Saturday, June 27, 2015

தெரிந்திருப்பதும் தெரிவிப்பதும் - சில அவதானங்கள்1



Ash. Affan Abdul Haleem (Naleemi)

இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படை நோக்கங்களை மிகச் சுருக்கமாகச் சொல்லும் முழுமையான சட்ட விதியொன்றிருக்கின்றதுஇ நலவுகள் அடையப்பெறுவதை உறுதி செய்வதும் அவற்றைப் பூரணப்படுத்துவதும் கெடுதிகள் களையப்படுவதை உறுதிப்படுத்துவதும் அவற்றை முடியுமான அளவு குறைப்பதும் ஷரீஅத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இரண்டு நலவுகளில் மிகச் சிறந்த நலவை அடைந்து கொள்வதும் இரண்டு கெடுதிகளில் மிகப் பாரதூரமான கெடுதியைத் தவிர்ந்து கொள்வதும் இந்த விதியோடு சம்பந்தப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். அதே போன்று ஒரு நலவை அடைந்து கொள்வதை விட ஒரு கெடுதியை தவிர்ப்பது ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் முன்னுரிமைப்படுத்தப்படுகின்ற அம்சம் என்பதும் இவற்றோடு சம்பந்தப்பட்ட ஒரு விதியாகும்.

தஃவாக் களத்தில் இருக்கின்ற தாஇகள் அனைவரும் இந்த விதிகளுக்குட்பட்டு தமது பணியை முன்னெடுக்கின்ற போது தஃவா களம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த அடிப்படை விதிகள் மீறப்படுகின்ற போது களமும் மனிதர்களும் மானங்களும் சீரழிக்கப்படும் என்பதில் சந்தேகங்கள் கிடையாது.

அந்த வகையில் தாஇகள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஓர் அம்சம்தான் மக்களிடம் தாம் எத்திவைக்கும் விடயங்கள் பற்றியதாகும். ஒரு தாஇ மார்க்கம் சார்ந்தஇ ஏனைய துறைகள் சார்ந்த சகல விடயங்களைப் பற்றிய அறிவையும் பெற்றிருப்பது மிகச் சிறந்ததும் கட்டாயமானதுமாகும். ஆனாலும் தனக்குத் தெரிந்த அனைத்தையும் மக்களுக்கு எத்திவைக்க வேண்டிய தேவை இருக்கின்றதா என்று பார்க்கின்ற போது அங்கு மேற்கூறிய விதிகள் பற்றிய தெளிவுடனேயே எத்திவைத்தல் என்ற பணியை ஒரு தாஇ செய்ய வேண்டியிருக்கின்றது.

தஃவா களம் என்பது எத்திவைப்பவர்களுக்கிடையிலான போட்டியல்லஇ மாற்றமாக மிகச் சரியானதை மிகச் சரியான முறையில் மிகப் பொருத்தமான சந்தர்ப்பத்தில் யாருக்கு எத்திவைக்க வேண்டுமோ அவர்களுக்கு எத்திவைப்பதாகும். அதனைத்தான் அல்குர்ஆன் ''மிகத் தெளிவான எத்திவைத்தல்'' என்று வர்ணிக்கின்றது.

எனவே தாஇகள் தாம் வைத்திருக்கும் சகல விதமான அறிவுகளிலும்இ தகவல்களிலும்இ கருத்துக்களிலும் எதனை சமூகத்துக்குச் சொல்வது என்பதை மேற்சொன்ன விதிகளின் ஒளியில் நின்று சிந்தித்து முடிவெடுத்தே சொல்ல வேண்டும்.

இல்லாத போது நலவுகள் தவிர்க்கப்பட்டு கெடுதிகள் அடையப்படுவது தஃவா களத்தில் சர்வசாதாரணமாகி விடும். அத்தகைய நிலையை தஃவா களத்தில் பல போது அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.

🔹அறிந்திருந்தால் சொல்லத்தான் வேண்டுமா?!

