இனாஸ் அப்பாஸி - Ines Abassi
சமகால அரபு இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க டியூனிஸியக் குரலாக விளங்கும் இனாஸ் அப்பாஸி கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என்ற பன்முகங் கொண்டவர்.
2004ம் ஆண்டு வெளியான 'காற்றின் இரகசியம்' என்ற அவரது முதலாவது கவிதைத் தொகுதி அவ்வாண்டின் சிறந்த கவிதைத் தொகுதியாகத் தெரிவு செய்யப்பட்டது. ‘Archive of Blind’ என்ற மற்றொரு கவிதைத் தொகுதி 2007ல் எகிப்தில் வெளியிடப்பட்டது. இக்கவிதை நூலுக்கு ரியூனிஸியாவின் பெண்கள் ஆய்வு மற்றும் பதிவுத் தொகுப்பு அமைச்சின் விருது வழங்கப்பட்டது. இது தவிர கொரியாவிக் மீதான தனது பார்வையை "Tales of Korean Shahrazad" என்றொரு நூலை 2009ல் எழுதியிருக்கிறார்.
“ஹஷாஷா” சிறுகதைத் தொகுதி
'ஹஷாஷா' - வலுவற்றது - என்ற சிறுகதைத் தொகுதி கடந்த வருடம் லெபனானில் வெளிவந்திருக்கிறது.
முழுநேரமும் எழுத்தோடு தொடர்பு பட்டு வாழும் இவர் ஐக்கிய அமீரகத்தின் 'இத்திஹாத்', லண்டனில் வெளியாகும் 'அல் அரப்', ரியூனிசியாவின் 'அல் ஷபா' மற்றும் 'அத்தற்கஃபியா' ஜோர்தானின் 'அல்வத்தன்' லெபனானின் 'கிதாபத் முஆஸரா' ஆகிய பத்திரிகை சஞ்சிகைகளிலும் இணையத் தளங்களிலும் பங்களிப்புச் செய்து வருகிறார்.
ஓமான், ஜோர்தான், கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் டென்மார்க் போன்ற தேசங்களில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய விழாக்களில் கலந்த சிறப்பித்த இனாஸ் அப்பாஸியின் 'போர்' என்ற சிறுகதை டெனிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பெற்றோர் அற்றவர்கள் அனாதைகள் எனப்படுகின்றனர். சட்டபூர்வமற்ற பிறப்பு என அறியப்படுபவர்களும் அநேகமாக இந்த வகைக்குள் அடங்கி விடுகின்றனர். யாரோ செய்த பாவம் பிள்ளையைச் சேர முடியாது.
அநாதைகள் குறித்து கவனமாக நடந்து கொள்ளும் படி இஸ்லாம் நமக்கு அறிவுறுத்துகிறது. பெருநாள் தினத்தன்று தனியே அழுது கொண்டிருந்த சிறுவன் ஒருவனை பெருமானார் (ஸல்) எவ்வாறு அன்பொழுக நடத்தினார்கள் என்பது நமது முன்னால் பதிவாக இருக்கிறது.
லட்சக் கணக்கான தலைப்புகளில் கவிதைகள் எழுதப்படுகின்றன. ஆனால் ஓர் அநாதைக் குழுந்தையின் பார்வையில் வெளிவந்த ஒரு கவிதையைப் படித்திருக்க மாட்டோம். அந்தக் குறையை இனாஸ் அப்பாஸியின் கவிதை தீர்த்து வைக்கிறது. கைவிடப்பட்ட ஒரு குழந்தை தன்னை மற்றவர்கள் அழைக்கும் பொதுவான சொல் குறித்துச் சிந்திப்பதை இக்கவிதை பேசுகிறது. இதோ அவரது குரவில் ஒலித்த 'தகாவழிப் பிறப்பு' என்ற கவிதையின் தமிழ் வடிவம்:-
அந்தக் குழந்தை
இரவில் தனியே தெருவைக் குறுக்கறுக்கிறது
பகலில் அது
மரங்களின் கிளைகளுக்கிடையே
சுழன்று திரிந்து
பின்னர்
தனது தாயின்
அதாவது
சூரியனின் தாக்குதலுக்குள்
நித்திரை கொள்கிறது
தன்னைப் போன்ற
ஒருவனிடம் திருடிய கடற்சங்கு ஒன்றில்
சமூத்திரத்தின் ஓசையைச் செவியுறுகிறது
அக்குழந்தை
குறைபாடுகளுடையதும்
பல சொற்கள் பயன்படுத்தப்படாததுமான
மொழி பேசப்படுகின்ற -
தனது பெரிய வீட்டின்
மற்றவர்களுக்கும் உரியதான -
அந்த வீட்டின்
நீண்ட முன் விறாந்தையில்
சூனியக்காரிகளுடன் விளையாடுகிறது
அக்குழந்தை
உறங்குவதற்கு முன்னர்
மற்றொரு குழந்தையைக்
கனவு காண்கிறது...
ஒவ்வொரு இரவும்
அது
சொல்லின் அர்த்தத்தைத்
தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறது