என் மனக் கணக்கு
சுதாராஜ் என்ற படைப்பாளி பற்றியோ அவரது சிறுகதைகள் பற்றியோ பத்து நிமிடத்துக்குள் சொல்லி முடிப்பது என்பது தாமரைக் குளத்து நீரைத் தண்ணீர்ச் சொம்பில் தருவதற்குச் சமமாகும்.
இலங்கையில் தமிழில் சிறுகதை எழுதுவோர் தொகை திடீரென அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. வெகுஜனப் பத்திரிகைகளுக்கு ஒரு சிறு கதையை எழுதி அனுப்பினால் அது பிரசுரம் காண ஆகக் குறைந்தது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. வெகுஜனப் பத்திரிகைகளின் நோக்கம் இலக்கியம் வளர்ப்பதல்ல. இலக்கியத்தையும் ஓர் அம்சமாக அவை இணைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பிரதான நோக்கம் வியாபாரம் என்பதால் தெரிவுகளைக் கவனத்தோடு செய்வதாகச் சொல்ல முடியவில்லை. அதாவது அதி சிறந்தவற்றை மட்டும் பிரசுரிப்பதில்லை. சாதாரண கதைகளும் இடம்பெறுகின்றன. இந்தச் செயற்பாடு பலரை வளர்த்து விட்ட போதும் பத்திரிகையில் கதை பிரசுரமாகிவிட்டால் தாங்கள் ஒரு ‘பிரபல’ நிலையை எய்தி விட்டதாகச் சிலர் மயங்கிக் கிடக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தமிழில் நிறையக் குறைப் பிரசவங்களும் குப்பைகளும் நிறைய ஏதுவாகி விடுகிறது. எவ்வாறாக இருப்பினும் வெகுஜனப் பத்திரிகைகளின் இலக்கியப் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.