Tuesday, November 27, 2012

கடவுளின் விசிறி
ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆட்சியில் இருந்தபோது நடந்த கதை இது!

புஷ்ஷின் மனைவி லோரா மரணமடைந்து மேலுலகம் போனார்.

அங்கு கடவுளின் உதவியாளர் ஒருவர் நின்றிருந்த இடத்தில் மூன்று பெரிய கடிகாரங்கள் இருந்தன.

“இதெல்லாம் என்ன கடிகாரங்கள் மாதிரித் தெரியுது.. இது எதுக்கு?

- லோரா கேட்டார்.

“இவை வாழ்க்கைக் கடிகாரங்கள்... உலகத்தில் வாழுகின்ற எல்லோருக்கும் இங்கே இப்படி ஒரு தனிக் கடிகாரம் இருக்குது... ஒருத்தர் ஒரு பொய் சொன்னால் அதன் கரங்களும் ஒரு முறை அசையும்!”

“ஓஹ் அப்படியா.. இது யாருடைய கடிகாரம்?”

லோரா ஒன்றை நோக்கிக் கை நீட்டிக் கேட்டார்.

“அதுவா.. அது மதர் தெரஸாவுடையது. அது இதுவரை நகரவேயில்லை. அதன் அர்த்தம் என்னவென்றால் அவர் ஒரு போதும் பொய் சொல்லவேயில்லை!”

“அப்படியென்றால் அது யாருடையது...?”

அடுத்த கடிகாரத்தைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்.

“அது அபிரஹாம் லிங்கனுடையது... இரண்டேயிரண்டு முறைதான் அசைந்தது. அதாவது வாழ் நாள் முழு்க்க லிங்கன் இரண்டேயிரண்டு பொய்களை மட்டும்தான் சொல்லியிருக்கிறார்.”

“அப்போ ஜோர்ஜின் (தனது கணவரின்) கடிகாரம் எங்கேயிருக்கு?”

லோராவின் முகத்தை அமைதியாகப் பார்த்து விட்டு உதவியாளர் சொன்னார்-

“அதுவா.. அது கடவுளின் அறைக்குள் இருக்கிறது?”

“ஏன் அப்படி? அதில் என்ன விசேஷம்?”

“கடவுள் அதைத்தானே தனது சீலிங் ஃபேனாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்.”


Friday, November 23, 2012

ஜமீலாக்களும் காஸாக்களும்!சகோதரி மரியம் ஜமீலாவை நினைவு கூர்தலும் காஸாவுக்கான நமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்தலுக்குமான இந்த ஒன்று கூடலில் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி ஒரு சிற்றுரை வழங்க அழைத்தழைக்காக மீள்பார்வை ஊடக மையத்துக்கு எனது அன்பு கனிந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நட்புப் பட்டியலில் உள்ள ஒரு சகோதரர் முகநூலில் ஒக்டோபர் 31ம் திகதி பின்னிரவில் சகோதரி மர்யம் ஜமீலா அவர்களின் வபாத் செய்தியை ‘மர்யம் ஜமீலா காலமானதாக அறியக்கிடைக்கிறது’ என்கிற விதத்தில் ஆங்கிலத்தில் இரண்டு வரிகளில் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தி உண்மையில் என்னுடைய உறவின் இழப்புச் செய்தியை எதிர்கொண்டதுபோல் ஓர் உணர்வை என்னில் ஏற்படுத்திற்று. என்னுள் பழைய நினைவுகள் சுழல ஆரம்பித்தன. முகநூலின் எனது பக்கத்தில் அவருடைய புகைப்படத்துடன் இணைத்து அவருடைய வபாத் செய்தியையும் அவரைப் பற்றிய சிறிய குறிப்பொன்றையும் இட்டேன். பிறகு அச்செய்தி பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

என்னுடைய 16 அல்லது 17 வயதில்தான் நான் சகோதரி மர்யம் ஜமீலாவைப் பற்றி அறிய வந்தேன். அந்த அறிமுகம் ‘அல்ஹஸனாத்’ சஞ்சிகை மூலமாகக் கிடைத்தது என்று நினைக்கிறேன். இன்றைய நவீன வசதிகள் இல்லாத அக்கால கட்டத்தில் ஓர் இளம் யூதப் பெண்மணி இஸ்லாம் நோக்கி அறிவியல் ரீதியாக ஆகர்ஷிக்கப்பட்டு வந்தது போன்ற தகவல்களை என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது ‘அல்ஹஸனாத்’சஞ்சிகைதான். அக்கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய உணர்வையும் அறிவையும் தெளிவையும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கிய பெரும் பணியை - உன்னதமான பணியை அந்தச் சஞ்சிகை செய்து வந்தது.

தஃலீமுல் குர்ஆன், அல்குர்ஆன், ஹதீஸ், அஹ்காமுஷ்ஷாபிஈ, மௌலூது கிதாபுகள், சாந்திமார்க்கம் என்ற பாட நூல் - ஆகியவற்றுடன் இலங்கை முஸ்லிம் பொதுமகனின் இஸ்லாம் வரையறுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் சகோதரி மர்யம் ஜமீலா அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தமையானது முஸ்லிம் பொதுஜனத்துக்கு ஓர் ஆனந்தமான செய்தியாக இருந்தது. படித்தவர்கள், இஸ்லாத்தை மேலும் விஸ்தாரமாக அறிந்து கொள்வதற்கு அத்தகவல்  ஆவலைத் தந்தது. சாதாரண இஸ்லாமியன் தனது மார்க்கத்தையிட்டுப் பெருமை கொள்ளவும் மற்றொருவரோடு உரையாடுகையில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவுமான விடயமாக அது அமைந்திருந்தது.

