஸூமத் எழுதிய இஸ்லாமிய நூல்களில் உச்சமானதாக இருப்பது முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியதுதான். இந்த நூல் தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் அல் அஸூமத்தை நோக்கிக் கண்களை அகல விரிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

தமிழகத்தைச் சேர்ந்தவரும் சிங்கப்பூரில் வசித்து வருபவருமான அன்புச் சகோதரர் எம்.ஏ. முஸ்தபா அவர்கள் ரஹ்மத் அறக்கட்டளை என்ற ஒன்றை நிறுவிப் பல்வேறு இஸ்லாமிய நூல்களை வெளியிட்டு வருகிறார். அவர் நல்ல வாசிப்பாளர் மட்டுமன்றி இலக்கிய இரசிகரும் கூட. சிங்கப்பூரிலும் 'சிரங்கூன் டைம்ஸ்' என்ற ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.

இந்த அறக்கட்டளையானது முகம்மது நபியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இலகுவில் படித்தறியும் வகையில் எழுதப்பட வேண்டும் என ஒரு சர்வதேசப் போட்டியை நடத்தியது. முதலாவதாகத் தெரிவு செய்யப்படும் பிரதிக்கு இந்திய நாணயத்தில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதை ரஹ்மத் அறக்கட்டளையே வெளியிடும் என்றும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொருத்தமாக அந்த நூலை எழுதி வெற்றி பெற்றவர் அல் அஸூமத் அவர்கள்.

'நூலாசிரியர் பிறப்பால் ஓர் இந்து. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். தமிழாசிரியர், தந்தை ஒரு மலையாளி. முஸ்லிம் நண்பர்களுடன் பழகியபோது, இஸ்லாமிய பழக்கவழங்கள் சிலவற்றைத் தெரிந்திருக்கிறார். இஸ்லாத்தை முறையாகக் கற்கும் வாய்ப்பு மிகத் தாமதமாகவே கிடைத்திருக்கிறது. 

நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்த போது உண்மையிலேயே பல இடங்களில் அழுதிருக்கிறார். திறந்த மனதோடு ஒன்றை வாசிக்கும்போது அதிலுள்ள யதார்த்தம் உலுக்கவே செய்யும். பின்னர் குர்ஆனைப் படித்தார். இஸ்லாத்தில் இணைந்தார்' என்று நூலை மேலாய்வு செய்தவர்கள் தமது உரையில் அல் அஸூமத் அவர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சற்றேறக்குறைய 750 பக்கங்களிலான இந்த தூல் 2018ம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் கிடைப்பது போல் இலங்கையில் இந்நூலைப் பெற முடியவில்லை. இந்ந நூலுக்கான பரிசளிப்பு ஒரு விழாவாக நடத்தப்படும் என்று சொல்லப்பட்ட போதும் அது நடைபெறவில்லை. சில வேளை தமிழக எழுத்தாளர் எழுதிப் பரிசு பெற்றிருந்தால் அப்படி ஒரு விழா நடந்திருக்கலாமோ என்று நான் சில வேளை எண்ணுவதுண்டு.


4

'இறைதூதர் முகம்மது (ஸல்) அவர்களது காலத்தில் பெண் விடுதலை' என்ற தலைப்பிலான பிரமாண்ட அளவு கொண்டு ஒரு மொழிபெயர்ப்பு நூல் 2015 ஆம் ஆண்டு வெளியானது. பிரபல இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளருமான அப்துல் ஹலீம் அபூ ஷக்கா அவர்கள் அறபியில் எழுதிய ஆறு பாகங்களைக் கொண்ட நூலின் அறபியில் அமைந்த சுருக்க வடிவமான இரண்டு பாகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. ஏ4 அளவிலான வடிவத்தில் ஏறக்குறைய 800 பக்கங்களில் அமைந்த இந்நூல் தமிழில் வெளிவரக் காரணமாக இருந்தவர் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மட்டத்தில் அறியப்பட்ட நல்லவாசகரும் மொழிபயர்ப்புக்கான சிறந்த நூல்களை அடையாளம் காணக் கூடியவரும் மொழிபெயர்ப்பாளருமான தர்ஹா நகரைச் சேர்ந்த அப்த் அல் ஜப்பார் முகம்மத் ஸனீர் அவர்கள்.

நான் மேலே  குறிப்பிட்;ட  அறபில் சுருக்கப்பட்ட இரண்டு பாகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் பிரபல மொழிபெயர்ப்பாளர் நான்ஸி ரொபர்ட் அவர்கள். தமிழில் ஒரே நூலாக இது அமைந்த போதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த நூலின் இரண்டாம் பகுதியை (ஏறக்குறைய நூலின் பாதி) மொழிபெயர்த்தவர் அல் அஸூமத் அவர்கள். முதற்பகுதியை அறபு வல்லுனரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி பி.எம்.எம். இர்பான் அவர்கள் அறபி மூலத்திலிருந்தே மொழிபெயர்த்திருந்தார். 

இந்த நூல் நபிகளார் காலத்து இஸ்லாம் மார்க்கம் சார்ந்த பெண்கள் பற்றிய புனை கதைகளைக் கொண்டவை அல்ல. நபிகளார் வந்த பின்னர் பெண்கள் வாழ்ந்த துயர வாழ்விலிருந்து பெற்ற விடுதலையை அவர்களது சமூகப் பங்களிப்பை ஆதாரங்களோடு முன்வைக்கிறது. நபிகளாரின் சொல், செயல், நடைமுறை அனைத்தும் பற்றிய தகவல்கள் பற்றி அறிவித்தவர்கள் யார், அதைக் கேட்டவர், கண்டவர் யார் என்பதற்கெல்லாம் ஒரு தொடர் இருந்தால் மாத்திரமே அது சரியான அறிவிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். அறிவிக்கும் முதல் நபர் முதல், கேட்டவர், கண்டவர் அனைவரும் நம்பிக்கைக்குரியவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறான தகவல்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

இஸ்லாமோபோபியாவை முன் கொண்டு செல்பவர்கள் முதலில் இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம் என்பதையும் அங்குப் பெண்கள் அடக்கியொடுக்கப்படுகிறார்கள் என்பதையுமே முற்படுத்தி வருவதை நாம் காண்கிறோம். எழுதப்பட்டவற்றையே திருப்பித் திருப்பி வேறு வார்த்தைகளில் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு கருத்து உண்டு. அதே போல பதிலளிக்கப்பட்ட கேள்விகளையே இஸ்லாமோபோபியா மீண்டும் மீண்டும் தமது செல்வாக்கு, அதிகாரம், வருமானம் ஆகியவற்றை வைத்துத் தமது ஊடகங்கள் மூலம் கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. இந்த நூலைத் திறந்த மனதுடன் படித்தால் அக்கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் கண்டடைய முடியும்.

இந்த நூலுக்கான அல் அஸூமத் அவர்களின் பங்களிப்புப் பற்றி இந்த நூலின் வெளியீட்டாளர் இப்படிச் சொல்கிறார்:-

'மொழிச் செம்மை குறித்து மிகவும் அவதானமாக இருப்பவர் கவிஞர். அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால் 'கண்னில் விளக்கெண்ணெய் இட்டு'க் கண்காணிப்பவர்.அவரது மொழிபெயர்ப்பில் அழகழகான, பொருத்தத்தில் மிகுந்த சொற்பிரயோகங்களைக் கண்டு களிக்கலாம்.'

5

எம்.ஏ.முஸ்தபா அவர்கள் நிறுவிய ரஹ்மத் அறக்கட்டளைக்காக அல் அஸூமத் அவர்கள் செய்த குறிப்பிடத்தக்க மற்றொரு பணி 'இஸ்லாமிய வரலாறு' என்ற மூன்று பாகங்கள் கொண்ட பெருநூலை மொழிபெயர்ப்புச் செய்ததாகும். மூன்று பாகங்களாக 2017 இல் வெளிவந்த இந்த நூல்கள முறையே; 629, 815, 573  பக்கங்கள் கொண்டவை. 

உண்மையில் இந்த வராற்றுத் தொடரை தமிழ்ப் பேசும் உலகம், தமிழ்ப் பேசும் முஸ்லிம் உலகம் அறிந்து கொள்வதெனில் ஒன்றில் அராபிய நூல்களை அல்லது ஆங்கில நூல்களையே படிக்கும் நிலை மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. இந்த மூன்று பாகங்களின் மூலம் அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கிறது.

எல்லா மனிதர்களாலும் வரலாற்றைப் படிக்க முடியாது போனாலும் கற்றவர்கள், புத்தி ஜீவிகள் கற்பதன் மூலம் சக இன, மதக் குழுமங்களின் பின்னணியைத் தெரிந்து பேச முடியும். தற்காலத்தில் உள்ள படிப்பாளிகளில் பலர் இவற்றையெல்லாம் படிக்காமலேயே அரை குறை அறிவுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். சச்சரவுக்குப் பின்னால் இருக்கிறார்கள். தமது முழங்கை அளவு கொண்டு வரலாறுகளைத் திரித்து விடுகிறார்கள். அவை வெறுப்புணர்வை வளர்க்கின்றன. மனிதர்களைக் கூறு போடுகின்றன.

6

அல் அஸூமத் அவர்களின் மொழிபெயர்ப்பிலான இன்னும் அச்சில் வெளிவராத இரண்டு அற்புதமான நூல்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இரண்டுமே அச்சுக்குத் தயாரான தயாரிப்பில் சகலதும் பூர்த்தியான நிiயில் உள்ளன. அவற்றில் ஒன்று, கலாநிதி ஆய்த் அப்துல்லாஹ் அல் கர்ணி அறபியில் எழுதிய 'லா தஹ்ஸன்' - 'கவலைப்படாதீர்கள்' என்று நூல். இந்த நூல் 625 பக்கங்களைக் கொண்டது.

இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டோன்ற் பீ ஸாட்' - இனை தர்ஹா நகரைச் சேர்ந்து அப்த் அல் ஜப்பார் முகம்மது ஸனீர் அவர்களே அல் அஸூமத் அவர்களுக்கு வாசிக்கக் கொடுத்திருக்கிறார். இதன் ஆத்மீகப் பெறுமதி கருதி அதனை அல் அஸூமத் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். 

மானிடரின் கவலை, ஆற்றாமை, நம்பிக்கையீனம், பலவீனங்கள் அனைத்தையும் இந்த நூல் துடைத்து எறிந்து விடுகிறது. மனதை ஆற்றுப்படுத்துகிறது. அதற்கெனக் கொடுக்கப்படும் விளக்கங்கள் மிகத் தெளிவானவை, இலகுவானவை. சிறிய சிறிய அத்தியாயங்களாக அமைந்திருக்கும் இந்த நூலை வாசிப்பவர்கள் பொறுமை மிக்கவர்களாகவும் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்களாகவும் மாறி விடுவார்கள் என்பதை என்னால் அழுத்திச் சொல்ல முடியும். இதே முறையில் எழுதப்பட்ட டேல் கார்ணகியின் ஒரு நூல் உலகப் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

'கவலைப்படாதீர்கள்' என்ற இந்த நூலின் ஆக்கத் திறன், முஸ்லிம்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.  திறந்த மனதோடு இந்நூலை வாசிக்கும் முஸ்லிம் அல்லாதோரும் ஆசிரியரின் ஆலோசனைகளையும் சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள முடியும். இந்த ஆலோசனைகள் அருளப்பட்ட ஒழுக்காறுகளின் உறுதி மீதும் உண்மையை ஊடுருவிச் செல்லும் கற்றறியப்பட்ட சிந்தனைகளின் மீதும் கட்டமைக்கப்பட்டவையாகும்' என்கிறார்  இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பாசிரியரான முகம்மத் இப்ன் அப்துல் முஹ்ஸின்  அல் துவைஜ்ரி அவர்கள்.

ஆனால் அந்த ஆனந்தத்தை அடைய இந்த நூல் வெளிவர வேண்டாமா? எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் ஒரு சாதாரண அளவிலான நூலை வெளிக்கொணரப் படும்பாடு அறியதவரா நாம்? யாராவது ஒரு செல்வந்தரின் கண்களில் பட்டு, அவரது ஆத்மா இதை வெளிக் கொணரத் துடிக்குமாயின் அதை விட மகிழ்ச்சியான செய்தியொன்று இருக்காது. அந்தப் பாக்கியத்தைப் பெறும் மனிதர் யாராக இருப்பார் என்று இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியும்?

மற்றைய நூல் 'பாலைவனப் போராட்டம்.' டென்மார்க் ஊடகவியலாளரான நுத் ஹோம்போவின் பயண அனுபவ நூல் இது. டென்மார்க்கிலுள்ள ஹோர்ஸன்ஸ் நகரில் 1902 ஆம் ஆண்டு பிறந்த ஹோம்போ 1930 இல் போல்கனை ஊடறுத்துப் பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் பயண நூலே 'பாலைவனப் போராட்டம்.'

ஹோம்போ தனது இருபதுகளில் இஸ்லாத்தை வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்டார். பலவீனமானவர்களதும்  ஒடுக்கப்பட்டவர்களினதும் பக்கமாக அவரை எப்போதும் இழுத்துச் சென்ற நேர்மையுணர்வு அவரிடம் மிகுதியாக இருந்ததால் அவர் கொல்லப்பட்டார்' என்கிறது நூலின் அறிமுகக் குறிப்பு.

''பாலை நிலப் போராட்டம்' என்ற இந்த நூல் தனித்துவமான ஒரு துணிகரச் செயல். இந்த நூலைப் படிக்கும் போது எனது கண்களில் பலமுறை கண்ணீர் வடிந்தது. அரேபியப் புரட்சியைப் பற்றிய அவருடைய சொற்களை நீங்கள் வாசிக்கும் போது இந்த டென்மார்க் ஊடகவியலாளரின் தூய இயற்பண்பை இலகுவாக நுகர முடியும்'' என்கிறார் ஃபேடல் சுலைமான் - இவரே இந்த நூலை வெளியிட்டவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

'அவர்கள் கிழிபட்டவர்களாகக் காணப்பட்டார்கள். ஆனால் உறங்கும் இப்போது கூட, அவர்களின் எல்லா முகங்களிலும் முன் பின் அறியப்படாத அமைதியான, தீர்க்கமாக அமைதிப் பார்வை இருந்தது. இமைகளின் ஓர் இமைப்புக் கூட இல்லாமல் இறப்பதற்கு இயலுமாயிருப்பது ஏன் என்று எனக்கு விளங்கத் தொடங்கியது.  ஒரு நாள் அவர்களுடன் கழித்த போது நான் கவனித்திருந்ததன்படிஅவர்கள் தமது சமய மனச்சாட்சிக்கு அச்சங்கொண்டு பின்பற்றினார்கள் என்பதைக் கண்டேன். எக் கொடிய விதி அவர்களைத் தாக்கியிருந்தாலும் அந்நடப்புக்காக இறைவனைக் குறை கூற அவர்களுக்குத் தோன்றவே இ;ல்லை.' 

மேலேயிருக்கும் பந்தி ஹோம்போவின் எழுத்து நடையின் அழகை எடுத்துக் காட்டுகிறது.

புத்தக வடிவில் 10 புள்ளி எழுத்துருவில் 360 பக்கங்களைக் கொண்ட நூல் இது. 

7

என்னுடைய கருத்துப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களில் முதல் இ;;டத்தை அல் அஸூமத் அவர்களே வகிக்கிறார் என்பேன். தமிழ் இலக்கணம், கவிதை, நாவல், சிறுகதை, சஞ்சிகை, பெறுமதியான மொழிபெயர்ப்புகள் என திரும்பும் பக்கமெல்லாம் அவரே தெரிகிறார். இவ்வளவையும் செய்து விட்டு அல்லது செய்து கொண்டு மிக அமைதியாக இருக்கும் ஒரு நபரும் இவரே.

நூலாக வெளிவராத அவரது எழுத்துகளை நான் இனிமேல்தான் வாசிக்க வேண்டும். இதுவரை படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது 'பிலால்' தான். அதற்குக் காரணம், க்ரெய்க் அவர்களின் மொழி நடையும் அதை அப்படியே தமிழில் தந்த அல் அஸூமத் அவர்களும் முகம்மது நபியவர்களுடன் நிழல் போல் 22 வருடங்கள் வாழ்ந்தவரும், தொழுகைக்கான முதல் அழைப்பை விடுத்தவரும் உலக முஸ்லிம்களால் நெகிழ்ச்சியுடன் மதிக்கப்படுபவருமான ஸெய்யிதினா பிலால் (ரலி) அவர்களுமாவர்.

எல்லாருக்கும் ஆயிரமாயிரம் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கின்றன. எனக்கும் உள்ள சின்னச் சின்ன ஆசைகளில் முதன்மைக்குரிய ஒன்று இருக்கிறது. கவிஞர் அல் அஸூமத்துடன் டமஸ்கஸ் சென்று; பிலால் (ரலி) அவர்களின் அடக்கஸ்தலத்தில் நின்று,  அவருக்கு ஸலாம் உரைத்து, 'ஸெய்யிதினா பிலால், இதோ உங்களைத் தொடர்ந்த இன்னொரு பிலாலுடன் உங்களைக் காண வந்திருக்கிறேன்' என்று உரக்கச் சொல்ல வேண்டும்!

(ஜீவநதி 202 வது இதழில் வெளிவந்த கட்டுரை)



Thursday, October 13, 2022

எங்களுக்கு நீங்கள்தான் வாள் - உங்களுக்கு நாங்கள்தான் உறை!

 


                                                                                    அடோனிஸ்


1930ம் ஆண்டு சிரியாவில் ஓர் ஏழ்மை மிகுந்த விவசாயக் கிராமத்தில் நான் பிறந்தேன். எனது கிராமத்தில் பாடசாலைகள் இல்லை. தொலைபேசி வசதிகள் இல்லை. மின்சாரமும் கிடையாது. எதுவுமே கிடையாது. எனது பதின் மூன்று வயது வரை நான் ஒரு காரைக் கண்டதும் இல்லை.

