Tuesday, June 28, 2011

ஆனா பொன்னாடை போர்த்திக்குவோம்ல!


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 12

மலேசிய மாநாட்டு அனுபவங்கள்

கடந்த மே மாதத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல நாடுகளையும் சேர்ந்தோர்
மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்தியாவைவிட இலங்கையைச் சேர்ந்த பேராளர்களே அதிகமாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால், இதில பெருமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில், இலங்கையிலிருந்து கலந்து கொண்டோரில் ஏறத்தாழ இருபத்தைந்து வீதமானோரே கலை, இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். பெரும்பாலானோர் வர்தக நோக்குக் கொண்டவர்களாகவே தென்பட்டனர்.

இம் மாநாடு தொடர்பாக இலங்கைக்கென ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், இலங்கைக் குழுவின் தலைவருக்கும் செயலாளருக்கும் முதுகெலும்பு என்பது இல்லை என்பதுதான். எதிர்காலத்திலாவது இவர்கள் இருவரும் முதுகெலும்புகளைத் தங்களுக்குப் பொருத்திக்கொள்வது நல்லது. இப்படியொரு இலங்கைக் குழு இருந்ததைவிட இல்லாமல் இருந்திருக்கலாம். எந்த விடயமும் உருப்படியாக நடக்கவில்லை.


மாநாட்டு மலரில் இலங்கை ஆய்வாளர்கள் சிலரது கட்டுரைகள் பிரசுரிக்கப்படவில்லை. தலைவரும், செயலாளரும் தத்தம் குடும்பத்தினரோடு மலேசியாவுக்கு உல்லாசப் பயணம் செய்து தமது “இலக்கியப் பணியை” நிறைவேற்றிக் கொண்டனர். இவர்கள் இருவரோடும், குழுவில் இடம் பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சேர்ந்து பகற்கொள்ளைக்காரர் ஒருவரைப் பயண முகவராக ஏற்பாடு செய்திருந்தனர். அந்தப் பயண முகவர், மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களுக்குச் செய்த அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்படியொரு மோசடிக்கார பயணமுகவரை, இலங்கைக் குழுவைச் சேர்ந்த மேற்கண்ட மூவரும் பேராளர்களுக்கு அறிமுகம் செய்து, தாங்கள் சுயலாபம் பெற்றுக்கொண்டனர். குறிப்பிட்ட பயணமுகவரைத் திட்டாத இலங்கைப் பேராளர்கள் யாரும்இல்லை எனலாம்.




மாநாட்டு இலங்கைக் குழுவின் முயற்சிகள் மோசமாக இருந்தாலும். மலேசியா எம்மை அன்புடன் வரவேற்றது. இலங்கையில் இருந்து சென்ற எமக்கு, மலேசியா ஒரு கனவுலகம் போலத் தென்பட்டது. கோலாலம்பூர் ஓர் அழகான நகரம். வானளாவிய கட்டடங்களும், ஒழுங்கான வீதியமைப்பும், சிறந்த போக்குவரத்து வசதிகளும் மகிழ்ச்சியைத் தந்தன. மலேசியாவில் இருந்தபோது, “இலங்கையை ஆசியாவில் சிறந்த நாடாக்குவோம்” என்று எமது அரசியல்வாதிகள் பேசிவருவது சிரிப்பை வரவழைத்தது. இன்னும் ஐம்பது ஆண்டுகள் சென்றாலும், மலேசியாவை இலங்கை எட்டிப்பிடிக்க முடியாது என்ற உண்மையைக் கண்கூடாகக் காணமுடிந்தது. இதற்கு, நமது நாட்டின் அரசியல்வாதிகளே முழுமுதற் காரணகர்த்தர்கள். எல்லாம் வெறும் வாய்ப்பேச்சுத்தான். மலேசியாவைப் பார்த்து, எங்களால் பொறாமைப் படத்தான் முடிந்தது.

மலாயாப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தபோது, முதல்நாள் இரவு உணவின் பின், அருமையான கலைநிகழ்ச்சிகளை மேடை யேற்றினார்கள்.
இரண்டு மூன்று பாடகர்களும் ஒரு பாடகியும் அழகாகப் பாடினார்கள். அவர்களில் ஒருவர் அப்படியே நாகூர் ஹனீபாவைப் போல் பாடினார். குறிப்பிட்ட பாடகி கே.ராணிபோலப் பாடினார். செவிகளுக்கு அப்படியொரு
விருந்து கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் மலேசிய முஸ்லிம் மாணவிகள் அழகாக உடையணிந்து மேடையில் அற்புதமாகப் பாடினார்கள். அந்த மாணவிகளும், சில மாணவர்களும் இணைந்து சிறு நாடகம் ஒன்றையும் மேடையேற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க இன்னொரு சிறப்பம்சம், காத்தான் குடியைச் சேர்ந்த இலங்கைப் பாடகர கே.எல்.கமர்தீனும் பாடியமையாகும். பாடகர், நடிகர், எழுத்தாளர் எனப் பல்திறமைகள் கொண்ட கமர்தீன், அந்நிகழ்ச்சியில் அழகாகப் பாடி, இலங்கைக்குப் புகழ் சேர்த்தார்.

