Sunday, August 14, 2011

போருக்கெதிராய் ஒரு புயல்!


பிறருக்காக வாழக் கிடைக்கும் வாழ்க்கை ஒரு பெரும் கொடுப்பினையாகும்.


அந்தப் பிறர் அயல் வீட்டாராகவோ அடுத்த ஊராராகவோ, தனது சொந்த நாட்டு மக்களாகவோ இல்லாமல் இன்னொரு தேசத்து மக்களுக்காக தனது சொந்த நாட்டை அதன் வலுமிக்க அரசை எதிர்த்து ஒரு மனிதன் போராடுகிறான் என்றால் அந்த மனிதன் எத்தகைய உன்னதமான மனிதனாக இருக்கக் கூடும்?

அவ்வாறான ஒரு மாமனிதர்தான் பிரிட்டன் பிரஜையான ப்ரையன் ஹோவ்.

ஈராக்கின் மக்களின் மீதும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீதும் திணிக்கப்பட்ட யுத்தத்துக்கு இணங்கி ஒத்துழைத்த தனது நாட்டு அரசை எதிர்த்து அவர் கலகம் செய்தார். அவரிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை. ஆத்ம பலம் இருந்தது.


 
ஒற்றை மனிதனாய் ஓய்வில்லாப் போராட்டத்தை முன்னெடுத்த அவரிடம் இருந்ததெல்லாம் உயிர்கள் மீதான அளப்பெரிய அன்பும் நேர்மையும்தான். இதனால்தான் சூரியன் அஸ்தமிக்காத ஆதிபத்தியம் வைத்திருந்த தனது தேசத்தின் அரசை நோக்கி அவரால் விரல் நீட்ட முடிந்தது.

பாராளுமன்ற சதுக்கத்துக்குள்ளேயே ஒரு சின்னஞ்சிறு கூடாரத்துக்குள் வாழ்ந்த படி யுத்தத்துக்கு எதிரான சில பதாதைகளை வைத்துக் கொண்டு பத்து வருடங்களுக்கும் மேலாக போராடிய அவரை பிரிட்டன் அரசினால் எதுவும் செய்ய முடியவில்லை. குடும்பம், உற்றார், உறவினர் என்று எல்லோரையும் துறந்து, தனது ஆசாபாசங்கள் அனைத்தையும் துறந்து ஒரேயிடத்தில் அமர்ந்து போராடினார்.



அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேற்கத்தைய தேசங்கள் ஈராக்குக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதித்த போது அவர் களத்தில் இறங்கினார். 2001 ஜூன் 2ம் திகதி தனது போராட்டத்தை ஆரம்பித்தார். ஈராக் மற்றும் ஆப்கான் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதும் ப்ரையன் மிகவும் கோபப்பட்டார்.

ஏழு பிள்ளைகளின் தந்தையான அவர் எல்லாவற்றையும் துறந்து விட்டுப் பாராளுமன்ற சதுக்கத்தில் புகழ் பெற்ற பிக்பென் கடிகாரக் கோபுரத்துக்கு முன்னால் சுற்றிவர பதாதைகளை வைத்துக் கொண்டு இருபத்து நான்கு மணிநேரமும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பித்தார்.

அவரை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்குப் பலமுறை முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

ப்ரையனின் எதிர்ப்பை வெற்றி கொள்ள பிரிட்டன் அரசினால் முடியாமல் போய்விட்ட போதும் புற்று நோய் ப்ரையனை வெற்றி கொண்டது. 2011.06.18ம் திகதி புற்று நோய்க்காக ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்த ப்ரையன் அங்கேயே காலமானார்.

ப்ரையனின் போராட்டம் குறித்த அடக்கியே வாசித்து வந்த மேல் நாட்டு ஊடகங்கள் அவரது மரணத்தையும் அப்படியே செய்தது. மேல்நாட்டு நலன்களுக்காக மட்டுமே இயங்கும் இந்த ஊடகங்கள் சொல்வதையே கட் அன்ட் பேஸ்ட் செய்வதும் அதை அப்படியே முழுவதும் விழுங்கி மீண்டும் வாந்தியெடுக்கும் தேடலற்ற ஆசியப் பிராந்திய நாட்டு ஊடகங்களும் இது குறித்து அவதானம் செலுத்தவில்லை.