தொலைத் தூரத் தொடர்புக்கு மாதக் கணக்கில் காத்திருந்த ஒரு காலப்பகுதியில், இஸ்லாமிய தஃவத்தின் வீச்சு வேகமாகச் சென்றடையாத ஒரு காலப்பகுதியில் இஸ்லாத்தின் மகத்துவத்தை அவர் தேடி அடைந்ததும் அவரது வருகையும் தஃவத்தின் பாதையில் ஒரு பாய்ச்சலாக அமைந்தது என்று குறிப்பிடுவதில் தவறு கிடையாது என்று நம்புகிறேன்.

இன்று உலகம் சுருண்டு கைக்குள் வந்து விட்ட நிலையில் தஃவத்தின் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் பலநூறு ஜமீலாக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையைத் தேடியடைந்து, சரியான வழி இதுவே என்றுணர்ந்து வருகின்ற ஜமீலாக்களால் இஸ்லாத்தின் சிறப்பு புதிய எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்ற போது பரம்பரை ஜமீலாக்களால் மர்யம் ஜமீலாக்கள் அவமானப் படுத்தப்படுவதை நாம் கவலையுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தன்னைப் பெற்றோர் கற்க விடவில்லை என்பதற்காக, தான் விரும்பியபடி நடக்க சமூகம் அனுமதிக்கவில்லை என்பதற்காக அல்குர்ஆனையும் நபிகளாரையும் கேள்விக்குட்படுத்தும் ஜமீலாக்கள் சிலரை நாம் பார்க்கிறோம். தனது நியாயமான எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புத் தராத தனது குடும்பத்தையும் தனது உறவுகளையும் பழிவாங்குவதானால் இஸ்லாமிய வழிமுறைகளைக் கேவலப்படுத்துவதே சரியானது என்று பெண்களுக்கு இஸ்லாம் வகுத்துள்ள வழிமுறைகளை அலட்சியப்படுத்தும் ஜமீலாக்களையும் நாம் காண்கிறோம்.

இவ்வாறான அனுபவங்களை நாம் எதிர்நோக்கும் போது சகோதரி மர்யம் ஜமீலா முஸ்லிம் உம்மத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் எத்தகையதாக இருந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்டமையும் மற்றும் அவர் எழுதிய கட்டுரைகள், நூல்கள் யாவும் நினைவு வருகிற போதும் அவருக்காக நமது கைகளை உயர்த்தி இறைஞ்சவே மனம் துடிக்கிறது.

சகோதரி மர்யம் ஜமீலா அவர்களது வபாத்தாகி ஒரு வாரத்துக்குப் பிறகு அவரைப் பற்றிய ஒரு சிறிய தகவலை இணையத்தில் ஒரு சகோதரர் பதிவிட்டிருந்தார்.

எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த இனத்தவராக இருந்தாலும் எந்த நாட்டவராக இருந்தாலும் ஆண்களுக்கென இயல்பான சில குணவியல்புகளும் பெண்களுக்கென சில குணவியல்புகளும் உள்ளன.

பொதுவாக ஓர் ஆணின் மனைவியரிடையே சுமுக உறவு நிலவுவது கிடையாது. இது தமிழில் சக்களத்தி சண்டை என்று பயிலப்பட்டு வருகிறது. பொறாமை, விட்டுக் கொடுக்காமை, நான் முதல் - நீ அடுத்தது என்ற தூரப்படுத்தல், கணவனின் சொத்துக்களையும் வருமானத்தையும் பெறுவதில் ஒவ்வொருவருக்குமிடையில் நிலவும் ஒவ்வாமை போன்ற பல காரணங்களால் ஓர் ஆண்மகனின் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரிடையே கலகமும் பிரச்சினைகளும் ஏற்படுவதை நாம் கண்டு வந்திருக்கிறோம்.

சகோதரி மர்யம் ஜமீலா முகம்மத் யூஸூப்கான் சாஹிபின் இரண்டாவது தாரமாக வாழ்ந்திருந்தார். ஏற்கனவே திருமணம் செய்திருக்காத, தனக்கேற்ற ஓர் இளைஞனைத் திருமணம் செய்வதை விடவும் யூஸூப்கான் சாஹிபின் இரண்டாவது மனைவியாக வாழ்வது தனக்கும் தனது இஸ்லாமிய வாழ்வியலுக்கும் மிகவும் பொருத்தமானதும் சிறந்ததுமான தெரிவாக இருக்கும் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். அப்படியானால் யூஸூப்கான் சாஹிபின் மனைவிக்கும் இவருக்குமிடையிலான உறவு எப்படியிருந்திருக்கும்?

இணையத்தில் சகோதரி மர்யம் ஜமீலாவின் வபாத்துக்குப் பின்னர் வந்த செய்தி அதைத்தான் சொல்கிறது. சுகவீனமுற்றிருந்த போது தனது கடைசி நாட்களில் தான் வபாத் ஆகினால் சகோதரி ஷப்கா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே தன்னை அடக்கம் செய்யுமாறு சகோதரி மர்யம் ஜமீலா சொன்னதாக அந்தச் செய்தி பேசியது. ஷப்கா யாரெனில் யூஸூப்கான் சாஹிபின் முதலாவது மனைவியாவார்.