ஆய்வரங்கின் தொடக்கவிழாக் கலைநிகழ்ச்சியின் போது பலரும் பேசினர். அந்த நிகழ்ச்சியின்போது ஒரு கோமாளித்தனம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில்
இலங்கையில் இருந்துவந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பேசினார். அவரது பேச்சு மாநாடு தொடர்பாகப் பொருத்தமானதாக இருந்தது. அதேமேடையில்
இலங்கையில் இந்துவந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரும் பேசினார். மாநாட்டில் பேசிய அனைவரும் மாநாடு தொடர்பாகப் பேச, அஸ்வர் மாத்திரம் அரசியல் மேடையில் பேசும் ஓர் அசல் அரசியல் வாதியைப் போன்று பேசினார்.

பேசியவர், தமது சொந்தச் சிந்தனைகளைப் பற்றிப் பேசாமல் பிறரின் “சிந்தனை”யைப் பற்றியே வாயார, மனமாரப் புகழ்ந்து பேசினார். தாம் பங்குபற்றுவது ஓர் இலக்கிய மாநாடு என்ற விவஸ்தையே
இல்லாமல், பிறர் ஒருவருடைய பெருமையையும், சிந்தனையையும் தமது விசுவாசத்திற்கு உரியவர்கள் “தமிழுக்கு ஆற்றும் தொண்டினையும்” விலாவாரியாகப் பேசினார். அஸ்வர் தமது அரசியல் கோமாளித்தனத்தை
இலக்கிய மேடையில் காட்டியது சிறிதும் பொருத்தமாக இல்லை. அவர் எதிர்காலத்திலாவது தமது சொந்த சிந்தனைகளைப் பற்றிப் பேசவேண்டும். அஸ்வரின் பேச்சை, மாநாட்டில் கலந்துகொண்ட பார்வையாளர் எவருமே ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

மாநாட்டின் ஆய்வரங்குகள் இயன்றவரை நன்றாகவே இடம் பெற்றன. சில ஆய்வாளர்கள் பழக்கதோஷத்தால், சொல்லவந்த விடயத்தைவிட்டு

அலட்டிக்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

சில அரங்குகளுக்குத் தலைமை தாங்கியவர்கள், அதற்குத் தாங்கள் சிறிதும் பொருத்தமற்றவர்கள் என்பதைத்தாமகவே இனம்காட்டிக் கொண்டனர்.

ஆய்வரங்கொன்றில் முக்கிய பிரச்சினையொன்று அலசப்பட்டது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் இஸ்லாத்துக்கு மாறான விடயங்கள் இடம்பெற்றுள்ளனவே என்று கேள்வியொன்று எழுப்பப்பட்டது. அதற்கு இந்திய பேராசிரியர் மு.அப்துல்சமது பதிலளித்தார். இலக்கியங்களில் அழகியல் அம்சங்கள் இடம்பெறுவது இயல்பானது: தேவையானது. அழகியல் அம்சங்கள் இடம்பெறாமல் விட்டால் அது இலக்கியமாகாது.
மதரீதியான கண்ணோட்டத்தோடு இலக்கியங்களை நோக்குவது அவசியமற்றது என்று அவர் கருத்துத் தெரிவித்தார். இந்திய இஸ்லாமிய தமிழ் இலக்கிய அறிஞர்கள் மிகவும் பரந்த மனப்பாங்குடன் செயல்படுகின்றனர் என்பதை அவரது பதில் உணர்த்தியது.

மாநாட்டின் இரவு நிகழ்ச்சியொன்றின் போது, “இஸ்லாம் காட்டும் இலட்சிய வாழ்வும் எதிர்நோக்கும் சவால்களும்” என்ற தலைப்பில் உரை அரங்கம்
நடைபெற்றது. அதில் பங்குபற்றிய அனைவரும் சுவாரசியமாகவும், சிறப்பாகவும் பேசினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பாத்திமா முஸாபர் பேசும்போது, உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் மலேசியாவும், துருக்கியுமே உண்மையான முஸ்லிம் நாடுகள் என்று குறிப்பிட்டார்.
அவரது அக்கருத்துக்குச் சபையில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா (தமிழ்நாடு) பெண்கள் தொடர்பான ஆண்களின் நோக்குநிலையை அக்குவேறு ஆணிவேறாக அலசினார். சபையினரின் பாராட்டையும் பெற்றார்.

மலாயாப் பல்கலைக்கழகத்தின் பெர்டானா சிஸ்வா மண்டபத்தில் கவியரங்கம் இடம்பெற்றது. இது ஓர் அழகான கலையரங்கம். கவிக்கோ அப்துல் ரகுமானின் தலைமையில் “அண்ணல் நபியின் அழகிய பண்புகள்”
என்னும் பொதுத்தலைப்பில் ஒன்பது கவிஞர்கள் பங்குபற்றினர். கவியரங்கம் சிறப்பாக இருந்தது.

