Sunday, May 31, 2015

நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்... தலையைக் குனி!


- அகமட் புவாட் நஜ்ம் -
எகிப்து (1929 - 2013)

தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்
தலை குனிந்திருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன்
நாம் உமக்கு சுதந்திரத்தை அருளினோம்

முழுமையான எண்ணத்துடன் செயல்படுவதெனில்
சமூக நலனுக்காக அர்ப்பணிப்பு இருக்குமெனில்
உனது செயல்கள் சல்லடை போன்று பயனற்றது
பணிவுள்ளவர் மாத்திரமே நிமிர முடியும்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

பாதுகாப்பவர்களே அதைத் திருடுவோராக இருக்கையில்
தமது தேசத்தை முதுக்குப் பின்னால் வீசுகையில்
அதிகாரிகளின் சீருடைகளால் பாதுகாகக்ப்படும் அவர்கள்
அதை முழுமையாக விழுங்கி விடுகிறார்கள்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

சிரமப்பட்டுச் சம்பாதித்த எதுவும் உன்னுடையதல்ல
எல்லாப் பாதைகளிலும் பட்டினி உன்னைத் தடுக்கிறது
திரும்பி எல்லாப் புறங்களையும் பார்
திருடர்களையும் அநீதக்காரரையுமே காண்பாய்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

வேறொரு நிலத்தை நீ காண்பாயெனில்
அந்த மனிதர்கள் வேறொரு ரகம்
சங்கிலியில் பிணைக்கப்பட்ட குரங்கைப் போல
அல்லது ஒரு வெளவாலைப்போல
நீ தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவன்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

உனக்கு முன்னால் அல்லது உனக்குமேலே 
புறக்கணிப்பு உள்ளதெனில்
அது உன்னைக் கயிற்றில் கட்டியிருக்கிறதெனில்
அது உன்னை அழிவுக்கு இட்டுச் செல்கிறதெனில்
நீ நஞ்சிலிருந்து அருந்திக் கொண்டிருக்கிறாயெனில்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

ஒரேயொரு சொல் உன்னைக் குற்றஞ் சுமத்துகிறதெனில்
உனது நெஞ்சுக்குள் உனது நம்பிக்கையை 
மறைத்து வைத்திருப்பாயெனில்
உன்னுடைய கண்களில் நான் அவமதிப்பைக் காணும்போது
உன்னுடைய இழப்புக்களையெல்லாம்
என்னுடைய இழப்புக்களுடன் இணைத்து விடு!

தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

Tuesday, May 26, 2015

வேர்கள் இறக்கும் விதம்!

எனக்குள் நகரும் நதி - 20 

'தாம் செய்வது தப்பு என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள்!'

அண்மையில் என்னை நட்புக் கருதிச் சந்திக்க வந்த சகோதரர் தொடர்ந்தார்.

'பாவமான காரியத்தைச் செய்கிறோம் என்பதையும் உணர்ந்தேயிருக்கிறார்கள். தாம் செய்வற்றை மிகவும் அவதானமானவும் நுணுக்கமாகவும் மேற்கொள்கிறார்கள். ஹலால் ஹராம் விடயத்தில் அவர்கள் எல்லோருமே மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பாவம் என்று தெரிந்தும் சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் இவற்றைச் செய்து கொண்டிருக்கிறீர்களே? என்று கேட்டால் 'எங்கள் குடும்பத்துக்கு நீங்கள் சோறு போடுவீர்களா?' என்று ஒற்றைக் கேள்வியை நம்முன்னால் வீசுகிறார்கள்!'

சகோதரர் அரச ஊழியர். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்த அவதானங்களை மேற்கொள்ளும் அரச ஊழியர். ஒரு பிராந்தியத்தின் மூன்று குக்கிராமப் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத, மார்க்க விரேத விடயங்களைப் பற்றிய தகவல்களை என்னுடன் கவலை தோய்ந்த முகத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

கஞ்சா, போதை லேகியம் மற்றும் விபசாரம் ஆகியன வியாபார மயமாகி அமோகமாக நடந்து கொண்டிருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார். போதைதரும் வஸ்துக்களின் வியாபாரத்தில் பெண்களும் ஈடுபடுகிறார்கள் என்பது முக்கியமான விசயம். ஆபத்தான வியாபாரமாக இருந்தாலும் அவர்கள் தைரியத்துடனும் கெட்டித் தனத்துடன் ஈடுபடுவதையும் அது குறுகிய ஈடுபாட்டில் நிறையப் பணத்தை ஈட்டிக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கிறது என்பதையும் அந்தச் சகோதரர் குறிப்பிட்டார்.

குற்றம் உறுத்தாத மனோநிலை வளர்ந்த பிறகு அதிலிருந்தும் கிடைக்கும் மேலதிக பணத்திலிருந்தும் மேலும் மேலும் தீங்குகள் பரவ ஆரம்பிக்கின்றன. பின்னர் பணம் என்ற ஒன்றுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்குரிய தயார் நிலைக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். குறிப்பாக அவர்களது பிள்ளைகள் இவற்றைப் பார்த்தும் கேட்டும்தான் வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவோ சமூகத்துக்கு உரமானவர்கவோ எப்படி வளர முடியும்? இவ்வாறான சூழலுக்குள் வளரும் ஒரு நல்ல பிள்ளையும் கூட சந்தேகத்துக்குரிய பிள்ளையாகவே நோக்கப்படும் அபாயம் உண்டு.

சமூகத்தின் வறிய நிலை பற்றிய தொட்டுக் காட்டல்கள் மேற்கொள்ளப்படும்ம் போதெல்லாம் 'முற்றாக வறுமையை ஒழித்து விட முடியாது' என்றும் 'எல்லாக் காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் எல்லாச் சமூகங்களிலும் ஒரு சாராரிடம் வறுமை நிலவிக் கொண்டேயிருந்திருக்கிறது' என்றும் படிப்பாளிகள் சிலர் கணக்குக் காட்டி விட்டு நழுவி விடுகின்றனர். அது சரியாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

அப்படியானால் வாழ்வின் சகல துறைகளிலும் தெளிவும் வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கும் சூழலில் சக மனிதன் வாழ்வு குறித்த அக்கறை வளர்ச்சியடையவில்லை என்றல்லவா அர்த்தமாகி விடுகிறது. வாழ்வின் நவீன முன்னேற்றங்களால் மனிதாபிமானம் மட்டும் பின் தங்கி இருக்கிறது என்றால் அது பூரணத்துவமான வளர்ச்சி அல்ல என்றல்லவா அர்த்தப்படும்?

சிறப்புற்ற நடுநிலமைச் சமுதாயம் என்று பெயர் பெற்ற இஸ்லாம் என்ற வாழ்வியல் முறையைக் கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தில் இவ்வாறான இழிநிலை அடியோடு அழிந்து விடாதிருந்தாலும் பெரிய அளவில் நிலவுவதற்கு இடமில்லை அல்லவா?  அப்படியாயின் தவறு எங்கேயிருக்கிறது? அதைக் கண்டு பிடிப்பவர்கள் யார்? அதற்கான மாற்றுத் திட்டங்களை வகுப்பது யார்? செயல்படுத்துவது யார்? நான் என்னளவில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக இருக்கிறேன் என்ற நமது அளவுகோல் முடிவுடன் வாழும்  நாம் அனைவரும் இந்த நிலைக்கு ஜவாப்தாரிகள் இல்லையா?

லட்சக் கணக்கான புத்தகங்கள் வருகின்றன, பத்திரிகைகள் வருகின்றன, நடந்தும், எழுதியும், பேசியும் தஃவா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்க்கப்பணி, அடிப்படை மனிதப் பணி என்ற பெயரால் கோடிக் கணக்கான அறபுப் பணம் பல பகுதிகளிலும் இறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய நிலையில் மேம்பட்டிருக்கும் தஃவாப் பணி இடம் பெறாத, அடிப்படை மனித உதவி என்ற பெயரால் பணம் இறைக்கப்படாத ஒரு கால கட்டத்தில் இத்தகைய பெருமளவிலான இழி நிலை முஸ்லிம் சமூகத்தில் இருந்தது கிடையாது.

அரசியல் விவகாரமாகட்டும், மார்க்க விவகாரமாகட்டும்... ஒவ்வொருவரும் தம்மை முற்படுத்திக் கொள்ளவும் தமது அணியை நியாயப்படுத்திக் கொள்ளவும் தமது குழுவுக்கு வெள்ளையடிக்கவும் விவாதம் நடத்தவுமே நமக்குக் காலம் சரியாக இருக்கிறது. அற்பமான ஒற்றை வசனத்துக்கு அழுத்தம் கொடுத்து ஆயிரம் பேர் கூடி ஆளுக்கொரு அர்த்தம் கொடுத்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எதுமுக்கியம், எது முக்கியமல்ல என்ற தெளிநிலைக்கு அப்பால் நின்று 'நீ சொல்வது பிழை - நான் சொல்வது சரி' என்பதில் தொங்கிக் கொண்டு அடிபிடிப்படுகிறோம்.

