Wednesday, August 10, 2011

அவர்கள் வருகிறார்கள்!


ஒவ்வொரு ரமளானிலும் முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு படை புறப்படுவதை மிக நீண்ட காலமாக நாம் கண்டு வருகிறோம். ஜூம்ஆ தொழுகை நடைபெறும் வேளைகளில் எல்லாப் பள்ளிவாசல் கடவைகளிலும் முன்றலிலும் நின்று கையேந்தும் இந்தப் படை ரமளானில் இரண்டு பங்காக மூன்று பங்காக, நான்கு பங்காக அதிகரிக்கிறது.

இந்தச் சமூகம் இந்தப் படையை வெல்வதற்கு ஒட்டு மொத்தக் கவனத்தை இன்னும் செலுத்தவில்லை. ஆங்காங்கே அவ்வப்போது சிற்சில அமைப்புகளாலும் இயக்கங்களாலும் மேற் கொள்ளப்படும் முயற்சிகள் ஐம்பது வீதமான வெற்றியைக் கூட அடையவில்லை என்பது பெரும் துரதிர்ஷ்டம்.

அதிசிறந்த படிப்பாளிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ள ஒரு சிறுபான்மைச் சமூகத்தில் வாழும் ஒரு சிறு தொகையான இந்தப் படையினரை வெற்றிகொள்ள முடியவில்லை என்பது எத்தகைய துர்ப்பாக்கியம் என்று எண்ணிப் பாருங்கள்.

எழுதுபவர்கள் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். படிப்பவர்களும் படித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தப் படையை எதிர் கெள்வதற்குத் தேசிய ரீதியில் ஒரு எழுச்சியும் முயற்சியும் ஏற்படுத்தப்பட வேண்டாமா?

ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய இந்தக் கவிதை போல் இன்னும் இந்த விடயமாக எழுதப்பட்ட கவிதைகள் அந்தப் படையை வெற்றி கொள்ள முடியாத காரணத்தால் உயிர்ப்போடு இருக்கின்றன.

அவர்கள் வருகிறார்கள்!

போர்ப்படை ஒன்று
புறப்பட்டு வருகிறது

எந்தக் கதவையும் அவர்கள் தட்டலாம்
யாரின் முன்னும் கைகளை நீட்டலாம்
வீட்டு நாய்களை வெளியே விடுங்கள்
சில்லறை சிலதைச் சேர்த்து எடுங்கள்

பழைய துணிகளை உடுக்கக் கேட்கலாம்
உங்கள் உணவை உறுத்துப் பார்க்கலாம்
உடைகளை அள்ளி உள்ளே போடுங்கள்
உணவை எடுத்து ஃபிரிட்ஜில் வையுங்கள்

போர்ப்படை ஒன்று
புறப்பட்டு வருகிறது

கிழிந்த உடையில் குமர்கள் வரலாம்
பழைய சால்வையில் பெரியவர் வரலாம்
வியர்வை மணக்க வேதனை சொல்லலாம்
விழிகள் இரண்டிலும் கண்ணீர் விடலாம்

உம்மா போலும் ஒரு பெண் வரலாம்
உட்கார்ந்திருந்து ஒப்பாரி வைக்கலாம்
வாசனைக் “கொலோனை” விசிறிக் கொள்ளுங்கள்
வழியில் தடைகளைப் போட்டுக் கொள்ளுங்கள்

போர்ப்படை ஒன்று
புறப்பட்டு வருகிறது

கவனம் -
இவர்களது பெருமூச்சுக்களால்
ஒரு பிரளயமே உருவாகலாம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

இவர்களது பெருமூச்சுக்களால்
ஒரு பிரளயமே உருவாகலாம்!


உண்மைதான் அவர்கள் வருகிறார்கள்.

ilankainet said...

இது தொடர்பாக எல்லோரும் கவலைப்படவே செய்வர்.சக்காத் என்பது செல்வந்த வரி.அதுமுறைப்படி சென்றடைவதில்லை.இது தொடர்பாக இங்கு விரிவாக பேசமுடியாது.எமது சகோதர இனத்தவர்கள் எங்களை விட அதிகமாக வாழும் இந்த நாட்டில் எம்மவர்கள் மட்டும் படை எடுத்து வருவதற்கான விடை என்ன?சில நடுத்தர வர்க்கத்தினர் கூட ஊர் விட்டு ஊர் வந்து யாசகம் கேட்கிறார்கள்.ஊர் மக்களுக்கு அந்தந்த பள்ளிவாசல் ஊடாக உரிய வகையில் உதவி செய்ய வேண்டும்.கீழிருக்கும் கையை விட மேலிருக்கும் கையே மேல்

tamilraja said...

உண்மைதான் வருத்தமாக இருக்கிறது என்ன செய்யலாம்
இவர்கள் போல் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற என்ன செய்யலாம்!!!!!!!??????

நாச்சியாதீவு பர்வீன். said...

அருமையான கவிதை..இந்தப் படையின் பரிதாபங்களை காட்டி வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் பணம் சேர்த்து..வாழ்க்கை நடத்தும் பச்சோந்த்திகளும் உள்ளார்கள் தெரியுமா?

Shaifa Begum said...

கவிதை சூப்பரு....... வலியையும் சொல்லி மருந்தையையும் கொடுத்திருக்கிறீங்க சேர்..கலக்கல்..
”உம்மா போலும் ஒரு பெண் வரலாம்
உட்கார்ந்திருந்து ஒப்பாரி வைக்கலாம்
வாசனைக் “கொலோனை” விசிறிக் கொள்ளுங்கள்
வழியில் தடைகளைப் போட்டுக் கொள்ளுங்கள்”
ஒரு பக்கம் அனுதாபபடவேண்டியதாக இருந்தாலும் கூட.. இதனால் ஒரு சமூகமே பாதிப்புக்குள்ளாகிறது, என்று பார்க்கும் போது.. வெறுப்பாகத்தான் இருக்கிறது..நோன்பு காலங்களில்
பித்றாவின் பெயரில் சகோதர சகோதரிகள் நகர்ப்புறங்களை நோக்கி படையெடுப்பதுண்டு...இதனால் றமளான் மாதம் என்றாலே.. பிச்சை எடுக்கும் மாதம் என்று சொல்கின்ற அளவுக்கு தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது..
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.