ஒருவன் ஒரு விடயத்தை அறிந்து வைத்திருந்தால் கட்டாயம் அதனை சொல்லியே ஆக வேண்டும் என்ற கடப்பாடு மார்க்கத்தில் கிடையாது. அதனை சொல்வதற்கு முன்னர் குறித்த விடயம் உண்மையா பொய்யா?இ சரியா பிழையா?இ இதனை சொல்வதால் ஏற்படும் விளைவு அதிகம் நன்மையைத் தரக் கூடியதா அல்லது தீமையைத் தரக் கூடியதா?இ இதனை சொல்லாமல் விடுவதனூடாக ஏற்படும் தீமை சொல்வதால் ஏற்படும் தீமையை விடக் கூடியதா குறைந்ததா?இ இதனை சொல்வதால் ஏற்கனவே இருக்கின்ற ஒரு நலவு இல்லாமல் போய் விடுமா? அல்லது இன்னுமொரு நன்மை தரக்கூடிய விடயம் உருவாக்கப்படுமா?இ இதனை சொல்வதால் ஏற்கனவே இருக்கின்ற தீமை இன்னும் அதிகரித்து விடுமா அல்லது குறைந்து விடுமா?... என்பன போன்ற இன்னோரன்ன கேள்விகள் கேட்கப்பட்டு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும். அப்போதுதான் ஷரீஅத்தின் அடிப்படை நோக்கத்துக்கு மாறுபடாத வகையில் அந்த எத்திவைத்தல் இருக்கும்.

அது மாத்திரமல்ல குறித்த விடயத்தைச் சொல்வதால் நன்மை ஏற்படுமா தீமை ஏற்படுமா என்ற விடயம் மார்க்கத்தின் அளவுகோல்களுக்கேற்பவே தீர்மானிக்கப்படவும் வேண்டும்இ மாற்றமாக தனிநபர்களின் மனோ இச்சைக்கும் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கும் ஏதுவானதாக அந்தத் தீர்மானம் அமையவும் கூடாது.

🔹தூதரின் வாழ்விலிருந்து சில ஆதாரங்கள்

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ''அடியார்கள் அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை யாதெனில் அவனை இபாதத் செய்வதும் அவனுக்கு யாதொன்றையும் இணை கற்பிக்காதிருப்பதுமாகும். அல்லாஹுத் தஆலா அடியார்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை யாதெனில் தனக்கு எதிலும் இணை வைக்காத யாரையும் தண்டிக்காமலிருப்பதாகும்'' என்று கூறினார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த முஆத் (ரழி) அவர்கள் ''நான் மக்களுக்கு இந்த நன்மாராயத்தை எத்திவைக்கட்டுமா?'' என்று கேட்டார்கள்இ அதற்கு நபியவர்கள் ''வேண்டாம் அவ்வாறு எத்திவைத்தால் அவர்கள் சோர்வடைந்து சோம்பேறிகளாகி விடுவார்கள்'' என்று கூறினார்கள். (புகாரிஇ முஸ்லிம்).

இங்கே மிக மிக முக்கியமான விடயமொன்றை பகிரங்கமாக எத்திவைக்க வேண்டாம் என்று நபியவர்கள் சொல்வதற்கான காரணம் என்ன?. இந்த செய்தி மக்களை சென்று சேர்வதனூடாக மனிதர்கள் அமல்களில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டு ஈமான் மட்டும் போதுமானது என்று முடிவெடுத்துக் கொண்டு சோம்பேறிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தைத் தவிர நிச்சயமாக வேறெந்தக் காரணமும் கிடையாது.

கஃபாவை உடைத்து மீண்டும் இப்றாஹிம் (அலை) அவர்கள் கட்டிய அத்திவாரத்தின் மீது அதனைக் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தும் அதனால் சமூகத்தில் ஏற்படக்கூடும் என்று நபியவர்கள் கருதிய பாரதூரமான விளைவுகளின் காரணமாக அந்த ஆசையைக் கூட தன் மனைவி ஆயிஷா (ரழி) அவர்களிடம் மாத்திரமே பகிர்ந்து கொண்டார்கள் நபியவர்கள்.