பங்குபற்றியவர்களில் மிக இளயவரான இலங்கையைச் சேர்ந்த பொத்துவில் முகம்மது அஸ்மின் மிக நன்றாகச் செய்தார். எதிர்காலத்தில் சிறந்தவொரு கவிஞனாக அவர் புகழ்பெறுவார்.

மாநாட்டில் பெயரிடப்பட்டிருந்த பல அரங்கங்களில் மூன்று அரங்குகள் இலங்கை அறிஞர்களின் பெயர்களில் அமைந்திருந்தன. கலாநிதி டாக்டர் ம.மு.உவைஸ் அரங்கம் (கலாநிதியும் டாக்டரும் ஒன்றுதான்),
சித்திலெப்பை அரங்கம், புலவர்மணி ஷர்புதீன் அரங்கம் ஆகியவை இவ்வாறு இலங்கை அறிஞர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டவையாக விளங்கின. மாநாடு முடிவடைந்த பின்னர், பேராளர்களுக்குச்
சுற்றுலா வசதியும் செய்யப்பட்டிருந்தது. மலேசிய மாநாட்டு பொறுப்பாளர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து
கொண்டனர்.

இலங்கை மாநாட்டுக் குழு, அவர்களிடம் கற்கவேண்டிய பாடங்கள் பல.
--------------------------------------------------------------------------------
“எழுதத் தூண்டும் எண்ணங்கள்” என்ற தலைப்பில் ‘ஞானம் சஞ்சிகையில் கலாநிதி துரை மனோகரன் பத்தி எழுதி வருகிறார். ஜூலை 2011 இதழில் இடம் பெற்றுள்ள அவரது பத்தியில் மலேசிய இலக்கிய விழா பற்றி அவர் எழுதியிருந்த பகுதி இது. நன்றி - ஞானம்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Shaifa Begum said...

ஹ்ம்..... இலக்கிய தர்பார் பற்றிய எண்ண ஓட்டங்கள்..தூக்கலாகத் தான் தெரிகிறது.
சுயநலங்களுக்குள் தஙகளை ஆட்படுத்தி.. வரலாற்று அசிங்கங்களாக பொன்னேட்டில் பதியப்படுவதில்
என்ன பெருமை கண்டார்களோ..?இங்கே எல்லா வற்றிக்கும் அச்சாணி வைப்பவராக பயண முகவர், பெருமைக்குரிய நபராக வர்ணிக்கபபடுகிறார்.இதில் நம் சமூகத்திற்கே பெருமை தானே !நமக்கு பெருமை தேடித்தந்த இவருக்கு நாமும் கடமைப்பட்டிருக்கிறோம்.அறுவறுப்பாக எண்ணத்தோன்றுகிறது.
இவ்வளவு மோசமான முறையில் விமர்சிக்கப்படுகிறாரே என்றால் அவரது போக்கு எப்படி இருந்திருக்க வேண்டும் என்று ஓரளவிற்கு ஊகித்துக் கொள்ள முடிகிறது.அதிலும் இவர் பொன்னாடைக்குரிய மறக்க படாதவர் வரிசையில் இடம் பெறுவார் போலும் தெரிகிறது!!

இது வரை நான் படித்த விமர்சனங்களில் நல்ல விசயங்கள் சில சொல்லப்பட்டாலும், அதனை மிஞசும் அளவுக்கு
மட்டமான விசயங்கள் நடந்திருக்கின்றன என்பதை அறியும் போது, நம் சமூகம் எதற்கும் லாயக்கில்லையோ என்பது போல் எண்ணத்தோன்றுகிறது..இப்படி சில சில பேர்கள் செய்யும் அற்ப விசயங்கள் தான் நாம் இருந்த இடத்த விட்டு எழ முடியாமல் , வளர முடியாமல் இருபப்தற்குக் காரணம் என்று வெளிப்படையாகவே சொல்லலாம்.இந்த மாதிரி பொது விசயங்களில் தங்களது சுயரூபத்தைக் காட்டாமல் , தனிப்பட்ட வாழ்க்கையோடு இதை வைத்துக் கொண்டால், ஒரு சிலரால் ஒரு சமூகம் தலைகுனிவது தவிர்க்கப்படலாம் இல்லையா..?ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..

”பயண முகவர், மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களுக்குச் செய்த அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்படியொரு மோசடிக்கார பயணமுகவரை, இலங்கைக் குழுவைச் சேர்ந்த மேற்கண்ட மூவரும் பேராளர்களுக்கு அறிமுகம் செய்து, தாங்கள் சுயலாபம் பெற்றுக்கொண்டனர். குறிப்பிட்ட பயணமுகவரைத் திட்டாத இலங்கைப் பேராளர்கள் யாரும்இல்லை எனலாம் ”

ஏன் இப்படியொரு சாபக்கேடு...? எத்தனை பேரின் மனதை நொருங்கடித்திருக்கிறார் ?இதற்கெல்லாம் என்ன நியாயம் சொல்லப்போகிறார் இவர்..?வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்..

------------------------------------------------------------------------------------------
கலாநிதி துரை மனோகரன அவர்களுக்கு நன்றிகள்.. உள்ளதை உள்ள படியே கண்டதில் மகிழ்ச்சி.

நன்றிகள்..