இவற்றையெல்லாம் கடந்து சமூக ரீதியான விடயங்களை முற்படுத்தி ஒன்று படுவதன் மூலமே இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்க முடியும்.

முஸ்லிம் சமூகம், இஸ்லாம் என்று வந்து விட்டாலே உனது இஸ்லாம், எனது இஸ்லாம் என்று பாகுபாடு துவங்கி விடும் சூழலில் இதுவெல்லாம் என்று சாத்தியப்படும் என்றுதான் தெரியவில்லை.  

நன்றி - மீள்பார்வை

Sunday, May 17, 2015

வில்பத்து - மறிச்சிக்கட்டி


வில்பத்து!... முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கான வில்லங்கமும்
மரிச்சிகட்டிக்கு மடித்துக் கட்டிச் சென்ற தென்னிலங்கை இனவாதமும்
-----------------------------------------------------------------------------------------------------
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வில்பத்து என்ற இந்த இரு விடயங்களையும் ஒன்றாக முடிச்சுப் போட்டு வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தடை போடுவதற்கு இன்று தென்னிலங்கை சிங்கள சக்திகள் ஒன்றுபட்டுள்ளன. தேசிய வனத்தை அழித்து முஸ்லிம் பிரதேசம் ஒன்றினை வடக்கில் உருவாக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் திட்டமிட்டுள்ளார் என்ற சோடிக்கப்பட்ட அபாண்டங்கள் இன்று சிங்கள இனவாதிகள் மத்தியில் நிதர்சனமாக்கப்பட்டு வருகிறது.

இந்தக் குற்றசாட்டுகளுக்கு, அனைத்துக்கும் ஒரு கை ஓசையாக நின்று பதிலளித்து, நியாயத்தை எவ்வளவுதான் விளக்க அமைச்சர் ரிஷாத் முயன்றாலும் அது தென்னிலங்கையில் தோற்கடிக்கப்பட்ட ஒன்றாகவும் காதுக்கு எட்டாத கணக்கெடுக்கப்படாத விடயமாகவும் மாறியுள்ளது.
அமைசச்ர் ரிஷாத் பதியுதீனுக்கு இந்த அரசாங்கம் பயந்து செயற்படுகிறது என பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார தேரர் பகிரங்கமாகவே கூறி இந்த விடயத்தில் அரசாங்கத்தை சூடேற்ற முயற்சித்துள்ளார்.

முஸ்லிம்களின் சிறிதான மீள்குடியேற்றம் வில்பத்து சரணாலய பகுதிக்கு வெளியில் வில்பத்து சரணாலயத்தின் எல்லையாக மோதரகம ஆற்றுக்கு அப்பாற்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது. மாறாக, வில்பத்துவின் எல்லைக்குள் சட்டவிரோதமாக யாரும் மீள்குடியேற்றப்படவில்லை என அரசாங்க அதிபரான சிங்களவர் ஒருவர் தெரிவித்தும் கூட நம்பாமல் விடாப்பிடியில் நிற்கும் இவர்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுவதனைக் கேட்டு, ஏற்று ஆறுதல் அடைவர் என்று நம்புவதற்கும் நியாமும் இல்லைதான்.

அத்துடன் முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சரான பஷில் ராஜபக்ஷவும் இது தொடர்பில் சில விடயங்களை தெரிவித்துள்ளார். வில்பத்து மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் உரியமுறைகளை பின்பற்றியே வடக்கு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டது. வடக்கு வசந்தம் திட்டத்திற்கு தான் பொறுப்பாளராக நியமிக்கபட்பட்டிருந்த போது, உரிய சட்டங்களை பின்பற்றி அங்கு மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு, அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கப்பட்டது, இவை முழுக்கமுழுக்க சட்டபூர்வமானவை. தற்போது சிலர் தமது இனவாதச் செயற்பாட்டுக்காக இவ்விவகாரத்தை தூக்கிப் பிடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கு வாழ்கின்ற மக்களுக்கு தலா அரை ஏக்கர் காணி வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அது தனியே முஸ்ஸிம்களுக்கு மாத்திரமல்ல. தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்ற உண்மையும் மறைக்கப்பட்டு விட்டது.
இதற்கு மேலாக தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகளும் பெளத்த பிக்குகளும் வில்பத்து பிரதேசத்துக்குச் சென்று அங்கு ஒன்றிரண்டாக காணப்படும் முஸ்லிம் குடும்பங்களை வெறுப்போடு பார்வையிட்டு வருகின்றனர். அவர்களது பார்வை காட்டுவாசிகளைக் கண்டு நோக்குவது போன்று கடுப்பாக உள்ளது.