🔹தோழர்களின் வாழ்விலிருந்து

நபியவர்களிடமிருந்து மிக அதிகமான ஹதீஸ்களை மனனமிட்டுக் கொண்ட ஸஹாபிதான் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள். ஆனால் அவர்கள் இப்படிச் சொல்கின்ற ஒரு செய்தியை இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். ''நான் நபியவர்களிடமிருந்து இரண்டு பாத்திரங்கள் நிறைய அறிவைப் பெற்றுப் பாதுகாத்திருக்கிறேன். அவற்றில் ஒன்றைப் பொறுத்த வரையில் அதனை நான் பரப்பியிருக்கிறேன்இ அடுத்ததைப் பொறுத்தவரையில் அதனை நான் பரப்பினால் இந்தக் கழுத்து துண்டாடப்பட்டு விடும்'' என்பதே அந்த செய்தியாகும்.

நபியவர்களுக்குப் பிந்திய காலத்தில் ஏற்படக்கூடிய பித்னாக்கள் பற்றிய அறிவிப்புக்களையே அவர்கள் எத்திவைப்பதிலிருந்தும் தவிர்ந்துகொண்டார்கள். ஏனெனில் நேரடியாக அமல் செய்வதற்கு வழிகாட்டல்கள் இல்லாத நிகழ்வுகளைப் பற்றிய அந்த அறிவிப்புக்களை எத்திவைப்பதனூடாக தனக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் தான் நபியவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட அனைத்து முஸ்லிம்களினதும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டல்கள் அடங்கிய ஹதீஸ்களை எத்திவைக்க முடியாமல் போய்விடுமே என்ற அச்சமே அத்தகைய ஒரு முடிவுக்கு அவர்களை வரச்செய்தது.

நபியவர்களின் ஹதீஸ்களை ரிவாயத் செய்தல் என்ற நன்மையையும்இ அந்த ரிவாயத்களின் உள்ளடக்கம் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான விளைவுகளால் ஏற்படும் பாதகங்களையும் நிறுத்துப் பார்த்து தனக்குத் தெரிந்த பல ஹதீஸ்களை அறிவிக்காமல் அந்த ஸஹாபி தவிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

''என்னுடைய இந்த இரண்டு செருப்புக்களையும் எடுத்துச் செல்லும் அபூ ஹுரைராவேஇ இந்த சுவருக்குப் பின்னால் உறுதியான உள்ளத்தோடு லா இலாஹ இல்லல்லாஹ் என்று சான்று பகர்பவருக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லும்'' என்று நபியவர்களால் அனுப்பப்பட்ட அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு நபியவர்களிடம் திரும்பிச் செல்கிறார். நபியவர்கள் உமரிடம் காரணம் கேட்ட போதுஇ இதனைச் சொன்னால் மனிதர்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள்இ எனவே சொல்லாமலிருப்பது சிறந்தது என்று உமர் (ரழி) அவர்கள் கூற நபியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இது முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

🔹தாபிஈன்களிடமிருந்து

இடையர்களைக் கொலை செய்த உரைனா வாசிகளை கொலை செய்யுமாறு நபியவர்கள் சொன்ன செய்தியை ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபிடம் அறிவித்த அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களை இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் கண்டிக்கிறார்கள். ஏற்கனவே ஹஜ்ஜாஜ் கொலை செய்வதில் பிரபலமானவன்இ அவனுக்கு இந்த ஹதீஸை சொல்வதனூடான அவன் தன்னுடைய குற்றங்களை நியாயப்படுத்திக் கொள்ள வழி செய்து விட்டீர்கள் இந்த ஹதீஸை ஹஜ்ஜாஜுக்கு அறிவிக்காமலிருப்பது வாஜிபாகும்இ என்று இமாம் ஹஸனுல் பஸரீ அவர்கள் அனஸ் (ரழி) அவர்களுக்கு சொன்னவுடன் தான் செய்த செயலையிட்டு அனஸ் (ரழி) அவர்கள் மிகுந்த கைசேதப்பட்டார்கள்.

