Thursday, March 13, 2014

பெருங்கடலில் தனித்தலையும் குருவி!


எஸ்.போஸ் (போஸ் நிஹாலே)

எனக்கு மிகவும் பிடித்த இந்தக் கவிதையைக்  கிழிந்து துண்டாகிக் கிடந்த வீரகேசரிப் பத்திரிகைத் தாள் ஒன்றிலிருந்து கண்டெடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். பின்பு “யாத்ரா - 20” வது இதழில் 10 மற்றும் 11ம் பக்கங்களில் இக்கவிதையை இடம்பெறச் செய்தேன்.

படுகொலையான கவிஞர் எஸ்.போஸ் அவர்களின் ஆக்கங்கள் தொகுக்கப்படுவதாக நண்பர் கருணாகரன் தனது முகநூல் பக்கத்தில் தகவல் தந்துள்ளார். கவிஞரது படமும் படமும் அவரது பக்கத்திலிருந்து நன்றியுடன் பெற்றுக் கொள்ளப்பட்டு எஸ்.போஸ் எழுதியிருந்த கவிதையுடன் சேர்த்து இடப்படுகிறது.

பெருங்கடலில் தனித்தலையும் குருவி!
------------------------------------------------------
அமரர்.எஸ்.போஸ்

இருள் சூழ்ந்த இந்த நாளை
உனது வாழ்வில் பாங்கொலிக்காத இந்த நாளை
வெடிகுண்டதிர்வில் மேற்கிளம்பிய தூசுப் படலத்தை
உனது சொந்த மண்ணை விட்டு
நீ வெளியேறிய துயரத்தை
கடவுளின் பெயரால் அதை
மறந்து விடாதே நண்பனே

நகரம் முழுவதும் விலங்குகளால் சூழப்பட்டு விட்டது
மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட எல்லா நகரங்களிலும்
மனிதர்கள் உறைந்து விட்டார்கள்

ரயர்கள் எரிக்கப்பட்ட தெருக்களில்
பிண வீச்சங் கமழும் தெருக்களில்
மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட எல்லா நகரங்களிலும்
தூசுப் படலமும் மரண ஓலமும்
புறாக்களின் அழுகையும் குழந்தையின் விசும்பலும்
வான்நோக்கி எழுகிறது

யுத்தம்
உனக்குள் ஏற்படுத்திய வலி
யுத்தம் உனக்குள் ஏற்படுத்திய கொடூரம்
சீமான்களின் வாழ்வைப் போலானது அல்ல அது
வீதிகளில் அலைந்து
காடுகளில் குடியேறி
மீண்டும் மீண்டும் அழிவுற்று
மீண்டும் மீண்டும் அழிவுற்று
காயங்களால் இருக்கும் என்னைப் போன்றது

குருதி ஒழுகும் உனது குழந்தையை
இறந்த குழந்தையை
கைகால் துண்டிக்கப்பட்ட குழந்தையை
தோளில் அணைத்தபடி
துப்பாக்கிகளில் சுருண்டொடுங்கும் உனது வாழ்வை
கடவுளின் பெயரால் அதை மறந்து விடாதே
மறந்து விடாதே

மிருகங்கள் 
உனக்கும் எனக்குமான காடுகளை அழித்து விட்டன
குஞ்சுகளையும் புறாக்களையும் கொன்று விட்டன
இன்னும் நமது சிறகுகளால் நெய்யப்படும்
நமது குழந்தைகளுக்கான ஆடைகளை
அவை கனவு காண்கின்றன

இருப்பின் ஒளிதுலங்கும் நமது கவிதை பற்றியோ
நமது வசம் இல்லாத நமது குடிசை பற்றியோ
எது பற்றியும்
அவை கவலை கொள்வதில்லை

மிருகங்கள் அலையும் இந்த நகரத்தில்
நான்
ஒரு பறக்கும் கனவை அடிக்கடி காண்கிறேன்
அது
பெருங்கடலில் தனித்தலையும்
குருவியினுடையதைப் போன்றது