வில்பத்து எல்லைக் கிராமமான சிலாவத்துறைப் பகுதியில் உள்ள மரிச்சிக்கட்டி, மேதரகம பகுதியை அண்டிய உப்பாறு போன்ற பகுதிகளுக்கு சிஹல உறுமய, ராவணபலய, ஜே.வி.பி கட்சிகளைச் சேர்ந்தோர் மட்டுமின்றி பிக்குமாரும் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்வையிடுகின்றனர். வன ஜீவிராசிகளை அல்ல.. முஸ்லிம்களைத்தான்.அங்கு செல்வோர் மக்களிடம் உரையாடாமல் புத்தர் சிலை ஒன்றை எங்கு வைப்பதென தங்களுக்குள்ளேயே கலந்தாலோசித்து வருவதாகவம் கூறப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தெரிவித்திருந்தார். அதாவது, தான் ஜனாதிபதியாக பதவியேற்று இதுவரையும் தனக்குரிய நிறைவேற்று அதிகாரத்தை ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தியதாக கூறியிருந்தார். அதுவும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பிலேயே தான் இவ்வாறு தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்தாக கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வில்பத்து தொடர்பில் அவரது கவனத்துக்குக் கொண்டு வந்து உடனேயே அதனைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்ட பின்னரே ஜனாதிபதியினால் இவ்வாறானதொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்துக்காகவே இன்றைய ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார் என்பதே இதன் மறைபொருள். இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம்தான்.

ஆனால், இந்த நாட்டு முஸ்லிம்கள் காட்டுவாசிகள் அல்லர். காட்டில் வாழும் தேவை அவர்களுக்கு இல்லை. வடபுல முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மிகவும் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வசதி வாய்ப்புடனும் வாழ்ந்தவர்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டாலும் அவர்கள் எதனையும் அடாத்தாகப் பிடித்து வாழவில்லை என்பதனை ஜனாதிபதி அவர்களும் எதிர்பபுச் சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களும் அல்லர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் வடமாகாண செயலணியினாலேயே வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு வாழ்விடம் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவை பாதுகாக்கப்பட்ட வன பிரதேசத்துக்குள் உட்பட்டவை அல்ல. அந்தப் பணிகளே இன்று வரை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு ஒரு முஸ்லிம் பிராந்தியத்தை உருவாக்கப் போவதாகவும் வெளிநாட்டு முஸ்லிம்களையும் அங்கு குடியமர்த்த முயற்சிப்பதாகவும் கூறுவது இட்டுக்கட்டப்பட்ட அபாண்டம்.

இது ஒரு புறமிருக்க, வடபுல முஸ்லிம்கள் பிரச்சினை என்றால் அதனை ரிஷாத் பதியுதீனே பார்த்துக் கொள்ளட்டும் என்ற ஒரு மனப் போக்கு ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் காணப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் இந்த விடயம் இப்போது பூதாகாரம் பெற்றுள்ள நிலையில் மற்றயை தரப்புகளால் மௌனம் சாதிக்கப்படுவதுதான் இந்தக் கேள்விக்கு காரணமாகிறது இந்தப் பிரச்சினை என்பது ரிஷாத்துடன் தொடர்பானது என மேலெழுந்தவாரியாக நோக்குவது தவறு. வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையையும் தேசிய பிரச்சினையாகவே கருதி அனைவரும் செயற்பட வேண்டும்.

மலையக தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ்க் கட்சிகளும் அவர்களுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்றன. களத்துக்குச் சென்று காரியம் செய்கின்றன. அதேபோன்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் மலையக அரசியல் தலைமைகள் குரல் கொடுக்கின்றன. களத்தில் நிற்கின்றன. இதுதான் இன ஐக்கியம் என்பது.

சிங்களவர்களை எடுத்து நோக்குங்கள் அவர்களுக்குள் கட்சி, அரசியல் என பல பிரச்சினைகள், வேறுபாடுகள் உள்ளன. ஆனால், தங்கள் இனம், உரிமை என்று வரும்போது அனைவரும் ஒன்றாக ஐக்கியப்பட்டு விடுகிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்ள முடியும்.