🔹அற்புதமான கருத்துக்கள்

''மனிதர்களுடன் அவர்களது அறிவுத் தரத்துக்கேற்ப பேசுங்கள்இ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொய்ப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று அலீ (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

''நீங்கள் ஒரு சமூகத்தில் அவர்களது அறிவுத் தரத்துக்கு எட்டாத விடயங்களைப் பேசும் போது ஃபித்னாக்கள் தான் உருவாகும்'' என்று இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

''ஒரு சிறந்த தாஇ என்பவன் ஒரு கைதேர்ந்த சமையற்காரனைப் போன்றவன்இ அவன் எப்படி யார் யாருக்கு என்ன வகையான ருசியுள்ள உணவு பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து சமைப்பானோ அதே போன்றுதான் ஒரு தாஇ எந்தெந்த சமூகத்துக்கு என்னென்ன விடயங்களை எப்படி எப்படி எத்திவைக்க வேண்டும் என்ற அறிவுள்ளவனாக இருப்பான்'' என்று வஹப் இப்னு முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

🔹இறுதியாக...

தஃவா என்பது மின்பர்களில் நின்று கொண்டு தெரிந்த அனைத்தையும் உச்சஸ்தாயில் கொட்டுவதல்லஇ கண்ட அனைத்தையும் கேட்ட அனைத்தையும் அப்படி அப்படியே பச்சையாகச் சொல்வதுமல்லஇ அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சுவதில்லை என்ற கோஷத்தோடு சமுதாய நலன்கள் பற்றிய எவ்வித அக்கறையுமின்றி வீராப்புப் பேசுவதுமல்லஇ முன்முடிவுகளையும்இ வெறுப்புக்களையும்இ காழ்ப்புணர்வுகளையும்இ சொந்தக் கோபதாபங்களையும் கீபோர்டில் விரலோடி இணையத்தில் காட்சிப்படுத்துவதுமல்ல.

இவற்றுக்கெல்லாம் பின்னால் ஷரீஅத்தின் அடிப்படை நோக்கங்கள் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன. மஸ்லஹாஇ மகாஸித் என்ற சொற்களைக் கொண்டே மஸ்லஹாக்களும் மகாஸித்களும் துண்டு துண்டாய் சிதைக்கப்படுகின்றன. சத்தியமான வார்த்தைகள் முழங்கப்படுகின்றனஇ ஆனால் அசத்தியமான விளைவுகள் நாடப்படுகின்றன.

விளைவு அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதாக பெயர் போடப்பட்டு மார்க்கத்துக்கும் மனிதர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.


எதுவெல்லாம் பெரும்பாலானவர்களுக்குப் புரியாதோ அவை பேசப்படுகின்றனஇ எழுதப்படுகின்றன. அவற்றைப் பேசாதவர்கள் எழுதாதவர்கள் படு பயங்கரமான ஆளுமைக் கொலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒரு செய்தி சமூகத்துக்குப் பிரயோசனமானதா இல்லையா என்று பார்க்கப்படுவதற்குப் பதிலாக தன்னுடைய மேதாவித் தனத்தை படம் போட்டுக் காட்டி விட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு தாஇக்கு என்னென்ன தெரியும் என்பது அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடைப்பட்ட விடயம்இ ஏனெனில் அறிவை அல்லாஹ்வுக்காக மட்டுமே தேட வேண்டும். எனக்குத் தெரியும் என்று தம்பட்டம் அடிப்பதற்குத்தான் ஒருவனுக்கு அறிவு பயன்படுகின்றது எனின் அவன் ''அல்லாஹ்வுக்காக மாத்திரம் கற்கப்பட வேண்டிய கல்வியை உலக நோக்கம் ஒன்றுக்காகக் கற்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான்'' என்ற ஹதீஸை மனதில் இருத்திக் கொள்ளட்டும்.

