Wednesday, March 23, 2011

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - மலேசியா


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 03
அறிமுகம்

மலேசிய இலக்கிய விழா குறித்த எனது இரண்டாவது கட்டுரைக்குப் பின்னர் ஓரளவு வரவேற்கத்தக்க மாற்றங்கள் இலங்கை சார்பில் நடந்திருப்பதை அறிய வந்தேன். அந்த விபரங்களைப் பதிந்து விடவேண்டும் என்பதும் இன்னும் மீளாய்வுகளும் திருத்தங்களும் தேவை என்பதைத் தெரிவிப்பதுமே நெடுங்கட்டுரையின் மூன்றாவது அங்கத்தின் நோக்கம்.
இதுவரை அச்சில் வெளிவந்து பலர் கவனத்துக்குக் கட்டுரைகள் செல்லாத போதும் அடைய வேண்டிய தளங்களைச் சர்வதேசிய ரீதியில் இணையம் மூலமாகவே எட்டியிருப்பது என்னையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அது தவிர இந்த விழா சம்பந்தப்பட்ட அனைவருமே கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும் வரவேற்கத் தகக்து.

இத்தொடரை 5 கட்டுரைகளுடன் நிறைவு செய்யலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இன்னும் சற்று நீண்டு ஒரு நூறு அல்லது நூற்றறைம்பது பக்க நூலாகி விடும் போல் தெரிகிறது. கூடியவரை சுருக்கிக் கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். இலக்கிய ஆர்வலர்கள் ‘சர்வதேச இஸ்லாமிய இலக்கிய மாநாடு’ என்றோ ‘மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா’ என்றோ அல்லது இந்த வார்த்தைகளில் இருக்கும் ஏதாவது ஒரு சொல்லை வைத்து இணையங்களில் சொடுக்கித் தேடினாலும் காலாகாலமாக எல்லாக் கட்டுரைகளையும் படிக்கும் வாய்ப்பு இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாற்றங்கள் அல்லது திருத்தங்கள்



எனது இரண்டாவது கட்டுரை கடந்த 5ம் திகதி வெளியானது. அதற்குப் பிறகு இரண்டொரு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.
01. இரண்டு கட்டுரை மாத்திரமே இலங்கைக்கு என்ற வரையறையையிட்டு நாம் ஆட்சேபனை தெரிவித்திருந்தோம். அதற்காக இலங்கைக் குழு மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்திருந்தது. ஆனால் பிற்பாடு இன்னொரு கட்டுரையை இலங்கைக்கு வழங்கக் குப்பப்பிச்சை மு. இக்பால் குழு முன்வந்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தத் தகவல் இலங்கைக் குழு சார்பில் வெளிவந்திருந்தாலும் கூட ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. இன்னும் ஒரு கட்டுரை பத்திரிகைகளில் கோரப்பட்டதாக அறியவும் முடியவில்லை. மூன்றாவது கட்டுரையைக் கொடுப்பதற்கான ஆளைத் தாங்களே தீர்மானித்து விட்டார்களா என்பதும் தெரியவில்லை. இந்த விழாவுக்காகக் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழுவினர் ஆரம்பித்திருக்கும் இணையத் தளத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம் என்னும் கருப்பொருளை முன்வைத்து நடத்தப்படும் இந்த மாநாட்டில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பொதுவான 12 தலைப்புகளில் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. இவற்றுடன், மலேசிய நாட்டின் மேம்பாடு, தமிழ் இலக்கியம், ஊடகம் முதலிய துறைகளில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்புப் பற்றிய 5 கட்டுரைகளும், இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் பற்றிய 2 கட்டுரைகளும், சிங்கைத் தமிழ்முஸ்லிம்கள் பற்றிய 1 கட்டுரையும் படைக்கப்படவுள்ளன.”
தமிழ் இலக்கிய அல்லது இஸ்லாமிய தமிழ் இலக்கிய முயற்சிகளில் தமிழகத்துக்கு அடுத்தத நிலையில் இருப்பது இலங்கையே. எனவே குப்பப்பிச்சை இக்பால் குழு மேலும் தமது இரும்புச் சட்டகத்தை உடைத்து ஆகக் குறைந்தது ஐவருக்காவது இலங்கை சார்பில் இடம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

02. இலங்கைக்குழு இஸ்லாமிய இலக்கியப் பிதாமகர் அல்லாமா உவைஸ் பெயரிலாவது ஓர் அரங்கை வைக்கக் கோரவில்லை என்றொரு குற்றச் சாட்டை நான் முன்வைத்திருந்தேன். அது பரிசீலிக்கப்பட்டு இப்போது மகிழ்ச்சிக்குரிய வகையில் இலங்கை சார் பேரறிஞர்கள் மூவர் பெயரில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. அறிஞர் சித்திலெப்பை, அல்லாமா எம்.எம். உவைஸ், புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு. ஷரிபுத்தீன் ஆகியோரே அம்மூவரும். இந்தச் செய்தி கடந்த 18ம் திகதிய தினக்குரல் பத்திரிகையில் 9ம் பக்கம் வெளியாகியிருக்கிறது. இந்த முயற்சியில் வெற்றி பெற்ற இலங்கைக் குழுவுக்கும் ஏற்றுக் கொண்ட குப்பப்பிச்சை மு. இக்பால் குழுவுக்கும் எனது நன்றிகள்.
மேலும் செய்யவேண்டியவை

கடந்த காலங்களில் நடந்த எல்லா இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளிலும் நம்முன்னோரின் இலக்கியங்களை நிறையப் பேசியும் எழுதியும் வந்துள்ளோம். ஏராளமான கட்டுரைகள் நூல்களாகவும் மலர்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றியல் இருக்கும் விடங்களும் அவற்றில் ஊறும் தமிழ்ச் சுவையும் அள்ள அள்ளக் குறையாதவை. அதில் எந்த வித இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் இவற்றையே முழுவதுமாகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருவதில் தமக்கு அலுப்பு ஏற்பட்டுள்ளதாக இளைய சமூகம் பல முறை தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. அதில் உண்மையும் இருக்கிறது.

எனவே இதற்குப் பிறகு இலங்கையில் ஒரு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஒன்று நடக்குமாக இருந்தால் அதில் உலகளாவிய முஸ்லிம் படைப்பாளிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் தொட்டுக் காட்டும் விடயங்கள் முஸ்லிம் உம்மத்தின் முன்னால் வைக்கப்பட வேண்டும், 1950 களுக்குப் பின்னர் இலக்கியம் படைத்த அனைவரும் அவர்களது புத்தகங்களும் பட்டியற்படுத்தப்பட வேண்டும், முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும் என்றெல்லாம் எனது கருத்தை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் நிர்வாக அங்கத்தினர் முன் வைத்திருக்கிறேன். அதனை அவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுமுள்ளார்கள். இதனை நண்பர் தாஸிம் அகமது நன்கறிவார்.

மலேசிய விழாவிலும் கூட அரைத்த மாவே அரைக்கப்படப் போகிறது என்பதுதான் சோகம். புதுக் கவிதையையே ஏற்றுக் கொள்ளாத பழைய பஞ்சாங்கக் கூட்டத்துக்கு இது புரியாதுதான். ஆனால் நவீன இலக்கியங்களோடும் அதன் போக்கோடும் எழுதிக் கொண்டிருக்கும் சர்வதேச அவதானம் பெற்ற நண்பர் சை. பீர்முகம்மது போன்றவர்கள் அங்கிருக்கிறார்கள். அவர் இந்தக் குழுவில் இருக்கிறாரா இல்லையா என்பதறியேன். இருந்திருந்தால் ஓரளவுக்காவது இந்த விழாவை சமகாலத்துக்கு இட்டுச் சென்றிருப்பார். எல்லா மாநாடுகள் பற்றியும் தனது பக்கத்தை எழுதும் நண்பர். சை. பீர் முகம்மது மாநாடு முடிந்ததும் என்ன எழுதப் போகிறார் என்பதைக் காண நான் ஆவலாய் உள்ளேன்.

இப்போது மலேசிய மாநாட்டில் வாசிக்கப்படப் போகும் பொதுக் கட்டுரைகள் எந்தெந்தப் பிரதான தலைப்புக்களைக் கொண்டிருக்கின்றன என்று பார்க்கலாம்.
01. முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் கையாண்ட இலக்கிய வடிவங்கள்
02. முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் தமிழ் மரபு வழுவாப் பிறமொழிச் சாட்சி
03. தமிழ் இலக்கியத்தின் இருண்ட காலத்தில் ஒளிபரப்பிய இஸ்லாமிய இலக்கியங்கள்
04. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் இறைவாழ்த்து
05. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் மரபுகள்
06. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் காதல்
07. இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் திருமண நடைமுறை
08. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் உவமைத் தனிச் சிறப்பு
09. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் புதிய சொல் - தொடர் ஆக்கங்கள்
10. சீறாவில் உமறுப் புலவர் காட்டும் புதுமை உலா
11. சேகனாப் புலவரின் இலக்கியப் பணிகளும் பன்முக ஆளுமையும்
12. 20,21ம் நூற்றாண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் - ஒரு பார்வை

மேல் குறிப்பிடப்பட்டுள்ள மலேசிய இலக்கிய விழாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள கட்டுரைப் பெருந் தலைப்புகளில் 12வது தலைப்பு மட்டுமே இன்றைய சூழலுக்குப் பொருந்துவது. அதுவும் பல கூறுகளாகப் பிரித்து ஆராயத் தக்கது. அதைப் பின்னால் பார்க்கலாம். இந்த விடத்தில் நண்பர் சை.பீர்முகம்மது என்னுடன் உடன்படுவார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். ஆனால் இந்த ஒரு தலைப்பே அவரைத் திருப்திப்படுத்தாது என்பதையும் என்னால் உணர முடிகிறது.