எனது தந்தையார் பாரம்பரிய அறபுக் கலாசாரத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். நானும் அந்தப் பின்னணியோடுதான் வளர்க்கப்பட்டேன். அறபுக் கலாசாரத்தின் சாரமாக அமைந்தது கவிதைதான். எனவே, அனைத்துக் கவிஞர்களதும் கவிதைகளை வாசிக்க எனது தந்தையார் என்னைத் தூண்டினார். இஸ்லாத்துக்கு முந்திய காலப்பிரிவிலிருந்து இஸ்லாம் அறிமுகமான பின்னர் தோன்றிய அனைத்துக் கவிஞர்களும் அதற்குள் அடங்குவார்கள். மிகப்பிரபல்யம் வாய்ந்த அல் முதனப்பி, அபு தம்மாம், அல் மஆரி, ஏன் இம்ரஉல் கைஸ், அபூ நவாஸ் அடங்கலாக எல்லோருடைய கவிதைகளையும் நான் படித்தேன். இப்படியொரு சூழலில்தான் நான் வளர்ந்து வந்தேன்.

இப்படியிருக்கும் போது நானும் தன்னிச்சையாகக் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். இது இயல்பாகவே நடந்தது. 

1943ம் ஆண்டில் ஒரு நாள் சிரியா சுதந்திரம் அடைந்தது. அப்போது எனக்கு வயது பதின்மூன்று. ஷூக்ரி அல் குவாத்லி முதலாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தனது நாட்டைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் நோக்கில் சிரியாவின் எல்லா மாகாணங்களுக்கும் விஜயம் செய்ய விரும்பினார். இந்தத் தகவல் எங்கள் கிராமத்திலும் பேசப்பட்டது. எனக்கு எப்படி அந்த எண்ணம் தோன்றியது என்று ; தெரியாது, எமக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடு முகமாகவும் அவரை வரவேற்கு முகமாகவும் ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அந்தக் கவிதையில் ஜனாதிபதியிடம் ஒரு வேண்டுகோள் விடுப்பது போலவும் அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் பாடசாலை வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று அது அமையக் கூடிய வகையில்  கற்பனை செய்தேன். அந்தக் கவிதையை அவ்வாறே எழுதி என் தந்தையிடம் வாசித்துக் காட்டிய போது மிக நன்றாக அது அமைந்திருக்கிறது என்று சொன்ன அவர், இதை எப்படி அவரை நெருங்கி நீ வாசித்துக் காட்டுவாய் என்று கேட்டார். ஏதோ ஒரு வழியில் முயற்சிக்க வேண்டும் என்று தந்தையாரிடன் சொன்னேன். 'உனக்கு எனது வாழ்த்துக்கள். உனது முயற்சி வெற்றி பெறட்டும்;'என்று அவர் என்னை வாழ்த்தினார்.

எமது கிராமத்துக்கு அருகேயுள்ள நகருக்கு ஜனாதிபதி வருகை தந்தார். (கதை நீண்டுவிடும் என்பதால் சுருங்கச் சொல்கிறேன்.) அன்று கிராமத்துப் பாரம்பரிய ஆடையையும் ஒரு நைந்து கிழிந்த பாதணியையும் நான் அணிந்திருந்திருந்தேன். உண்மையில் நான் வெறுங்காலுடன் நடக்கப் பழக்கப்பட்டவன்தான். ஓர் அதிசயமான சூழலில் அவருக்கு அந்தக் கவிதையை என்னால் வாசித்துக் காட்ட முடிந்தது. உண்மையில் அவருக்கு அந்தக் கவிதை மிகவும் பிடித்திருந்தது. எனது கவிதையிலிருந்து ஒரு வசனத்தை அவர் எடுத்துத் தனது உரையில் பயன்படுத்தினார். அந்த வரிகள் இப்போதும் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. 'எங்களுக்கு நீங்கள்தான் வாள் - உங்களுக்கு நாங்கதான் உறை'. இவைதாம் அவ்வரிகள்.

அவர் தன்னை வந்து சந்திக்குமாறு என்னிடம் சொன்னதற்கேற்ப, நான் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றேன். என்னை ஆரத் தழுவிக் கொண்டு 'உனக்கு என்ன வேண்டும் மகனே?' என்று கேட்டார். 'நான் பாடசாலைக்குப் போக வேண்டும்' என்று சொன்னேன். 'உனது கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும், நீ பாடசாலைக்குச் செல்வாய்' என்று சொன்னார். இப்படித்தான் அதாவது கவிதையால்தான் பாடசாலைக்குச் சென்று கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிதைக்காகவே நான் பிறந்தேன் என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. 

அடோனிஸ் என்ற பெயர் எனக்கு எப்படி வந்தது என்று நான் சொல்ல வேண்டும். பாடசாலைக் கல்விக்குப் பின்னர் இரண்டாம் நிலைக் கல்விக்காக டார்ட்டுஸ் நகர பிரஞ்சுப் பாடசாலையில் சேர்ந்தேன். அங்கே ஒன்றரை வருடமளவில் கற்றேன். 1945ல் அப்பாடசாலை மூடப்பட்டு வி;ட்டது. அதற்குப் பின்னர் அரச பாடசாலைக்குச் சென்றேன். 

அப்போதே கவிதைகள் எழுதிப் பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு அனுப்பினேன். கவிதையில் எனது உண்மைப் பெயரான் அலி அஹமத் செய்த் எஸ்;;:பர் என்று குறிப்பிட்டேன். ஆனால் அவை என்னுடைய கவிதைகளைப் பிரசுரிக்கவில்லை. ஆகவே அவற்றின் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. ஓரிரவு கோபத்துடன் இருந்த நான் அடோனிஸ் பற்றிய புராணக் கதையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கதையில் அடோனிஸூம் இஸ்தாரும் காதல் கொள்கிறார்கள். அடோனிஸ் வேட்டைக்குச் செல்லும் பழக்கமுள்ளவன்.  அடோனிஸ் என்ற பெயரில் லெபனானில் ஓர் ஆறு இருந்தது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அந்த ஆற்றின் பெயரைப் பின்னர் இப்றாஹீமின் ஆறு என்று பெயர் மாற்றி விட்டார்கள். அதற்கான காரணம் எனக்குத் தெரியாது. அடோனிஸ் ஒரு நாள் காட்டுப் பன்றி வேட்டைக்குச் சென்றான். வேட்டையின் போது காட்டுப் பன்றிதான் அவனை வேட்டையாடியது. அவன் இறந்து போனான். அவனுடைய இரத்தத்திலிருந்து ஒரு பூ மலர்ந்தது. அதற்கு நட்சத்திரப் பூ என்று பெயர். இந்தப் புராணக் கதை எனக்குப் பிடித்திருந்தது. அன்றிலிருந்து எனது கவிதைகளை எழுதிய தாளில் எனது பெயரை அடோனிஸ் என்று குறிப்பிட்டேன். ஏனெனில் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அந்தக் காட்டுப் பன்றியைத்தான் விரும்பியிருந்தன. அதனால்தான்  அவர்கள் என்னைக் கொல்ல முயன்றார்கள்.

என்னுடைய கவிதைகளை முன்னர் நிராகரித்த பத்திரிகையொன்றுக்கு அடோனிஸ் என்ற பெயரில் ஒரு கவிதையை அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரித்தார்கள். அத்துடன் அன்புள்ள அடோனிஸ் எமது காரியாலயத்துக்கு ஒரு முறை வாருங்கள் என்ற அழைப்பு வந்தது. நான் அங்கு சென்றேன். அப்போது எனக்கு பதினைந்து வயது கூட நிறைந்திருக்கவில்லை. என்னைக் கண்ட அவர்களுக்குத் திகைப்பு ஏற்பட்டது. உண்மையில் நீர்தான் அடோனிஸா என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உடனே பிரதம ஆசிரியருக்கு அடோனிஸ் என்பவர் வந்திருக்கிறார் என்று தகவல் கொடுத்தார்கள். அவரும் கூட என்னைக் கண்டு திகைத்து நின்றார்;. பிறகு 'உண்மையில் நீர் அடோனிஸ் தானா என்று கேட்டார். நான் ஆம் என்றேன். இப்படித்தான் அடோனிஸ் என்ற பெயரை நான் சூட்டிக் கொண்டேன். இப்போதெல்லாம் என்னை நான் மறைத்துக் கொள்ள வேண்டியிருந்தால் எனது உண்மையான பெயரை அலி அஹமத் என்று எழுதுகிறேன்.

எனது சொந்தக் கலாசார, கவிதை சார் வரலாற்றைப் புதிய நோக்குடன் உருவாக்க முயற்சி செய்திருக்கிறேன். அது சொந்த வரலாறும் சொந்த நோக்கும் சொந்த உலகத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். பிற்காலங்களில் எனது போக்கையும் நோக்கையும் முழு அரபுப் பாரம்பரியத்துக்குள்ளும் கொண்டு செல்லவும் முயற்சியெடுத்தேன்.  அறபு வரலாற்றை நகர்த்துவதற்கு  கல்வித்துறை சார்ந்த சட்டகத்திலிருந்து அதாவது மார்க்கம், பாடசாலைகள், பழக்கவழக்கங்களிலிருந்து பிடுங்கி நவீன உலகின் முன்னால் மீள் வாசிப்புக்காக வைக்கும் முயற்சி அது. அதாவது அறபுக் கலாசாரத்தின் நிலையானதும் மாறுவதும் குறித்த மறுபரிசீலனை.

இந்த முயற்சி அறபுக் கலாசாரம் குறித்த புதிய புரிதல்களுக்கு அடித்தளமிட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

அறபுக் கவிதையின் போக்கிலும் ஒரு மாறுதலை நான் உண்டு பண்ணினேன். அறபுக் கவிதைகளிலிருந்து எவற்றை நான் தேர்ந்தெடுத்தேனோ அவை குறித்து நவீன வாசகருடன் நான் பேசினேன். அவற்றை ஒரு தொகுதியாக்கி அறிமுகத்தையும் எழுதினேன். அறபுக் கவிதை குறித்து ஒரு நூலையும் எழுதினேன். அழைப்பின் பேரில் பிரெஞ்சுக் கல்லூரியில் அது குறித்து விரிவுரைகளும் நடத்தினேன். பின்னர் அறபு மொழியின் உரை நடை குறித்து மீள்வாசிப்புச் செய்ய முடிவு செய்தேன். அது பற்றி ஒரு புத்தகத்தை எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டேன். நவீன வாசகருடனான உரையாடலுக்கான படைப்புகளையும் அதில் சேர்த்தேன். நான் வெறுமனே கவிதையோடு மட்டும் நின்று விடவில்லை. அறபுக் கலாசாரம், அறபுக் கவிதை, அறபு உரை நடை, அறபு இலக்கியம் என்று ஒரு புதிய வரலாற்றுப் போக்கைத் தொடக்கினேன்.  

உங்களுக்குத் தெரியும். ஒரு மரம்தான் ஒரு வனத்தை உருவாக்கும். நானும் ஒரு தனி மரம்தான். ஆனால் என்னைச் சுற்றி அறபுக் கவிஞர்களால், எழுத்தாளர்களால், புத்திஜீவிகளால் ஒரு வனத்தை நான் உருவாக்கினேன். என்னுடனான உறவு அறபுக் கவிஞர்களுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. நான் இயங்கிவாறு எல்லா அறபுக் கவிஞர்களும் இயங்குவார்கள் என்றும் பழையவற்றையே மீட்டுப் பேசிக் கொண்டிருக்காமல் அவர்களுக்கான புதிய உலகங்களை ஏற்படுத்துவார்கள் என்றும்  எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் என் முயற்சியைத் தொடர்வதை என்னால் காண முடியவில்லை. எனவே அவர்களைப் பற்றிப் பேசுவதை நான் தவிர்த்து வந்திருக்கிறேன். அவர்களுடைய எழுத்து முயற்சிகளுக்கு என்னிடம் மிகுந்த மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவற்றை மதிப்பிடுவதை நான் விரும்பவில்லை. இதனால்தான் அவை நவீன அறபுக் கவிதைக்குள் வரும்போது - அதாவது கலீல் கிப்ரான் காலத்திலிருந்து இன்று வரை - அவற்றை வகைப்படுத்த நான் முனையவில்லை. 

(அடோனிஸ் வழங்கிய பேட்டியிலிருந்து பெரும் பகுதி)


Saturday, March 19, 2022

நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன் - நூலுக்கான அணிந்துரை


ஷெய்க்ஹா ஜெலீலா ஷபீக்
(முன்னாள் அதிபர் - கள்எலிய முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி,
முன்னாள் அதிபர் ஆயிஷா சித்தீக்கா முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி)

அவர்கள் “நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்“ நூலுக்கு வழங்கிய அணிந்துரை.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி...

அகிலங்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட கண்மணி நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களைப் பின்பற்றி வாழ்வோர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் நிறைவாய்ப் பொழிய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் பொருத்தமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் மார்க்கம். இதனை நபி (ஸல்;) அவர்கள், 'நான் உங்களை ஒரு பிரகாசமான பாதையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவுகூடப் பகல்போல் வெளிச்சமானது,' எனக் குறிப்பிட்டார்கள். இந்த வாழ்க்கை நெறிக்குச் சொந்தக்காரர்கள் தாம் முஸ்லிம்கள். 

இவ்வுயர் மார்க்கத்தின் போதனைகளையும் வழிகாட்டல் களையும் முஸ்லிம்கள் தம் வாழ்வியலாக அமைத்துக் கொண்டி ருந்தால் அவர்கள் வாழும் பிரதேசங்கள் மாத்திரமன்றி முழு உலகும் அமைதியும் சமாதானமும் அரசோச்சும் இடமாக மாறியிருக்கும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்களின் நடை, உடை, பாவனைகள், பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்லாத்தின் போதனைகளுக்கு மாற்றமாக அமைந்து விட்டமையால் அவர் களுக்கு இழிவும் அழிவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சோதனைகளும் வேதனைகளும் வாட்டிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் இந்நிலையிலிருந்து அனைவரையும் பாதுகாப்பானாக.

இன்று அல்குர்ஆனை ஓதப் பழகுவதிலும் அதனைத் தமாம் செய்வதிலும் முஸ்லிம்கள் காட்டும் அக்கறை அது கூறும் செய்திகளை விளங்குவதிலோ அவற்றைத் தம் வாழ்வியலாக மாற்றுவதன் மூலம் மற்றவர்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டு வருவதிலோ காட்டுவதில்லை. நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம், புனித மிஃறாஜ் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கு முக்கியத் துவம் கொடுக்கின்ற பலரும் அவர்களின் வாழ்வொழுங்கையும் முன்மாதிரியையும் தம் வாழ்வியலாகக் கொள்ளாமலிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

இந்நிலையைச் சீர் செய்து இஸ்லாமிய சிந்தனையை முன்வைத்துச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் முயற்சியில் நமது உலமாக்களின் வெள்ளி மேடைப் பிரசங்கங்களும் இஸ்லாமிய நூல்களும் இஸ்லாமியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்த்தப்படும் உரைகளும் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்த வரிசையில் மேற்குலகில் வாழும் இஸ்லாமியச் செயற்பாட்டாளர்களான பெண் ஆளுமைகள் பதின்மரின் கருத்தாழம் கொண்ட ஆங்கில உரைகளின் தமிழாக்கமே 'நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்,' என்ற மகுடம் தாங்கி நமது கைகளில் தவழும் இந்நூல் ஆகும். வித்தியாசமான தலைப்புகளில் வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் மிக அழகாகவும் தெளிவாகவும் அதே வேளை, கேட்போரின் உள்ளங்களைத் தொட்டுச் செல்லும் கவர்ச்சித் தன்மையுடனும் அவற்றை அவர்கள் முன்வைக்கும் பாங்கு அருமையானது.
சிலபோது நாம் சிறிதும் கவனத்திற் கொள்ளாத நுணுக்கமான வாழ்வியல் அம்சங்களை இவ்வுரைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. உதாரணமாக, 'முஸ்லிம்களாகிய எமக்கு அல்லாஹ்வைப் பற்றிய புரிதலில் ஏற்பட்ட தவறுதான் நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் போது, எம்மை விரக்திக்குக் கொண்டு செல்கிறது. அல்லாஹ் கருணையாளன். எல்லாக் கருணைகளுக்கு மான ஊற்றே அவன்தான். 

ஒரு குழந்தையிடம் தாயொருத்தி வைத்திருக்கும் பாசத்தை விடப் பன்மடங்கு நம்மில் பாசத்தைக் கொண்டிருப்பவன்தான் அல்லாஹ் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மையை முதல் எண்ணக் கருவாக எமது சிறாருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்,' என்று குறிப்பிடும் சகோதரி யெஸ்மின் முஜாஹிதின் உரையைக் குறிப்பிடலாம். அவரது உரையின் தலைப்பே இந்நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.

சகோதரி துன்யா ஷுஐப் அவர்களின், 'ஏன் எனக்கு இப்படி?' என்ற தலைப்பினைத் தாங்கிய உரை வாழ்வில் ஏற்படும் தொடர் நோதனைகள், துன்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என்பவற்றால் கடுமையாக மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ள பல நூறு உள்ளங்களுக்குச் சிறந்த ஒத்தடமாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் நாம் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய உரை அது.

'இஸ்லாம் சாந்தி மயமான மார்க்கம். அது வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டி என இஸ்லாத்தின் சிறப்பம்சங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதல்ல முஸ்லிம்களின் பொறுப்பு. அந்தத் தூய இஸ்லாத்தின் போதனைகளை முழுமையாக நமது வாழ்வில் செயல்படுத்திச் சொல்லாலும் செயலாலும் சான்று பகர்வோராய் இருக்க வேண்டும்' என்பதைச் சகோதரி லிண்டா சர்ஸூர் 'இஸ்லாமும் பெண்ணுரிமைகளும்' என்ற ததனது உரையில் அழகாக முன்வைத்துள்ளார்.
இவ்வாறு இந்தப் பத்து உரைகளும் ஒன்றை ஒன்று விஞ்சிய தரத்தில் மிகப் பொருத்தமான தலைப்புகளில் நம் கவனயீர்ப்புக்குரிய காத்திரமான கருத்துக்களைக் கொண்டனவாயும் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுவனவாயும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உரைகளை நிகழ்த்தியவர்கள் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகங்களையும் அநியாயங்களையும் எட்ட நின்று பார்த்துக் கருத்துக் கூறியவர்கள் அல்லர். அவற்றைக் கண்டும் எதிர் கொண்டும் மனம் தளராது, முடங்கி விடாது பொறுமையுடனும் உறுதியுடனும் தலை நிமிர்ந்து நிற்கும் மக்களோடு இரண்டறக் கலந்து களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளே அவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.