ஒரு தாஇ தனக்குத் தெரிந்ததிலிருந்து தான் அறிந்ததிலிருந்து எதனை எத்திவைக்க வேண்டும் யாருக்கு எத்திவைக்க வேண்டும் எப்படி எத்திவைக்க வேண்டும் என்பது பற்றிய அறிவு தஃவாவின் ஆரம்ப அரிச்சுவடி. அதனை அறியாதவர்கள் குட்டையைக் குழப்பும் வேலையைச் செய்யாமல் ஒதுங்கியிருப்பது அவர்களுக்கும் சமூகத்துக்கும் தஃவா களத்துக்கும் செய்கின்ற மிகப் பெரும் சேவையாகும்.

ஒவ்வொரு விடயத்தையும் சொல்வதற்கு ஓரிடமிருக்கின்றதுஇ ஒரு நேரமிருக்கின்றதுஇ யாரிடம் சொல்ல வேண்டும் என்ற வரையறை இருக்கின்றது. அதனை அறிந்து புரிந்து பணி செய்கின்றவர்களாக அல்லாஹுத் தஆலா எம்மனைவரையும் ஆக்கியருள்வானாக!

ஆமீன்

2015.06.08

(நளீமிக்களுக்கிடையிலான வட்ஸ்அப் குறூப்பில் பகிரப்பட்டது. சகோதரருக்கு நன்றி)

Tuesday, June 23, 2015

நாட்டார் கதைக்குள் நடக்கும் அரசியல்!

 - 22 -


பத்திரிகை ஆசிரியர்:- 'உங்கள் கதையில் பல இடங்களில் சாலை வளைவுகள் வருகின்றனவே?'
எழுத்தாளர்:- 'நீங்கதானே சார் கதையில் நிறையத் திருப்பம் இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள்?'

இது ஒரு பழைய நகைச்சுவை. ஆனால் கதை என்ற அம்சத்துக்குத் திருப்பங்கள் வாசகனுக்கு சுவாரஸ்யத்தை வழங்குவன. கதை என்ற அம்சத்தை உள்ளீடாகக் கொண்டிருக்கும் நாடகம், சினிமா இரண்டுக்குமே அதி முக்கியமான அம்சம் இது.

அண்மையில் இணையத்தில்  வாய்வழிப் பழங்கதையொன்றைப் படித்த போது அதன் இறுதித் திருப்பம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இன்று பல்வேறு பெயர்களில் இந்தத் திருப்பங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அவை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டார் கதைகளில் நிலவி வந்திருக்கின்றன என்பதும் இன்று சிறுகதையும் கதை சார் கலை, இலக்கியமும் எந்த உயரத்துக்குப் போயிருந்தாலும் அவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவை இவ்வாறான நாட்டார் கதைகள்தாம் என்பதை மறுக்க முடியாது.

அரேபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த ஓர் அரசன் தன் அழகிய மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான். அருகேயுள்ள சிற்றரசுகளிலிருந்து மூன்று இளவரசர்கள் அவளைத் திருமணம் செய்யும் நோக்குடன் வந்திருந்தனர். முதலாமவன் அதிகார தோரணை கொண்டவனாகவும் இரண்டாமவன் பழக்கவழங்கங்களில் சுத்தமற்றவனாகவும் மூன்றாமவன் கிறுக்கு மாதிரியும் இளவரசியின் பார்வைக்குத் தோற்றினார்கள். 'இவர்களில் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை' என்று தந்தையிடம் முறையிட்டாள் அவள். அரசர் சாமார்த்தியமாக மூவரையும் அடுத்த தினம் வரும்படி கூறியனுப்பினார்.

அடுத்த தினம் மூவரும் வந்து சேர்ந்ததும் அரசன் சொன்னான்:- 'நீங்கள் மூவரும் எனது மகளுக்குப் பொருத்தமானவர்கள்தாம். ஆனால் ஒருவரைத்தான் திருமணம் செய்து வைக்க முடியும். எனவே நீங்கள் மூவரும் உலகத்தில் எந்த மூலைக்காவது செல்லுங்கள். ஓர் அதிசயமான பொருளுடன் யார் திரும்பி வருகிறீர்களோ அவருக்கு மகளைத் திருமணம் செய்து தருவேன். ஒரு வருடமும் ஒரு நாளும் உங்களுக்கு அவகாசம் உள்ளது!'