ஒரே வீட்டின் மாடியில் சகோதரி மர்யம் ஜமீலாவும் பிள்ளைகளும் அவ்வீட்டின் கீழ்த் தளத்தில் சகோதரி ஷப்காவும் பிள்ளைகளுமாக இறுதி வரை மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்ததாகவும் பிள்ளைகளுக்கிடையில் எவ்விதமான வேறுபாடுகளும் இல்லாமல் ஒரே தாயின் பிள்ளைகளைப்போல் வாழ்ந்திருந்ததையும் அந்தத் தகவல் சொன்னது.

தனது கணவரின் முதலாவது மனைவியின் அடக்கஸ்தலத்துக்கு அருகே தன்னுடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்த சகோதரி மர;யம் ஜமீலா எவ்வளவு அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

சகோதரி மர்யம் ஜமீலாவின் அழகிய இந்த முன்மாதிரிதான் இன்றைய எனது சிற்றுரையின் முக்கிய புள்ளியாகவும் இருக்கிறது.

இப்போது நாம் சிந்திக்க வேண்டியதெல்லாம் சகோதரிகள் மர்யம் ஜமீலாவும் ஷப்காவும் கொண்டிருந்த ஒற்றுமையும் உறவும் பற்றியதே.

சகோதரி மர்யம் ஜமீலாவை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் அதே வேளை காஸாவுக்கான நமது ஒருமைப்பாட்டையும் இன்று இந்த நிகழ்வின் மூலம் நாம் வெளிப்படுத்துகின்றோம். இந்த ஒருமைப்பாடானது அமெரிக்காவில் பிறந்து பாக்கிஸ் தானுக்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஒரு கணவரின் இரண்டு மனைவிகளாக வாழ்ந்த இரு சகோதரிகளுக்குமிடையில் நிலவிய இறுகிய பாசத்துக்கொப்பானதே. அதே பாசத்தைப் போன்ற ஒரு ஒரு சகோதர வாஞ்சையுடனும் உடன்பிறப்பு உணர்வுடனும் நாங்கள் எமது சகோதர பூமியான பலஸ்தீனத்தையும் அங்கு வாழ்வுக்காகப் போராடிக் கொண்டி ருக்கும் எங்கள் உறவுகளையும் நினைவு படுத்துகிறோம்.

இந்த நினைவுகூர்தலானது இந்தச் சிறு மண்டபத்துள் நிகழ்ந்த போதும் இது ஆக்கிரமிப்பாளர்களின் அவதானத்துக்குட்படாது என்றோ ஆற்றாமையைக் கொட்டித் தீர்க்கும் நிகழ்வு என்றோ நாம் கருதிவிடக்கூடாது. இந்த நிகழ்வு இங்கே குழுமியிருக்கும் எங்களது கருத்தை வெளிப்படுத்துகைக்கான ஒற்றுமையைக் குறிக்கிறது. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் நலவையும் கஷ்டத்தையும் நாம் ஒன்றிணைந்து உணர்கிறோம் என்பதையும் ஏனையோருக்கும் உணர்த்துகிறோம் என்பதையும் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.  இந்த நிகழ்வு பற்றிய தகவல் செய்திகளிலும் இணையத்திலும் பகிரப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம் உம்மத் குறித்த ஒருமைப்பாட்டுச் செயல்பாடு ஒன்று நடைபெறுவது முஸ்லிம்களுக்கும் தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியாக ஏனையோருக்கும் சென்றடைகிறது. இந்த நிகழ்வு முடிந்த பிறகும் செய்திகள் பத்திரிகைகளிலும் இணையத்திலும் வெளிவரும். ஆசிய பசுபிக் பிராந்திய ஸியோனிஸ வலையமைப்பு இந்தத் தகவலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பலஸ்தீனத்திலிருக்கும் காஸா குறித்து நாம் மிகவும் விசனப்படுகிறோம். எழுதுகிறோம், கூடிப் பேசுகிறோம். அவசியப்பட்டால் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகிறோம். காஸாவின் நிலைகுறித்து இன்றைய காலப் பகுதியில் தினமும் ஆகக் குறைந்தது ஒரு முறையாவது அவதானத்தைச் செலுத்தி ஓரளவு தகவல்களைப் பெறுகிறோம். அவலத்தில் வாழும் காஸாவுக்காக நாம் நமது தொழுகைகளில் பிரார்த்திக்கிறோம். தாங்குவதற்குச் சிரமமான செய்திகளை அங்கிருந்து அறியும் போதெல்லாம் நமது மனசு துடிக்கிறது. நம்மையறியாமல் நாம் இறைவனை இறைஞ்சுகிறோம்.

இன்றைய நிலவரத்தின்படி பலஸ்தீன காஸாவில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

ஆனாலும் தமது சொந்த நிலத்தில் வாழும் உரிமைக்கான போராட்டத்தை, இழந்த நிலத்தைப் பெறுவதற்கான போராட்டத்தை  அம்மக்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள்.


(மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம், சகோ அஷஷெய்க் ரவூப் ஸெய்ன் மற்றும் நான்)

இந்த வேளையில் இன்னும் சில காஸாக்களைப் பற்றி நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

Monday, November 19, 2012

சினிமாப் பயங்கரவாதிகள்முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் “துப்பாக்கி” என்ற சினிமாப் படம் பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்து விடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இணையத் தளங்களிலும் முகநூலிலும் அதன் அதிர்வுகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயிருப்பது அத்திரைப்படம் முஸ்லிம்களை மட்டுமல்லாது நேர் நின்று சிந்திக்கும் முஸ்லிமல்லாத பலரையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

குட்டக் குட்டக் குனிபவனும் முட்டாள் குட்டுபவனும் முட்டாள் என்பது இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை உண்மையாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை நானும் ஒரு பொதுமகன் என்ற அடிப்படையில் எனது பார்வையில் பட்ட படங்களில் விஜயகாந்த், கமல்ஹாஸன், அர்ஜூன் போன்றவர்களின் திரைப்படங்களில்தான் முஸ்லிம்களை தேசத் துரோகிகளாக, வில்லன்களாகச் சித்தரிப்பது நடந்து வந்திருக்கிறது. (ஹிந்திப் படங்களிலும் இந்நிலை உள்ளதாகச் சொல்லுகிறார்கள். எப்போதாவது நல்ல படங்களை யாராவது சொன்னால் பார்ப்பதுண்டு.)