மேற் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று முதல் பதினொன்று வரையிலான தலைப்புகளில் கட்டுரை எழுதி அதை வாசித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்பது எனது அபிப்பிராயம். இந்தப் பதினொரு தலைப்புகளும் ஒரு நூலில் இடம் பெறப் பொருத்தமானவை. அதைக் கூட ஒரு நபரே செய்ய முடியும். அதற்கு இன்றைய நிலையில் பொருத்தமான ஒரேயொருவர் கவிஞர் சீனி நைனார்தான். பேராசிரியப் பெருந்தகைகள் ஆய்வாகத்தான் எழுதுவார்கள். ஆனால் இரசனை இருக்காது. பழைய இலக்கியங்களில் ஆழ் புலமை கொண்ட ரசனையோடு எழுதக்கூடிய தலைப்புக்களாக அவை இருப்பதால் பலர் எழுதி அவற்றை வாசித்துக் காலத்தை வீணடிப்பதைத் தவிர சீனி நைனாவே அதைச் செய்து முடித்திருக்கலாம். இன்னும் கூடக் கால அவகாசம் இருக்கிறது. சீனி நைனாருக்கு வெறும் 20 தினங்கள் போதும் இதை ஒரு நூலாக எழுதுவதற்கு. அல்லது இவற்றைச் சுருக்கி மூன்று தலைப்புக்களுக்குள் மட்டுப்படுத்தியுமிருக்கலாம்.
மலேசியாவில் தமிழ் மொழிக் கல்வித்துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்கும் ஈடுபாடும், மலேசியாவில் தமிழ்ப் புனைகதை - நாடக இலக்கியத் துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு, மலேசியாவில் தமிழ்க் கவிதைத் றையில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு, மலேசியாவில் தமிழ் ஊடகத்துறையில் தமிழ் முஸ்லிம்களின் பங்கும் பணியும், மலேசிய நாட்டின் மேம்பாட்டில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு ஆகிய தலைப்புகள் மலேசியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் என்னுடைய அவதானம் என்னவென்றால் முதலாவது மற்றும் ஐந்தாவது தலைப்பின் கீழ் வரும் இரண்டு கட்டுரைகளும் குப்பப்பிச்சை முகம்மது இக்பாலின் புகழ்பரப்புவதாக அமையலாம் என்பதுதான்.
உலகத் தமிழ் இலக்கியத்தில் மலேசிய முஸ்லிம் படைப்பாளிகளின் வகிபாகம் - மலேசியாவின் வளர்ச்சிப் போக்கில் இந்திய முஸ்லிம்களின் கலை, கலாசாரப் பங்களிப்பு - மலேசியாவில் தமிழ் மொழி பேசும் மக்களின் எழுத்தும் வாழ்வும் - தமிழ் இலக்கியத்தினூடாக வெளிப்படும் மலேசிய முஸ்லிம்களின் வாழ்வியல் - மலாய மற்றும் சீன மொழி பேசும் மக்களிடையே தமிழ் மொழியின் செல்வாக்கு - இனங்களுக்கிடையிலான இலக்கியப் பரஸ்பரம் போன்ற இன்னோரன்ன தலைப்புக்களும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம்.

ஆனால் அதற்கு உடன்பட மாட்டார்கள். காரணம் இந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு பழையவற்றை விட்டால் அவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தில் பேசுவதற்கு வேறு எதுவும் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்ததை மற்றவர் பேசினால்தான் குறை நிறைகளை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியும். மற்ற விடயம் என்னவெனில் ஏற்கனவே திட்டமிட்டாயிற்று. அதைத் திருத்துவதற்கு மனம் ஒப்பாது. அதாவது கோழி அறுக்கும் வேலையை ஒட்டகம் அறுக்கும் வேலையாகச் சித்தரித்தாயிற்று. அப்படித் திருத்தினால் அது கௌரவக் குறைவு என்று குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழு நினைக்கும்.
மலேசியாவில் மாநாட்டுக் குழுவில் தீவிரமாக இயங்கும் சிலருக்கு சம்பளம் வழங்கப்படுவதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இதில் எந்த அளவு உண்மைத் தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அன்பர் பிதாவுல்லாஹ் குப்பப்பிச்சை முகம்மது இக்பாலின் நம்பிக்கை சஞ்சிகையில் கடமை புரிகிறார். அவருக்கு நிச்சயம் சம்பளம் இருக்கும். சம்பளம் வாங்கும் நிலையில் குழுவில் இருப்பார்கள் என்றால் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குந்து என்றால் குந்தவும் எழும்பு என்றால் எழும்பவுமே முடியுமே தவிர வேறு சுயமாக எதையும் செய்ய முடியாதுதான். இந்தப் பணம் இக்பாலின் சொந்தப் பணத்தில் வழங்கப்படவில்லையென்றால் இவர்களும் தமது விழாவில் காலத்துக்குப் பொருத்தமான விடயங்களையும் சேர்த்துக் கொள்ளச் செய்ய முடியும். அதில் இருப்பவர்களே புதுக் கவிதை எதிர்ப்பு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதால் அவர்களிடம் புதியவற்றை நாம் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்தான்.

அவர்களால் வழங்கப்பட்டிருக்கும் தலைப்புகளின் மூலம் அவர்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள், அவர்களது சிந்தனையின் தரம் என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்த போதும் இப்படியும் செய்யலாம் என்பதை ஓர் இலக்கிய ஆர்வலன் என்ற முறையில் சுட்டிக் காட்டுகின்றேன். நான் சுட்டிக் காட்டுவதைப் புரிந்து கொள்ளும் ஒரு மலேசிய அன்பராவது அங்கு இருக்காமலா போய் விடுவார்.