மூவரும் கிளம்பி ஒரு பாழ் கிணற்றருகே வந்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவகாச நாள் முடிவதற்கு ஒரு வாரம் இருப்பதற்குள் இதே மூவரும் சந்தித்துத் தாம் தேடியடைந்த பொருளை ஒருவருக்கொருவர் பார்த்து விட்டு அரசனைச் சந்திப்பது அந்த ஒப்பந்தம். அதே இடத்தில் மூன்று பாதைகளில் மூவரும் பிரிந்து சென்றார்கள்.

குறித்த தினத்தில் மூவரும் வந்து சேர்ந்தார்கள். முதலாமவன் கையில் ஒரு பளிங்கு உருண்டை இருந்தது. 'உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் இதில் பார்க்க முடியும்' என்றான் அவன். இரண்டாமவனிடம் ஒரு பறக்கும் விரிப்பு இருந்தது. 'இதில் அமர்ந்தால் உலகத்தின் எந்த மூலைக்கும் போய்ச் சேரலாம்' என்றான் அவன். மூன்றாமவனிடம் ஒரு டப்பாவில் களிம்பு வகையொன்றிருந்தது. அவன் சொன்னான்:- 'நோயுள்ளவர்களுக்கு இதைத் தேய்த்தால் உடனே குணமாகும். விரும்பியவர்களுக்கு உண்மையான அன்புடன் இதைத் தேய்த்தால் அவர்கள் இளமைக்குத் திரும்புவார்கள்!'

மூவரும் இரண்டாமவனின் விரிப்பில் ஏறியமர்ந்து அரசலைக்குள் சென்றிறங்கித் தமது பொருட்பளை அரசனிடம் காட்டி விபரம் சொன்னார்கள். அரசனுக்குப் பெருங்குழப்பம். அவர்களை அடுத்த தினம் வருமாறு கேட்டுக் கொண்டான். அன்றிரவு இப்பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்று பிரதம மந்திரியுடன் ஆலோவனை செய்தான். 'நமது நாட்டில் ரஷ்யா என்று சொல்லப்படுகின்ற தேசத்தில் இருந்து வந்து நீண்ட காலமா வாழும் ஞானி ஒருவர் இருக்கிறார். அவரை அழைத்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்' என்று அவர் ஆலோசனை சொன்னார்.

அடுத்த நாள் மன்று கூடிற்று. இளவரசர்கள், ரஷ்ய மூதறிஞர், மந்திரிப் பிரதானிகள், தோழியர் புடை சூழ இளவரசி, நாட்டு முக்கியஸ்ர்கள் குழுமியிருக்க பிரச்சனை மூதறிஞரிடம் ஒப்புவிக்கப்பட்டது. ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு அவர் சொன்னார்:- 'மூவரும் சரிசமமான பாத்தியதையுடையவர்கள். இந்த விடயத்தில் இளவரசிதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே சரியானது, நியாயமானது.

அமைதி குலைத்து இளவரசி தன் அரசணையிலிருந்து கீழே இறங்கினாள். நேரே மூதறிஞர் அருகே சென்று 'நான் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்றாள். அவை மௌனத்தில் உறைந்திருக்க தோழியர்கள் மயங்கி விழும் சப்தம் மட்மே மண்டபத்தில் எதிரொலித்தது.

'இளவரசி... நீ என்ன சொல்கிறாய்?' - அதிர்ந்தார் அரசர்.

இளவரசி எதையும் சட்டை செய்யாது மூன்றாவது இளவரசன் கையில் இருந்த களிம்பு டப்பாவை எடுத்து கிழவனான அறிஞனின் கையில் தேய்த்தாள். ஒரு நிமிடத்தில் கிழவன் அழகான இளைஞனாக மாறினான். இளவரசியை நோக்கி ஒரு காதல் புன்னகை சிந்தினான்.