இவர்களில் விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் தமது கதாநாயக அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கு படத்தில் யாரையாவது அடித்தே ஆக வேண்டியிருக்கிறது.அதைத்தவிர வேறு திறமைகளும் அவர்களுக்குக் கிடையாது. அவ்வாறு யாருக்காவது அடிப்பது மாதிரிக் கதை இல்லையென்றால் அவர்களால் ஜொலிக்க முடியாது.எனவே சும்மா ஒருவனை அடிப்பதை விட தேசத்துரோகியை அடிப்பது கவர்ச்சியான இருக்கும். அந்தத் தேசத் துரோகி ஒரு முஸ்லிமாக இருந்தால் இன்னும் சாதகமாக இருக்கும். எனவேதான் தேசத் துரோகிகள் யாவருமே முஸ்லிம்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். காற்றில் கைகால் விசுக்குவதைத் தவிர வேறு எதுவுமே இல்லாத அல்லத எதுவுமே தெரியாத கதாநாயகர்கள் வரிசையில் விஜய் என்ற நபரும் சேர்கிறார்.

பிரிவினைக்குப் பிறகு இந்திய ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட பாக்கிஸ்தான் வெறுப்பு, தன்னோடு சக சகோதரனாக அயல் வீட்டில் வாழும் ஒரு முஸ்லிமையும் எதிரியாகப் பார்க்கப் பழக்கியிருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கமும் அரசியலும் பாக்கிஸ்தான் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை ஏற்படுத்திவிட்டு ஒட்டுமொத்த ஏழை இந்தியனின் - முஸ்லிமல்லாதர்களினதும் உட்பட - சோற்றுப்பானையைக் களவாடிக் கொண்டிருக்கிறது.

இந்த அரசியலின் இன்னொரு வடிவம்தான் இப்படியான சினிமாக்கள். அரிவாள், துப்பாக்கிகளுடன் தேசத் துரோகியைச் சுட்டும் வெட்டியும் துவம் செய்து விட்டுத் தாங்கள் கல்லாக் கட்டுவது. அதாவது ஆளும் வர்க்கம் எதை வைத்துத் தனது பிழைப்பை நடத்துகிறதோ அதே விசயத்தை மற்றொரு வடிவில் சினிமாக்காரர் செய்து கொண்டிருக்கிறார்கள். சக இனத்தானை அகெரவப்படுத்திக் கேவலப்படுத்தி விட்டு அப்படிக் கிடைக்கும் பணத்தில் ரோல் ரோய்ஸ் மற்றும் பென்ஸ் கார்களில் பவனி வருகிறார்கள். தொலைக் காட்சிகளில் உலகத்திலேயே அற்புதமான படைப்பைத் தந்து விட்டது போல பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கதாநாயகர்களது அடுத்த கட்ட நகர்வு எது? அதே பாதையில் முன்னேறி அரசியலுக்குள் நுழைந்து விடுகிறார்கள். ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் தானைத் தலைவர்களாக பணம், அதிகாரம் ஆகியவற்றுடனும் கைச்சொடுக்கில் எல்லாவற்றையும் பெற்றுவிடத் துடிக்கிறார்கள்.

இப்போது யோசித்துப் பாருங்கள். சக அயல் வீட்டு முஸ்லிமை அவமானப்படுத்தி விட்டு இப்படியான ஒரு வாழ்க்கை வாழ்வது கேவலமானது இல்லையா? ஒரு சமூகத்தைக் கூனிக் குறுகச் செய்து, வஞ்சகம் இழைத்துப் பெறும் பணத்தில்தான் இவர்கள் சாப்பிடுகிறார்கள், இவர்களது குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள், தமது மனைவியருக்கு ஆடைகள், உடுதுணிகள் வாங்கிக் கொடுக்கிறார்கள். தமது சுகபோக வாழ்வை மேற்கொள்கிறார்கள்.

Saturday, November 10, 2012

முடிந்த யுத்தமும் முடியாத கண்ணீரும்!


வடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்ட 22வது ஆண்டு நிறைவு

“தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவாகள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி,அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான  பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,”டி.பி.எஸ்.ஜெயராஜ்
ஸ்ரீலங்காவில் தமிழ் - முஸ்லிம் உறவுகளின் சரித்திரத்தில் இடம்பெற்ற கொடிய மனிதாபிமானமற்ற அத்தியாயத்தின் 22வது ஆண்டு நிறைவை வரலாறு கடந்த வாரம் பதிவு செய்தது.ஒக்டோபர் 1990 ல் தமிழீழ விடுதலைப் புலிகள்( எல்.ரீ.ரீ.ஈ ), தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை வட மாகாணத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி இனசுத்திகரிப்பு செய்த அட்டூழியமான நடவடிக்கை நடந்தேறியது. சில குறிப்பிட்ட நாட்களுக்குள் முஸ்லிம்கள் தாங்கள் பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த தங்கள் தாயகத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்.
1990 ல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு மனிதாபிமானமற்ற துயரம்தோய்ந்த பேரழிவாகும். துப்பாக்கி முனையில் ஒரு மக்களை, அவர்களின் பணம் மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டு,அவர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வேரோடு பிடுங்கி எறிந்தசெயல் வெறுக்கத் தக்கதும் மன்னிக்க முடியாததுமாகும். இந்த எழுத்தாளர் தனது முந்தைய எழுத்துக்களில் இந்த ஒட்டுமொத்த வெளியேற்றத்தையும் மற்றும் புலிகளின் சித்தாந்தத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டு அதேவேளை தங்களை மனித உரிமைகளின் காலர்கள் என இப்போது காட்ட முயலும் தமிழ் சமூக அங்கத்தவர்களின் அவமானகரமான செயலைப்பற்றி ஓரளவு  கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒக்ரோபர் 15ல் சாவகச்சேரியில் உள்ளவர்களில் ஆரம்பித்து ஒக்ரோபர் 30ல் யாழ்ப்பாண நகரத்திலுள்ளவர்களின் வெளியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது. வடக்கு பெருநிலப்பரப்பில் முஸ்லிம்களை வெளியேற்றும் நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு ஆரம்பித்து குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களை சுத்தப்படுத்திய சில நாட்களின் பின்னர் நிறைவெய்தியது.
வடக்கு முஸ்லிம்களில் பெருந்தொகையானவர்கள் அப்போது மன்னாரில் வசித்து வந்தார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு புறமே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்களும்கூட வெளியேற்றப்பட்டார்கள். வவுனியால் வாழ்ந்த முஸ்லிம்கள் அதிர்ஸ்டசாலிகளாக இருந்தார்கள் ஏனெனில் அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் பெரும்பகுதி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தன. எல்.ரீ.ரீ.ஈ யினரால் வடக்கு பெரு நிலப்பரப்பிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள். குடாநாட்டிலிலுள்ளவர்களையும் சேர்த்து 1990 ல் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 75,000 க்கு மேலிருக்கும்.
வடபகுதி முஸ்லிம்கள் அவர்களது சக தமிழர்களுக்குச் சமமான பாதிப்பை அப்போது நடைபெற்ற யுத்தத்தில் அனுபவித்தார்கள். அவர்களும் தமிழ் குடிமக்களைப்போல திவிரமான ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது காலத்துக்கு காலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியெறவேண்டியிருந்தது. அவர்கள் எப்போதும் சில நாட்கள் கழித்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால் கிழக்கு மாகாண நிலமை வித்தியாசமான ஒரு திருப்பத்தை அடைந்திருந்தது.
தமிழ் - முஸ்லிம் பகை உணர்ச்சி கிழக்கில் அதிகரித்து வந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் சில முஸ்லிம் அங்கத்தவர்கள் அதை கைவிடவும்,இராணுவத் தளபதி கருணா மற்றும் அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் என்பவர்களின் கீழிருந்த வேறு சிலர் எதிரியின் பாசறைக்கு செல்லவும் தொடங்கினார்கள். எல்.ரீ.ரீ.ஈ யிலிருந்த மற்றும் சில முஸ்லிம் அங்கத்தவர்கள் அதன் தலைமையினால் கொல்லப்பட்டார்கள். ஒரு முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு எல்.ரீ.ரீ.ஈக்குள் தலைதூக்கியிருந்தது.
மறுபக்கத்தில் அப்போதிருந்த ஐதேக அரசு மோசமான இந்த உணர்வுகளைப் பயன்படுத்தி காரியம் சாதிக்கத் தொடங்கியது. அநேக முஸ்லிம் சமூக விரோத சக்திகளை உள்ளுர் பாதுகாப்பு காவலர்களாக அரசாங்கம் நியமனம் செய்தது. இந்த பிரிவினர் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தமிழ் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டிவிடத் தொடங்கினார்கள். சில சந்தர்ப்பங்களில் சில தமிழர்களின் கொலைக்கு இந்த முஸ்லிம் உள்ளுர் பாதுகாப்பு காவலர்கள் பொறுப்பாக இருந்துள்ளார்கள். இவர்கள் தலைமை தாங்கிய கும்பல்கள் பல தமிழ் குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களை அழித்து நாசமாக்கின. பாதுகாப்பு படைகளின் ஒரு பிரிவினரால் அவர்களுக்கு மறைமுக ஆதரவு வழங்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக எல்.ரீ.ரீ.ஈ முஸ்லிம் பொதுமக்கள்மீது கொடூரமும் பயங்கரமுமான படுகொலைகளை நடத்தியது. சம்மாந்துறை மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்தி பிராத்தனை செய்து காண்டிருந்த முஸ்லிம்களை கொலை செய்ததும், மற்றும் ஏறாவூரில் உள்ள சதாம் ஹ_சைன் மாதிரிக் கிராமத்தில் பொதுமக்களை படுகொலை செய்ததும் இதற்கான மோசமான உதாரணங்கள்.
தமிழ் - முஸ்லிம் உறவுகள் கிழக்கில் மிகவும் தாழ் நிலையை எட்டியிருந்த போதும்,வடக்கின் நிலைமைகள் அதற்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. அங்கு இரு சமூகத்தினரும் தொடர்ந்தும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதற்கான ஒரு காரணம் ஒரு சிறிய அளவான முஸ்லிம்களால் பெரும்பான்மை தமிழர்களுக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லாததுதான்.