எனவே, முஸ்லிம்கள் இவ்வாறானவர்களின் பேச்சுகளை நம்பி விடக் கூடாது. வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையில் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து ஆக வேண்டிய காரியங்களை ஆற்றுவதே இன்றைய அவசரம்.

எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் விசேடமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பங்களிப்பு மிக முக்கியம். இந்த விடயத்திலட அவர் தனது கவனத்தையும் செலுத்தி செயற்படுவாரானால் வடபுல முஸ்லிம்கள் வாழ்வில் நிச்சயம் நிம்மதி ஏற்படும் என்றே நம்பலாம்.

இதேவேளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஒரு விடயத்தைக் கூறியுள்ளார். அதாவது, வில்பத்துவில் குடியேற்றங்கள் எதுவும் இல்லை என்று. ஆம் அதுதான் உண்மை. ஆனால், சம்பிக்க ரணவக்க இவ்வாறானதொரு கருத்தைக் கூறியதற்காக ஏதோ அவரைப் பாராட்டலாமே தவிர உள்ளார்த்தமாக அவரைப் பாராட்ட முடியாது.

ஏனெனில் முஸ்லிம்களுக்கு அண்மைக் காலங்களில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான பிதா மகன் அவர்தான். பொதுபல சேனாவுக்கு முன்னரேயே இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நூல்களை, எழுதி நச்சுக் கருத்துகளை விதைத்தவர் சம்பிக்கதான. இவரது இனவாத நூல்களைப் படித்ததன் காரணமாககே சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைக்க ஆரம்பித்தனர். மர்ஹும் மாமனிதர் அஷ்ரஃபினையும் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் கடந்த காலங்களில் எவ்வாறு இந்த சம்பிக்க ரணவக்க விமர்சித்தார் என்பது தெரிந்த விடயம்.அக்கரைப்பற்று நுரைச்சோலை திட்டத்தை நிறுத்தியதன் சூத்திரதாரிகளில் இவரும் பிரதானமானவர்தானே?
நன்றி வீரகேசரி வாரவெளியீடு (17-05-2015)

Tuesday, May 12, 2015

மூன்று காட்சிகள்!

 - 19 -

காட்சி - 1

ரமளான் மாதம்! ஒரு நாள் மாலை 6.00 மணி. ஆமர் வீதி போலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சிக்னலைத் தாண்டி விடவேண்டும் என்று வந்த வண்டியால் கடக்க முடியவில்லை. சிவப்பு விளக்குச் சமிக்ஞை விழுந்து விட்டது. வேகமாக வந்த அந்தக் கார், நிறுத்தியாக வேண்டிய கோட்டுக்குள் நிறுத்த முடியாமல் ஓர் அடி தூரம் தாண்டி நின்றது. வாகனம் நிறுத்த வேண்டிய கோட்டுக்கு அப்பால் பாதசாரிகள் கடவை!

வீதியின் மத்தியில் நின்று சிவப்பு விளக்குச் சமிக்ஞை விழுந்ததும் பாதசாரிகள் கடவையில் இறங்கிய அந்த இரண்டு இளைஞர்கள் எல்லைக் கோட்டைத் தாண்டிக் கார் முன்னால் வருவதைக் கண்டு அதிர்ந்து பின் வாங்கினார்கள். இருவருக்கும் 16 அல்லது 17 வயது இருக்கும். அதற்குக் குறைவாக இருக்கலாமே தவிர கூடுதலாக இருக்க முடியாது. இருவர் தலைகளிலும் தொப்பி. அவர்கள் கிராண்பாஸ் வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு நோன்பு துறக்கச் செல்வதற்காகப் பாதை கடக்க முற்பட்டவர்கள்.

பின்வாங்கிய இருவரும் காரின் அருகே வெகு இயல்பாக நெருங்கிக் காரின் சாரதியின் பக்கக் கண்ணாடியைக் கீழிறக்கச் சைகை செய்தார்கள். சாரதி கண்ணாடியைக் கீழிறக்கிறதும் அவர்களில் ஒருவன் சாரதியின் முகத்தில் ஓங்கிக் குத்தினான். கோடு தாண்டியது குற்றம் என்று சைகையால் சொல்லித் திட்டினான். சாரதி உறைந்து போயிருக்க அவர்கள் தெருவைக் கடந்து போனார்கள் வெகு சாதாரணமாக!

அந்த வாகனத்தைப் பினனால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்த எனக்கு வாகனத்தின் ஏஸியையும் தாண்டி வியர்த்தது!