அநீதிகளையும் அராஜகங்களையும் கண்டு அஞ்சித் துவண்டு போகாது, முடங்கி விடாது அவற்றைத் தட்டிக் கேட்டு, அவற்றுக்கெதிராகக் குரல் கொடுப்பதோடு, அவற்றைக் களையவும் முயற்சி செய்வது நமது கடமை என்ற செய்தியையும் இவ்வுரை களுக்கு ஊடாக அவர்கள் நமக்குத் தந்துள்ளனர்.

இவ்வுரைகளைத் தேடிப் பெற்று, செவிமடுத்து, அவற்றின் கவர்ச்சியும் கருத்தாழமும் குன்றாமல் மொழி மாற்றம் செய்து தந்திருப்பவர், ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறந்த படைப்பாளர், பல்துறை ஆளுமை கொண்டவர், இலக்கியத்துக்கான இலங்கை அரசின் உயர் விருதான சாஹித்திய விருதுகளைப் பெற்றவர், நாடறிந்த எழுத்தாளர்; எனப் பல சிறப்புகளுக்குமுரிய சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். நிச்சயமாக அவர் முஸ்லிம் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்.

நாட்டிலுள்ள பல பெண்கள் அறபுக் கல்லூரிகளில் மார்க்கம் கற்றுத் தேர்ந்த ஆலிமாக்கள் மட்டுமன்றி பொதுக் கல்வியிலும் உயர் நிலையடைந்த பல நூறு பேர் இருந்தும் அவர்களைச் சமூக வெளிகளில் காணக் கிடைப்பதில்லை என்ற சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் ஆதங்கம் நியாயமானதே. இஸ்லாமியத் துறையில் கற்றுத் தேர்ந்தவர்களின் பொறுப்பை உணர்த்திக் களத்தில் இறங்கிப் பணி செய்யத் தூண்டுவதும்கூட இவரது இப்படைப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இம்மாபெரும் பணியை முன்னெடுக்க அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அல்ஹம்து லில்லாஹ்! தமக்கு இறைவன் அளித்த ஆற்றல்கள் திறமைகள் என்பவற்றை அமானிதமாகக் கருதி, அவற்றைப் பயன்படுத்தி உறுதியான இறை விசுவாசத்துடன் இஸ்லாமிய சமூகத்துக்கு வழிகாட்;டுவதற்காக இவ்வுரைகளை நிகழ்த்திய அந்தச் சகோதரிகளையும் அவர்களைப் போல் களத்தில் பணியாற்றுகின்ற அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

இவ்வுரைகளை அவற்றின் தரமும் கருத்தாழமும் மாறாமல் அழகு தமிழில் மொழிமாற்றம் செய்து எமக்களித்திருக்கும் மதிப்புக்குரிய சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இப்பணியை அங்கீகரித்து நற்கூலி வழங்குவானாக!

'தூண்டல் இன்றித் துலங்கள் இல்லை' அல்லவா? இவ்வுரை கள் வாசிப்போரை இஸ்லாமிய அறிவைப் பெற்று, அதனைச் செயற் படுத்தி, பிறரையும் வழிப்படுத்தத் தூண்டும் தூண்டுகோலாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். 

இஸ்லாத்தின் உயர் போதனை களை வாழ்வியலாகக் கொள்ளும் போது உள்ளங்கள் அமைதி பெறும். உலகமும் அமைதிப் பூங்காவாக மாறும். நம்மனைவரதும் அவாவும் பிரார்த்தனையும் அதுவேயல்லவா?

அல்லாஹ் நம்மனைவரதும் முயற்சிகiயும் அங்கீகரித்து நேர் வழியில் வாழ வைத்து, அவனது அருளுக்குச் சொந்தக் காரர்களாக ஆக்குவானாக. ஆமீன்!

'இறைவா, உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக. (01 - 05 - 06)




 

Sunday, July 18, 2021

மெல்லிசைப் பாடல்கள் - கால் முறிந்த குதிரை!


நம் நாட்டு மெல்லிசைப் பாடல்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் பக்கம் பக்கமாக எழுதலாம். 

வேகமாக ஓடி வந்து கால்கள் முறிக்கப்பட்டுக் கிடக்கும் குதிரையைப் போன்ற நமது மெல்லிசைப் பாடல்களின் கதையில் எனக்குத் தெரிந்தவற்றை நினைவில் உள்ளவற்றை இங்கு சொல்கிறேன் . 

நம்நாட்டு மெல்லிசைப் பாடல்களின் வரலாற்றை இலங்கை வானொலியில் இருந்து தொடங்குவோம். அது ஆரம்பத்தில் 'ஈழத்துப்பாடல்கள்' என்ற பெயரிலேயே ஒலிபரப்பாகியது. காலையில் செய்தியறிக்கையைத் தொடர்ந்து 'ஈழத்துப்பாடல்கள்' சொற்ப நேரம் ஒலிபரப்பாகும். பிறகு 'பொங்கும்பூம்புனல்' வந்துவிடும். அப்போது முக்கியமான பாடகர்களாக வி.முத்தழகு, எஸ்.கே. பரராஜசிங்கம் போன்றவர்கள் பங்களிப்புச் செய்தார்கள். பாடகிகளாக கலாவதி சின்னச்சாமி , சுஜாதாஅத்தநாயக, முல்லைச் கோதரிகள் போன்றோர் பாடினர். வி.முத்தழகும், கலாவதி சின்னச்சாமியும் - ரி. எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் போன்று பிரபலமான ஒருசோடி அப்போது.

'பாடுபடு நண்பா பரிசு தரும் பூமி', 'கங்கையாளேகங்கையாளே 'போன்ற பாடல்கள் அப்போது அடிக்கடி ஒலிக்கும். ஈழத்து ரெத்தினம் என்பவர் பெரும்பாலும் பாடல்களை எழுதியிருப்பார். ஆர். முத்துசாமி, றொக்சாமி போன்றவர்கள் இசையமைத்திருப்பார்கள்.

இப்படிப்  போய்க்கொண்டிருந்த ஈழத்துப்பாடல்கள் சிறிது காலத்திற்குப் பிறகு 'மெல்லிசைப்பாடல்கள்' என்ற நாமத்துடன, கொஞ்சம் புதுமெருகுடன் புதுப்புதுக் குரல்களுடன் புதுப்புதுப்பாடல்களாக, புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டு ஒலிக்கத் தொடங்கின.. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மெல்லிசைப் பாடல்களுக்காக அதிக சிரத்தையெடுத்த காலம்அது.

நாடு பூராவும் கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். பரந்த அளவில் பாடல்கள் பெறப்பட்டன. புதிய இசையமைப்பாளர்களைத் தேடியெடுத்தார்கள். மெல்லிசைப் பாடல்களுக்கென்று தனி வங்கி நிலையத்தில் இயங்கத் தொடங்கியது. நாட்டின் பலபாகங்களிலுமிருந்து கிடைக்கப் பெறும் பாடல்களில் சிறந்ததைத் தெரிவு செய்து அந்த வங்கியில் வைத்தார்கள். கழிக்கப்பட்டவற்றை திருப்பிஅனுப்பினார்கள். தெரிவுசெய்யப்பட்ட பாடல்கள் பாடி இசையமைக்கப்பட்டுப் பாட்டாகினால் ஒருபாடலுக்கு 15ரூபா சன்மானமும் அனுப்புவார்கள். நானும் 60ரூபா அளவில் சம்பாதித்திருக்கிறேன். அந்தப் பணத்தில் வாங்கிப்போட்ட வளவில்தான் நான் இப்போது குடியிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது.

தேசிய சேவையில் 'மெல்லிசைப் பாடல்கள்' என்ற நிகழ்ச்சி ஒலிக்கும். அதில் புதிய பாடல்கள் அறிமுகமாகும். பிறகு பருவத்திற்குப் பருவம் ஒலிபரப்பான பாடல்களையெல்லாம் ஒன்று திரட்டி, ஒருகுழு அவற்றிலிருந்து அடிக்கடி ஒலிபரப்பவென சில பாடல்களைத் தெரிவு செய்யும். மெல்லிசைப் பாடல்களில் தங்களுக்குப் பிடித்தவற்றை நேயர்கள் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சியொன்றும் அப்போது இருந்ததாக ஞாபகம். 'பொப்' இசையை விரும்பிக்கேட்கும் நிகழ்ச்சியொன்றும் வர்த்தக ஒலிபரப்பில் இருந்தது. 

நமது பாடல்களின் மழைக்காலம் இதுதான்.

நீலாவணன் எழுதி சத்தியமூர்த்தி பாடும் 'ஓவண்டிக்காரா', எஸ்.கே. பரராஜசிங்கம் பாடும் பஸீல் காரியப்பரின் 'அழகான ஒரு சோடிக் கண்கள்' , செ. குணரெத்தினம் எழுதி கலாவதி சின்னச்சாமி பாடும் 'பாப்பா முகத்தில் பால் நிலவு பட்டுத் தெறிக்குது' ,அக்கரைப் பாக்கியன் எழுதி ரகுநாதன் பாடும் 'நதி கொண்ட காதல் கடல்மீது', மு. சடாட்சரனின் 'நித்திரையில் தோன்றும் நித்திலமே வாராய்' போன்ற பலபாடல்கள் ஜனரஞ்சகமாகி ஒலித்துக்கொண்டிருக்கும். பிறகு ரீ.கிருஷ்ணன்,  எம்.ஏ.எம். அன்சார், கே.எஸ். பாலச்சந்திரன், பாக்கியராஜா போன்றவர்களின் பாடல்களும் வந்துசேர்ந்தன.

சோலைக்கிளி எழுதி வயலட் மேரி பாடிய “கொச்சிப் பழமே“ சந்ரு பாடிய “மங்கையைத் தேடுது காற்று“ திலகா பாடிய “இருக்கிற தொல்லைக்குள் இன்னொரு தொல்லையா ஆகிய பாடல்களுக்கு இசை அமைத்தவர் சரஸடீன்.

இவர்களுடன் வனஜா ஸ்ரீனிவாசன், கோகிலாசுபத்திரா சகோதரிகள், யோசப்ராஜேந்திரன், புஷ்பாராசசூரியர், ஜெகதேவிவிக்னேஸ்வரன், 'தன்னந்தனிமூங்கில்' என்ற அருமையான பாடலைப்பாடிய சாரதாவாசுதேவன், 'அழகுநிலாவானத்திலே' என்று அமுதகானம் இசைத்த விவேகானந்தன், 'குயிலே' என்று தொடங்கிப் பாடிய மாணிக்கவேல், சந்திரிக்காடீஅல்விஸ், பார்வதிசிவபாதம், பௌசுல்அமீர், ஸ்ரான்லி சிவானந்தன் என்றெல்லாம் பெரியதொரு கானக் குயில்களின் பட்டாளமே உருவாகியிருந்தது. 

நமது மெல்லிசை கொழுத்துப் போயிருந்தது

என்.சண்முகலிங்கன், கோப்பாய் சிவம், சில்லையூர் செல்வராசன், எருவில்மூர்த்தி, செ. குணரெத்தினம், ஆர்.எஸ்.ஏ.கனகரெத்தினம், கமலினிமுத்துலிங்கம், அக்கரையூர் அப்துல் குத்தூஸ், எச்.ஏ.அஸீஸ், சபா. சபேசன் , ஒலுவில் அமுதன்,  மூதூர் ஜெயராஜ்,  கார்மேகம்நந்தா, அசனார் ஸக்காப்,  கோவிலூர் செல்வராசன்,  நிந்ததாசன் என்று இன்னுமின்னும் எத்தனையோ பேர் பாடல்எழுதினார்கள். 

எம்.எஸ். செல்வராஜா, திருமலை பத்மநாதன்,  கண்ணன் நேசம், மோகன்ராஜ் இன்னுமின்னும் பலர் இசை வழங்கினார்கள். 

இப்படி வளர்ந்த மெல்லிசையே நீ எங்கே? 

இப்போதும் வி.முத்தழகு தனது விடா முயற்சியினால் இந்தத் துறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றார். புன்னகைசெய்வாயா, பாடப் பாட புதுராகம், ஆடும் பாடும் மயிலும் குயிலும் ஆனந்தமாய் வாழுது ஆகிய  இவரது சில பாடல்கள் இன்றைக்கும் எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. இதை எழுதுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும் 'பிறை' பிராந்திய வானொலியில் சனி தோறும் ஒலிக்கும் 'சந்தனக்காற்று' சஞ்சிகை நிகழ்ச்சியில் அதை நடத்தும் அறிவிப்பாளர் ஜே. வகாப்தீன் அவர்களால் வி.முத்தழகு நேரடியாக குரல் தர அழைக்கப்பட்டு பல விடயங்கள் பேசப்பட்டு, அவரது சிலபாடல்களும் ஒலிபரப்பாகின. நமது மெல்லிசை நட்சத்திரம் இவர் என்றால் அது மிகையாகாது. நமது மெல்லிசைக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் வி.முத்தழகு. மற்றவர் எஸ்.கே.பரராஜசிங்கம். இவர்களது அரும் பணியாலும் நமது மெல்லிசை துளிர் விட்டதென்றால் பிழையில்லை. 

தென்னை மரத்தின் பாளைக்குள்ளே ரெண்டு தேரை இருந்துமுழிக்குதுபார், மல்லிகை, அழகானஒருசோடிக்கண்கள், கங்கையாளே என்பன எஸ். கே. பரராஜசிங்கத்திற்கு நல்ல பெயர் கொடுத்த பாடல்கள். இவர் 'கங்கையாளே' என்றபெயரில் இறுவெட்டு ஒன்றையும் வெளியிட்டதாக ஞாபகம். வி. முத்தழகு தலைநகரில் அப்போது 'ஸப்தஸ்வரங்கள்' என்ற தனி நபர் கச்சேரி செய்திருப்பதாகவும் அறிகிறேன்.

அந்தக்காலமே நீ ஏன் திடீரெனக் காலக் கடலில் பாய்ந்து உன் உயிரை மாய்க்க நினைத்தாய்?

இந்த மெல்லிசைகளிலெல்லாம் காதல்பாடல்கள், தத்துவப்பாடல்கள், அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள், தேசாபிமானப் பாடல்கள், பிள்ளைகளுக்கான பாடல்கள் என்று சினிமாப் பாடல்களைப்போல பலவகையான பாடல்களும் இருக்கின்றன. 

செ. குணரெத்தினத்தின் 'உனக்காக நான் பாடும் ஓராயிரம் பாடல் உன்காதில் கேட்கல்லியோ 'காதல் உணர்வை வெளிப்படுத்தும் அருமையான பாடல்.மு. சடாட்சரனின் 'நித்திரையில் தோன்றும் நித்திலமே வாராய்' இதுவும் நல்ல காதல் மெல்லிசையே! 'அழகானஒருசோடிக்கண்கள்'என்பதும் அப்படியே . என். கே. ரகுநாதன் பாடும் 'பூச்சூடும் காலம் வந்தாச்சு' அண்ணன் தங்கைப் பாசம். எம்.ஏ.எம். அன்சாரின்'பூரணை நிலவில் 'இன்னுமொரு பெண் உணர்வுப் பாடல் . 'பெத்த மனம் பித்து என்பார்' தத்துவம். திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடும் 'மாமயில் ஆடக் கண்டேன் கதிர்காமத்தில்' அழகான பக்திப்பாடல். சி. மௌனகுரு எழுதி திலகநாயகம்போல் பாடிய 'சின்னச்சின்னக் குருவிகள் எங்கள் சிறுவர் சிறுமிக் குருவிகள்' பாடல் பிள்ளைகளுக்கானது. 'பச்ச வயல் காட்டிலே கொச்சி மஞ்சள் பூசியொரு' என்ற பாடல் வி .முத்தழகு பாடுவது கிராமியம். 

நமது மெல்லிசைப் பாடலே உனக்கு என்ன நடந்தது? 

லதா கண்ணன் போன்றவர்களும் பாடியிருக்கிறார்கள். கமலினி முத்துலிங்கம் எழுதி, இவர் பாடிய 'ஒரு பூங்காற்று' என்பது ஓர் இனிய கானம். 

அனிச்ச மலர் நோகும் அழகிய பாதம்.... ஆஹா... இப்படி எத்தனை!

எங்கள் மெல்லிசையே உனது வளர்ச்சிக்கு யார் தடை போட்டது? 

வானொலியைத் தவிர்த்து வெளியிலும் நமது பாடல்கள் வளர்ந்த ஒருகாலமும் நம்மிடம்இருக்கிறது. திருமலையில் இருந்து பரமேஸ்-கோணேஸ் என்பவர்களின் 'உனக்குத் தெரியுமா நான் உன்னையழைப்பது', 'போகாதே தூரப்போகாதே' , 'நீ வாழுமிடம் எங்கே' என்ற பாடல்களெல்லாம் வந்து கலக்கின. இவற்றையெல்லாம் மிஞ்சி கல்முனை மண்ணில் மிகப்பெரும் சாதனையொன்றும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

 ஓர் இசை நிகழ்ச்சியை சினிமாப் பாடல்களைக் கொண்டு நடத்தித்தான் வெற்றி பெற முடியுமென்ற ஒரு பொய்மையான கற்பிதத்தை உடைத்து, இல்லை, கொடுப்பதை கொடுப்பது மாதிரிக் கொடுத்தால், ரசிப்பவன் ரசிப்பான் என்று காட்டினான் கல்முனை கதிரவன், மட:டுநகர் ஆதவன் இசைக் குழுவைச் சேர்ந்த திரு. ஞானப்பிரகாசம் என்பவன். 'பள்ளி மாணவி புள்ளி மானைப் போல்' , 'தேர்த் திருவிழா பார்க்க வாறியா', 'மினியடிக்கும் மீனா', 'சோலையிலே ஒரு பொன் 'ஆலம் படைத்தவனே ஆதி றகுமானே', 'மாநகராம் மட்டு மாநகராம்' போன்ற எத்தனையோ சுயமான பாடல்களால் வெற்றிகரமாக கச்சேரி செய்து காட்டினான் அவன் .

