Sunday, August 23, 2015

கௌரவத்துக்குள் பதுங்கிக் கிடக்கும் பொறாமை!


 - 25 -

'சில வாரங்களாக குத்பா பிரசங்கம் எதுவும் நிகழ்த்தவில்லை. குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தும் பேராவலை நோக்கி எனது நபுஸூ உந்திக் கொண்டேயிருக்கிறது' என்பது மாதிரி ஒரு பதிவொன்றை இட்டிருந்தார் எனது முகநூல் நண்பர்களில் ஒருவர். அவரது பதிவின் சாராம்சம் என்னவெனில் நீ குத்பா கேட்டுக் கொண்டிருப்பவன் அல்லன், பிரசங்கம் நிகழ்த்த வேண்டிய ஒரு முக்கியஸ்தன் என்ற ஆசை கொண்ட உணர்வு.

அவர் ஓர் இளம் ஆலிம். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இந்தப் பதிவைக் கண்ட உடனே எனக்கு அவர் மீது பெரும் மரியாதை உண்டானது.

பெரும்பாலும் புத்திஜீவிகளையும், பெரும் ஆலீம்களையும், பிரசாரகர்களையும், துறை சார் விற்பன்னர்னையும் ஆட்டி வைக்கும் ஆசை இது.  உள்ள மனதின் கள்ள மடிப்புக்குள் அமர்ந்து கொண்டு அவ்வப்போது எட்டிப் பார்க்கும் இழிவார்ந்த பண்பு. சாதாரணமானவர்களை இந்த நோய் பாதிப்பதில்லை.

அதே வேளை ஒரு நட்சத்திர அந்தஸ்தஸ்துக்கு எனது ஆன்மா ஆசைப்படுகிறது என்பது இந்த நோய் பிடித்தோரில் அநேகருக்குப் புரிவது இல்லை. புரிந்தாலும் கூட அதைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெரிதும் முயற்சிகளை மேற்கொள்வதும் உண்டு. விதிவிலக்குகளும் இல்லை என்று இல்லை.

பத்திரிகை ஒன்றில் ஒருவரது படைப்பாக்கம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதைப் பார்க்கும் சிலர் படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் மறந்து விடுகிறார்கள். ஒரு சிலருக்கோ அந்த எழுத்தாக்கத்தை எழுதியவர் மீது ஒரு பொறாமை ஏற்படுகிறது. பொறாமையின் விகிதாசாரத்துக்கேற்ப அந்த எழுத்தாக்கத்துக்கான விமர்சனம் விஷமாகக் கக்கப்பட ஆரம்பிக்கிறது. அதி உச்ச பொறாமையில் அதை எழுதியவரின் பாட்டன் காலம் தொடங்கி இன்று அவரது இறுதிக் குழந்தை வரை பிய்த்து உதறி எறிகிறார்.

இது எழுத்துத் துறையோடு மட்டும் சார்ந்தது அல்ல. எல்லாத் துறைகளிலும் இந்தப் பிரச்சளை உண்டு. குறிப்பாக இஸ்லாமிய பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் இத்தகைய நோயைக் கண்ணுறவும் கேள்விப்படவும் நேரும் போது ஒரு புறம் கோபமும் மறுபுறம் வேதனையும் ஏற்படுகிறது.

ஓர் அமைப்பு பொது அம்சம் சார் விடயமொன்று குறித்து ஒரு பயிற்சி நெறி நடத்தியது. அமைப்பு சார் ஒருவர் இதை ஏற்பாடு செய்து எனது தலைமையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு இரண்டு தினங்கள் நடந்தது. முதல் நாள் காலை அமைப்பு சார் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் அடுத்த தினம் மாலை மீண்டும் வந்து சான்றிதழ்கள் கையளிக்கும் வரை நிகழ்வில் அவர்கள் குறுக்கிட மாட்டார்கள். இப்படித்தான் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது.