ப்ரையனின் போராட்டம் ஆவணப்படங்களாகவும் வெளி வந்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. 2006 ம் ஆண்டு TerrorStorm என்ற பெயரில் வெளியான இத்தொகுப்பு அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவர் ப்ரையனுடன் கண்ட நேர்காணலை உள்ளடக்கியது. A Man Called Brian என்ற தலைப்பில்
Mahmoud Shoolizadeh என்பவரால் தயாரிக்கப்பட்ட மற்றொரு ஆவணப்படம் ஈராக் யுத்தம் பற்றி விரிவாக அலசுகிறது. 2007ல்  The Trial of Tony Blair
என்றொரு நாடகத்திலும் ப்ரையன் நடித்திருக்கிறார்.

அல்ஹிவார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான ப்ரையனுடனான பேட்டி இது. (இணைப்பைச் சொடுக்கிக் கேட்டுப் பாருங்கள்.)


http://www.youtube.com/watch?v=UVZPa39nGQU

 
ப்ரையனின் போராட்டமும் வாழ்வும் அர்த்தம் மிக்கது. அற்புதமானது.


டோனி பிளையர் - ப்ரையன் ஹோவ் - இவர்களில் சிறந்த மனிதர் யார் என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

Shaifa Begum said...

"பிறருக்காக வாழக் கிடைக்கும் வாழ்க்கை ஒரு பெரும் கொடுப்பினையாகும்."

நல்ல இதயம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள்... இருந்திருக்கிறார்கள் என்பதில் சந்தோசமே..
மனிதம் சாகாது..எங்கேயாச்சும் ஒரு மூலையில் துளிர் விட்டுக் கொண்டுதான் இருக்கும்..
ஆமாம் சேர் டொனி பிளேயர் ரொம்ப நல்ல மனுசன்.. சிறந்தவர் .. வல்லவர்.. எல்லாரையும் போல
தூங்கற நேரத்துல மட்டும்...

இராஜராஜேஸ்வரி said...

ஒற்றை மனிதனாய் ஓய்வில்லாப் போராட்டத்தை முன்னெடுத்த அவரிடம் இருந்ததெல்லாம் உயிர்கள் மீதான அளப்பெரிய அன்பும் நேர்மையும்தான்//

போருக்கெதிராய் ஒரு புயல்!" பாராட்டுக்கள்.

shenbagam said...

போருக்கெதிராய் ஒரு புயல்.அது தான் தலைப்பிலேயே குறிப்பிட்டுவிட்டீர்களே எழுத்தாளர் அவர்களே! ப்ரையன் என்றொரு புயல் உருவானது. அது விடுதலை என்னும் காற்றை சுழன்று சுழன்று அடித்தது.அது தன் அழிக்க இயலாத தடயங்களை இப்பூவுலகிற்கு பதிவு செய்து சென்றுள்ளது.இயற்கையை செயற்கை அழிக்க இயலாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எந்த வல்லரசும் இந்த பெரும்புயலை எதிர்த்து நின்று தடுக்க இயலாது.அவையனைத்தும் ஒரு காகிதமே என்ற விதையை இப்பூமியில் ஊன்றிச் சென்றுள்ளதாகவே என் மனதில் எழுகிறது.
கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்.

ASHROFF SHIHABDEEN said...

முகப்புத்தகப் பின்னூட்டம்

Lareena Abdul Haq

டோனி ப்ளேயர் பற்றி இதை விட அசத்தலான கமெண்ட்டை வேறு யாரும் வைத்துவிட முடியாது சகோ. கலக்கல்! ;)

ப்ரையனின் தொப்பியில் ஒரு வாசகம் மனதைப் பிசைந்தது: "keep my Muslim neighbors safe!".

An excellent article. Hats off to you Ashroff Sir!
August 14 at 2:53pm·Like · 3 people