இந்தத் தலைப்புகளின் மூலம் எனக்கு ஏற்பட்ட ஒரே ஒரு சந்தோசம் என்னவென்றால் ‘நாட்டார் பாடல்’ அரங்கு வைக்காமல் விட்டதுதான். அப்படி வைத்திருந்தால் இலங்கைக் குழுவிலிருந்து சிலர் விலகியிருப்பார்கள். சிலர் ஒரே கட்டுரையை அங்கேயும் கொண்டு வந்து படித்து ‘ஹட் ட்ரிக்’ அடித்திருப்பார்கள். ஏராளமான நாட்டார் பாடல் கட்டுரைகளை இலங்கைக்குழு பெற்றிருக்கும். அவர்களது நிலைமை பெரும் பரிதாபத்துக்குள்ளாகியிருக்கும். நாட்டார் பாடல்கள் மட்டும் இல்லையென்றால் இலங்கை இலக்கிய உலகில் சிலருக்கு அடையாளமே இருந்திருக்காது என்பதை மலேசியர்கள் குறித்துக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கையும் தும்பிக்கையும்

குப்பப்பிச்சை முகம்மது இக்பால் நீண்டகாலமாக நம்பிக்கை சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார். ஜனவரி 27ம் திகதி முதல் பெப்ரவரி 4ம் திகதி இரவு வரை ‘நீங்கள்தான் எமது முகம், நீங்கள்தான் எமது மாநாட்டுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்’ என்று இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்திடம் சொல்லி வந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் அமைச்சர் மட்ட லெவலுக்கு ஆசைப்பட்டுக் கதையை மாற்றியமைத்து முனாபிக் தனமாக நடந்து கொண்ட குப்பப்பிச்சை முகம்மது இக்பால் நடத்தும் சஞ்சிகைக்குப் பெயர் ‘நம்பிக்கை’.

இந்தியாவின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து இன்று மலேசிய டத்தோவாக உயர்ந்து ஒவ்வொரு நாடுகளிலும் அரசியல் மட்டத்துடன் நட்புப் பாராட்டிச் சந்தோசப்படும் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் எப்படியான வளைவு சுழிவுகளுக்கூடாக முன்னேறியிருப்பார் என்பதை பெப்ரவரி 5ம் திகதி எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.


நம்பிக்கையின் மார்ச் இதழ் பார்வைக்குக் கிடைத்தது. அதில் பல புகைப்படங்கள் கண்ணில் பட்டன. அவற்றில் 10ம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தில் நமது கவனம் சென்றது. வழமையாக ஏதாவது ஒரு நிகழ்வை நடத்துபவர் அல்லது ஒரு சிறிய குழுவை அழைத்துக் கலந்துரையாடுபவர்தான் பிரதான கதிரையில் அமர்ந்திருப்பார். சென்னையில் நடக்கும் ஒரு விருந்தில் சீனி நைனா பேசிக் கொண்டிருக்க மலேசியக் குழு, தமது பலம் பொருந்தியாக சக்தியாகக் கருதும் தும்பிக்கை பிரதான கதிரையில் அமர்ந்திருக்கிறது. அதுதாங்க.... கவிக்கோ! அந்தப் புகைப்படம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் கவிக்கோதான் எல்லாம் என்பதைத்தான். இப்போது புரிகிறதா? இதற்குப் பிறகுதான் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழு இலங்கை வந்தது. இந்தப் படம் மலேசிய விழாவின் இணையத்திலும் இடம்பெற்றுள்ளது.
கவிக்கோ நுழைந்த எந்த இடமும் உருப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. சமநிலைச் சமுதாயம் இதழில் ஆலோசகர் மட்டத்தில் இருந்தார். அவரது அரசியலுக்குப் பொருந்தாத கட்டுரைகளை ஒதுக்கும் படி கட்டாயக் கட்டளையிடுவாராம். கடைசியில் அவரை ஒதுக்கி விட்டார்கள். இல்லா விட்டால் சமுநிலைச் சமுதாயம் இதழ் எப்போதோ மௌத்தாகி இருக்கும். கவிக்கோ என்றொரு இதழை வெளியிட்டார்கள் ஞாபகமா? அதற்கு சந்தாப் பணமாக மூவாயிரம் ரூபாய்களை முத்துமீரான் மூலம் அனுப்பி வைத்தேன். மூன்று இதழ்களுடன் அது வாழ்வை முடித்துக் கொண்டது. கட்டிய பணம் கூடக் கிடைக்கவில்லை. எமது அரசியல் தலைமை மறைந்த மர்ஹ_ம் அஷ்ரஃப் அவர்கள் வழங்கிய பணத்தில் வருடாவருடம் கவிதைக்கெனக் கவிக்கோ விருது வழங்கப்பட்டதாகச் சொல்லக் கேள்விப்பட்டேன். இலங்கையில் ஒரு வருடம் யாரோ ஒரு பெண்ணுக்குக் கிடைத்ததாக ஞாபகம். அதற்குப் பிறகு அதைப் பற்றிய எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.