 ஒன்றிரண்டு சினிமாப் பாடல்களை நடுவே பாடினால் ரசிகர்கள் வேண்டாம் வேண்டாம்எனக் கூக்குரலிடுவார்கள்.. கற்கள் எறிந்து பேசுவார்கள். 'கந்தசாமி ராமசாமி ஹிப்பிப் பாணிடா ரெண்டு பேரும் சேந்துக்கிட்டா சாம்பிராணிடா' என்பது இவர்களின் பொப் பாடல்.

இந்தக் காலத்தில்தான் நமது 'பொப்' பாடல் இசையும் சிறப்பாக வளர்ந்தது. அந்தக் காலம் 1970கள். நாடு முழுக்க 'பொப்' இசை நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணமிருக்கும் .பத்திரிகைகளில் இவை பற்றிய விளம்பரங்களாகவே இருக்கும். எங்கள் பூமியான கல்முனையிலும் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. இது 'பொப்' இசை பூப்பூத்த காலம். 

ஏ.ஈ.மனோகரன், நித்தி கனகரெத்தினம், எஸ். ராமச்சந்திரன், அமுதன்அண்ணமலை, ஸ்ரான்லி சிவானந்தன். சண், றொபேர்ட் ராகல், சுரேஸ் ராஜசிங்கம் போன்றவர்களெல்லாம் பெயர் பெற்றிருந்தார்கள். ஏ.ஈ.மனோகரனின் 'இலங்கையென்பது நம் தாய்த்திருநாடு', 'வாம்மா கண்ணே டிஸ்கோஆடலாம்' 'வடை வடையாய் விற்று வந்தாள்' வாயாடிக் கிழவி' நித்தி கனகரெத்தினத்தின் 'சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே' ,எஸ். ராமச்சந்திரனின் 'நத்தையென ஊர்ந்து', அமுதன் அண்ணாமலையின் 'ஓ...ஷீலா', 'முருகையா முருகையா முருகனைப் பார்க்கப் போறேனையா 'போன்ற பாடல் களெல்லாம் அப்போது மிக மிகப் பிரபலம். அமுதன் அண்ணாமலை பாடிய' ..ஷீலா' பாடலுக்கு இசையமைத்தவர் மிக அண்மையில் நம்மை விட்டுப்பிரிந்த கே. எம். சவாஹிர்அவர்கள். அவரை இவ்விடத்தில் நினைத்துக் கொள்வது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை .ஏ. ஈ. மனோகரன் நித்தி கனகரெத்தினமெல்லாம் 'பொப்' இசை நட்சத்திரங்களானார்கள். இப்படி;  மெல்லிசையும்  பொப்பிசையும் ததும்பி வழிந்த காலம் புரண்டு கவிழந்து எப்படி?

சிலர் 1983ல் இடம் பெற்ற அசம்பாவிதத்தை சொல்கிறார்கள். அப்படியென்றாலும் ஏனையவைகளில் நாம் மீண்டெழுந்ததைப் போன்று நமது மெல்லிசையிலும் மீண்டெழலாம் அல்லவா? ஏன் இந்தச் சோர்வு? தோல் இழுபடும் தொய்வு? கால் முறிந்த குதிரைக்கு இனியாவது மருந்து கட்டி நடக்கவாவது வைக்க முடியாதா?

(27.03.2021)


நன்றி - வியூகம்  6



Monday, April 27, 2020

என்னைத் தீயில் எறிந்தவள் - ஒரு பன்முகப் பார்வை


பேராசிரியர் - முனைவர் சேமுமு. முகமதலி - சென்னை
பொதுச் செயலாளர் - தமிழ்நாடு தொண்டு இயக்கம்
ஆசிரியர் - இனிய திசைகள்

படிப்பறிவு ஒன்றினால் மட்டுமே கவிஞன் உருவாகி விடுவதில்லை. பட்டறிவு நிறைய வேண்டும். வெறும் பட்டறிவே கவிஞனை உருவாக்கி விடுவதில்லை. மனிதர்களை ஊடுருவி, உற்று நோக்கிப் படிக்கும் கண்களும்  சமுதாயப் பிரச்சனைகளை அலசி ஆய்ந்து தெளிந்து உருகும் சுனையாக உள்ளமும்  சமூக அவலங்களில் ஆழ்ந்து அனுபவித்துப் பொங்கும் அருவியாக உணர்வும் இவற்றையெல்லாம் வார்த்தைகளில் வார்த்தெடுக்கும் வல்லமையும் மிகுந்தவனிடமே கவித்துவம் குடி கொண்டிருக்கிறது.

    நீறு பூத்த நெருப்பாக அவனுள் உறங்கும் கவித்துவத்தை ஏதாகிவும் ஒரு நிகழ்வு நெம்பு கோலால் நெம்பி விட்டால் நீறு அகல,  நெருப்பு ஜூவாலை பரவ ஆரம்பித்து விடுகிறது. மள மளவெனக் கவிதை பரவக் கவிஞன் காலத்தை வென்று விடத் தொடங்குகிறான். இத்தகையதொரு கவிஞராகவே அஷ்ரஃப் சிஹாப்தீன் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.

1999ம் ஆண்டு அவரது 'காணாமல் போனவர்கள்' முதற் கவிதைத் தொகுதி வெளிவந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் 2008ம் ஆண்டில் 'என்னைத் தீயில் எறிந்தவள்' இரண்டாம் கவிதைத் தொகுதி வெளிவந்தது. 'வெகு நாட்களுக்குப் பின் உன்னைச் சந்திக்கும் போது கண்ணீரோடும் அமைதியுடனும் சந்திப்பேன்' என்றான் கவிஞன் பைரன். 'என்னைத் தீயில் எறிந்தவ'ளைப் படிக்கும் போது மட்டுமல்ல, படித்து முடித்துவிட்ட பின்பும் அமைதியும் கண்ணீர் முத்துக்களுமே ஆக்கிரமித்துக் கொள்கிற வெற்றியை அஷ்ரஃப் சிஹாப்தீன் பெற்றுக் கொண்டுள்ளார்.


'காணாமல் போனவர்கள்' முதல் கவிதைத் தொகுப்பைத் தன்னை முந்தியிருக்கச் செய்த தந்தைக்கும் தாய்க்கும் சமர்ப்பித்த கவிஞர் தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'என்னைத் தீயில் எறிந்தவளை'த் தன்னில் பாதியாக இருக்கும் தனது மனைவிக்கும்  மீதியாக இருக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் சமர்ப்பித்துள்ளதன் மூலம் பிறந்த, புகுந்த சொந்த பந்த உறவுகளைப் பாராட்டத் தெரிந்தவன்தான் முழுமையான மனிதனாக முடியும் என்கிற மகா வித்தை தானாகவே கைவரப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. முழுமையான மனிதனாக உருப்பெற முயற்சிக்கிறவனேயல்லாமல் மற்றவனெல்லாம் மாபெரும் கவிஞனாக உருவாகி விடுதல் சாத்தியமில்லாதது. இந்த மந்திரத்தை உணர்ந்திருக்கிற அஷ்ரஃப் பாராட்டுக்குரியவராவார்.

இலக்கு உடையதே இலக்கியம். வாழ்க்கைக் கண்ணாடியான இலக்கியத்தில் பாவிகம் இல்லாமல் காவியம் இல்லை. படைப்பின் நோக்கத்தையும் படைத்துள்ளவை வெளிப்படுத்த விரும்புகிற நோக்கத்தையும் கோடிட்டுக் காட்டாத படைப்பு எதற்காக என்று கூறப்பெறாத விருந்தை அல்லது மருந்தைப் போன்றதாகி விடும். சிலரிடம் கனவுகள் இருக்கும். சிலரிடம் சிக்கல்கள் இருக்கும். சிலரிடம் நகைச்சுவை இருக்கும். அஷ்ரபிடம் சில கவிதைகள் இருக்கின்றன. ஆனால் நம் அனைவரிடமும் சில வருத்தங்கள் இருக்கும் - தீரும்வரை கண்ணீர் விடுவதற்கு! அந்த வருத்தங்களைத்தான் 'என்னைத் தீயில் எறிந்தவள்' அகிலத்துக்கு எடுத்துச் சொல்கிறது. இந்த வருத்தங்கள் எதுவரை என்பதையும் நூலுள் காட்டியதன் மூலம் அழுது புலம்ப அல்லது எழுந்து விடியல் காணவும் அவரது கவிதை கலங்கரை விளக்கமென வெளிச்சம் செலுத்துகிறது.

'என் வருத்தங்கள் வருத்தங்கள் இல்லையென்றும் எனது கவலைகள் கவலைகள் இல்லையென்றும்; சாதிக்க வேண்டுமெனச் சிரித்துக் கொண்டே துப்பாக்கி காட்டுகிறார்கள். எனது அடையாளங்களை அழித்தபடி, எனது பாடல்களை எரித்தபடி, இயல்பாய் இருந்து விட்டுப் போ என்கிறார்கள்! ஆகட்டும் நண்பர்களே, உங்கள் செங்கோல் ஓங்கட்டும் - என் அச்சம் தொலைகிற நாள் வரைக்கும்!' என அச்சம் தவிர்க்க நெருப்பூட்டுகிறார்.  கவிதை என்பது உணர்வின் பிரதிபலிப்பாக இருந்தாலும் அறிவின் வழிகாட்டுதலாகவும் அமைய வேண்டுமென்பதைக் கவிஞர் உள்வாங்கியிருப்பது உணர்ந்து குறிப்பிடத்தக்கதாகும். 'பழமாயிருந்தால் பறவைகள் கூடமைத்து இளைப்பாறுவோர் மீது எச்சமிடும். பலகைக்காய் வாள் கொண்டறுப்பர். பெரும் வெள்ளமோ, காற்றோ புரட்டி இழுத்துத் தள்ளிவிடும். நாம் புல்லாகவே இருந்து விட்டுப் போவோம் - மிதிபட மிதிபட நிமிர முடியுமென்ற ஒரே ஒரு காரணத்தால்' என்ற அவரது 'நிமிர்தல்' ஒரு நெம்புகோல் கவிதை என்றே கூறலாம்.

படைத்துக் காட்ட வேண்டிய உணர்ச்சியைத் தானே அனுபவிக்கும் திறனுடைய கவிஞனே சிறந்த படைப்பை அளிக்க முடியும். படைத்தவன் அனுபவித்துத் தந்த அந்த உணர்ச்சியைப் படிப்பவனும் பெற்றானாகில் அதுதான் நிலைபெற்ற படைப்பாகவும் கவிஞன் அடைய நினைக்கும் நோக்கத்தை நோக்கிப் படிக்கிறவனையும் உந்திச் செலுத்துகிற தேர்ந்த படைப்பாகவும் அமைய முடியும். 'குண்டு வெடிப்பில் குதறப்பட்டவர், குண்டு துளைத்துக் குருதியில் கிடந்தவர், கண்ணி வெடியில் கொல்லப்பட்டவர், கடத்தப்பட்டுக் காணாமல் போனவர், கிராஸ் ஃபயரில் அகப்பட்டு அகாலமானவர், எரிந்தவிந்த டயருக்குள் எலும்பாய்க் கிடந்தவர், பாதி கருகியும் பாதி கருகாமலும் பாதையில் கிடந்தவர் - இவரெல்லாம் யாரோ ஒருவர்தான். யாரோ ஒருவர் தெருவில் சிதிலமாகச் சிதறிக் கிடக்கிறார் என யாரோ ஒருவர் உன்னைச் சொல்வதற்குள் சுதாகரித்துக் கொள்!' இந்த யாரோ ஒருவர் கவிதை சொல்ல வேண்டி ஒன்றை உணர்;த்தி விட்டுப் போவது கவிஞனின் படைப்புணர்ச்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.

சமூகப் பிரக்ஞை இல்லாமல் கவிதை எழுதுவதும் உயிரற்ற சடலத்தைக் கட்டி மகிழ முனைவதும் ஒன்றாகும். அத்தகைய பிரக்ஞை கண்ணாடிச் சாரளத்துக்குள்ளே இருந்து கொண்டு வீதியில் நடப்பதை வேடிக்கை பார்ப்பதாக இருப்பதில் மட்டும் சிறப்பில்லை. வீதிக்கு வந்து நிகழ்வுகளின் உணர்வுகளில் வீழ்ந்து உழன்று நெஞ்சுக்குள் நஞ்சை வைத்து உதட்டுக்குத் தேனைத் தடவி உதிர்க்கின்ற நயவஞ்சக வார்த்தைகளின்றி, உள்ளத்தின் பள்ளத்தில் ஊற்றெடுக்கின்ற உணர்வுகளைப் பக்குவமாகப் படம் பிடிக்க உணர்த்துகிற நல்ல புகைப்படமாகக் கவிதை அமைவதில்தான் உண்மையான கவிஞன் ஆத்மார்த்த ரீதியாகப் படிப்பவனின் உள்ளத்தைத் தொட முடியும். உறவையும் நட்பையும் இனப் போராட்டத்தில் இழந்து போனவர் அஷ்ரப் சிஹாப்தீன். தன்னளவில் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர், அதிலும் தேர்ந்த ஒரு கவிஞர் வெளிப்படுத்துகின்ற வார்த்தைகளுக்குச் சக்தி அதிகமேயாகும். அந்தச் சக்தியைத்தான் 'என்னைத் தீயில் எறிந்தவள்' கவிதை ஒரு சான்றாக உணர்த்தி நிற்கிறது.

உள்ள நிலைமையை உணராமல் வெறுமனே வீராவேச வார்த்தைகளைக் கொட்டுவதில் அஷ்ரஃபுக்கு உடன்பாடு இல்லை. உள்ள நிலைமையை யதார்த்தம் தவறாமல் எடுத்துரைக்க முனைகையில் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமே அவரது கவிதைகளில் எதிரொலிப்பதையும் நாம் காண முடிகிறது. 'சந்திக்கு வருவாயா சாயங்காலம்.. மீண்டும் இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கலாம்!', 'செய்தித்தாள் பக்கமொன்றின் கீழ் மூலையில் அனாதரவாய்க் கிடக்கும் கவிதையொன்றைப் போல சுவாரசியமற்றுப் போய்க் கிடக்கிறது வாழ்க்கை!' 'வேறு வழியில்லாமல் கைகளைக் குலுக்கிக் கொண்டோம். வெறுங் கைகளை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனால் செய்ய முடிந்ததெல்லாம் அது ஒன்றுதான்... அல்லாஹ்வுக்காக என்னை மன்னிக்க வேண்டும் நீ!, 'இந்த மான்கள்தாம் பாவம்! அவை கூடிக் கூடிக் குசுகுசுப்பதெல்லாம் கானலைப் பற்றித்தான்!' - போன்றவை கையறு பாடல்களாகப் படிப்பவரது நெஞ்சைக் கவ்வுகின்றன.

'என்னைத் தீயில் எறிந்தவளில் பெரும்பான்மையான கவிதைகள், ஒரேயுணர்வைப் பீறிட்டுக் காட்டுவதாய்ப் பொதுவாக உணரலாம். ஒரேயுணர்வு திரும்பத் திரும்ப வௌ;வேறு வடிவங்களில் பாடு உணர்வாய் அமைவதற்குக் காரணம், அஷ்ரஃபின் நெஞ்சில் ஆழப் பதிந்த துயரத்தின் நோக்கமாகும். வாழ்வின் ஜீவ மரணப் போராட்டத்தில் சுரண்டல், சாதி வேற்றுமை, லஞ்சம், மோசடி, ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, கலப்படம் முதலிய சமூகக் கொடுமைகளையெல்லாம் விஞ்சுகின்ற இனப் படுகொலையைக் கண்டு அனுபவித்த நிலை அவருக்குரியது. கடுமையான தாக்குதலுக்கு ஆளான அவரது உள்ள வெளிப்பாடு பல்வேறு வடிவங்களில்  வெளியாவது இயற்கையே ஆகும்.

ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலானவற்றை வளர்த்துப் பண்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பும் கவிஞனைச் சார்ந்ததாகும். சமுதாயத்தால் கவிஞனும் கவிஞனால் சமுதாயமும் பாதிப்புக்குள்ளாகவே வேண்டும். அப்போதுதான் சமுதாய சீர்திருத்தத்துக்குரிய கவிதைகளைத் தனது நன்கொடையாகக் கவிஞனால் தர முடியும். அத்தகு நன்கொடைகளை அஷ்ரஃப் இந்நூலில் வழங்கியிருக்கிறார்.

'பக்தியூட்டுவோர் பிள்ளை ஐராப்பாவில் படிக்க, உனது பிள்ளை கோவணத்துடன் திரிவது புரியாமல்!' என்று 'நீயும் உனது தேச பக்தியும் அறிவுறுத்துகிறது. 'நாளையை நினைத்து நடுங்கும் நண்பா நெஞ்சில் உரங்கொள்வாய்! இது வேளையில் மட்டும் வீசும் காற்று விளங்கி உளங் கொள்வாய்' என 'வேளையில் வீசுங் காற்று' நம்பிக்கை தருகிறது. 'ஏராள இடமுண்டு எல்லைகளைத் தாண்டுதற்கும் எல்லைகளைத் தாண்டி எழுந்து நடப்பதற்கும் - நீங்கள்தாம் வெளியே வருவதில்லை!' எனக் 'கிணற்றுக்குள் இருப்பவர்களை' வெளியே கொண்டுவரத் துடிக்கிறது அஷ்ரஃபின் கவிதை. 'போர் நின்று மானிடப் பெரு வேட்டையாடும் பிண வெறிக்குத் தீயிடுங்கள் - அவன் இனவெறியைக் குழியிடுங்கள்' என்று கவிஞர் முரசு கொட்டுகிறார். சமுதாயத்தின் மறுமலர்ச்சியை நோக்கி மக்களை நகர்த்துகிற கவிஞரின் திறன் நுணுகி நோக்கிப் பாராட்டுவதற்குரியதாகும்.