ஆனால் முழு நாளும் அமைப்பு சார் மற்றொருவர் பின்னால் அமர்ந்திருப்பதை அவதானித்தேன். என்னதான் நடக்கிறது என்று மேலதிகமாக ஒருவரை நியமித்திருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். நிகழ்ச்சியின் மறு கட்டம் ஆரம்பமாகியது. வளவாளர்கள் தமது கடமையைச் செவ்வனே நடத்திக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை என்னோடு இணைந்திருந்த அமைப்பின் அங்கத்தவர் காலை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர் காதுக்குள் ஒரு தகவல் சொன்னார்.

காலை நிகழ்ச்சி தொடங்கு முன் 'பின்னால் அமர்ந்திருந்த நபரு'க்கு 15 நிமிடம் பேசக் கொடுக்க வேண்டும் என்றார் அவர். அது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றேன் நான். இல்லை, அவர் ஆசைப்படுகிறார் என்றார் நண்பர். இந்த சபஜக்டுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றேன் நான். ஆம். அது தெரியும். ஆனால் அவரையும் நான் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்றார் நண்பர். மன ஆசையை அடக்க முடியாதவர் எப்படி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கேட்டேன் நான். நண்பர் மிகவும் புரிந்துணர்வு கொண்டவர். அவரது வேண்டுகோளையேற்று பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது என்ற ஒப்பந்தத்துடன் அழைத்து வரப்பட்டார் அவர். ஆனால் நாற்பது நிமிடங்கள் பேருரை ஆற்றி விட்டுத்தான் ஓய்ந்தார்.

இந்த மாதிரி ஆசைகளைச் சின்னச் சின்ன ஆசைகள் என்று சொல்லி விட முடியாது. ஆன்மாவோடும் மனப் பக்குவத்தோடும் சம்மந்தப்பட்ட விடயம் இது. ஆசைகளை அறுத்துத் திருப்தியுற்ற ஆத்மாக்களிடம் இந்தப் பண்பு குடிகொள்வது இல்லை. அந்த ஆத்மா இதை வளர விடுவதும் இல்லை. எங்கு நசித்து நாற்றமெடுக்கும் குப்பை இருக்கிறதோ அங்கேதான் புழுக்களும் பூரான்களும், தேள்களும் பிறப்பெடுக்கின்றன.

தன்னளவில் பக்குவமாக இருத்தல், தன்னையே உசாவுதல், சகலரையும் சமமாக மதித்தல், பிழையானதை அழகிய முறையில் சுட்டிக் காட்டுதல், நிறைகளைப் பாராட்டுதல் போன்ற நற்குணங்கள் வாய்க்கப் பெறின் இந்த நோய் நம்மை அண்டுவதற்கு நியாயம் இல்லை. பொறாமை; என்ற குப்பையிலிருந்தே இந்த இழிய புழுக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதைத் தெளியப் புரிந்து கொண்டால் யாவும் நலம்.

முகநூலின் இளம் வயது ஆலிம் நண்பரைப் பிற்காலங்களில் காணக் கிடைக்கவில்லை.  'திறந்து பேசும் மனதை அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கிறான், பாராட்டுக்கள் என்று அவருக்கு ஒரு பின்னூட்டம் இட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது!

Sunday, August 9, 2015

அஸ்ஸலாமு அலைக்கும்

- 24 -

அரபு நாடுகளுக்குத் தொழிலுக்குச் சென்றவர்கள் சுவாரஸ்யமாகச் சொல்லும் பிரதான கதைகளில் ஒன்று வாகன விபத்துக்கள்!

