01. வெற்றி பெறக் கூடிய மொழிபெயர்ப்பு என்பது குறித்து உங்களின் அபிப்பிராயம்?
இது வாசகர்களுக்கு ரசனையை ஏற்படுத்தக்கூடியது, புதிய உத்திகள் கையாளப்பட்டது, நமது வாசகர்கள் அறியாத, அறியப்பட வேண்டியது என்று ஓர் நல்ல வாசகனான எழுத்தாளன் தீர்மானித்து மொழிபெயர்க்கும் இலக்கியம் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும். இது தவிர எழுதப்பட்ட மொழியில் பிரபல்யம் பெற்ற படைப்புக்களும் பிரபல்யமான படைப்பாளிகளின் எழுத்துக்களும் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகம்.
02. மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஒருவராக நீங்கள் இருக்கின்றீர்கள் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் பக்கம் கவனம் திரும்பிய திருப்பம் பற்றி?
நான் திட்டமிட்டு மொழிபெயர்ப்புச் செயற்பாட்டில் இறங்கவில்லை. 'ஒரு குடம் கண்ணீர்' நூலுக்கான விடயதானங்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது மஹ்மூது சயீத், கஸ்ஸான் கனபானி இருவரும் இடையில் வந்தார்கள். அவர்களது கதைகள் என்னை ஆட்கொண்டது மட்டுமன்றி என்னை அதிசயப்படுத்தவும் செய்தன. 'ஒரு குடம் கண்ணீர்' தொகுக்கப்பட்ட பின்னர் இவர்கள் இருவரையும் கொண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த அறபுக் கதைகளைத் தேடத் தொடங்கினேன்.
முதன் முதலாக நான் மொழிபெயர்த்த கதை 'புகையிரதம்' என்ற ஈராக்கிய எழுத்தாளரான மஹ்மூது சயீத் அவர்களது கதை. அது தமிழகத்தில் 'சமநிலைச் சமுதாயம்' இதழில் வெளியாகிப் பெரும் பாராட்டைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவரின் நான்கு கதைகளை மொழிபெயர்த்தேன். அவரது இரண்டு கதைகள் 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' அறபுக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம்பெற்றது. இது பற்றி மஹ்மூத் சயீதுக்கு அறிவித்தேன். அவர் மற்றொரு கதையை எனக்கு அனுப்பியிருந்தார். அதுதான் 'பட்டாம்பூச்சிக் கனவுகள்' நூலில் இடம்பெற்றுள்ள 'பச்சோந்திக் குடியிருப்பு.' என்னைப் பொறுத்த வரை அவர் ஓர் அற்புதமான சிறுகதையாளர்.
03. தமிழ்ச் சூழலில் குறிப்பாக நம் நாட்டில் மொழிபெயர்ப்பு இலக்கியம் எத்தகைய இடத்தில் இருக்கின்றது?
அது பற்றிய கணிப்பீடு என்னிடம் இல்லை. ஆயினும் ஓரளவு ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கிறது. தமிழகத்துடன் ஒப்பிடும் போது அல்லது நம் படைப்பாளிகள் தொகையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. திக்குவல்லை கமால் அவர்கள் தொடர்ந்து மொழிபெயர்ப்புக்களில் ஈடுபட்டு வருகிறார். இம்முறை தேசிய சாஹித்திய விருதுக்கு இறுதிச் சுற்றுக்கு வந்த மற்றொரு நூல் சிங்களச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு. பட்டி என்ற தலைப்பில் மாவனல்ல மன்சூர் மொழிபெயர்த்திருந்தார்.
எவ்வாறிருந்த போதும் மொழிபெயர்ப்புக்கள் குறித்து நமது இலக்கிச் சூழலில் பெரிதாகப் பேசப்படுவதில்லை. அதற்குக் காரணம் அதில் குறிப்பிட்ட அளவுக்காவது நமது படைப்பாளிகள் ஈடுபடாதிருப்பதுதான்!
இன்னொரு விடயத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். நூல் வெளியிடப்பட்ட பின்னர் ஒரு பிரதியை நண்பர் உமா வரதராஜனுக்கு அனுப்பியிருந்தேன். எனது முகநூலில் பிரதியைப் பாராட்டி ஒரு குறிப்பிட்டிருந்ததுடன் ஒரு விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார். இந்த நூல் இலங்கைக்கு வெளியில வந்திருந்தால் நம்மவர்கள் அதைக் கொண்டாடியிருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்ததும் உங்கள் கேள்விக்கான விடைக்குப் பொருத்தமானது.
04. பொதுவாக மொழி பெயர்ப்புப் பிரதிகள் வாசிப்பு ரசனையை ஏற்படுத்துவது குறைவு. உங்கள் பிரதிகள் அத்தகைய நிலையிலிருந்து வாசகனுக்கு விடுதலையளிக்கின்றது. உங்கள் மொழி பெயர்ப்பின் சூட்சுமம் எங்கே இருக்கின்றது?