ஆறு மாநாடுகள் வரை எவ்வளவு பவுத்திரமாக நடத்தியது தமிழக இஸ்லாமிய இலக்கியக் கழகம். 2007ல் நிர்வாகி என்ற பெயரில் நுழைந்தார் கவிக்கோ. மாநாடும் சீரழிந்தது. வெளிநாடுகளில் இருந்து சென்றவர்கள் தாங்க முடியாத அவமானங்களோடு திரும்பி வந்தார்கள். இஸ்லாமிய இலக்கியக் கழகமும் முகவரியிழந்து பிளவுபட்டது. அந்த மாநாட்டைப் பயன்படுத்தி கலைஞரிடம் வக்பு வாரியத் தலைமையைப் பெற்றார். (ஓர் ஆலிமை விலக வைத்துத்தான் அந்த இடத்துக்கு வந்ததாக அவ்வேளை சமநிலைச் சமுதாயம் இதழில் ஒரு கட்டுரை வந்தது ஞாபகம் - அந்த ஆலிம் மஃரிப் தொழுதுவிடடு வந்து கையெழுத்திடுகிறேன் என்று சொல்லியும் கேட்காமல் இப்போதே கையெழுத்து வையுங்கள் என்று பெறப்பட்டதாக அந்தக் கட்டுரை தெரிவித்து.) பதவியேற்று சில காலப்பகுதிக்குள் வாரியத்தின் இதழான பிஸ்மி இதழின் ஆசிரியர் கவிஞர் பதுருதீன் தூக்கி வீசப்பட்டார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளிடம் கவிக்கோ வந்ததை எனது 2ம் கட்டுரையில் சொல்லியிருந்தேன். புலிகள் இவரை அழைக்காதிருந்திருந்தால் சில வேளை விடுதலைப் புலிகளுக்குத் தோல்வி வந்திருக்காது என்றே நினைக்கிறேன். கம்பன் விழாவுக்கு ஒரு முறை இலங்கை வந்தார். அதற்குப் பிறகு சில வருடங்கள் கம்பன் விழாவே நடக்கவில்லை. இம்முறைதான் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டில் உர்து பேசும் முஸ்லிம்களின் அமைப்புக்குள் சென்றிருக்கிறாராம் என அறிய வந்தேன். அவர்கள் கதி என்னவாகுமோ தெரியாது. கலைஞர் தனது அரசில் வக்பு வாரியத்தை கவிக்கோவுக்குக் கொடுத்துள்ளார். வரும் தேர்தலில் கலைஞர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உணர முடிகிறது.

இப்படிப்பட்ட சமூகச் சிற்பியைத்தான் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழு சுமந்து திரிகிறது. மலேசிய இலக்கியவாதிகளை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும். என்னுடைய கணிப்பு இவ்விழா முடிவடைந்ததும் கச்சேரி கலைந்து விடும் என்பதுதான்
.

குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழு கவிக்கோவை ஒரு கைவிளக்காக ஏன் ஏந்தித் திரிகிறார்கள் என்பதற்கான சரியான விளக்கங்கள் இன்னும் கிடைக்கவில்லை. சற்றுக் காலம் செல்ல முழு விபரங்களும் நமக்குக் கிடைக்கக் கூடும். இப்போதைக்குச் சொல்ல முடிந்ததெல்லாம் தமிழ் நாட்டில் ஆளும் கட்சியில் உள்ள முஸ்லிம்களில் முக்கியத்துவம் பெற்றவர் கவிக்கோ என்பதனால்தான் குப்பப்பிச்சை அவரை அள்ளிக் கொண்டு திரிகிறார். சிலருக்கு பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து இருப்பது பெருமை. சிலருக்கு புகழ் பெற்ற மனிதர்களுக்குக் கூஜாத் தூக்குவது பெருமை. சிலருக்கு பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது பெருமை. அந்த வகையில் இலங்கையில் பழக்கப்பட்ட இலக்கியவாதிகளைத் தவிர்த்து விட்டு கௌரவ அமைச்சருடன் சேர்ந்து இருப்பதைப் பார்த்தால் - தமிழ் நாட்டுக்குச் சென்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்ததைப் பார்த்தால் (தகவல் - நம்பிக்கை) - மலேசியப் பிரதமரை விருந்துக்கு அழைத்திருப்பதைப் பார்த்தால் குப்பப்பிச்சை முகம்மது இக்பால் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து இருப்பதில் பெருமைப்படுகிறார் போல் தெரிகிறது. எனவே இப்போதைக்குக் கவிக்கோவும் அரசியல் பிரமுகர் அல்லவா?

அது தவிர தமிழகத்தில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கவிஞர் சீனி நைனாரை தொல்காப்பியம் பற்றி உரை நிகழ்த்தச் சிபார்சு செய்தவர் கவிக்கோ என்று ஒரு தகவல் கிடைத்துள்ளது. எனவே அதற்கு நன்றிக் கடனாக விழாவில் கவியரங்குக்குத் தலைமையைக் கொடுத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.
சிண்டு பிய்க்கும் ஸ்ரீலங்காக் குழு

நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக கூட்டம் கூட்டமாகவே நடத்திக்கொண்டிருக்கிறது இலங்கைக் குழு. வழமையான கூட்டம், விசேட கூட்டம், அவசரக் கூட்டம் என்று அவற்றுக்குப் பெயர். நாங்களும் எழுபத்தைந்து பேரைக் கூட்டிக் கொண்டு இந்திய மாநாட்டுக்குப் போகத்தான் செய்தோம். இப்படியெல்லாம் கூட்டம் போடவில்லை. இப்போதைய குழுவில் இருக்கும் தாஸிம் அகமது எம்முடன் அப்போது இருந்தார். சரி இந்த அர்ப்பணிப்பை குப்பப்பிச்சை முகம்மது இக்பால் குழு எந்தளவு மெச்சும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அடையாளச் சின்னமாக ஆளுக்கு ஒரு சின்ன அன்பளிப்புக் கூஜாவாவது நிச்சயம் கிடைக்கும். அது போதாதா நமக்கு. நின்று பத்துப் பதினைந்து புகைப்படம் பிடித்துக் கொள்ள.