(எஸ்.போஸ்  என்ற சந்திரபோஸ் சுதாகர், போஸ் நிஹாலே என்ற பெயரிலும் கவிதைகளை எழுதி வந்தவர். கவிஞனாக மட்டுமன்றிச் சஞ்சிகை ஆசிரியராகவும் இயங்கியவர். 16.04.2006 அன்று 'இனந்தெரியாத' ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கவிதை 2006 அக்டோபரில் வீரகேசரியில் பிரசுரமானது. நன்றி: வீரகேசரி)

Saturday, March 8, 2014

அறுபத்தைந்தாம் கலை



காலை ஆறு மணிக்கே அவன் வந்து நிற்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் அவர். தெளிவான சிந்த னையுடனான எழுத்துப் பணிக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் அமைதியான காலை வேளை மிகவும் பொருத்தமானது. காலைத் தேனீரோடு எழுத்தையும் வாசிப்பையும் அவர் எட்டு மணி வரை மேற்கொண்ட பிறகுதான் அடுத்த வேலை களைக் கவனிக்கப் பழகியிருந்தார்.

அவனது வருகையால் அவருக்கு மிகவும் விருப்பமான அந்த இரண்டு மணிநேரம் இழக்கப்பட்டு விட்டது என்று எண்ணிக் கொண் டார். வீட்டுக்கு வந்தவரை வாசலில் நிறுத்த முடி யுமா? அவனை உள்ளே அழைத்தார்.

000

'நம்மால் கடந்த காலங்களில் கைவிடப் பட்டவற்றை மட்டுமே அருகிவரும் கலைகள் எனக் கருதி வருகிறோம். இந்தக் கருத்தே பிழையானது. ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று சொல்லப் படுகிறது. அவை என்னவென்று கூட நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை' என் றார் பேச்சாளர்.

'வசியக் கலை பற்றி நீங்கள் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறீர் கள். அது குறித்து நானும் பல விடயங்களைப் படித்திருக்கிறேன். இதற்கு மாந்திரீகம் என்றும் சொல்லப்படுகிறது. வாராந்திரிகளில் இக்கலையை அடிப்படையாகக் கொண்ட பல விளம்பரங்களை நீங்கள் பார்க்க முடியும். இந்த விடயத்தில் எனக்கும் ஓரளவு பரிச்சயம் உண்டு. இங்கேயிருக்கும் பெண்களில் யாராவது ஒருவர் முன்வருவாராக இருந்தால் நான் எனது பேச்சை முடித் துச் செல்லுகையில் அவரை என் பின்னால் வரச் செய்ய என் னால் இயலும்.'

வயதான பெண்கள் நான்கு பேர் ஆங்காங்கே உட்கார்ந்திருந் தார்கள். பேச்சாளரின் வயதொத்த முப்பது பேரளவில் ஆண்கள் அங்கி ருந்தார்கள். அவர்களில் சிலர் அப் பெண்களை ஒரு முறை சின்னச் சிரிப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். பேச்சாளரையே பார்த்தபடி இருபத்தேழு அல்லது முப்பது வயது மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் தனியே பின்னால் அமர்ந்திருந்தான்.

சவால் விட்டு அவர் பின்னால் போக வேண்டி வந்தால் மானக் குறைவாகிவிடும் என்ற பயத்தில் அல்லது தனது பேச்சுக்குச் சுவையூட்டப் பேச்சாளர் குசும்புத்தனம் பண்ணுகிறார் என்ற என்ற எண்ணத்தில் எது வுமே காதில் விழாதது போல் பெண்கள் அமர்ந்திருந்தார்கள்.

'பேச்சாளரே அறுபத்தைந்து வயது தாண்டியவர், இவர் பின்னால் போய் என்னதான் ஆகப் போகிறது' என்ற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பேச்சாளர் தொடர்ந்தார்....