என்னிடம் எந்தச் சூட்சுமமும் கிடையாது. நான் நீண்ட காலம் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் செய்தியறிவிப்பாளனாகப் பணி செய்தவன். வானொலியில் பாலேந்திரா என்ற ஒரு செய்தியாசிரியர் இருந்தார். அவர் ஏனையவர்களைப் போல் சொல்லுக்குச் சொல் வசனத்துக்கு வசனம் மொழிபெயர்த்துச் செய்தியைத் தயார் செய்ய மாட்டார். முதலில் செய்தியை அவர் உள்வாங்கிக் கொண்டு தனது தமிழில் அதை வெளிப்படுத்துவார்.
இதே உத்தியைத்தான் நானும் கடைப்பிடிக்கிறேன். முதலில் கதையைப் படித்து அதன் ஆத்மாவைப் புரிந்து கொள்கிறேன். பின்னர் முடிந்த அளவு எனது மொழியில் அது வெளிப்படுத்தும் உணர்வைக் கொண்டு வருகிறேன். அதே வேளை குறித்த படைப்பாளியை விட அதிகப் பிரசங்கித் தனம் செய்யவோ அல்லது அவற்றில் குறைபாடு செய்யவோ நான் முனைவதில்லை. கதையில் எந்த இடத்தில் என்ன உணர்வு இருக்கிறதோ அதை எனது மொழியில் எனது வாசகனை ஈர்க்கும் வகையில் சொல்லி விடுகிறேன்.
05. கவிதை மொழி பெயர்ப்பு, சிறுகதை மொழிபெயர்ப்பு மற்றும் இன்னபிற... ஒன்றைப் போல ஒன்றைச் செய்ய முடியாது ஆனால் நீங்கள் எல்லாத்துறைகளிலும் வெற்றிகரமான பயணம் செய்கின்றீர்கள் அதுகுறித்து?
நான் வெற்றிகரமாகப் பயணம் செய்கிறேனா இல்லையா என்று என்னை நான் ஆய்வுக்குட்படுத்தியது கிடையாது. என்னளவில் எனது பணியை நேர்மையாகவும் கவனமெடுத்தும் அவதானமாகவும் செய்து வருகிறேன். எனது பயணம் என்னளவில் திருப்தியளிக்கிறது. எனது எழுத்து எனக்குத் திருப்தியளித்தால்தான் மற்றவர்களை ஓரளவாவது கவர முடியும். எனது வெற்றியை நிர்ணயம் செய்பவர்கள் வாசகர்கள்தாம். அதிலும் எனக்குத் திருப்தி உண்டு. அதற்காக நான் வெற்றிகரமான எழுத்தாளன் என்று எனக்கே நான் மாலை போட்டுக் கொள்ள முடியாது அல்லவா?
மற்றது கதையைக் கதையாகவும், கவிதையைக் கவிதையாகவும் கட்டுரையைக் கட்டுரையாகவும் பிரித்தறியத் தெரிந்திருக்கத் தெரியவில்லையென்றால் மொழிபெயர்ப்பில் மட்டுமல்ல, எழுதுவதே அநாவசியம்தானே!
06. ஒரு குடம் கண்ணீர் பரவலாக கவனயீர்ப்பைப் பெற்ற பிரதி. விருது என்று வருகின்றபோது அது ஓரவஞ்னையோடு பார்க்கப்பட்டதாகவே எமது அபிப்பிராயம். இது குறித்து நீங்கள் என்ன உணர்கின்றீர்கள்?
'ஒரு குடம் கண்ணீர்' நிச்சயம் தேசிய விருதுக்குரிய நூல்தான். ஆனால் அதற்கு விருது விழாவில் மத்தியஸ்தர்கள் விருது அறிவிக்கப்பட்டு விழாவில் வழங்கப்பட்டது. அதாவது ஒரு சிறப்பு விருது அது. அந்த விழாவுக்கு நான் சென்றிருக்கவில்லை. ஒரு நூலுக்கு விருது வழங்கவும் வேண்டும் - வழங்கவும் முடியாது - அல்லது தவிர்க்கமுடியாத நூல் என்றால் மத்தியஸ்தர்கள் இந்த நூலை விதந்துரைப்பார்கள். அதற்கு 'சிறப்பு விருது' என்று சான்றிதழில் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் துயரம் பாருங்கள். அக்காலப் பிரிவில் அங்கு தமிழ்ப் பிரிவில் கடமை செய்த பெண்மணி அது இறுதித் தேர்வுக்கு வந்ததாகக் குறிப்பிட்டு அச்சான்றிதழில் எழுதியிருந்தார்.
இச்சான்றிதழை மிகத் தாமதித்துப் பெறச் சென்ற சமயம் இதை அறிய வந்தேன். ஆனால் இச்சான்றிதழை மாற்றி எழுதித் தர முடியாதா என்று கேட்ட போது இச்சான்றிதழ் வழங்கப்பட்ட போது இருந்த பணிப்பாளர் வேறு ஒரு நிறுவனத்துக்கு மாறிச் சென்றிருந்தார். பின்னாளில் நடுவராகச் செல்லும் ஒருவரிடம் ஏன் இதற்கு விருது வழங்காமல் விட்டார்கள் என்று கேட்டேன். 'அது அரச பயங்கரவாதத்தையும் பேசுகிறது என்பதற்காகத் தவிர்த்திருக்கலாம்' என்று சொன்னார்.