மனிதனுக்கு மனிதன் நன்றி பாராட்டாதவன், தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி பாராட்டுபவன் ஆக மாட்டான். நன்றி உணர்வு நனி சிறக்க அமையப் பெற்றவர் அஷ்ரஃப். சமுதாயத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து மாபெரும் வெற்றி கண்ட மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் மீது அஷ்ரஃப் சிஹாப்தீன் பெரும் பற்றும் பாசமும் கொண்டவர். அதனால்தான் தான் முனைப்புக் கொண்டு தொகுத்த ;மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' எனும் தொகுப்பு நூலை 'முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்துக்கு' எனக்கூறி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். அன்னார் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் பின்னணியில் அஷ்ரஃப் சிஹாப்தீன் படைத்த 'நீ நடந்து போன தெரு' என்ற கவிதை 'என்னைத தீயில் எறிந்தவள்' என்ற நூலில் கை தட்டுகிறது. 'நீ நடந்தாய்.. தீ தீய்ந்து போயிற்று... நீ நடந்தாய்.. நதிகள் பிரவகித்து ஓடின.. இருட்டுத் தெருவுக்குள் உன்னை இழுத்துக் கொண்டு போனவர்களின் குருட்டுக் கண்களுக்கெல்லாம் வெளிச்சத்தின் விசாலத்தையல்லவா விதை;து விட்டு வந்தாய்... கேட்கிறதா.. அந்தச் சத்தம்..? நீ திரும்பிய போது எழுந்த கைதட்டல் இன்னும் ஓயவேயில்லை!' என இன்றைக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஆதர்ஷ புருஷராகத் திகழும்  தலைவரை நன்றிகூர்கிறார்.

மர்ஹூம் அஷ்ரப் கண்ட முஸ்லிம் காங்கிரஸின் சின்னம் மரம். அன்னாரின் மறைவுக்குப் பின் பிளவுகளும் பிணக்குகளும் வஞ்சகத்துக்கு ஆளாகிச் சூழ்ந்தன. அதனால்தான் வெம்பிய மனத்துடன் கவிஞர், மரமாக இல்லையென்றாலும் புல்லாகவாவது இருந்து விடுவோம். மிதி பட மிதி பட நிமிர முடியுமென்ற ஒரே ஒரு காரணத்தால்' என்று பாடுகிறார். சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற வங்கரிமாதாவை 'இருண்ட கண்டத்தின் இரண்டாவது நைல் நதி' என்று பாட வந்தபோது கூட, 'அம்மணி, பன்னிரண்டு மில்லியன் மரங்களை நட்டு வளர்த்துள்ளீர்களாமே.. ஆச்சரியமாக இருக்கிறது.. எங்கள் அண்ணன் நட்டு வளர்த்த ஒரேயொரு மரத்தைக் கூடக் கட்டிக் காக்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம்' என்ற அஷ்ரஃப் குமுறி, இலங்கை முஸ்லிம் சமுதாயத்துக்குச் சூடு ஏற்றத் தவறவில்லை. சிறந்த கவிஞன் என்பவன் தேர்ந்த விமரிசகனாகவும் இருக்க வேண்டும் என்ற அடையாளத்துக்குச் சான்றாக அஷ்ரஃபைக் கூறலாம்.

அன்றாட அவலங்களை எடுத்துக் காட்டிப் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டி விடுகிற நல்ல சிந்தனையாளனாகவும் கவிஞர் திகழ்கிறார். 'நான் எங்கே போகிறேன்?' என்று 'விடை தெரியா வினா' வாகக் கேட்பதும் நோய்களிலேயே மிகப்பெரிய 'இழி நோய்' 'உள்ளத் தினவெடுத்த உயரத்தில் நின்றபடி அடுத்தவன் மீது அபிப்பிராயம் சொல்லுவது' எனக் கூறுவதும் 'ஒரு சோடிச் செருப்பு' எனும் கவிதையில் 'குளிர் அறைகளில் பெண்ணியம் பேசும் மானிடரே, (தார்ச் சாலையில் வேகவைக்கும் வெயிலில் பச்சை மதலையைச் சுமந்தபடி செல்லும்) இவளுக்கு உங்களில் யார் வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள் ஒரு சோடிச் செருப்புகளை?' என்று கேட்பதும் 'அத்தனைக்கும் ஆமாம் போட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது - உன்னிடமும் சில தேவைகள் இருப்பதால்' என்றும் 'வேறு வழியொன்றும் தோன்றுதில்லை எனக்கு.. பொய்களோடு வாழ்வதைத் தவிர' என்று யதார்த்தம் பேசுவதும் மிகுந்த சிந்தனைகளை உள்ளடக்கியதாகவும் உருகுவதாகவும் அமைந்துள்ளன.

காதலைப் பாடாதவன் கவிஞனாக இருக்க முடியாது. எந்தவொரு கவிஞனின் எழுதுகோலும் தொடக்கத்தில் அதிகமாகவும் வயதும் அனுபவமும் ஏற ஏற அவ்வப்போது அதற்கேற்பவும் காதல் கொள்ளாதிருப்பதில்லை. எல்லோருக்கும் இருக்கும் வருத்தங்களில் காதல் வருத்தமும் இருப்பதில் வியப்பில்லை. அஷ்ரஃப் 'அந்த நினைவு' என்ற கவிதையால், 'ஊசி முனையொன்று உள்நகத்துள் புகுந்ததுபோல் அவ்வப்போது வரும்.. யாருடையவளாகவோ ஆகி விட்ட உன் நினைவு' என்று கூறும் போது, அது நிறைவேறாதுபோன ஒரு காதல் உணர்வு மட்டுமே என்று சிந்தனைக்குத் தடைபோட இயலவில்லை.சமுதாயம் இழந்து விட்ட எத்தனையோ ஆக்கங்களை நினைவுகூர்கிற உருவகமாகவே அந்த வரிகள் துளைக்கின்றன.

இறையருளால் உலகை உய்விக்க வந்த உத்தமத் திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி, 'முஹம்மத் என்று எழுதிவிட்டு முகர்ந்து பார்த்தேன் என் கலிமா விரலில் கூட கஸ்தூரி வாசம்! மொழியின் உச்சம் கவிதை. மானுடத்தின் உச்சம் முஹம்மத்' என்று பலவாறாக எடுத்துரைக்கும்போது, அஷ்ரஃபின் சொல்லாட்சித் திறன் கொடிகட்டிப் பறக்கிறது. சொல்லாட்சித் திறன் என்பது ஒரு நல்ல நடைக்கும் ஆரோக்கியமான சுவை உணவுக்கும் மட்டுமல்ல, அவற்றைத் தாண்டி அறிவுக்குங்கூட அவசியமாகும் என்பதற்கு 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' எனும் கவிதையே தக்க சான்றாகும். 'வாழ்க்கையை சரியாக வகுத்துத் தந்தவர் முஹம்மத். வகுக்கப்பட்டதை வகுக்கப்போய்த்தான் வருத்தத்தில் விழுந்திருக்கிறோம்' என்று கூறி, 'நாயகமே, நீங்கள் இறைஞ்சுங்கள்.. எங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்ற இறைஞ்சுங்கள்!' என்ற இறைஞ்சுதலோடு கவிதையை முடித்திருக்கும் ஆளுமை, நல்ல நடைக்கும் ஆரோக்கியமான சுவை உணவுக்கும் அறிவுக்கும் தீனியாகிறது.

'காணாமல் போனவர்கள்' என்ற தொகுப்பிலிருந்த 'ஸெய்த்தூன்', 'ஹபீப்' ஆகிய கவிதைகளை 'மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' தொகுப்பில் மீளவும் இடம்பெறச் செய்திருந்தார் அஷ்ரஃப். 'மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' தொகுப்பிலிருந்து 'என்னைத் தீயில் எறிந்தவள்', 'குரும்பட்டி', 'உன் தேச பக்தியும் நீயும்' ஆகிய மூன்று கவிதைகளை 'என்னைத் தீயில் எறிந்தவள்' தொகுப்பில் மீளவும் இடம்பெறச் செய்துள்ளமையும் கவனிக்கத் தக்கதாகும். கவிஞனுடைய மன ஆழத்தில் அழுத்தமாகப் பதிந்து விட்ட நிகழ்ச்சிகளின் முத்திரை மூலாதாரப் பொருளாகக் கவிதையில் அதிகம் பிரதிபலிக்கப்படவே செய்யும். கவிஞனால் உணர்ந்து அனுபவிக்கப்பட்டுச் சிந்திக்கப்பட்ட முக்கியமானவை மட்டுமே உண்மையான மூலாதாரப் பொருளாகக் கவிதையில் திரும்பத் திரும்ப எதிரொலிக்கும் என்பதற்கேற்பவே கவிதைகளை மீளவும் அஷ்ரஃப் பதிவு செய்துள்ளார் என்றே கருதலாம்.

தேசிய சாஹித்திய அரச விருது பெற்ற ஐம்பது கவிதைகளைக் கொண்ட 'என்னைத் தீயில் எறிந்தவள்' அஷ்ரஃப் சிஹாப்தீனின் வயது மற்றும் அனுபவத்துக்கேற்ப தெளிவான சிந்தனையின் போக்கில் பிரசவிக்கப்பட்டதேயாகும். கவிஞருடைய தாயாரின் தந்தையான - பாட்டனார் அப்துஸ்ஸமது ஆலிம் புலவர் அவர்களது பாடலைப் பாடிப் பரிசிலோடு அவரிடம் பெற்ற முத்தமே அஷ்ரஃப் கவிஞரானதற்கு அடிப்படை. ஆலிம் புலவரின் உந்துதல் அகிலத்திற்கு அருமையான கவிஞரை நன்கொடையாக அளித்திருக்கிறது. அஷ்ரஃபுக்கு வாய்த்த ஒலிபரப்புத் துறை அனுபவம் அவரின் பின்புலமாக இருக்கும் சமூக, அரசியல், ஆன்மீகத் தளங்கள் அவரை மிகத் தேர்ந்த கலைஞனாகச் செதுக்கியிருக்கின்றன என்பதையும் இந்நூலில் உணர முடிகிறது.

ஒரு கவிஞனுடைய சிந்தனை வளமும் கருத்து வளமும் மிகச் சிறந்த முறையில் வெளிப்பட வேண்டுமெனில் மிக நேர்த்தியான அமைப்புத் திறன் அவசியம் வேண்டும். அத்தகைய வினைத் திறன் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குக் கைவந்த கலையாக அழகூட்டுகிறது. அதற்குக் காரணம் ஒரு தேர்;ந்த கலைஞனுக்குத் தேவையான சிந்தனைத் திறம், கலை ஆற்றல், விமர்சிக்கும் திறன் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்திருப்பதுதான். அதனாலேயே 'என்னைத் தீயில் எறிந்தவள்' மிகச் சிறந்த அங்கீகாரத்தை அஷ்ரஃபுக்குக் கலை உலகில் வழங்கியிருக்கிறதெனத் துணியலாம்.

எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆழத்துக்கு ஊடுருவிப் பாய்ந்து உண்மையை உணர்ந்து காணுகிற வித்தை, மொழி வளம், சொல் நடை, அமைப்புத் திறன் முதலியன தெளிந்த சிந்தனை, தேர்ந்த கருத்து இவற்றோடு பொங்கி உணர்ச்சிப் பிரவாகம் எடுக்கிறபோது, பிறக்கின்ற கவிதை காலத்தை வென்று நிலைக்கும் ஆற்றல் உடையதாகவே அமையும் என்பதற்குக் கவிமாமணி அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'என்னைத் தீயில் எறிந்தவள்' நூல் சான்று பகர்கிறது.  இலங்கை இலக்கிய உலகில் மட்டுமன்றி, அனைத்துலகத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் அஷ்ரஃப் சிஹாப்தீன் இந்நூல் மூலம் கவிமாமணியாக அங்கீகாரம் பெற்றுள்ளார் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை.

(2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை)

குறிப்பு- கட்டுரையாசிரியர் பெயர் மற்றும் பெற்றுக் கொள்ளப்பட்ட மூலம் குறிப்பிடப்படாமல் இக்கட்டுரையை அச்சிலோ, இணையத்திலோ அல்லது கல்விசார் தேவைகளுக்கோ யாராகிலும்; பயன்படுத்தினால் அந்நபர் அல்லது நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



Wednesday, February 26, 2020

ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும் வாழ்வனுபவமும் மிக அவசியம்!

ஒலி, ஒளிபரப்பாளர், கவிஞர், பன்னூலாசிரியர், கலைஞர் என்று பல் துறை ஆளுமையான அஷ்ரஃப் சிஹாப்தீன் அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகத்தினால் கவிதைக்கான 'மகரந்தச் சிறகு' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். அவருடனான நேர்காணல்.
நேர்கண்டவர் - நாச்சியாதீவு பர்வீன்

01. கேள்வி:

அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகம் - கவிக்கோ நினைவு - மகரந்தச் சிறகு விருதை உங்களுக்கு வழங்கியிருக்கிறது. இது பற்றிய உங்களது எண்ண வெளிப்பாடு என்ன?

பதில்:
இது ஓர் உயர்ந்த விருது. அப்படித்தான் நான் இதனைக் கருதுகிறேன். அகில இலங்கை கம்பன் கழகத்தின் பார்வையும் அவதானமும் என் மீது விழுந்திருக்கிறது என்பதையே ஒரு பெரு மதிப்பாக நினைக்கிறேன். நுணுகி ஆய்ந்துதான் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் இந்த விருது எனக்குக் கிடைத்ததையிட்டு அதிலும் அவர்களது வெள்ளி விழா ஆண்டில் இந்த விருது வழங்கப்பட்டதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கம்பன் கழகத்துக்கும் அதன் உயிர் மூச்சாக இயங்கும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் மற்றும் நிர்வாகம் என சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

02. கேள்வி:

இலக்கியத்தை நோக்கி உங்களை உந்திய காரணிகள் எவை?

பதில்:

எனது தாய் வழிப் பாட்டனார் ஒரு புலவராயிருந்தார். கிண்ணியா நாச்சிக் குடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஒலுவிலில் திருமணம் செய்து ஓட்டமாவடியில் வாழ்ந்து வந்தார். அவர் மூன்று விடயங்களில் ஈடுபட்டார். ஒன்று, ஒரு குர்ஆன் மத்ரஸாவை நடத்தினார். இரண்டு, அறபு எழுத்தணியைக் கண்ணாடிகளில் எழுதி விற்பனை செய்து வந்தார். கண்ணாடியில் வலது புறமாக எழுத வேண்டிய அறபு எழுத்துக்களை அவர் இடது புறமாக எழுதினால்தான் அடுத்த பக்கம் சரியான முறையில் தெரியும் என்பதைக் கவனிக்க வேண்டும். மூன்றாவதாக, சிறு சிறு காப்பியங்களைப் படைத்தார், இஸ்லாமிய இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார், அவற்றை விற்பனை செய்தும் வந்தார். எனவே அவரது புத்தகங்களில்தான் அதுவும் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பாடல்களை வாசிப்பதில் எனது ஆர்வம் மிகச் சிறிய வயதிலேயே ஆரம்பித்தது.

03. கேள்வி:

இலக்கியத் துறைக்குள் நீங்கள் நுழைந்த காலப் பிரிவு, அப்போதைய சூழல் பற்றிச் சொல்லுங்கள்?

பதில்:

1976ல் நான் பேருவளை ஜாமிஆ நளீமியாவுக்குள் மாணவனாக நுழைகிறேன். அங்கு நிறைய வாசிக்க முடிந்தது. சத்தியத் தீபம் என்னொறு கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினோம். அக்காலப் பிரிவில் பலப்பிட்டி அரூஸ் அவர்கள் ஜூம்ஆ என்று ஒரு பத்திரிகை வெளியிட்டார். அதில்தான் எனது முதலாவது சிறிய வசன கவிதை வெளிவந்தது. இன்று அதைக் கவிதை என்று சொல்ல முடியாது. (அந்தக் காலத்து வசன கவிதைகள் இன்று கவிதைகளே இல்லை என்பது வேறு விடயம்) காலியைச் சேர்ந்த எம்.எச்.எம். ஹாரிஸ் அவர்கள் தமிழாசிரியர். இவர் ஆசிரிய கலாசாலைத் தமிழ் விரிவுரையாளராக இருந்த தமிழறிஞர். இவர்தான் மரபுக் கவிதையில் எதுகை மோனை சொல்லித் தந்தவர். மற்றொருவர் எனது வகுப்புத் தோழன் எம்.எம். முகம்மத். தேர்தல் திணைக்களத்தில் மேலதிக ஆணையாளராக இருந்தவர். அவர் ஒரு நல்ல மரபுக் கவிதைக் காரர். ஓசை நயத்தைக் கண்ணதாசனின் கவிதைகளில் கற்றேன்.

அக்காலத்தில் தினபதி பத்திரிகையில் 'தினபதி - கவிதா மண்டலம்' என்று ஒரு பகுதி. அதில் தினமொரு மரபுக் கவிதை வெளிவரும். 1977 இறுதிப் பகுதி அல்லது 78ன் ஆரம்பப் பிரிவில் எனது முதலாவது மரபுக் கவிதை அதில் பிரசுரமானது. அதில் கவிதை வரவேண்டுமாயின் அக்கவிதையை சிபார்சு செய்யவென்று சிலர் பத்திரிகையினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். அந்த சிபார்சு இல்லாமலே எனது கவிதைகள் பிரசுரமாயின.