சாவகச்சேரி
கிழக்கில் முறுகல்கள் இடம்பெற்றுவரும் வேளையில் வடக்கில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதை கிழக்கு புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. கிழக்கு அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் தலைமையிலான தூதுக்குழுவொன்று, முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கு பிரபாகரனை இணங்கச் செய்வதற்காக வடக்குக்கு வந்தது. முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று கரிகாலன் வெளிப்படையாகவே வரும்பினார். இந்த வகையான அழுத்தங்கள் புலிகளின் உயர் பீடத்துக்கு வழங்கபட்டுக் கொண்டிருந்தவேளை சாவகச்சேரியில் ஒரு சம்பவம்; நடந்தது.
1990 செப்ரம்பர் 4 ல் எல்.ரீ.ரீ.ஈ யின் உதவியாளர்கள் என்றழைக்கப்படும் ஒரு தமிழ் குழுவினர் சாவகச்சேரி மசூதி அருகில் வைத்து சில முஸ்லிம்களுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். சிலர் மசூதியை தாக்கவும்கூட முயற்சித்தார்கள். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் அதில் தொடர்புபட்டிருந்த தமிழர்கள் சிலரைப் பிடித்து எல்.ரீ.ரீ.ஈயிடம் ஒப்படைத்தனர். புலிகள் அவர்களை விடுதலை செய்ததுடன் தமிழ் பெரும்பான்மையினரை கோபமூட்ட வேண்டாம் என முஸ்லிம் சிறுபான்மையினரை எச்சரிக்கையும் செய்தனர். செப்ரம்பர் 25 ந்திகதி குடாநாட்டை விட்டு வெளியேறுவதற்கு எல்.ரீ.ரீ.ஈ தனக்கு பாஸ் வழங்காததையிட்டு ஒரு முஸ்லிம் யுவா எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் புலி அங்கத்தவர்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் காணாமல் போய்விட்டார்.
சாவகச்சேரியில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நகரிலுள்ள டச்சு வீதியிலேயே வசித்து வந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யினர் முஸ்லிம்களின் உள்ளக வன்முறை சம்பவம் ஒன்றை விசாரிக்க வந்தவேளை அங்கு சில வாள்கள் இருப்பதை கண்டு பிடித்தார்கள். புலிகளின் விளக்கங்களின்படி இது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. முஸ்லிம்களின் வீடுகள் கடைகள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பனவற்றில் எல்.ரீ.ரீ.ஈ தேடுதல் நடத்தி ஒரு முன்னணி முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமான கடையொன்றுக்குள் 75 வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தது. இது ஒரு இரகசிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டது. இந்த விளக்கம் உண்மையானதாக இருந்தாலும்கூட, வெறும் 75 வாட்கள் எல்.ரீ.ரீ.ஈயினரின் துப்பாக்கிகளுக்கு எதிராக ஏதாவது பயன்தருமா?
இந்த வாட்கள் கண்டெடுத்த கடையானது, வியாபாரத்துக்காக அடிக்கடி லாரிகளை கொழும்புக்கு பயணப்படுத்தும் ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டது. அளவுக்கு அதிகமான சித்தப்பிரமை கொண்ட எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவினர் இதில் ஏதோ பெரிய சதி இருப்பதாக சந்தேகம் கொண்டனர். இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு உபகரணங்கள்,அடிக்கடி கொழும்புக்கு பயணம் செய்யும் முஸ்லிம் வியாபாரியை நாச வேலைகளில் ஈடுபடவோ அல்லது ஒற்றனாக பணியாற்றவோ தூண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என உணரப்பட்டது.
எனவே சாவகச்சேரி முஸ்லிம்கள் பிரதானமாக டச்சு வீதியில் வசிப்பவர்கள் 1990 ஒக்ரோபர் 15ல் வெளியேற்றப் பட்டார்கள். ஏறக்குறைய 1000 மக்கள் துப்பாக்கி முனையில் வெளியேறும்படி வற்புறுத்தப் பட்டார்கள். வடமாகணத்தின் தென்பகுதி எல்லையிலுள்ள பட்டினமான வவுனியாவுக்கு அப்பால் செல்லும்படி அவர்களிடம் கூறப்பட்டது. சாவகச்சேரி முஸ்லிம்கள் ஒக்ரோபர் 18ல் வவுனியாவுக்கு வந்தார்கள். ஒருக்கால் சாவகச்சேரி முஸ்லிம்கள் வெளியெறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கிலி தொடர் போன்று அது நீண்டது.
இந்த வெளியேற்றத்தின் சோகம் என்னவென்றால், முஸ்லிம்கள் ஒரு ஆயுதக்குழுவின் கட்டளைக்கு அடிபணிந்து தாங்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருந்த பிரதேசங்களை விட்டு தப்பியோடவேண்டி இருந்ததுதான். அங்கு கோள்வி இருக்கவில்லை, எதிர்ப்புகள் இருக்கவில்லை, அதுதான் எல்.ரீ.ரீ.ஈயின் அதிகாரம் மற்றும் பயங்கரவாதம் என்பது. தவிரவும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும் இருந்தார்கள்.
ஐந்து வருடங்களின் பின்னர் 1995ல் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. பின்னர் 2007 - 2009 காலப்பகுதியில் வடக்கு பெரு நிலப்பரப்பான வன்னியிலிருந்த தமிழர்கள் போர் தீவிரமடைந்ததின் காரணமாக இடத்துக்கு இடம் அலைந்து திரியவேண்டி ஏற்றபட்டது. இறுதியில் அவர்கள் முல்லைத்தீவு கடற்கரையோரமாக இருந்த ஒரு பட்டை போன்ற சிறிய துண்டுப் பகுதிக்குள் கட்டுப்படுத்தப் பட்டார்கள். ஒருவேளை இது செய்த பாவத்தின் கர்ம விதி அல்லது தர்மத்தின் கொள்கை என்றும் சிலர் சொல்லலாம்.
கரிகாலன்
எல்.ரீ.ரீ.ஈ யினால் பின்னர் தரப்பட்ட விளக்கத்தின்படி, ஒக்ரோபர் மாதம் வடக்கில் பிரசன்னமாகியிருந்த கரிகாலனின் கீழ் இயங்கிய கிழக்குப் பகுதி படைப்பிரிவே இந்த ஒட்டுமொத்த வெளியேற்றத்தை மேற்கொள்ளும் முடிவுக்கு பெருமளவில் பொறுப்பாக இருந்தனர் என்று தெரியவந்தது. முக்கியமாக இது கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு ஒருவகையில் எச்சரிக்கையாக வழங்கப்பட்ட பதிலடி என்றே சித்தரிக்கப்பட்டது. இந்த முடிவு மிகைப் படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கான கருத்தை உருவாக்குவதில் மேலும் செல்வாக்கு செலுத்தியது. முஸ்லிம்கள், தமிழ் சமூகத்துக்கு குழிபறிக்கும் முக்கிய ஐந்தாம் படையாளர்களாக பார்க்கப்பட்டது அப்பட்டமான ஒரு இனவாத மனோநிலையாகும். இந்தப் பின்னணியை கருத்தில் கொண்டுதான் வெளியேற்ற நடைமுறை இடம்பெற்றது.