பின்வரும் விடயங்களை அவர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

01. இருவருக்கு மட்டுமே கட்டுரை வாசிக்கும் அனுமதி பிறகு மூன்று என்று சொல்லப்பட்டதாம். ஆனால் இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் 22.03.2011 வரை மலேசிய விழாவுக்கெனத் திறக்கப்பட்டுள்ள இணையத் தளத்தில் இலங்கை சார்பில் இருவர் கட்டுரை படிப்பார்கள் என்றேயிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அதே வார்த்தைகளை அப்படியே கட்டுரையின் குறிப்பிட்டிருக்கிறேன்
.

02. மாநாட்டில் கலந்து கொள்வோருக்கான பேராளர் கட்டணம் குறித்து குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் குழு அனுப்பிய கடிதங்களிலோ அதையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் காரியாலயத்தில் பிரதியெடுத்து அல்லது தயாரித்துப் பிரதியெடுத்து நீங்கள் தீர்மானித்தவர்களுக்கு (எனக்குக் கிடைக்கவில்லை) அனுப்பிய கடிதக் கோவையிலோ அது பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அப்படியென்றால் வெளிநாட்டுப் பேராளர்களுக்கு பேராளர் கட்டணம் இல்லை என்றே கருத வேண்டும். ஆனால் 22.03.2011 அன்று மலேசிய விழாவுக்கான இணையத் தளத்தில் பின்வருமாறு ஒரு குறிப்பு உள்ளது. அதே வசனத்தில் அப்படியே அதைத் தருகிறேன்.
“மாநாட்டில் கலந்து கொள்வோரும் மாநாட்டு மலருக்குக் கட்டுரை அனுப்ப விரும்புவோரும் தலைமைச் செயலகத்துடன் அல்லது தாங்கள் வசிக்கும் நாட்டின் தொடர்பாளருடன் தொடர்பு கொள்ளலாம். (என்னே தமிழ்!) பேராளர் கட்டணம் ரி.ம. 100 - செலுத்த வேண்டும்.”

மலேசிய ரிங்கிட் ஒன்றின் இலங்கைப் பெறுமதி ஏறக்குறைய 35.00 ரூபாய்கள். அப்படிப் பார்த்தால் பேராளர் கட்டணம் இலங்கைப் பணத்தில் 3500.00. இதுபற்றி நீங்கள் அவதானம் செலுத்தவில்லை என்றே நினைக்கிறேன். பேராளர்களுக்குக் கட்டணம் இலவசம் என்ற கதை வாய்ச் சொல்லில்தான் இருக்கிறது. எழுத்தில் கிடையாது. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்திடமும் வாய்ச் சொல்லில்தான் “நீங்கள்தாம் எமது முகம். நீங்கள்தான் ஏற்பாடு செய்யவேண்டும்” என்று சொல்லி விட்டு அடுத்த சில மணி நேரங்களில் எப்படி பல்டியடித்தார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தீர்கள்.
அங்கு போன பிறகு ‘நீங்கள் இணையத்தைப் பார்க்கவில்லையா? அதில் இரண்டு பேருக்குத்தானே கட்டுரை ஒதுக்கியிருந்தோம். பேராளர் கட்டணம் போட்டிருந்தோமே’ என்று சொன்னார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கதி அதோ கதியாகப் போகும். கவிக்கோ சுழற்றிய மாநாட்டுக்குக் காசோடுதானே போனோம். காசைக் கட்டிய பிறகும் புத்தகப் பைகளை முழுமையாக அவர்கள் தரவில்லை என்பதையும் தந்த கொஞ்சம் பொதிகளையும் எப்டிக் கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றோம் என்பதையும் தாஸிம் அகமது மறந்து போயிருக்க மாட்டார். கவிக்கோ மலேசியாவிலும் முக்கிய இடம் பெறப் போகிறார். அவதானமாகவும் வருமுன் காப்போனாகவும் இருந்தால் எல்லோருக்கும் நல்லது.
எப்படிப் பார்த்தாலும் குழுவில் உள்ள ஒருவருக்கும் இது பற்றிய அவதானம் இருக்கவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் பெரீய்ய்ய்ய நிர்வாகி என்று நீட்டி முழக்கிய சீனி நைனாரும் அவர் அந்தளவுக்கு இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். கட்டுரை படிப்பதற்கு சட்டகம் கீறி நேரசூசி போடுவதாலெல்லாம் ஒருவர் பெரிய்ய நிர்வாகி ஆகிவிடுவார் என்று நினைப்பது அப்பாவித் தனம். எங்கள் இலங்கையில் அஞ்சாப்பு வரை இருக்கும் ஸ்கூல் வாத்தி கூட 15 ஆசிரியர்களுக்கும் 110 பாட வேளைக்கும் மூன்று மணித்தியாலத்தில் நேரசூசி போடுவான்.
மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களை நான் அழுத்திச் சொல்வதற்குப் பலமான ஒரு காரணி உள்ளது. இந்த உப தலைப்பின் கீழ் வரும் முக்கியமான மூன்றாவது அம்சம் அது.