தொடர்பு சாதனங்கள், வசதி வாய்ப்புகள் என்று எதுவுமற்ற காலப் பிரிவு அது. நான் 17 வயது இளைஞன். லீவில் வந்தால் ஊரில் உள்ள இலக்கியவாதிகளோடுதான் உறவு இருந்தது. அவ்வேளை பிரதான இலக்கியவாதிகள் மூவர் இருந்தனர். வை. அகமத் அவர்கள் நாவலாசிரியராகவும் சிறுகதையாளராகவும் அறியப்பட்டவர். எஸ்.எல்.எம். ஹனிபா சிறுகதையாளர். ஓட்டமாவடி ஜூனைத் எனக்கு முன்பே கவிதைத் துறையில் ஈடுபட்டவர். அவருடைய நிறையக் கவிதைகள் பத்திரிகை, சஞ்சிகைளில் வந்திருக்கின்றன. இதற்கப்பால் யூசுப் ஆசிரியர், யூ.அகமட், எஸ்.எம்.தலிபா, ஓட்டமாவடி இஸ்மாயில் என்று சிலர் இலக்கிய ஆர்வத்துடன் இயங்கி வந்தார்கள். இவர்கள் அனைவரும் எனக்கு முந்திய தலைமுறையினர். எனக்குப் பிற்பாடு வாழைச்சேனை அமர், ஏ.ஜி.எம். ஸதக்கா, வாழை மயில் (இஸ்மாயில்) ஆகியோர் கவிதை, கதை, பத்திரிகை, சஞ்சிகை என்று இயங்கி வந்தவர்கள். பின்னால்  எஸ்.நளீம், ஓட்டமாவடி அறபாத், ஜிப்ரி ஹஸன், சல்மான் வஹாப், சல்மானுல் ஹாரிஸ் என்று ஒரு படை உருவாகியது. இதற்குள் சில பெயர்கள் ஞாபக மறதியால் விடுபட்டிருக்கலாம். இங்கே நான் குறிப்பிட்டவர்கள்  எனது இலக்கியத் தொடக்கத்தின் சற்று முன்னும் பின்னுமானவர்களாவர்.

இதற்கெல்லாம் அப்பால் ஒருவரை நான் குறிப்பிட்டாக வேண்டும். அவர்தான் பொது நூலகராக இருந்த சமத் நானா அவர்கள். நூலகத்துக்கு நல்ல நூல்களைக் கொள்வனவு செய்து வைத்திருப்பார். நல்ல நூல்களை எனக்குத் தெரிந்து வைத்திருந்து தருவார். எல்லாருக்கும் இரண்டு புத்தகங்கள்தாம் வழங்குவார். எனது வாசிப்பு வேகத்தைக் கண்டு எனக்கு மூன்று நூல்கள் தருவார். அவரை என்னால் மறக்க முடியாது.

04. கேள்வி:

உங்களது முதலாவது கவிதை தொகுதிபற்றியும், அதற்கு கிடைத்த அங்கீகாரம் பற்றியும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்:

முதலாவது கவிதைத் தொகுதியான 'காணாமல் போனவர்கள்' 1999ல் வெளி வந்தது. இதில் இடம்பெற்ற இரண்டு கவிதைகளைத் தவிர ஏனைய அனைத்தும் 1978க்கும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப் பெற்றவை. ஒரு நூலுக்கான கவிதைகளை 1984லேயே தொகுத்து வைத்திருந்தேன். ஆனாலும்  வெளியிடும் அளவு வசதி வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. பயிற்றப்பட்ட ஆசிரியனாக இருந்த நான் 1992ல் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரம் பெற்ற அலுவலர் தெரிவுக்கான அகில இலங்கை ரீதியான பரீட்சையில் சித்தியடைந்ததுடன் 1993ல் அதில் இணைக்கப்பட்டேன். 1996 அளவில் எனது முதல் நூலைக் கொண்டு வந்திருக்கலாம். அப்போதும் அதுபற்றி ஆர்வம் இருக்கவில்லை.
1998ம் ஆண்டு எனது முதற்தொகுதியைக் கொண்டு வர பலவந்தப் படுத்தியவர்கள் இருவர். ஒருவர், மறைந்த கவிஞர் ஏ.ஜி.எம். சதக்கா. மற்றையவர் வாழைச்சேனை அமர் என்கிற அப்துல் ரகுமான். இதற்காகவே அவர்கள் ஊரிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டு வந்து ஒரு முழுநாளும் நின்று என்னை ஊக்கப்படுத்தினர். இதன் விளைவாக 1999ல் முதற் தொகுதி வெளியாயிற்று. என்னை மீண்டும் அவர்கள் இலக்கியத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்தவர்கள் என்ற அடிப்படையில் பின்னால் எழுதப்பட்ட அனைத்து எழுத்துக்களுக்குமான தோற்றுவாயை உண்டு பண்ணியவர்கள் அவர்கள் இருவரும்தாம்.  'காணாமல் போனவர்கள்' முதற்பதிப்பாக ஆயிரம் பிரதிகளும் இரண்டாம் பதிப்பாக அறுநூறு பிரதிகளும் வெளியிடப்பட்டன.

நாச்சியாதீவு பர்வீன் 

அங்கீகாரம் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா? யாருடைய அங்கீகாரத்துக்காகவும் நான் எதையும் எழுதவில்லை. யாருடைய அங்கீகாரத்தையும் நான் எதிர்பார்ப்பவனும் அல்லன். இன்னின்னார் பாராட்ட வேண்டும், பல்லக்கில் ஏற்ற வேண்டும் என்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் எனக்குக் கிடையாது. எனக்குக் கவிதை எழுதத் தோன்றினால் எழுதுகிறேன். கதை, கட்டுரை, பத்தி, மொழிபெயர்ப்புகள் - இவையெல்லாமே நானே தீர்மானித்து நானே எழுதினேன், எழுதுகிறேன். வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் எழுதுவேன்.

05. கேள்வி:

ஆரம்பத்தில் கவிதைக்கூடாக ஆரம்பித்த உங்களது இலக்கியப் பயணம் பத்தி எழுத்து, கட்டுரை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு  என்று இலக்கியத்தின் எல்லாத் தளத்திலும் பயணித்தது எவ்வாறு?

பதில்:
இதில் எந்த மாயமோ மந்திரமோ இல்லை. எனக்கு முன்னரும் கவிதையில் ஆரம்பித்து பல் துறைகளில் ஜொலித்தவர்கள் இருக்கிறார்கள். ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும் வாழ்வனுபவமும் கிடைக்கக் கிடைக்க அவனது தளம் விரிந்து செல்லும். சிலர் எனக்கு ஒரு துறையே போதும் என்று அதிலேயே தொடர்ந்து ஈடுபடுவார்கள். இதுவும் வாலாயமாகும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் ஏளைய துறைகளுக்குள்ளும் கால் பதிப்பார்கள்.
சிறுவர் இலக்கியத்தில் ஈடுபட்டது எதிர்பாராமல் நடந்நதது. ரூம் டு ரீட் என்ற நிறுவனத்தில் தமிழ்ப் பிரிவில் கடமை புரிந்த ராஜா மகள் என அறியப்பட்ட லதா சிறுவர் இலக்கியம் பற்றிய பயிலரங்குக்கு அழைத்து இதில் ஈடுபட வைத்தவர். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நான் சொல்ல வேண்டும். இந்தியரான சுபீர் சுக்ளா என்ற பயிற்றுவிப்பாளர்தான் இந்தப் பயிலரங்கை நடத்தியவர். இந்திய கல்வியமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினர் அவர். சிறுவர் இலக்கியத்தில் மிகத் தேர்ச்சி பெற்றவர். கடந்த காலங்களில் ஈஸாப்பு நீதிக் கதைகள், தந்திரக் கதைகள் போன்றவற்றைச் சிறுவர்களுக்குக் கற்பித்தது பிழை என்று அவர் சொன்னார். தந்திரம், ஏமாற்று ஆகியவற்றைக் கதைகள் மூலம் இளம் பிஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றும் முயற்சி மூலம் இலக்கை அடைவதைப் பற்றியே கதைகள் எழுதப்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததுடன் அதன் படி எழுதவும் தூண்டினால். ஆனால் துரதிர்ஷ்டமாக இன்று விற்பனைக்கிருக்கும் சிறுவர் கதைகள் இந்த நியமங்கள் அடிப்படையில் எழுதப்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பயிலரங்குக்குப் பின் நான் மூன்று கதைகளை எழுதினேன். சிறார்களுக்கென இலக்கியம் படைப்பது ஏனைய படைப்பாங்களைச் செய்வதை விட முற்றிலும் வேறு பட்டது, சவாலானது, சிரமம் மிக்கது என்பதே எனது கணிப்பாகும்.

06. கேள்வி:

இலங்கை அரசினால் இலக்கியத்திற்காக வழங்கப்படுகின்ற உயர் விருதான சாகித்திய மண்டலப்பரிசினை மூன்று தடவைகள் பெற்றவர் என்ற வகையில் அந்த விபரங்ளை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

பதில்:

முதல் விருது 'என்னைத் தீயில் எறிந்தவள்' என்ற எனது இரண்டாவது கவிதை நூலுக்கு 2009ம் ஆண்டு கிடைத்தது. இரண்டாவது விருது அறபுக் கதைகளின் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' நூலுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலான 'பட்டாம் பூச்சிக் கனவுகள்' தொகுதிக்கு 2016ம் ஆண்டு கிடைத்தது.

இது தவிர, ஏனைய நான்கு நூல்கள் இறுதிச் சுற்றுக்குள் வந்த மூன்று நூல்களில் ஒன்றாக இடம்பிடித்துச் சான்றிதழ் பெற்றன. 2011ல் 'ஒரு குடம் கண்ணீர்', 2014ல் எனது சிறுகதைகளின் தொகுதியான 'விரல்களற்றவனின் பிரார்த்தனை', 2017ல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியான 'யாரும் மற்றொருவர் போல் இல்லை', 2018ல் எனது மூன்றாவது கவிதைத் தொகுதியான 'தேவதைகள் போகும் தெரு' ஆகியனவாகும்.

கேள்வி

07. இலங்கை இந்திய தமிழ் பரப்புக்கு பெரிதும் பரிச்சயமற்ற அரேபிய சிறுகதைகளை மொழி பெயர்க்கும் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

என்னுடைய அவதானத்தின் படி உலகத்தை ஆகர்ஷிக்கும் இலக்கியப் படைப்புகள் லத்தீன் அமெரிக்க, அரேபிய, ஆபிரிக்க நாடுகளிலேயே வெளிவருகின்றன. அதிகமாகப் பேசப்படும் இலக்கியங்களாக இவையே இருக்கின்றன. தமழ் சூழலில் என்ன காரணம் பற்றியோ லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுமளவுக்கு, பேசப்படுமளவுக்கு அறபு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவதுமில்லை, பேசப்படுவதுமில்லை.

அறபு மொழி இலக்கியச் செழுமையும் ஆழ வேருன்றிய இலக்கியச் சிறப்பும் கொண்டது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கவிதைகளை எழுதி கஃபா என்ற இறை ஆலயத்தில் தொங்க விட்டவர்கள் அவர்கள். கவிதையிலேயே பொருதிக் கொண்டவர்கள். கதையும் அப்படித்தான். ஆயிரத்தொரு அராபியக் கதைகள் இன்று வரை பேசப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.

மேற்கு நாடுகளில் குடியேறிய பல அறபு எழுத்தாளர்கள் ஆண்களும் பெண்களுமாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்ற மொழிகளில் அற்புதமான இலக்கியங்களைப் படைக்கிறார்கள். 1998லிருந்து லண்டனில் 'பானிபால்' என்றொரு சஞ்சிகை அறபு நாடுகளின் இலக்கியத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இதை நிறுவியவர்கள் மார்கிரட் ஒபாங் என்ற பிரிட்டிஷ் பெண்மணியும் சாமுவேல் சிமோன் என்ற ஈராக்கிய எழுத்தாளருமாவர். இருவருமே முஸ்லிம்கள் அல்லர். தேடல்கள் மூலமே இவற்றை நான் அறிந்து கொண்டேன். எனவே அவற்றில் எனக்குப் புரிந்தவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்து மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். நான் மொழிபெயர்த்த சிறுகதை ஒன்றை எழுதியவர் ஜோக்ஹா அல் ஹார்த்தி. ஓமானைச் சேர்ந்த இப்பெண்மணியின் அறபு நாவல் ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேன் புக்கர் விருது பெற்றிருக்கிறது. ஓமானில் இருந்த வேளை நமது முன்னோடி எழுத்தாளர் மானா மக்கீன் அவரைச் சந்தித்ததாக அறிந்தேன்.

எனக்கு மொழிபெயர்ப்புக்கான நூல்களை வாங்கித் தரும் இருவர் லண்டனில் வசிக்கின்றனர். சட்டத்தரணி ஷர்மிலா ஜெய்னுலாப்தீன், ஒலிபரப்பாளர் ஷைபா அப்துல் மலிக் ஆகிய இருவருமே அவர்களாவர்.

அறபு மொழி துறைபோகக் கற்றவர்கள் அந்த மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இது லாபமீட்டும் துறையல்ல. அறபு மொழியில் பாண்டித்தியம் பெற்று அரச பதவிகளில் இருப்பவர்களும் இவ்விடயத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை. எல்லாருக்கும் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனையவர்கள் அறபு நாடுகளில் வாழும் பணிப்பெண்களின் 'பாபா'வுக்குக் கடிதம் எழுதுவனுடன் தமது திறமையை மட்டுப் படுத்திக் கொண்டார்கள்.

எனது அறிவுக்கெட்டியவரை உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், ஷெய்க் ஏ.பி.எம். இத்ரீஸ், ஷெய்க் ஏ.சீ. மஸாஹிர் போன்றோர் சற்றுப் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரியாமலும் வேறு சிலரும் இருக்கக் கூடும்.

Friday, February 14, 2020

அப்துல் ஹமீத் - ஒலியில் ஒளிரும் வானவில்!


முன்னோடி ஒலிபரப்பாளர்களில் ஒருவரான பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள் நேற்று 13.02.2020 அன்று கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நடைபெற்ற வானொலி அரச விருது விழாவில் 'பிரதீபா பிரணாம' என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் காசார அமைச்சின் கீழ் இயங்கும் கலாசாரத் திணைக்களம் இதனை வழங்கியிருக்கிறது.

இந்த விருது எப்போதோ அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மிக அண்மித்த காலங்களில்தான் இவ்வாறான விருதுகள் வழங்கப்பட ஆரம்பித்தன என்ற வகையில் ஆறுதலடைய முடியும். இன்னொரு வகையில் அவர் தொடர்ந்தும் ஒலிபரப்புத் துறையோடு இயங்கிக் கொண்டிருக்கிறார் என்ற அடிப்படையிலும் தாமதத்துக்காகக் கவலை கொள்ள வேண்டியதில்லை.

அப்துல் ஹமீத் அவர்களை ஓர் அறிவிப்பாளன் என்ற வகையில்தான் பலரும் மேலோட்டமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர் ஓர் அற்புதமான கலைஞர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பாடலாசிரியர் என்ற விடயங்கள் பற்றிப் பெருமளவில் யாரும் அறிந்திருக்கவில்லை. அதற்கு ஒரு பிரதான காரணம் தன்னைப் பற்றி அவர் எடுத்துக் காட்ட முனைந்ததில்லை.

1985இல்தான் நான் அவரை முதன் முதலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தாழ்வாரத்தில் சந்தித்தேன். யாரோ ஒருவர் என்னை அறிமுகம் செய்தார். அப்போது 'யாவரும் கேளிர்' என்ற நிகழ்ச்சியை முஸ்லிம் சேவையில் நடாத்திக் கொண்டிருந்தேன். அப்போது அவர் வர்த்தக சேவையில் 'ஒலி மஞ்சரி' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியைச் செய்து கொண்டிருந்தார். 'உங்களது கவிதையொன்று ஒலி மஞ்சரி'யில் ஒலிபரப்பாகியிருந்தது கேட்டீர்களா?' என்று கேட்டார். 'நான் ஒலிமஞ்சரிக்குக் கவிதை அனுப்பவில்லையே' என்றேன். நண்பர் கிண்ணியா அமீர் அலி வீரகேசரி வார மஞ்சரியில் வெளி வந்த 'குழந்தைகளுக்கு மாத்திரம்' என்ற கவிதையை இரசித்த கவிதையாக 'ஒலி மஞ்சரி'க்கு அனுப்பியிருந்த விடயத்தை எனக்குச் சொன்னார்.

வர்த்தக நிகழ்ச்சிகளூடாக இலக்கியத் தரத்துடனான ஒரு நிகழ்ச்சியாக 'ஒலி மஞ்சரி' இருந்தது. மிக அதிகமான இளைய தலைமுறை அதில் எழுதி வந்தது. கவிதையாக இல்லாத போதும் அதைத் தனது வாசிப்பின் மூலம் கவிதையாக்கி விடுவார் அப்துல் ஹமீத் என்று அந்நிகழ்ச்சி பற்றிப் பேசும் போது ஒலிபரப்புத் துறை சாராத ஒரு நேயர் எனக்குச் சொல்லியிருக்கிறார். அதை ஒரு பல்சுவை நிகழ்ச்சியாக அவர் நடாத்தி வந்தார்.

அக்காலங்களில் இன்று போல் உடனடியாக ஒருவரோடு தொடர்பு கொள்ளும் எந்த வாய்ப்பும் இல்லை. ஒருவரைப் பற்றிய முழுத் தகவல்களும் பத்திரிகைகளில் வந்தால்தான் உண்டு. ஒலிபரப்பாளர்களின் பேட்டிகள் கூட வருவதில்லை. அறிவிப்பாளர்கள் பற்றிய சில செய்திகளை அவர்களாகக் கற்பனை செய்து கொண்டு எப்போதாவது அவர்களுடன் தொடர்பு பட்டவர்களிடம் கேட்பார்கள். ஒரு பகுதிநேர அறிவிப்பாளனாகச் சேர்ந்த பிறகு விசாலாட்சி ஹமீத் தான் பி.எச். அப்துல் ஹமீதின் மனைவியா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். என்னைப்போல் எத்தனை பேரிடம் யார் யார் கேட்டிருப்பார்களோ?