'அணிமா மகிமா இலகிமா
அரிய கரிமா பிராத்திமலப்
பிணிமா சுடையோர்க் கடைவரிய
பிராகா மியமீ சத்துவமெய்
துணிமா யோகர்க் கெளியவசித்
துவமென் றெட்டா மிவையுளக்கண்
மணிமா சறுத்தோர் விளையாட்டின்
வகையா மவற்றின் வகையுரைப்போம்'

என்று திருவிளையாடற் புராணத்தில் ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடல் சொல்வது என்ன? இந்தப் பாடல் அட்டமா சித்தி களைப் பற்றிப் பேசுகிறது. இந்த எட்டுச் சித்திகளும் மாபெரும் கலைகள். 'அணிமா' என்பது பூதவுடலை அணுப் போன்று சிறியதாக்குதல். 'மகிமா' என்பது உடலை மலை போன்று பெரிய தாக்குதல். 'இலகிமா' என்பது காற்றைப் போல இலகு வாக்குதல். 'கரிமா' என்பது பளுவாக்குதல். 'பிராப்தி' என்பது அனைத் தையும் ஆளுதல். 'வசித்துவம்' என்பது யாரையும் வசியப் படுத்துதல். 'பிராகாமியம்' என்பது கூடுவிட்டுக் கூடு பாய்தல். 'ஈசத்துவம்' என்பது விரும்பிய எதையும் செய்து அனுபவித்தல்.

இதிலே வசித்துவம் என்பதைத்தான் நான் முதலில் பேச்சுக்குச் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னேன். தவிர வசியம் என்பதை நாம் இன்றும் நம்புகிறோம். இன்றைய மக்கள் சமூகம் அதைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் ஆசை. அடைய முடியாததை அல்லது சிரமப்பட்டு அடைய வேண்டியதை இலகுவாக அடைந்து விடும் பேராசை. வசியம் செய்வதாக இன்றும் பலர் பிரகடனப்படுத்திக் கொண்டு காசு பார்த்து வருகிறார்கள். அது சாத்தியப்படுகிறதா இல்லையா என்பதல்ல, எனது தலைப்புக்குரியது. இவ்வாறான அற்புதமான கலைகள் அன்று இருந்தன என்பதுதான்.'

இம்மாதிரித் தலைப்புக்களில் வெகு அபூர்வமாகவே உரைகள் இடம் பெறுகின்றன என்று அவனுக்குத் தோணியது. தன்னைத் தவிர இளைய வயதுக்காரர்கள் யாரும் இக்கூட்டத்துக்கு வருகை தராதது அவனுக்குக் கவலையாக இருந்தது.

அவர் தொடர்ந்தார்.

'பாருங்கள். எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைகள் இவை. இலகுவில் யாருக்கும் சித்திக்காதவை. இவற்றைப் பெற்றுக் கொள்ள மிகுந்த பிரயாசையும் அர்ப்பணிப்பும் தியாகமும் உழைப்பும் தேவை. சக்தி வாய்ந்த எதுவும் மிகச் சாதாரண மாக மனிதனுக்குக் கிடைத்துவிடுவதில்லை.

உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளக் கூடிய அற்புதமான சக்தியுள்ள கலைகள் இவை. பொறாமை, காழ்ப்பு ணர்வு, பேராசை மற்றும் எல்லாம் தன்வசமே இருக்க வேண் டும் என்கிற ஆதிக்கவுணர்வு ஆகியவற்றை அடியோடு அகற்றி விட்டுத்தான் இக்கலைகளைப் பெற்றுக் கொள்ளப் போராட வேண்டும். தனது புலன்களை அடக்கி ஒடுக்கி, புலன்களாலும் உணர்வுகளாலும் ஆட்டிப் படைக்கப் படாத மனதைப் பெற்றுக் கொண்டே இவற்றையடைய முயல வேண்டும்.'

அவன் கூட்டத்தின் பின்னாலிருந்து எழுந்து கையை உயர்த்தினான்.

பேச்சாளர், 'என்ன' என்பது போல் அவனைப் பார்த்தார்.

'புலன்களை அடக்கி விட்டு உலோகாயுத ஆசைகளை ஒழித்து விட்டு இக்கலைகளைப் பெற்றுக் கொள்வதில் என்ன லாபம் இருக்கிறது?' அவன் கேட்டான்.