03. ஒரு மாநாட்டுக்கென ஒரு நாட்டில் ஒருவரோ இருவரோ இணைப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் கௌரவ அமைச்சரின் புதல்விக்கு மலேசியாவில் பாதுகாவலராக இருப்பதாக அவரே சொன்னதைக் கொண்டு பார்த்தால் கௌரவ அமைச்சர் குப்பைப் பிச்சை முகம்மது இக்பாலுக்கு ஒரு நல்ல வரவேற்புக் கொடுத்துத்தானே ஆக வேண்டும். அந்த அடிப்படையில் அவரது விழாவுக்கு ஒரு பெரும் படையைக் குழுவாக நியமித்திருக்கிறார். இந்த விழாவில் இலங்கையின் பங்களிப்போடு ஏற்பாட்டுக் குழுவை ஒப்பிடும் போது எனக்கு அபூ நவாஸின் சமாதி ஞாபகம் வரும்.
சின்ன வயதில் எனக்குக் கதை சொன்னவர்கள் அபூ நவாஸ் என்ற காமெடியன் பற்றித்தான் சொன்னார்கள். அது அபூ நவாஸ்தானா அல்லது வேறு யாருமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஆசாமி நிச்சயமாக ஒரு புகழ்பெற்ற காமடியன். அவரது சமாதி பெரு வெளி ஒன்றில் அமைந்திருக்கிறதாம். ஆனால் பெரிய கதவுகள் கொண்ட வாயில் அமைத்துப் பெரிய பூட்டு ஒன்றையும் போட்டிருக்கிறார்களாம். பார்ப்பவர்கள், இது என்ன வெட்ட வெளியில் யாருக்கும் நுழைய முடியுமாக இருக்கும் போது இப்படியொரு வாயிலும் பெரிய பூட்டும் என்று நினைத்துச் சிரிப்பார்களாம். அதாவது அவரது காமடியின் வலிமையை உணர்த்தச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் அது. இந்தக் குழுவைப் பார்க்கும் போதும் எனக்கு அபூ நவாஸ்தான் நினைவுக்கு வருகிறார். நான் என்ன செய்வது?

இவ்வாறு அமைக்கப்பட்ட நபர் அல்லது நபர்கள் அல்லது குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் குழுவின் பாஷையில் தொடர்பாளர் அல்லது குழுதான் அந்த நாட்டிலிருந்து மாநாட்டுக்கு வருகை தரும் அனைவரையும் தீர்மானிப்பது வழக்கம். கட்டுரை படிப்பவர்கள், கவிதை படிப்பவர்கள், உரை நிகழ்த்துபவர்கள், பாராட்டுக்குரியவர்கள் அனைவரையும் அந்தந்த இணைப்பாளர் அல்லது இணைப்புக் குழுவே தீர்மானிக்கும். தனிப்பட்ட முறையில் நேரடியாக ஒருவரை அழைப்பதென்றாலும் அந்த நாட்டின் குழுவுடன் கதைத்தே முடிவுக்கு வரவேண்டும். இதுவே நடைமுறை. நற்பழக்கம். ஆனால் குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் குழு இலங்கையில் இன்னும் ஒரு தில்லாலங்கடி வேலை பார்த்துள்ளது. இலங்கைக் குழுவுக்குத் தெரியாமலேயே ஓர் அறிஞரை நேரடியாக அழைத்துள்ளது. அவர்தான் அஷ்ஷெய்க் அகார் முகம்மத்.

இந்தத் தகவல் அறிந்ததும் அகார் முகம்மதை நான் நேற்று 21ம் திகதி தொடர்பு கொண்டேன். ஷெய்க் அகார் முகம்மது எனது கலாசாலை - வகுப்புத் தோழர். அவரை குப்பைப்பிச்சை முகம்மது இக்பால் குழுவின் சார்பில் பிதாவுல்லாஹ் அழைத்ததாகவும் அதுவும் தாங்கள் நேரடியாக அழைப்பதாகவும் இலங்கைக் குழுவுக்கும் இதற்கும் தொடர்பே கிடையாது என்று சொன்னதாகவும் நண்பர் எனக்குச் சொன்னார். இலங்கைக் குழுவை அலட்சியம் செய்வதாகவே இது அமைந்திருக்கிறது. அந்த அவமானத்தை குழு எப்படி எதிர்கொள்ளும் என்பதை நானறியேன். இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் குழு எந்நேரத்தில் என்ன செய்யும் என்பது படைத்த றப்புக்கு மட்டுமே வெளிச்சம்.
தெரிவுக் குழுவும் பதவிக் குழப்பமும்