விழாவில் விருதைப் பெறாத போதும் அது இரண்டாம் பதிப்புக் கண்டு வெற்றி நடைபோடும் நூலாகி விட்டது.
07. அறபுச் சிறுகதைகளை தமிழுக்குக் கொணடுவந்த பெருமை அதிகமாக உங்களையே சாரும். அந்த அனுபவங்களைப் பற்றி?
இக்கேள்விக்கு ஏற்கனவே சற்றுப் பதில் சொல்லியிருக்கிறேன். அறபுக் கதைகளை உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர், ஏபிஎம். இத்ரீஸ் ஆகியோர் உதிரிகளாகச் செய்திருப்பதாக அறிந்துள்ளேன். மேலும் பலரும் செய்திருக்கலாம். ஆனால் ஒரு நூலாக வெளிவந்தது 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்'தான். இந்நூலுக்கும் எனக்கு தேசிய சாஹித்திய விருது கிடைத்தது.
அக்கதைகளை மொழி பெயர்த்தது ஒரு சுகானுபவம் என்றுதான் சொல்வேன்.
08. உங்களின் இந்த முயற்சிக்குப் பின்னால் எம்மால் கண்டுகொள்ள முடியாத ஒரு மாபெரும் உழைப்பும் தேடலும் இருக்குமே...?
ஒலிபரப்பில் நான் இணைந்ததும் பத்து வருடங்கள் எனது இலக்கியப் பயணம் தொடர்பறுந்திருந்தது. மீண்டும் எனது கவிதை நூல் வெளியீட்டுடன் இயங்க ஆரம்பித்தேன். அவ்வப்போது ஆர்வமும் சோர்வுமாகக் கடந்தாலும் இலக்கியத் துறையில் தொடராக இயங்கிக் கொண்டுதானிருக்கிறேன்.
இன்னும் வெளியிடுவதற்கு ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி, கட்டுரைத் தொகுதி ஆகியன தயாராக இருக்கின்றன. ஆனால் புத்தகம் ஒன்றை வெளிக் கொணர்வது ஒரு பிரவசம் போல ஆகிற்று. ஒரு லக்சறி விடயமாக மாறி விட்டது. வாய்ப்பு வரும் போது அவற்றையும் வெளிக் கொண்டு வருவேன்.
09. உங்களைப் பற்றிய வீணான பரப்புரைகளை அலட்டிக்கொள்ளாமல் எழுத்துக்களால் பதில் சொல்லிக் கடந்து போகும் நீங்கள் எதை அலட்டிக் கொ?வீர்கள்...?
எதையும் கண்டு கொள்ளத் தேவையில்லை. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை. ஊரில் ஒரு வழக்கு மொழி உண்டு. 'ஆத்தாட்டி நக்கரைக்கலாமே!' என்று. அதாவது உன்னால் இயலாது என்றால் ஊர்ந்து போ என்று அர்த்தம். எதுவும் செய்ய இயலாதவன் நக்கரைக்கும் வேலையைத்தான் செய்வான். அதைப்பற்றி நமக்கென்ன?
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நாய்கள் குரைக்கும். ஆனால் கரவான் போய்க்கொண்டேயிருக்கும். அது சொறி நாயா, வெறி நாயா என்று பார்த்துக் கொண்டு நின்றால் நமது நோக்கத்தை அடைய முடியாது போய்விடும்.
10. தேசிய சாகித்திய பரிசு தொடர்பில் பல்வேறு அபிப்பிராயமின்மை காலாகாலத்திற்கும் இருந்தே வருகிறது. சிலபல காரணிகள் ஏதோவொரு விதத்தில் செல்வாக்குச் செலுத்தியே வருகி?றன. மாற்று யோசனைகள் ஏதும் பரிந்துரைக்கு உண்டா?
ஒவ்வொரு முறையும் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருதுண்டு. இம்முறையும் நான் எதிர்பார்த்திருந்த சிறந்த எழுத்தாளர் ஒருவருக்கு விருது கிடைக்கவில்லை. ஆனால் அந்த நூலை நான் இன்னும் படிக்கவில்லை. முடிவு எப்படி வந்தாலும் விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.
தமிழில் வருகின்ற புத்தங்களை வைத்துச் சில வேளை விருதுகளைத் தீர்மானிக்கிறார்கள் என்பது எனது அனுமானம். ஒரு முறை அதிகமாக மொழிபெயர்ப்பு நூல்களுக்கு வழங்கப்பட்டன. காரணம் வேறு பிரிவுகளுக்குத் தகுதியான நூல்கள் வந்திருக்கவில்லை.
இதுபற்றி எனது சிபார்சு என்னவெனில் பல்கலைக் கழகம்சார் பேராசிரியர்களை ஐம்பது வீதமும் எழுத்தாளர்களை ஐம்பது வீதமாகவும் கொண்ட நடுவர் குழாம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான்.
(14.09.2016 அன்று தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியான நேர்காணல்
நேர்கண்டவர் : முஸ்தீன்)