இது ஒரு நாட்டார் கதைதான். ஆயினும் ஒரு சிறுகதை போன்று வர்ணனை, உரையாடல் என்று எழுதப்பட்டிருந்த கதையின் சுருக்கதையே இங்கு தந்திருக்கிறேன்.

இக்கதை அக்காலத்தின் அறபுத் தீபகற்ப அரசியலைப் பேசுகிறது என்று நான் நம்புகிறேன்.

நன்றி - மீள்பார்வை

Tuesday, June 9, 2015

அவளுக்கும் அழுகை என்று பெயர்!


 - 21 -

ராபியா வழமையைப் போல உரிய நேரத்துக்கு ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் அவளது முகம் வியர்த்திருந்ததை ஆசிரியை அவதானித்தார். ஆசிரியையின் வீட்டுக்கும் அவளது வீட்டுக்கும் வெறும் இருபது யார் தூரம்தான். இப்படி வியர்க்க விருவிருக்க அவள் வரவேண்டிய அவசியம் கிடையாது. இதற்கு முன்னர் அப்படி நிகழ்ந்ததும் இல்லை.

இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறாள் ராபியா. குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளை. படிப்பில் 70 வீதத்துக்கு மேல். பொது அறிவு - சமூக அறிவு 90 வீதத்துக்கும் மேல். தேசத்தின் பெருந்தலைநகருக்கு வெளியே புறநகரொன்றின் 'ஏனோதானோ' முஸ்லிம் பாடசாலை ஒன்றின் மாணவி.

இன்று அவளுக்கும் ஆசிரியையிடம் 'எலொகேஷன்' கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் பரீட்சை தினம். பரீட்சை 9.30க்கு ஆரம்பமாகி விடும். ஆசிரியையின் வீட்டிலிருந்து கணக்கிட்டால் ஏறக்குறைய 25 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பிரபல அரச பாடசாலையில்தான் பரீட்சை நடக்கிறது.

பல பெற்றோர் தமது பிள்ளைகளைத் தாமே பரீட்சைக்கு அழைத்துச் செல்லப் பொறுப்பேற்றுக் கொள்ள எஞ்சியது ராபியாவும் ஆசிரியையின் சகோதரியும் மாத்திரமே. அன்றைய வேறு தவிர்க்கவே முடியாத குடும்பச் சிக்கல் காரணமான ஆசிரியைக்குப் பரீட்சை நிலையம் வரை செல்ல முடியவில்லை. எனவே ஒரு முச்சக்கர வண்டியொன்றைப் பேசி இருவரையும் அனுப்பிப் பரீட்சை முடிவடைந்ததும் மீளக் கொண்டு வர ஆசிரியை தீர்மானித்தார்.

முதல் நாளிரவு ஆசிரியையினால் முச்சக்கர வண்டி பேசித் தீர்மானிக்கப்பட்டது. அந்த முச்சக்கர வண்டிக்குரியவர் ராபியாவின் தந்தை. காலை மகள் பரீட்சைக்குப் புறப்படும் மகளைக் கண்ட பிறகுதான் ஆசிரியையால் பேசப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணம் செய்ய இருக்கும் மாணவிகளில் ஒருத்தி தனது மகள் என்பது தெரிய வந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை, காலை ஏழு மணிக்கெல்லாம் முச்சக்கர வண்டி வராது என்று ஆசிரியைக்குத் தகவல் தரப்பட்டது.