Sunday, November 4, 2012

பூடகப் பேச்சும் புரிதலும்பூடகம் என்பது நமக்கெல்லோருக்கும் பரிச்சயமான ஒரு சொல்.

ஒரு விடயத்தை இன்னொரு வார்த்தையால் சொல்வதை இச்சொல் குறிக்கிறது.

ஒரு விடயத்தை நேரடியாகச் சொல்வதால் ஏற்படும் தாக்கம் பூடகமாக வேறு வார்த்தைகளைப் பயன்படுத்திச் சொல்வதால் ஏற்படுவதில்லை. பூடகமாகச் சொல்வது என்பது ஏறக்குறைய விடயத்தை உணர்த்துவது என்றும் அர்த்தப்படும்.

சுற்றி வளைத்துப் பேசுவது என்று சொல்லப்படுவதும் இந்தப் பூடகப் பேச்சின் ஓரங்கம்தான்.

சிலர் திட்டமிட்டே இவ்வாறு பூடபமாகப் பேசுவதுண்டு. காலதேச வர்த்தமானங்களை அனுசரித்து இவ்வகைப் பேச்சு அமைகிறது.

இயல்பாகவே சில விடயங்களை நாம் வேறு வார்த்தைகள் பயன்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். அமைதியாகவிருந்து நாம் யாரோடு எப்படிப் பேசினோம் என்று சிந்துத்துப் பார்த்தால் இது புரியும்.

இன்னொரு விடயம் இவ்வாறு நாம் பேசுவது சிலவேளை குறித்த நபருக்கு ஏற்படுத்தும் புரிதல் பற்றியது. நாம் பூடகமாகச் சொல்வதைச் சரியாகச் சொல்லவில்லையென்றால் அதனால் வரும் விளைவு தப்பானதாகி விடும். சில வேளைகளில் “இவர் என்னதான் சொல்கிறா?” என்று முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

இன்னொரு வகையில் பூடகப் பேச்சு முடிவை நீங்களே தீர்மானியுங்கள் என்றவாறு அமைந்து விடும். அந்த முடிவு பல்வேறு அர்த்தத்தைக் கொடுப்பதாகவும் இருக்கும்.

இனி விடயத்துக்கு வருவோம்.

ஒரு பிஸ்கற் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்ணை ஒரு நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சி நிருபர் பேட்டி காண்கிறார்.

நிருபர் - “எவ்வளவு காலமாக இங்கு வேலை செய்கிறீர்கள்?”

தொழிலாளி - “படிப்பை விட்டதிலிருந்து.. அநேகமாக பதினைந்து வருடமாக என்று நினைக்கிறேன்.”

Saturday, November 3, 2012

பெயரில்லாமல் வாழ்தல்
என்னுடைய நண்பனின் மனைவிக்கு கனடாவின் மொன்றியல் பல்கலைக்கழகத்தில் கலாநிதி ஆய்வுக்கு அனுமதி கிடைத்தது. அதே வேளை எனக்கு நியூ ஜேர்ஸி பல்கலைக்கழகத்தில் ஒரு ஸ்கொலர்ஷிப் கிடைத்தது.

நண்பர் தனது மனைவி.இரு பிள்ளைகளுடன் கனடாவுக்கும் நான் எனது குடும்பத்துடன் நியூ ஜேர்ஸிக்கும் சென்று ஒரு வருடம் கழிப்பது என்று முடிவானது.

எனக்கும் நண்பருக்கும் சொந்தமான அப்பார்ட்மன்ட் வீடுகளை நாங்கள் இங்கு வசிக்காத ஒரு வருடத்துக்கு வாடகைக்கு விடுவதற்காக இஸரேலின் மிகப் பிரபல்யமான இணையத்தளம் ஒன்றில் விளம்பரம் செய்தோம்.

எனது வீட்டை விசாரித்து தினமும் ஐந்து தொலைபேசி அழைப்புகளுக்குக் குறையாமல் வந்தது. இரு வாரங்களுக்குள் ஒரு வாடகைக் குடியிருப்பாளர் எனக்குக் கிடைத்தார்.