காட்சி - 2

தெமடகொட - பேஸலைன் வீதியில் ஆரம்பமாகி உள்ளே செல்லும் பாதைகளில் ஒன்று. நான் அந்தப் பாதைக்குள் காரைத் திருப்பிய போது இரவு 7.30 அளவில் இருக்கலாம். அந்தத் தெருவில் இரண்டு வாகனங்கள் செல்லவும் வரவுமான இடம் உண்டு. அதாவது ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால் மற்றொரு வாகனம் செல்லுமளவு மாத்திரம் செல்ல முடியும்.

தெருவுக்குள் நுழைந்து 25 யார் கூடச் சென்றிருக்க மாட்டேன். ஒரு வீட்டின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. ஒரு புறம் நான்கு வாகனங்கள். அடுத்த பக்கம் இரண்டு வாகனங்கள். நடந்து செல்பவர்கள் நெளிந்து புகுந்து சென்று கொண்டிருந்தார்கள். என்னால் தாண்டிச் செல்ல முடியவில்லை.

அது ஒரு முஸ்லிம் திருமண வீடு. உள்ளே பெருந்தொனியில் கஸீதா ஒலித்துக் கொண்டிருந்தது. நான் 'ஹோர்ன்' அடித்தேன். கொத்துக் கொத்தான நகைகளுடன் மினுக்கப்பட்ட முகங்களுடன் அவ்வீட்டுக்குள் பெண்கள் நுழைந்து கொண்டிருந்தனர். அவ்வப்போது கோட் ஷூட் போட்ட நபர்கள் தெருவுக்கு வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தனர். ஆனால் யாருக்கும் வாகனம் ஒன்று தாண்டுவதற்குக் காத்து நிற்பது குறித்து எந்தக் கவனமும் இருக்கவில்லை.

நான் அமைதியாக, பொறுமையாகக் காத்திருந்தேன். பின்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்து நின்றது. மேலும் பத்து நிமிடங்கள் கழிந்ததும் முச்சக்கர வண்டிக்காரர் கோபத்துடன் அந்த வீட்டுக்குள் நுழைந்து வெளியில் வந்தார். அதற்குப் பிறகும் ஐந்து நிமிடங்கள் கழிந்து ஒருவர் வெளியே வந்து ஆர்வமில்லாத போக்கில் ஒரு புற வாகனங்களை ஒதுக்கித் தந்தார்.

காட்சி - 3

கிராண்பாஸ் வீதி முழு மொத்தமாக அந்த மதிய வேளை வாகனங்களால் நிரம்பி வழிந்தது. நான் சந்தி கடந்தால் அடுத்த தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அந்தத் தெருவிலேயே அரை மணி நேரம் கழிந்திருந்தது. சந்தியை நோக்கி மெது மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்து நின்ற ஒரு முச்சக்கர வண்டி தொடர்ந்து 'ஹோர்ன்' சத்தம் எழுப்பிக் கொண்டேயிருந்தது.

எனது வாகனத்துக்கு இடது பக்கத்தால் புகுந்து செல்ல அவர் எத்தனிக்கிறார் என்று புரிந்தது. ஆனால் ஒதுங்கி இடம் கொடுக்க வசதியிருக்கவில்லை. அப்படி நகர்த்தினால் காரின் ஒரு பக்கத்தைத் தேய்த்துக் கொண்டு செல்ல ஒரு டிப்பர் வாகனம் தயாராக இருந்தது.

அந்த இடத்திலேயே பதினைந்து நிமிடம் கழிய வாகனங்கள் நகர நானும் நகர்த்தினேன். அந்த இடைவெளிக்குள் என்னை முந்திய முச்சக்கர வண்டிக்காரர் தமிழில் என் வம்சத்தை இழுத்துக் கொழும்புத் தமிழில் தூஷணத்தால் திட்டியது மொத்தமாக மூடியிருந்த வாகனத்துக்குள்ளும் தெளிவாகக் கேட்டது. நான் எதுவும் காதில் விழாதது போல் வாகனத்தை நகர்த்தினேன்.

முச்சக்கர வண்டியில் அமர்ந்திருந்த முஸ்லிம் பெண்மணி அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாமல் வெட்கத்தில் முகத்தை இரு கைகளாலும் மூடியபடி குனிந்து அமர்ந்திருந்தார். முச்சக்கர வண்டி எனது வண்டியைத் தாண்டியதும் பார்த்தேன்.

பின் கண்ணாடியில் 'லாஇலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர்ரஸூலுல்லாஹ்;' என்ற கலிமா ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருந்தது!