'நல்ல கேள்வி. நீங்கள் இன்னும் இன்றைய உலகத்தில் - ஆசை யும் வன்மமும் கொண்ட உலகத்தில் நின்றபடி இந்தக் கேள் வியைக் கேட்கிறீர்கள். இந்தக் கலைகளைப் பெற்றுக் கொள்வது பிறன் மனை நாடலுக்கோ, தனக்குப் பிடிக்காதவனை நோவினை செய்வதற்கோ, நாட்டை ஆள்வதற்கோ, உலகத்தின் செல்வங் களையெல்லாம் நாமே வைத்து அனுபவிப்பதற்கோ அல்ல.

தன்னலம் அறுத்து மற்றோருக்கு அன்பும் கருணையும் செய்வ தற்காக. அதுவே நித்தியமானது. உன்னதமிக்கது. சாஸ்வத மானது. மட்டற்ற சந்தோஷத்தைத் தருவது. ஆத்மாவின் அள விட முடியாப் பசியைத் தீர்க்க வல்லது.

குறுக்கு வழியில் மனிதன் இவற்றை அடைந்து விட முடியாது. அவ்வாறு உலோகாயுத சுய நன்மைகளுக்காகக் குறுகிய வழியில் இவற்றைப் பெற முடியுமாக இருந்தால் பலரும் இவற்றை அடை யப் பெற்றிருப்பார்கள். எல்லோரும் குட்டிக் கடவுள்களாக உலா வருவார்கள். அப்படியானால் இன்றை மனித குலத்தின் கதி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.'

அவன் அமர்ந்தான். பேச்சாளர் தொடர்ந்தார்.

'இந்தக் கலைகளில் வசியக் கலை பற்றி நாம் எல்லோரும் அறிந்திருப்பதால் அதைப்பற்றிப் பேசுவது ஓர் அற்ப எதிர் பார்ப்பை மனதுக்குள் ஏற்படுத்தக் கூடியது. நம்மால் செய்யச் சாத்தியப்படாததை நாம் யார் மூலமாவது பெற்றுக் கொள்ள விழைகிறோம். இதனால் இக்கலையின் பெயரால் பலர் ஏமாற்றப் படுகிறார்கள். நான் முன்னர் குறிப்பிட்ட மற்றைய கலைகளைக் கொண்டு யாரையும் ஏமாற்ற முடியாது. அவை மக்கள் கண் முன்னே நேரடியாகச் செய்துகாட்ட வேண்டிவை என்பதால் இவற்றைப் பற்றிப் பேசுவாரில்லை.

தாயுமான சுவாமிகளின் பாடல் ஒன்றை இந்த இடத்தில் நான் எடுத்தாள விரும்புகிறேன். அவர் சொல்லும் விடயங்களை அவதானியுங்கள்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையுங்
கட்டலாம் ஒருசிங்க முதுகின்மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத் தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலவலாம்
சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு
சரீரத்திலும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறன் அரிது சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே!

இங்கே குறிப்பிடப்படுகின்ற செயல்கள் எவையும் வெறுங் கற்ப னைகள் அல்ல. ஒரு காலத்தில் நடந்தவை. தற்போதும் இவற்றில் ஏதாவது ஒன்று வெகு அபூர்வமாக நடந்து கொண்டிருக்கலாம். நமது கண்காணா இடத்தில் சித்தர்களும் யோகிகளும் தமது புலன் அடக்கியாளும் வல்லமையால் இவற்றை அடைந் திருக்கலாம்.

பிராகாமியம் என்ற கூடுவிட்டுக் கூடுபாய்தல் ஒரு சுவாரஸ்யமான விடயமாக இருக்கிறது. இறந்த ஒரு உடலில் தனது ஆத்மா வையும் உயிரையும் உட்புகுத்தி நடமாடுவதைக் கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்று அழைக்கிறார்கள். திருமூல நாயனார் கூடு விட்டுக் கூடுபாய்ந்தார் என்று வரலாறு சொல்கிறது.'