இரண்டு அறபிகள் தங்களது வாகனங்களை உரசிக் கொண்டால் நடக்கும் காட்சி. இருவரும் வாகனங்களிலிருந்து வெளியேறி முதலில் ஸலாம் சொல்லிக் கொள்வார்களாம். அதன் பிறகு ஆளை ஆள் கடும் வார்த்தைகளில் திட்டுவார்களாம். இது வெளிநாட்டார் கண்களுக்கு விருந்து. வேறு எங்கு இப்படி விபத்து நடந்தாலும் இறங்கியதும் தடித்த வார்த்தைப் பிரயோகமும் சில வேளை கைகலப்பும் நடக்கும். இங்கு வித்தியாசமான காட்சி!

மற்றொரு அரசியல் திருவிழா ஆரம்பித்து விட்டது. சமூகத்தில் சகலராலும் கவனிக்கத்தக்க அம்சங்களை அரசியல்வாதிகள் மேல் விட்டு விட்டு விமர்சிக்கும் கோலாகலம் ஆரம்பமாகி விட்டது.

ஒவ்வொரு மனிதனும் தான் இருக்கும் நிலையிலிருந்து மேலே செல்ல விரும்புவானே தவிர, தனது நிலையைக் கீழிறக்கிக் கொள்வதற்கு விரும்புவதில்லை. அரசியல்வாதியை மட்டும் இந்த நியதிக்கு அப்பால் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. புகழும் செல்வாக்கும் ஒரு போதை. அவற்றிற்குள் அகப்பட்டோர் அவை இல்லாமல் வாழ்வதைப் பெரும் துன்பமாகவே காண்பார்கள்.

எனவே தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு அரசியல்வாதியும் முயற்சியெடுக்கிறான். அவனுக்குத் தேவைப்படுபவை வாக்குகளும் அதற்குரிய மனிதர்களும். அரசியல்வாதியின் வாழ்க்கை வாக்குகளிலேயே தங்கியிருப்பதால் அவன் எல்லா வகையான மனிதர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அரசியல்வாதியோடு இணைந்து இருப்பதிலும் அதைப் பயன்படுத்திச் செல்வாக்குத் தேடவும் பணம் உழைக்கவும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. இவர்களே பெரும்பாலும் ஓர் அரசியல்வாதியின் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

ஏற்கனவே தன்னோடு இருப்பவர்களையும் புதிதாகத் தன்னுடன் இணைவோரையும் சமாளிப்பதில் அரசியல்வாதியின் காலத்தில் பெரும் பகுதி வீணடிக்கப்படுகிறது. எதிராளியான இருந்த போதும் புதிதாக வந்து இணையும் ஒருவரை அரசியல்வாதி ஏற்றுக் கொள்ளத் தயாராகும் போதே ஏற்கனவே அவருடன் இருக்கும் பழைய ஆதரவாளர்கள் ஆட்சேபனை தெரிவிக்கத் தொடங்குகிறார்கள். அல்லது மக்கள் செல்வாக்குள்ள ஒரு நபர் அரசியல்வாதியோடு இணைவதாக இருந்தால் அரசியல்வாதியின் பழைய ஆதரவாளர் அல்லது ஆதரவாளர்கள் சிலர் கழிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை வைப்பதும் உண்டு. இவ்வாறான சிக்கல்கள் பொது வெளியில் வாய்த் தர்க்கத்தில் தொடங்கி கைகலப்பில் முடிகின்றன.

இது போக, இன்றைய முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரை ஓரளவு மக்களுக்கு அறிமுகமானவர், ஓர் அரச ஊழியர், ஒரு வர்த்தகர், ஒரு ஹாஜியார் - எல்லோருமே தம்மை ஒரு முக்கியமான சமூகப் பிரஜையாகக் கருதி அரசியல்வாதி தமது காலடிக்கு வரவேண்டும், தன்னுடன் தனியே உரையாட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அநேகமானோர் தத்தமது சொந்த லாபங்கள் கருதிய கோரிக்கைகளை முன் வைத்துப் பேரம் பேசுகின்றனர். அரசியல்வாதி 'ஆம்' என்று ஏற்றுக் கொண்டால் அடுத்த தினம் சமூகத்தின் நன்மைக்காகக் குறித்த அரசியல்வாதியுடன் இணைந்து விட்டேன் என்று கதை விடுகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு ஒரு குறித்த அரசியல்வாதியுடன் இணைபவர் தனது கோரிக்கை நிறைவேறாதவிடத்து அதே கோரிக்கையுடன் வேறு ஓர் அரசியல்வாதியுடன் சேர்ந்து கொள்கிறார். தான் ஏற்கனவே இணைந்திருந்த அரசியல்வாதி சமூகத்துக்குச் சேவையாற்றாமல் சொந்த லாபங்கருதியே செயற்படுகிறார் என்றும் குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்.