அவரிடமுள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, யாரையும் பற்றி யாரிடமும் அவர் பேசமாட்டார். விமர்சிக்கவும் மாட்டார். இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று யாருக்கும் இலவச அறிவுரை வழங்குவதும் இல்லை. அவரிடம் எதையாவது கேட்டால் மாத்திரமே அது பற்றிய விபரங்களையும் ஆலோசனையையும் நமக்குத் தருவார். 'என்னுடைய சக தொழிற் பயணியாக ஒருவர் வந்து விட்டால் அவர் என்னைப் போல் ஒருவர்தான்' என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.



தொண்ணூறுகளில் தொலைக் காட்சிச் செய்தி வாசிப்புக்குச் சென்ற பிறகு ஒரு நாள் என்னைக் கண்டு சொன்னார், 'அஷ்ரஃப்... மீசை ரொம்பப் பெரிதாகத் தெரிகிறதே.. சிறிதாகக் கத்தரித்துக் கொள்ளக் கூடாதா?' அவர் சொல்லும் வரை நான் அதுகுறித்துச் சிந்தித்திருக்கவில்லை. அவர் அப்படிச் சொன்னதே ஓர் அபூர்வமான விடயம். அது பற்றிப் பிறகு யோசித்தால் இளவயதில் நறுக்கப்படாத மீசை திரையில் நமது முகத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பது புரிந்தது மட்டுமல்ல, அது குறித்து அவரது நுணுக்கமான அவதானிப்பை நினைத்தும் வியந்தேன்.

Saturday, January 18, 2020

சோலைக்கிளியின் 'கப்புத் தென்னை' - நாடகம்


    சோலைக்கிளி பற்றிக் கேட்டால் முதலாவது அவர் ஒரு அசல் கவிஞர், இரண்டாவதும் அவர் ஒரு அசல் கவிஞர், மூன்றாவதும் அவர் ஒரு அசல் கவிஞர் என்றுதான் என்னால் சொல்லத் தோன்றும். அவரது கவிதைகள் மட்டுமல்ல, அவருடைய பேச்சும்கூட நகைச்சுவை ததும்பும் கவிதைத்தனமானதாகவே இருக்கும்.

    நாலாவதாகவும் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்டால் அவர் ஒரு நல்ல நாடக எழுத்தாளர் என்பேன். கவிதைகளாலேயே அவர் பெயர்பெற்று விட்ட காரணத்தால் அவருக்குள் இருந்த நாடகாசிரியன் பற்றி பெருமளவில் யாரும் கவனித்ததில்லை.

    எண்பதுகளின் பிற்கூறில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சோலைக்கிளியின் பல நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நாடகங்களில் நானும் நடித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் இந்த நாடகங்களைப் பற்றி அவரிடம் கேட்டபோது ஒலிநாடாவில் அவர் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த 13 நாடகங்களை ஓர் இறுவட்டாக எனக்குத் தந்தார். அவற்றுள் சில நாடாவில் இருக்கும்போதே மீள மீள ஒலிக்க விடப்பட்டிருப்பதால் ஒலியளவு மாறியிருந்தன.

    இவரது நாடகங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்த காரணத்தால் அதைப் பெற்று இறுவட்டிலிருந்து கணினிக்கு மாற்றி வைத்திருக்கிறேன். சில போது இலக்கிய மஞ்சரிக்காகவும் அவரது நாடகங்களிலிருந்து சில பகுதிகளை எடுத்தாண்டிருக்கிறேன்.

    ஒரு நூலை வாசித்து அது குறித்து எழுதுவதை விட ஒலிப்பதிவைக் கேட்டுக் குறிப்பெடுத்து எழுதுவது சிரமமான காரியம். அதை ஒரே மூச்சில் செய்து முடித்து விட முடியாது. நிறைய நேரம் தேவைப்படும். பொறுமையும் அவகாசமும் தேவை. இருந்த போதும் மனதில் எண்ணியதை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாடகமாக எழுதி முடித்துவிடும் தீர்மானத்துக்கு வந்தேன்.

    'கப்புத் தென்னை' என்று ஒரு நாடகம். பொதுவாக தென்னை ஒற்றையாக நெடிதுயர வளரும். அபூர்வமாக மற்றொரு கிளை விடும் தென்னைக்குக் கப்புத் தென்னை என்று பெயர். ஆசிரியராகக் கடமையாற்றும் போது ஐம்பதாயிரம் ரொக்கம், நான்கு ஏக்கர் காணி, வீட்டுடன் திருமணம் செய்யும் பாருக் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றதும் கார் ஒன்றை வாங்கி ஓடினால்தான் கௌரவம் என்று நினைக்கிறான். எனவே மாமனாரிடம் உள்ள மீதி நான்கு ஏக்கர் காணியையும் தனக்குத் தர வேண்டுமென்று மனைவிடம் தினமும் சண்டை பிடிக்கிறான். தனக்கு மேலும் மூன்று சகோதரிகள் இருந்தும் தன்னிடமிருந்த எட்டு ஏன்னர் காணியில் பாதியை மூத்த பிள்ளை என்று தனக்குத் தந்ததை அவள் எடுத்துச் சொல்லியும் அது தனது பிரச்சனை அல்ல என்று வாதிடுகிறான் பாருக்.

    இதே வேளை பாருக்கின் தந்தையும் தாயும் அவனது வேண்டுகோள் நியாயமானது என்று மகன் பக்கம் நின்று பேசுகிறார்கள். மாமனாருடன் நேரடிப் பேச்சு முற்றி வீட்டை விட்டு வெளியேறுகிறான் பாருக். விவாக ரத்துக்குப் பின்னர் பாருக் வசதி வாய்ப்பான ஓரிடத்தில் காரொன்றை சீதனமாகப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். அவனது மனைவியும் மறுமணம் செய்து கொள்கிறாள். பாருக்கின் பிள்ளையுடன் சேர்த்து புதியவன் அவளை நன்றாக வாழ வைக்கிறான்.

    பாருக்கின் நண்பன் வெளிநாட்டிலிருந்து வந்து பாருக்கையும் அவனது தந்தையாரையும் சந்தித்து விட்டு பாருக்கின் முதல் மனைவி, அவளது தந்தையார் ஆகியோரைச் சந்திக்கும் காட்சியில்தான் பாருக் ஒரு காருக்காக எடுத்தது தப்பான முடிவு என்பதை அவர்களே சொன்ன வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துகிறான்.

    பாருக் மனைவியுடன் சண்டையிட்டுத் தன் வீட்டுக்கு வந்ததும் - அவனுடைய தந்தையிடம், 'என்ன.. மகன் கோவிச்சுக்கிட்டு வந்துட்டாராமே..' என்று மற்றவர்கள் கேட்பதைப் பற்றி மனைவியிடம் சொல்லும் போது, 'ஒரு சின்னப் பெரச்சின எண்டா ஊரானுக்கு என்ன சந்தோஷமா இருக்குடா வாப்பா..' என்கிற இடமாகட்டும் - பாருக்கின் தாயார் கணவனிடம் சம்பந்தி குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் போது, 'மாப்புள கேட்டு வரக்குள்ள கருகின வாழப்பழத்தக் கொண்டாந்த குடும்பம்தானே அது..' என்று சொல்லும் இடமாகட்டும் - வெளிநாட்டிலிருந்து வந்த பாருக்கின் நண்பரிடம் தனது புதிய மருமகளைப் பற்றிச் சொல்லும் போது, 'அவ ஒரு ஊத்தக் கிடா.. தலைக்கி எண்ணெய் வெக்காளுமில்ல.. குளிக்காளுமில்ல..' என்று சொல்லுமிடமாகட்டும் நம்மையறியாமல் சிரிப்புப் பீறிடுகிறது. இதே மாதிரி சோலைக் கிளியின் கிண்டலான வசனங்கள் நாடகம் முழுக்க இடம்பெற்றுள்ளன.

'நான் பிழை செய்துட்டன்.. என்ட காசிலயாவது அவனுக்கு ஒரு காரை வாங்கி நான் குடுத்திருக்கணும். பொண்டாட்டியோட சண்ட புடிச்சிக்கிட்டு வந்தவனை ஏசி திருப்பி அனுப்பியிருக்கணும்' என்று பாருக்கின் தந்தை சொல்வதுடன் நாடகம் முடிவடைகிறது.

    இந்த நாடகத்தில் பாருக்கின் தந்தையாக மறைந்த கே.ஏ.ஜவாஹர் அவர்களும் தாயாக நூர்ஜஹான் மர்ஸூக் அவர்களும் மனைவியாக ஞெய்றஹீம் ஷஹீத் அவர்களும் பாருக்கின் மாமனாராக ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களும் நண்பனாக மஹ்தி ஹஸன் இப்றாஹீம் அவர்களும் நடித்துள்ளனர். பாருக் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தது நான்தான்.

    நாடகத்தின் தொடக்கக் காட்சியில் பாருக்கின் தந்தை இறைச்சிக் கறியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எச்.ஐ.எம். ஹூஸைன் பிச்சைக்கானாக வருவார். 'சனியனுகள்... சாப்பிடுற நேரம் பாத்துத்தான் பிச்சையெடுக்க வருவானுகள்' என்று அவர் சாப்பிட்டுக் கொண்டே கொம்புவதும் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு சோறு கேட்பார். சோறு இல்லை என்றதும் 'எங்கேயோ இறைச்சிக் கறி வாசம் வருகிறது' என்று பிச்சைக்காரன் சொல்லுவதும் வெகு சுவாரஸ்யமாகத் தூக்கி விடுகிறது.

18.01.2020

Friday, January 17, 2020

மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வின் 'நிழலைத் தேடி'



மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான 'நிழலைத் தேடி'யை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்த நூல் 2017ம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 'ஜலசமாதி' 2008 இல் வெளிவந்திருக்கிறது.

ஏ.எஸ். உபைத்துல்லாஹ் ஒரு நல்ல சிறுகதையாளர் என்று முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன். 2016ல் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாடு சம்பந்தமான பிரதேசவாரியான எழுத்தாளர் சந்திப்பின் போது ஒரு மாலை வேளை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.

திருமலை மாவட்டத்தின் இயற்கை அழகு, கடலும் ஆறும் அண்மிய நிலம், அப்பிரதேச ஊர்களின் கடந்த காலமும், நவீன மயப்படுதலும், அப்பிரதேச மக்களின் ஒற்றுமையான வாழ்க்கை, சுனாமி, இனப்பிரச்சனை ஏற்படுத்திய வடுக்கள், இடப்பெயர்வின் துயரம், மீள்குடியேற்றமற்றுச் சீரழியும் ஏழை - எளியவர்களது வாழ்க்கை, சிறிய வரலாற்றுக் குறிப்புகள், பிரித்தாளும் அரசியல் தந்திரங்கள், பிரதேச கல்வி என்றெல்லாம் நிறைய விடயங்களைத் தனது கதைகளுடே உபைத்துல்லாஹ் பேசுகிறார். திருமலையும் அதனுள்ளடங்கும் பிரதேசங்களும் நீர் வளம் நிரம்பியவை என்பதால் அவரது கதைகளில் கடல், ஆறு, கிணறு என்று நீர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

'தண்ணீர், தண்ணீர்' இத்தொகுதியின் முதலாவது கதை. குடும்பத்தில் வலது குறைந்த பிறந்த,  ஒரு பக்கம் காலை இழுத்துக் கோணி நடக்கும் மம்மறாயன் - முகம்மது இப்றாஹீம் -  நேர்மையாக வாழ வேண்டும் என்ற லட்சியமுடையவன்.  அக்காலத்தில்  வீடுகளில் உள்ள கிணற்று நீர் உவர்ப்புத் தன்மை கொண்டதாக இருந்தபடியால் மக்கள் குடிநீருக்கு அலைந்த போது தூரத்தே இருந்த நன்னீர் கிணறுகளில் நீர் பிடித்து வந்து வீடுவீடாகக் கொடுத்து அவர்கள் கொடுப்பதைப் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தான். குடங்களில் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு தள்ளு வண்டியை ஒரு நல்லவர் கொடுக்கிறார். ஏழ்மை நிறைந்த அவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் குழாய் நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தனது ஒரே வருமான வழியும் இழக்கப்பட்ட நிலையிலும் வலது குறைந்த மம்மறாயன் மனைவியிடம் சொல்கிறான்.. 'பாத்தும்மா யோசிக்காத... இந்த உலகத்துல தண்ணி யாவாரம் மட்டுந்தான் ஒரு தொழிலா? எத்தனையோ தொழில் இருக்கு.. நமக்குப் பொருத்தமான ஒன்றைத் தேடிக் கொள்ளுவம்..!'

'கொடி பறக்குது' என்ற கதை வெள்ளை மணல் அருகே இருக்கும் கருமலையூற்றுப் பள்ளிவாசல், அங்கு வருடா வருடம் விழாவாக நடக்கும் கந்தூரி, பெயர் தெரியாத நாற்பது முழ அவுலியா (இறைநேசர்) அடக்கஸ்தலம், அதனோடு இணைந்த 1815ல் கட்டப்பட்ட பள்ளிவாசல் ஆகியவற்றை ஜூனைதீன் என்ற முதியவர் நினைவு கூரும் கதை. இப்போது இந்த இடங்கள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லி ஒரு பெருமூச்சுடன் முடிவடைகிறது.

நீண்ட நெடுங்காலமாக மூதூர், கிண்ணியா பிரதேசப் பயணத்தைத் தோணி மற்றும் மிதவை மூலம் கடந்த மக்கள் பாலங்கள் அமைக்கப்பட்டதும் அதில் ஒரு சுற்றுலாத் தலம் போல் போய் நின்று மகிழ்ச்சியனுபவித்ததையும் பாலங்கள் அமையுமுன் எப்படியெல்லாம் மக்கள் சிரமங்களை அனுபவித்தார்கள் என்பதையும் நினைவூட்டுகிறது 'நீலக் கடல் தாண்டி' என்ற கதை.

'ஓயாத அலைகள்' என்ற கதையில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரதேசத்தின் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு தினத்தில் சென்று கற்பிக்கும் சேவையைச் செய்து கொண்டிருப்பதையும், சிறு வகுப்பு முதல் ஏ.எல் வரை நடக்கும் டியுஷன் பணத்தை அடிப்படையாகக் கொண்டு நடப்பதையும் பேசுகிறது. பாடமற்ற வேளை வேறு ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை அதிபர் கோர, அதை மறுத்துப் பேசும் ஆசிரியர் ஒருவருக்கு உதவிக் கல்விப் பணிப்பாளராகத் தரமுயரும் கடிதம் வருவதோடு கதை முடிகிறது.

மிக அண்மைக் காலம் வரை அறபிகள் பள்ளிவாசல் கட்டித் திறப்பதற்காக வருவதும் அந்தப் பள்ளிகள் அமைந்திருக்கும் பிரதேசங்களில் வாழ்வதற்கு வீடுகள் இல்லாத நிலையில் வாழும் மீனவர்கள் பற்றியதுமான கதை 'ஏமாற்றம்.'  'ஊர் துறந்து' என்ற கதை புலிகளுக்கும் அரச படையினருக்கும் நடந்த ஷெல், மோட்டார் வீச்சில் மரித்தவர்களதும், ஊர் துறந்து அகதிகளாகச் சென்றவர்களதும் கதை. 'நிழலைத் தேடி' என்ற கதையும் இனப் பிரச்சனை காரணமாக ஊர் துறத்தலைத்தான் பேசுகிறது. ஆனால் மூவின மக்களும் எப்படித் தத்தம் தொழிலைச் செய்தபடி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதைப் பேசும் ஓர் அருமையான கதை இது.

'வாயில்லாப் பூச்சிகள்' வீடற்ற பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் நிராகரிக்கப்படுவதையும் 'வாழத்துடிப்பவர்கள்' என்ற கதை உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்பும் தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதையும் பேசுகிறது.

'அம்மா என்றால் அன்பு' என்ற கதை பாடசாலையில் கொடுக்கும் கஞ்சியை வீட்டிலிருக்கும் தாயாருக்கு எடுத்துச் செல்லும் வறுமைப்பட்ட குடும்பச் சிறுமி பற்றியது.

 மூதூரின் நொக்ஸ் வீதிக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்பதை கப்பல் மாலுமியான நொக்ஸின் வருகை தந்ததை வைத்து உண்டாகியிருக்கிறது என்பதை ஒரு கதையிலும் மலை நாட்டில் இருந்த ஜேம்ஸ் என்ற ஒரு வெள்ளைக்காரன் பொழுது போக்குக்காக திருமலை வந்து அங்கேயிருந்த ஒரு பிரதேசத்தில் தெங்குத் தோட்டம் அமைத்ததையும் அதில் கூலிக்கு வேலை செய்தவர்களையும் கதைகளில் குறிப்பிடுகிறார். பொதுவாக எல்லாக் கதைகளிலும் சாதாரண மக்களின் வாழ்வியல் உபைத்துல்லாஹ்வினால் எடுத்துக் காட்டப்படுகிறது. தான் வாழும் பிரதேசம் பற்றிய அவருடைய ஆழமான அறிவு விதந்துரைக்கத்தக்கது.

Monday, January 13, 2020

கவிஞன் எப்படி இந்தக் காலத்தில்நிலா பார்ப்பான்?


கவிஞர் சோலைக்கிளி 

இந்தப்பிரதேசத்தின் முக்கியமான படைப்பாளி ஒருவரின் நிகழ்வில் சிறப்புரையாற்றுவதையிட்டுமகிழ்ச்சியடைகிறேன்.

சிறப்புரையாற்றுவது சந்தோசமான ஒரு விடயம்தான். வெளியீட்டுரை, விமர்சன உரை, நன்றி உரை, வரவேற்புரை, போன்று ஓர் எல்லைக்குள் நின்று பேசத்தேவையில்லை. காற்றுமாதிரி அங்கும் இங்கும் அலைந்து பூக்களைப் பொறுக்கிக் குவிக்க வேண்டிய ஒன்றுதான் சிறப்புரை. சிறப்புரை ஆற்றுகின்றவனும், அந்த உரையை நிகழ்த்தும்போது ஆனந்தப்படுவான். நான் ஆனந்தப்படவில்லை! இது ஆனந்தப்படுகின்ற ஒருநேரமில்லை.

விடிந்தால் என்ன நடக்குமோ என்று எழும்புகின்றோம். விஷக்காற்று வீசி நமது ஈரல்குலைகள் அழுகிப்போய் இருக்கின்றன. நமக்கு உள்ளிருக்கும் குயில் இப்போது பாடுவதை நிறுத்தியிருக்கிறது. நமது மனதின் புல்வெளி கருகிப்போனது. எப்படி சிறப்புறையாற்றலாம்? சிரித்த முகத்தோடுஎப்படி சபையில் பேசலாம்? எப்படி ஆனந்தம் அடையலாம்?

என் அன்புக்குரியவர்களே! அஸ்ரப் சிஹாப்தீன் முக்கியமான ஒரு படைப்பாளி. கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஒலிபரப்பு, ஒளிபரப்பு,  நிகழ்ச்சித் தயாரிப்பு என்று பல பக்கங்களைக் கொண்டவர். பல பக்கங்களைக் கொண்ட புத்தகத்தைப் படிப்பதற்கு நீண்ட காலம் எடுப்பதைப் போல, பல பக்கங்களைக் கொண்ட ஒரு மனிதனைப் பற்றிப் பேசுவதற்கும்: அவகாசமும் ஆறுதலான சூழலும் அச்சமில்லாத நிலமையும்  நமக்கு வாய்க்க வேண்டும். இன்று இவைகள் நம்மத்தியில் உள்ளனவா? வெள்ளைக் காகிதத்தைக் கசக்கி எறிந்ததைப் போல விஷக்காற்று நம்மை கசக்கி எறிந்து விட்டதல்லவா?. நாம் குப்பையில் உருளுகின்ற கடதாசிகளைப் போல ஆகிவிட்டோம். நம்மை ஏறி மிதித்துக் கொண்டு கால்கள் நடக்கின்றன. கவிஞன் எப்படி இந்தக்  காலத்தில்நிலா பார்ப்பான்?. அழுகிய தோடம் பழம் போல நிலவு கண்ணீர் வடிக்கிறது. வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதே! நான் எப்படி இங்கு சிறப்புரையாற்ற முடியும்? ஆனந்தப்பட முடியும்?

நான் மனமிழந்து போன மனிதனாக இருக்கிறேன். என் அன்றாட வாழ்க்கை கெட்டுவிட்டது. விடிந்தால் வாசலுக்கு வந்து விரிந்திருக்கும் மல்லிகைப் பூவை ரசித்தநான், இப்போது வெயிலேறிய பிறகுதான் வாசலுக்கு வருகிறேன். எதிலும் பிடிப்பற்றுப் போன கூதல் பிடித்த பூனையைப் போல வாசலை முகர்கிறேன். காலையில் மனைவி தரும் தேநீரின் ஆவிபறக்கும் போது இரவு ஏதோ ஒன்று பற்றி எரிந்திருக்கிறது என்ற எண்ணம்தான் வருகிறது. ஒருகிழவனைப் போல மனம் சதாவும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் சுவை குன்றிப் போன ஒரு காலமாக இது இருக்கிறது. பத்திரிக்கைகளைப் பிரித்தால் அனேகமாக எல்லாம் அபத்தமான,அச்சம் தரும் செய்திகளாக இருக்கின்றன. யாருடன் யார் கம்பி நீட்டினான் என்ற இனிப்பானசெய்திகளைப் பார்த்து மகிழ்ந்த எனக்கு, இந்தச் செய்திகளில் சுவை இல்லை. எந்தமணமகனுக்கு எந்த மணமகள் பொருத்தம் என்று பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்ற பகுதியைப் பார்த்து கணித்து மகிழ்ந்த எனக்கு, இப்போது வேலை இல்லை. யாரும் இப்போதுகம்பி நீட்டுவதில்லை. அதைப் பிரசுரிக்க பத்திரிகைகளில் இடமும் இல்லை. எப்படி நான் சிறப்புரையாற்றுவது? மேடையில் ஒருகுருவியாக நான் எப்படிப் பறப்பது?

 இதற்குள் நாங்கள் எழுதுவதே ஒரு போராட்டமாக இருக்கிறது. அச்சத்துள் வாழ்ந்து அச்சத்தையே சாப்பிடுகிறோம். அச்சத்தால் ஆடைகட்டுகிறோம். பேனைக்குப் போராட்டம் பிடிக்கும். அதனால் அது சோரவில்லை. நாம் தான் சோர்ந்து  விட்டோம். அஸ்ரப் சிகாப்தீன் துணிச்சலான ஒருபேனைக்காரன். இந்தச் சூழலிலும் அவர்  நிமிர்ந்து நிற்பவர். வாயால் கதையளந்து பெரியஎழுத்தாளனாக முயற்சிக்காதவர். எழுத்தோடு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அவருடைய மண்ணில் அவருடைய இரண்டு புத்தகங்கள் இன்று வெளிவருகின்றன. சொந்த மண் எல்லோருக்கும் சுவையானது. அதில் ஒட்டும் கொசுக்கள்தான் நாங்கள் எப்போதும். இதில் என்னை சிறப்புரையாற்றக் கேட்டிருக்கிறார்கள். எப்படி சிறப்புரையாற்றுவது? நான் தண்ணீராக ஓடுவது? இப்போது முடியுமா?

நாம் எப்படித்தான் எழுந்து நின்றாலும், உன்னிப் பறக்கும் சிறகுகள் சோர்ந்துவிட்டனவே!. நாம் எப்படித்தான் நம்மை தயார் செய்து எடுத்தாலும் நாமாக  நடக்கமுடியாமல் இருக்கிறதே! நமது சோற்றுப் பாத்திரங்களில் காகங்கள் குந்திக் கழிக்கின்றனவே! நமது விளை நிலங்களில் எருதுகள் படுத்து பயிர் செய்ய விடாமல் அழிச்சாட்டியம் செய்கின்றனவே! பன்றி வயற்காரனை வெட்டிவிட்டுப் போகிறது. இரவுகளில் நான் பாடிவைத்துவிட்டுப் படுத்த கவிதையைக் காலையில் தேடினால் காணவில்லை. அது களவு போய் இருக்கிறது.  நண்பர்களின் முகங்களில் சிரிப்புகள் போனதைப் போல, என் மேசை வாடிக்கிடக்கிறது. புன்னகைகள் ஊரில் ஒறுத்துப்போய் விட்டன. பதர்கள் உசும்புவதைப்போல மக்கள் உசும்பித் திரிகின்றார்கள். நெல் மணிகள் குறைந்துவட்டன. வயல் செய்தவன் வெறுங்கையோடு வீடு வருகிறான். கவிஞனைப் போல! 'கலவெட்டியில்' பிச்சை கொடுக்கவும் என்னிடம் மகிழ்ச்சி இல்லை. நான் மகிழ்ச்சிக்கு பிச்சை எடுக்கின்ற ஒரு காலம் வந்துவிட்டது. எப்படி நான் சிறப்புரையாற்றுவது? என் கவிஞனை விட்டுவிட்டு நான் தன்னந்தனியே சிறப்புரையாற்ற முடியுமா? அவன் இல்லாமல் எனக்கு ஒரு வாழ்வா?

 அவன்தானே எனக்கு குதிரை. அவனில்தானே எனது பயணமெல்லாம். எனது கவிஞன் காலக் கொடுமையினால் ஆடிப்போய் சின்னப் சின்னப் பிள்ளையைப் போல யோசனையுடன் நகம் கடித்துக் கொண்டிருக்கிறான். துப்பு துப்பு என்று தலையில் அடித்தாலும், துப்புறானில்லையே! அவனை எழுப்புவது சிரமமாக இருக்கிறது.

சிறப்புரை என்றால், சொல்லாத பல செய்திகளை அது சொல்ல வேண்டும். கேட்டிருப்போர்  மெய்சிலிர்க்க வேண்டும். சிறப்புரை என்றால் அதில் ஒரு கவர்ச்சி, அதில் ஒரு இனிமை, அதில் ஒரு உண்மை, அதில் ஒரு ஆறு ஓடவேண்டும். சிறப்புரை என்று சொல்லிக் கொண்டு, அதில் ஒரு ஓணானாவது ஓடாமல் உரையாற்ற எனக்குவிருப்பமில்லை.

அஸ்ரப் சிகாப்தீனும் நானும் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக தலைமுடி வெட்டியவர்கள் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர் எழுத வந்த காலத்தில்தான்  நானும் எழுத வந்தேன். அவர் பேனை வாங்கிய நேரத்தில் தான் நானும் பேனை வாங்கினேன். கடதாசியும் வாங்கினேன். நானும், அவரும் என்ற இந்த இரண்டு மீன்பிடிக்காரனுக்கும் அவரவருக்கென்று தனித்துவமான வள்ளங்களும் வலைகளும் இருக்கின்றன. இது எழுத்தாளன் என்ற மீன்பிடிக் காரனுக்குமுக்கியமானது. அவர் மீன் பிடிக்கும் முறையும் வேறு வேறானது. இதனால் இவர் இந்தக் கடற்கரையில் இப்போதும் தனித் தன்மையோடும் இருக்கிறவர். எனக்கு இந்தத் 'தண்டையல்' காலம் கடந்துதான் பழக்கமானார். சோலைக்கிளி என்ற தண்டையலும், அஸ்ரப் சிகாப்தீன்  என்ற தண்டையலும் நாட்பட்டு உறவாகிய 'செம்படவர்கள்.
'
எனது மீன்பிடியில் அவர் எந்த இடத்திலும் குறுக்கு வலைபோடவில்லை. என் வலையை வெட்டவில்லை. சிலர்  செம்படவர்களாக மீன்பிடிக்க வந்து தங்கள் 'சிறுவால்களை' இழந்ததுதான் மிச்சம். அறுநாக் கொடியும் அறுந்து போனார்கள். அவர்களை அடையாளப் படுத்தும் அளவுக்கு அவர்களுக்கென்று ஒரு தோணி இல்லை. ஒரு வலை இல்லை. கடல் அவர்களை ஏற்கவில்லை. ஓட்டைவலையில் எப்படி மீன் பிடிப்பது? நிர்வாணம் கடலுக்குப் பிடிக்காது. தன்னில் குளிக்க வந்தசிறுவர்களை விரட்டுவதைப் போல கடல் அவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறது.

எனது இந்த உரை ஒரு சிறப்புரையாக அமையாது விட்டாலும், ஒரு சின்னக் காற்று மாதிரி இந்தச்சபையின் மனதைத் தடவும் என்று நினைக்கின்றேன். உங்கள் அகத்துக்குள் நுளைந்து கிளுகிழனுப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நகத்துக்குள் நுளைந்து ஊத்தை எடுக்கும் என்று கருதுகின்றேன். அனேகமாக எனது உரைகளை சபையோர் காதுகளுக்குள் வெந்நீர் ஊற்றுபவையாக இருக்காமல் பார்த்துக்கொள்வது எனது பழக்கம். நான் போன பல கூட்டங்களில் சிலர் ஊற்றிய வெந்நீரால்தான் எனதுகாது பொசுங்கியது. அந்த அனுபவம் எனக்குப் பேசுகிறது.

இப்போது நான் அந்தரத்தில்இருக்கிறேன். எனது எதிரிகள் ஏசும் போது சிரிக்கிறேன். அது என்னவென்று விளங்காமல், விளங்காமல் இருப்பது வாழ்க்கைக்கு நல்லதுதான். நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக, நல்ல மனிதனாக பெயர் வாங்கலாம் விளங்காமல் இருந்தால்தான். சமுகத்தில் உயர்ந்தும் போகலாம். இந்தச்'செவிடன்'எப்படி சிறப்புரையாற்றுவது?

நீங்கள் கைதட்டுவதே எனக்குக் கேட்கவில்லை. இலக்கியக் கூட்டங்களுக்குப் போய் போய் எனது கேட்கும் திறனை இழந்து வருகிறேன். அதுதான் நான் எந்தக்கூட்டத்திற்கு யார் பேசுகிறார் என்று பார்த்துப் போவது. அண்மையிலும் ஒரு நாவலாசிரியர் என்னை அழைத்தார். நான் போகவில்லை. அங்கு முழங்க இருந்த பீரங்கிகளைப் பார்த்துப் பயந்துவிட்டேன். யுத்தங்களுக்குப் பாவிக்கும் தளபாடங்கள்! நான் மலர் கொய்பவன்தான். மலை உடைப்பவனல்ல. சிலர் மலை உடைக்கிறார்களே கூட்டங்களில்இ ஏன்? மனிதன் இப்படியான நிகழ்வுகளுக்கு வரக்கூடாதென்றா?

இங்கு வந்திருக்கும் உங்களைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஒரு பூந்தோட்டத்தைப் பார்ப்பது போன்றே இருக்கிறது. மகிழ்ச்சி எல்லோர் முகங்களிலும் தெரிகிறது. இது என்னால் உண்டான மகிழ்ச்சி என்று நான் சொல்லவில்லை. உங்கள் அஸ்ரப் சிகாப்தீன் உண்டாக்கிய மகிழ்ச்சியாகவே வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தாளனால் ஊருக்கு மகிழ்சிசி, ஊரால் எழுத்தாளனுக்கு மகிழ்சிசி என்ற நிலை கண்டு நானும் மகிழ்கிறேன். 'பசுமை'இலக்கிய வட்டத்தையும் பாராட்டுகிறேன்.

 இனிய சபையோர்களே! நேரம் போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் வால் எரிந்து அலறிக் கொண்டிருக்கிறதல்லவா? இவ்வளவு தூரம் இருந்து வந்து, உங்கள் முன் ஒரு சிறப்புரையாற்றாமல் போவது எனக்கும் கவலைதான். முதல் முதலாக நான் கொடுத்த காதல் கடிதத்தை அவள் கிழித்ததைப்போல.
நிலா வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரவுக்குள் சிறு பூச்சியைப் போலஊர்ந்து ஊர்ந்தாவது நான் ஊர் போய்ச் சேரவேண்டும். என் பூச்சி புழுக்களைப் பார்க்க வேண்டும். நான் போகும் போது ஊர் இருக்குமோ தெரியாது! எவன் வெட்டிச் சாய்த்து அதைத் தோளில் சுமந்து போகிறானோ! நான் அறியமாட்டேன்.! போகும் போது வழிகாட்டநிலாவையும் கூட்டிக்கொண்டுதான் போகவேண்டும். பகலிலும் இருட்டுப்பட்ட ஊராகிவிட்டதே நமதுஊர்கள்!  அதற்குள் ஒரு சிறப்புரையை ஆற்றிவிடலாமென்றால் முடியாமல்தான் இருக்கிறது. கோழிதான் முக்கி முக்கி முட்டையிடுகிறது. பேச்சாளன் முக்கி முக்கி உரையாற்றலாமா? அது நதி போல ஓடிவரவேண்டுமல்லவா! மழைபோல பெய்து சபையோர் குடைபிடிக்க வைக்கவேண்டும் அல்லவா!

பேச்சு கட்டிப்போனது. அதற்கான காற்று இப்போது இல்லை. மணக்கின்ற காற்றில்தான் மனம் குளிர்ந்து, வார்த்தைகள் துள்ளுகின்றன. காற்றுப் பிழைத்தால் வார்த்தைகளும் சமாதியாகிவிடும். நான் வார்த்தைகளின் எலும்புக் கூடுகளைவைத்துக் கொண்டு எப்படி இங்பு சிறப்புரையாற்றுவேன்? நீங்கள் என்னில் குறை நினைக்கக்கூடாது. நாம் உறவுக்காரர்கள்! அப்படி எடுத்ததற்கெல்லாம் என்னில் குறை நினைக்க நீங்கள் எனக்கு சீதனம் தந்து பெண்னும் தந்த மாமனும் இல்லையே!.

அன்புள்ள சபையோர்களே! நான் உங்களிடம் வந்து கடன் பட்டுக்கொண்டு செல்கின்றேன். காலத்தால் பால்ஒழுகி, நான் நானாகும் போது உங்களுக்கான எனது சிறப்புரையை நிச்சயம் தருவேன். ஒரு புத்தகத்தை படித்து விட்டுத் தருகிறேன் என்று வாங்கினாலும், தராதவன்தான் எழுத்தாளன். இவன் பொய் சொல்லுகிறான் என்று நினைக்க வேண்டாம். நான் அப்படியல்ல! எனது சோற்றுக்குள் தலை முடியையும் பொறுக்கி எடுத்துஇ இது யாருடையது என்று வினவி உரியவரிடம் ஒப்படைப்பவன். எனது சிறப்புரைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கலாம். காலமும் சரிவரத்தான் போகிறது.

இந்த உலகத்தில் எதுதான் நிரந்தரமாக இருந்தது? கண் இருந்த இடத்தில் மூக்கும், மூக்கு இருந்த இடத்தில் கண்ணுமா, எப்போதும் மனிதன் வாழமாட்டான். அவை உரிய உரிய இடங்களுக்கு வந்துதான் ஆகவேண்டும். எனது கண்ணும் மூக்கும் உரிய இடங்களுக்கு வந்தவுடன் எனது சிறப்புரையும் வரும். ஒரு பறவையாகவேனும் வந்து நின்றுதான் உங்களின் வாசலில் பேசுவேன். காலம்  புரளக்கூடியது. அதை நமது பெருமூச்சுகள் புரட்டிவிடும். நமது சூரியோதயங்களை எவரும் தொடர்ந்து தடுத்துக் கொள்ள முடியாது. இறைவன் எல்லோருக்கும் நீதியானவன். இந்தநம்பிக்கையை நாம் விட்டு விடக்கூடாது. இந்தச் சிறப்புரையை முடிக்கிறேன்.
   
(04.09.2019ல் ஓட்டமாவடியில் நடைபெற்ற இரு நூல்களின் வெளியீட்டு விழாவில் ஆற்றப்பட்ட சிறப்புரை - எழுத்துத் தொகுப்பு - எஸ்எம். முர்ஷித், தலைவர், பசுமை கலை இலக்கிய வட்டம் - வாழைச்சேனை)