கவிதைகளைத் தெரிவு செய்வதற்காக கவிஞர் அல் அஸ_மத் அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். மிகப் பொருத்தமான ஒருவர்தான். ஆனால் அவர் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் நிர்வாக உறுப்பினர். புகைப்படம் பிடித்துப் பத்திரிகையில் போடுவதன் மூலமோ கிடைக்கும் இடத்திலெல்லாம் ஒரு பதவியைப் பெற்றுத் தன்னை இலக்கியவாதியாகப் படம் காட்டுவதில் விருப்பமற்றவர். தமிழில் ஆழ்புலமை கொண்ட கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர். அவர் இந்த வேண்டுகோளை மறுத்து விட்டார். அவர் மறுத்து விட்ட செய்தி எனக்குக் கிடைத்து இரண்டு தினங்களின் பின்னர் என்னைத் தொடர்பு கொண்ட கட்டுரை அனுப்பிய ஒரு நபர் ‘கவிதைகளை அல் அஸ_மத் தெரிவு செய்கிறாராம். கட்டுரைகளைத் தெரிவு செய்வது யார்?’ என்று கேட்டார். அதாவது யார் யார் எதைத் தெரிவு செய்யவிருக்கிறார்கள் என்ற செய்தி குழு மூலமாகவே கசிந்து செல்வதை இது உணர்த்துகிறது. அது திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டும் இருக்கலாம். காரணம் தாம் விரும்பும் நபர்களைத் தெரிவு செய்து விட்டு யாராவது ஆட்சேபனையோ எதிர்க் கருத்தோ தெரிவிக்கும் பட்சத்தில் தெரிவு செய்தோரின் தலையில் பிழையைப் போட்டுவிடவும் வாய்ப்புண்டு.

அல்அஸ_மத்துடன் இது விடயமாகப் பேசியவர் குழுவில் ஊடக இணைப்பாளராக இருக்கும் நிலாம். செயலாளர் பேசவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு சில வேளை மாநாட்டுப் பணிகளில் மூழ்கி விட்டாரோ தெரியவில்லை. அப்படியென்றால் யார் யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பது புரியாமல் தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது.
லேட்டஸ்ட் செய்தி

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு தினங்கள் எடுத்தன. கட்டுரை முடியும் தினமான 23.03.2011 அன்று காலை எனக்குக் கிடைத்த செய்தியின்படி குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் தமிழ் நாடு வருகிறார் என்று அறியக் கிடைக்கிறது. அவரது வருகையின் காரணங்களாக பின்வரும் எனது அனுமானங்களைத்; தெரிவிக்கிறேன்.

01. தமிழ் நாட்டிலிருந்து எதிர்பார்த்த அளவு இவ்விழாவுக்குச் செல்ல இலக்கியவாதிகளோ இலக்கிய ஆர்வலர்களோ உற்சாகம் காட்டவில்லை. இதன் காரணமாகத்தான் படிப்பாளிகள் என்ற ரீதியில் விமானச் சீட்டு வழங்கி பத்துப் பேர் அழைக்கப்படுகிறார்கள். அந்தப் பத்துப் பேருடன் கவிக்கோவின் கட்டளைக்குப் பணியும் இன்னும் சிலரும் மாத்திரமே செல்லும் நிலை அங்கு தோன்றியிருக்கிறது. தமது தாய்த்திருநாட்டிலிருந்து அதிகம் பேர் கலந்து கொள்ளவில்லையென்றால் விழாக்குழுவுக்குப் பெருத்த அவமானமாகிவிடும் அல்லவா? எனவே இன்னும் கொஞ்சப் பேரை அழைத்துக் கொண்டு செல்வதற்கான முயற்சி இது.
இலங்கையிலிருந்து மாத்திரமே அதிகப் பேராளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்களது பட்டியலைப் பார்த்தால் எழுபத்தைந்து வீதமானோர் இலக்கியவாதிகளாகவோ இலக்கிய ஆர்வலர்களாகவோ இருக்க மாட்டார்கள் என்பது வேறு விடயம். சுற்றுலாச் செல்லும் நோக்கில் இதுவரை என்னிடம் விசாரித்தவர்கள் தொகை 17.

02. குப்பப்பிச்சை முகம்மது இக்பாலுக்கு அரசியல்வாதிகள் என்றால் பிடிக்கும் என்பதை அறிவீர்கள். அவரது வருகையின் பிரதான நோக்கம் தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலினை விழாவுக்கு அழைத்துச் செல்வது என்று தெரிகிறது. அங்கு எந்தக் கழகம் ஆட்சிக்கு வந்தாலும் சிறுனான்மைப் பலத்துடனே வரும் என்றாலும் கூட கலைஞர் மீண்டும் பதவிக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக குப்பப்பிச்சை முகம்மது இக்பால் நம்புகிறார் என்று தெரிகிறது. கவிக்கோவும் கழகக் கண்மணி என்ற படியால் ஸ்டாலினை அழைத்துச் சென்று இஸ்லாமிய இலக்கியம் வளர்ப்பது குப்பப்பிச்சை இக்பாலின் நோக்கமாகத் தெரிகிறது.
ஏகப்பட்ட அரசியல்வாதிகள் மலேசியாவில் இஸ்லாமிய இலக்கியம் வளர்ப்பதைப் பார்த்து விட்டு எல்லோரும் எழுந்து நின்று ஜோராகக் கைதட்டி குப்பப்பிச்சை முகம்மது இக்பாலைக் குஷிப்படுத்தினால் அவர் அடுத்த விழாவை அடுத்த வருடமே மலேசியாவில் நடத்தி எல்லோருக்கும் இலவச விமானச் சீட்டுத் தருவதற்கு வாய்ப்பு உண்டாகலாம். அப்படியே நிகழப் பிரார்த்திப்போம்!
குறிப்பு: அடுத்த கட்டுரைக்கு முதல் வேறு தகவல்கள் கிடைத்தால் அவ்வப்போது விசேட இணைப்பாக வழங்கப்படும்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

mohamedali jinnah said...

Assalamuallikum,
Beautiful site with good article.
I have seen J.M Salih Photo with you. He is my friend and he is my uncle`s son-in -law
Wassalam