கற்ற சமூகம் என்று ஒரு பிரிவினர் இந்த சமூகத்தில் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் பக்கம் தலை வைத்துப் படுப்பது கூடக் கிடையாது. அரசியல்வாதியைக் கண்டால் பிடிக்காது. சிலவேளை தனது கல்வித் தராதரமோ, அதற்குக் கீழோ அல்லது அதற்கு மேலோ கொண்டிருக்கும் ஓர் அரசியல்வாதியை அவருக்குப் பிடிக்காமல் இருப்பதற்குக் காரணம் பொறாமை. இவர்கள் அரசியல்வாதியின் மேல் குற்றப் பத்திரிகை வாசிப்பதையே வாழ் நான் பூராகவும் செய்து கொண்டிருப்பார். சமூக அக்கறையுடன் ஒரு விடயத்தை நேரடியாகச் சுட்டிக் காட்டவோ தமமைப்போன்ற ஓர் அணியுடன் சென்று சமூகக் குறைகளை அரசியல்வாதியிடம் எடுத்துச் சொல்லவோ இவர்கள் ஒரு போதும் முனைந்தது கிடையாது.

தேர்தல் வந்து விட்டால் புதிய இணைப்புகள் நிகழும் அதேயளவு புதிய பிணக்குகளும் ஏற்படுகின்றன. ஒரே குடும்பம் இரண்டாக சில வேளை மூன்றாகப் பிரிந்து நின்று சண்டை பிடிக்கிறது. சகோதரர்கள் கூடப் பிரிந்து நிற்கிறார்கள், சண்டையிடுகிறார்கள். அந்தச் சண்டை பொலிஸ் நிலையம், நீதி மன்றம் என்று நீண்டு செல்கிறது. வாழும் காலத்தில் பாதியை பிணக்குகளிலேயே கழித்து விடுகிறார்கள். ஒரு சிலர்; வருடக் கணக்காக மற்றவரின் முகத்தைக் கூடப் பார்ப்பதுமில்லை. ஸலாம் சொல்லிக் கொள்வது கூட இல்லை.

எந்த அரசியல்வாதிகளுக்காக இவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்களோ அவர்கள் தேர்தல் முடிந்ததும் ஒரே வட்டத்துக்குள் வந்து விடுகிறார்கள், நட்புப் பாராட்டுகிறார்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் ஒரே அணியில் ஒன்று பட்டு விடுவதும் உண்டு.

எந்த ஒரு வாகன விபத்து நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் சண்டையிட்டாலும் முடிவு அடுத்த கட்டம் என்ன செய்வது என்று யோசிப்பதுதான். நடந்து முடிந்து விட்ட பிறகு சண்டையை நீட்டுவதால் பிரயோசனம் எதுவுமில்லை.

வாகனங்களைப் பழுது பார்த்தெடுத்து மீண்டும் வழமைக்குத் திரும்பி விடுவதுபோல தேர்தல் முடிந்த கையோடு பழைய நிலைக்குத் திரும்பும் பக்குவம் நமக்குள் வரவேண்டும்.

ஸலாத்தைப் பகிர்ந்து கொள்வதால் எப்போதும் நஷ்டம் வருவதில்லை!

(மீள்பார்வைக்கு எழுதியது)