முச்சக்கர வண்டிக்காரரின் முடிவு ஆசிரியைச் சிக்கலில் மாட்டி விட்டது. பரீட்சை மண்டபத்துக்குச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது எடுக்கும். இன்னும் அரை மணி நேரத்தில் வேறு ஒரு முச்சக்கர வண்டி ஒன்றைத் தேடும் அவசரத்தில் பலருக்குத் தொலைபேசியில் அழைப்பு எடுத்துக் கொண்டு தடுமாற்றத்துடன் நின்றிருந்த வேளையில்தான் ராபியா வியர்த்து விருவிருக்க ஆசிரியை வீட்டுக்குள் நுழைந்திருந்தான். அவள் எந்த வழியிலாவது பரீட்சைக்குச் சென்று விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்திருந்ததை அந்த இக்கட்டான நிலைமைக்குள்ளும் ஆசிரியையால் உணர முடிந்திருந்தது.

ஆசிரியையைப் பொறுத்த வரை ஒரு நல்ல சிநேகிதியைப் போல் பழகுபவள் ராபியா. கற்க வேண்டும் என்ந பேரவா கொண்டவள். பாடசாலையின் புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் பெரும் அர்ப்பணம் கொண்டவள். எந்த ஒரு விடயத்தையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும் சின்னப் பெண்.

ராபியா ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்து விருட்டென காரியாலய அறைக்குள் நுழைந்து விட்டாள். அவள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே வேறு ஒரு நம்பிக்கையான நபரின் முச்சக்கர வண்டி தேடும் முயற்சியில் ஆசிரியை ஈடுபட்டுக் கொண்டிருந்து தோல்வியடைந்து மனம் சலித்த நிலையில் காரியாலய அறைக்குள் நுழைந்த போது 'திக்' என்றது. ஆம் ராபியா பிழியப் பிழிய அழுது கொண்டிருந்தாள். தனது தந்தையார் செல்ல மறுத்த காரணத்தால் இவ்வளவு அழ வேண்டியதில்லை என்று நினைத்த ஆசிரியை அவளைச் சமாதானப்படுத்த முயன்றார்.

ஆனால் அழுகை நிற்கவில்லை. ராபியா அழுது ஆசிரியை பார்த்ததில்லை. புன்னகையும் சிரிப்புமாக ஒரு பட்டாம்பூச்சி போல் வளைய வரும் சின்னப் பெண் அவள். பரபரப்பும் உற்சாகமுமாகவே கண்டு பழகிய ராபியா தேம்பித் தேம்பி அழுவதைக் காணச் சகிக்கவில்லை ஆசிரியைக்கு. மிகுந்த போராட்டத்துக்குப் பின்  அவளது அழுகை தணிந்ததே தவிர முடிவடையவில்லை. எதுக்காக இப்படி அழுகிறாய்? என்று ஆசிரியை கேட்ட போது அவள் தேம்பிய படியே சொன்னாள்:-

'வாப்பா... வாப்பா... சோதினையும் தேவல்ல.. படிப்பும் தேவல்ல என்டு சொல்லுறாரு... பொம்புளைகள் படிச்சி என்னத்த செய்யப் போறீங்க என்டு சத்தம் போட்டாரு... என்னத்தப் படிச்சாலும் குசினிக்குள்ளதானே இருக்கப் போறாயென்டு சொன்னாரு...' என்றவள் மீண்டும் உரக்க அழ ஆரம்பித்தாள்.

அதைக் கேட்ட ஆசிரியைக்குக் கோபம் வந்தது. பஸ்ஸின் இலக்கங்களைச் சொல்லிக் கொடுத்து 'போங்க.. இரண்டு பேரும் பஸ்ஸில் போய் நல்லா சோதினைய எழுதிட்டுத் தைரியாமாத் திரும்பி வாங்க..' என்று அனுப்பி வைத்தார்.

இறுகிய உறுதியான முகத்துடன் ராபியாவும் மற்றைய மாணவியும் படியிறங்கினார்கள்.

'கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் இருவருக்கும் கட்டாயக் கடமையாகும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்' - என்று மௌலவியான ராபியாவின் தந்தை எங்கோ ஒரு பள்ளிவாசலில் உபந்நியாசம் செய்யும் காட்சி ஒரு நிமிடம் ஆசிரியையின் மனக்கண்ணில் விஸ்தாரமாக விரிந்து மறைந்தது.

நன்றி - மீள்பார்வை