எனது நண்பருக்கோ நான்கு வாரங்களpல் மூன்றே மூன்று அழைப்புகளே வந்தன. ஆயினும் அவரது வீட்டைப் பார்க்கவோ வாடகைக்குப் பெறவோ யாரும் முன்வந்ததாக இல்லை.

சில நாட்களின் பின்னர் எனது நண்பர் அந்த விளம்பரத்தை அகற்றச் செய்து புதிய ஒரு விளம்பரத்தைக் கொடுத்தார்.பழைய விளம்பரத்துக்கும் புதிய விளம்பரத்துக்குமிடையில் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. ஹூஸைன் என்ற தனது பெயருக்குப் பதிலாக ரமி என்ற பெயரைப் பதிவு செய்தார். இஸ்ரேலில் ரமி என்பது ஒரு பொதுவான பெயர். அப்பெயர் கொண்ட நபர் ஒரு யூதராகவோ முஸ்லிமாகவோ இருக்கலாம். ஆனால் ஹூஸைன் என்ற பெயரில் யூதர்கள் இல்லை.

விளம்பரம் கொடுக்கப்ட்டு மூன்று தினங்களில் ரமி, முப்பது தொலைபேசி அழைப்புகளைப் பெற்றார். ஆறுபேர் வீட்டைப் பார்க்க வந்தார்கள். இதோ இரண்டு தினங்களில் வீட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருக்கிறது.

இஸரேலில் வாழும் ஒரு பலஸ்தீனர் ஒரு வீட்டை வாடகைக்கு விட வேண்டுமாக இருந்தால் அவர் பெயரற்றவராக இருக்க வேண்டும்!

நெவ் கோர்டன் - இஸ்ரேல்

Friday, November 2, 2012

நான் உன்னைத் தேடுகிறேன்!மின்னஞ்சலில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு முஸ்லிம் இளைஞர் படை நீண்ட காலமாக இயங்கி வருகிறது.

அநேகமாகவும் தங்களது கருத்துக்களை, மன உணர்வுகளை இவர்கள் முழு நீளக் கட்டுரைகளாக எழுதுவார்கள். பெரும்பாலும் இந்த ஆக்கங்கள் ஆங்கிலத்திலேயே இடம் பெறுகின்றன.கட்டுரைகள் மட்டுமல்ல, சகோதரா என்று விளித்து அவை கடிதங்களாகவும் எழுதப்பட்டிருக்கும்.

தமிழில் வந்து சேரும் மற்றும் எழுதப்படும் தளங்களில் கட்டுரைகளை முழுமையாகப் படிப்பதற்கே சிரமப்படுபவன் நான். இதற்கிடையில் எனது எழுத்து, சிலரது கோரிக்கைக்கான எழுத்து- என்று எனக்கு வேறு சிக்கல்களும் உண்டு.

எனக்கு மின்னஞ்சலில் வரும் இவ்வாறான முழு நீளக் கட்டுரைகள் பல முறை எனது கோபத்தைக் கிளறியிருக்கின்றன. காரணம் ஓர் அற்ப விடயத்துக்கு அங்கங்கள் வைத்து அவை சோடிக்கப்பட்டிருப்பதுதான்.

அதே வேளை சில கடிதங்கள், கட்டுரைகள் பேசும் விடயங்கள் சகலரையும் சென்றடைய வேண்டிய தகவல்களைக் கொண்டு பெறுமதிவாய்ந்த வையாகவும் அமைந்து விடுகின்றன.

இக்கடிதங்களும் கட்டுரைகளும் சமூகாபிமானம் கொண்ட இளைஞர்களால் சமூக நன்னோக்கோடு எழுதப்படுகின்றன என்பது முக்கியமான விடயம்.

மிக அண்மையில் சலாஹ்தீன் என்ற சகோதரர் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

“பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த சில குழுக்கள் பெருமளவில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு பெரும் திடடமிடலோடு அவர்கள் இயங்கி வருகிறார்கள். இந்தக் குழுவினரின் வேகமான, மோசமான பிரச்சாரத்தால் நல்ல உள்ளம் கொண்ட சிங்களச் சகோதரர்களை நாம் இழந்து வருகிறோம்.

முஸ்லிம்களுக்கெதிரான பார்வையை, மனோ நிலையைச் சிங்கள மக்களின் மனங்களில் விதைப்பது இவர்களது நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆக்ரமித்து வருகிறார்கள்... அதற்காகன செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.. 1. ஜெய்லானி 2. தெவனகல 3.முகுது மகா விகாரை (பொத்துவில்) 4.Maha Mewnawa - ஆகிய இடங்கள் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் குறித்து சமூக நிறுவனங்களும் முஸ்லிம் தலைவர்களும் உடனடிக் கவனம் செலுத்துமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையில் சிங்கள மக்கள் நட்பார்ந்தவர்கள். அமைதியை விரும்புபவர்கள்.இன ஐக்கியம் எப்போதும் சாத்தியமானது”

இதுதான் அந்தச் சகோதரரின் கடிதம்.

இனரீதியான இன்னொரு பிரச்சினை இந்த நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது, முஸ்லிம் சிங்கள இனப் பிளவுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தக் கடிதத்தை அவர் எழுதித் தன்னால் அனுப்ப முடிந்தவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அநேகமாகவும் அவரால் முடிந்த பங்களிப்பு அதுதான். அதைச் செய்து முடித்திருக்கிறார். சில வேளை இன்னும் சிலர் அவருடன் இணைந்தால் செயற்பாட்டில் இறங்க அவர் தயாராக இருப்பார். ஆனால்...