Saturday, September 3, 2011

தானாய் அழியும் தமிழ்


ஊடகமும் தமிழும்

01

பட்டென்று திரை இருண்டு போன எனது மடிக் கணினியை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார் நண்பர். அவர் ஒரு கணினித் தொழிநுட்பவியலாளர். வீட்டில் தமிழ் மொழி பேசுபவர். தமிழ் மொழி மூலமாகவே கற்றவர். அவரது பிள்ளைகளும் தமிழ் மொழியிலேயே கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வேளை தொலைக் காட்சி அலைவரிசையொன்றில் செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. சோமாலியக் கடற் கொள்ளையர்கள் மற்றொரு கப்பலைக் கைப்பற்றிய விடயம் தலைப்புச் செய்திகளில் ஒன்று. செய்தி படித்த அம்மணி கப்பலையும் ஊழியர்களையும் கடற் கொள்ளையர்கள் “பயணக் கைதிகளாக”ப் பிடித்து வைத்துள்ளதாகச் சொன்ன போது நான் சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

என்னையறியாமலே “இங்கே பாருங்கள்.... பணயக் கைதிகளுக்கு பயணக் கைதிகளாம்!” என்ற வார்த்தை என்னிடமிருந்து வெளியாயிற்று. என்னைப் பொறுத்த வரை அது ஒரு பாரதூரமான பிழை. கணினி அங்கங்களைக் குடைந்து கொண்டிருந்த எனது நண்பரோ வெகு சாதாரணமாக, “நமக்கு விசயம் என்னவென்று விளங்குதுதானே! எப்பிடிச் சொன்னால்தான் என்ன?” என்றார். நான் ஆடிப்போனேன். அது எனக்கு ஒரு நிமிடத்துக்குள் நேர்ந்த இரண்டாவது அதிர்ச்சியாக இருந்தது.

02

மொழி என்பதே ஊடகம்தான். தமிழும் ஒரு மொழிதான். அப்படியாயின் கட்டுரைத் தலைப்பு ஊடகமும் ஊடகமும் என்று அல்லவா பொருளாகிறது என்று யாராவது வினாத் தொடுப்பதைத் தவிர்ப்பது மட்டுமன்றி இக்கட்டுரை எதைக் குறித்துப் பேசப் போகிறது என்பதையும் தமிழ் மொழி இன்று பயன்படுத்தப்படும் முறை பற்றியும் எடுத்துக் காட்டுவதற்காகவே நான் மேற் சொன்ன சம்பவத்தை எடுத்தாண்டேன்.

எல்லா மொழிகளுமே ஊடகம்தான் என்பதில் யாரும் கருத்து வேற்றுமைப் படுவதில்லை. ஆனால் ஒரு மொழியைப் பேசும் மக்கள் குழாத்துக்கு அம்மொழியே அடையாளமாகவும் ஆத்மாவாகவும் இருக்கிறது என்பதைப் பலர் இலகுவாக மறந்து போய்விடுகிறார்கள். ஒரு மொழி - அதைப் பேசும் மக்களின் கலாசாரச் சிறப்புகளால், இலக்கியத்தால் செழுமையும் சிறப்பும் பெறுகிறது. அதற்காக ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று சும்மா ‘பீலா’ விடுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. யாரும் உயிரை விடுவதால் எந்த ஒரு ஒரு மொழியும் சிறப்புப் பெற்று விடுவதில்லை.

தனது மொழி தனது அடையாளம் என்கிற நிலையில் ஒவ்வொரு மனிதனும் தனது மொழியில் வளம் சேர்க்கவும் அதனைப் பேணவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்தான். மொழி சிதைவடைந்து வேறொன்றுக்குள் அடக்கமாகி அடையாளம் சிதைந்து அழிந்து போகுமானால் அந்த மொழியைப் பேசிய மக்கள் குழாமும் அழிந்து விட்டது என்று அர்த்தமாகும். பல நூற்றுக் கணக்கான மொழிகள் அழிந்து போனமையைக் கடந்த காலச் சரித்திரங்கள் நமக்குச் சொல்கின்றன.

ஏனைய ஒரு மக்கள் குழுமத்தால் அதன் அடக்கு முறையால் ஒரு மொழியும் இனமும் அழிந்து போவது ஒரு விடயம். ஒரு மொழியைப் பேசும் மக்கள் கூட்டத்தாலேயே அந்த மொழி சிதைவடைவதும் சீரழிவதும்தான் மிகப் பெரும் துயராகும். அவ்வாறான ஒரு நிலையில்தான் நமது தமிழ் மொழி இருப்பதாகப்படுகிறது எனக்கு. மூத்தவர்களும் எனது வயதொத்தவர்களும் தமிழ் இலக்கியத்துடன் தொடர்புடைய மற்றும் தமிழைப் பல்கலைக் கழகத்தில் கற்கும் மாணாக்கரும் எனது கருத்துடன் பெருமளவு ஒத்துப் போவார்கள் என்று நான் நம்புகிறேன்.

03

மொழிதான் ஊடகங்களின் உயிர். எனவே ஊடகங்கள் மொழியைச் சரியாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சரியாக அல்லாமலும் கவனக் குறைவாகவும் அவைதான் கையாளுகின்றன. அதனால்தான் இதைப் போன்ற கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

வானொலி, தொலைக் காட்சி, பத்திரிகை, சஞ்சிகைகள் மட்டுமன்றி இணையமும் ஒரு முக்கியமான ஊடகமாக வந்து விட்டது. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை ஆகியவற்றின் ஒரு முழுக் கலவையாக இணையம் செல்வாக்குச் செலுத்துகிறது. சலனப் படத்தோடு கூடிய ஒரு தகவல் தொலைக்காட்சியில் காட்டப்படும் போது அது குறித்த தகவல் சொல்ல மொழி தேவைப்படுகிறது. வானொலி அதை வார்த்தைகளைக் கொண்டே தெரிவிக்கிறது. பத்திரிகை எழுத்துக்களைக் கொண்டு தெரிவிக்கிறது. இவையனைத்தையும் ஒருங்கே கொண்டிருப்பதுவும் மின்னல் வேகத்தில் தகவல்களை உலகம் முழுக்கப் பரிமாறவும் கூடிய வல்லமை பெற்ற ஓர் ஊடகமாக இணையம் விளங்குகிறது. இதிலும் மொழியே உயிராக இருக்கிறது.

வானொலிகளில் தொலைபேசி உரையாடல்கள் இணைத்துக் கொள்ளப் பட்டதுடன் மொழியின் சீரழிவு ஆரம்பித்துவிட்டது எனலாம். பொருத்தமற்ற வார்த்தைப் பயன்பாடு, பயன்படுத்தப்படக் கூடாது எனத் தவிர்க்கப்பட்ட சொல்லாடல்கள், எல்லோருக்கும் பொருத்தமற்ற உரையாடல், அறிவிப்பாளர்களின் தமிழ் மற்றும் உலகியல் அறிவின் குறைபாடு, வணிக ரீதியான விட்டுக் கொடுத்தலுக்கான அல்லது திருப்திப்படுத்தலுக்கான மொழிப் பாவனை ஆகியன கடந்த காலங்களில் பலராலும் விமர்சனத்துக்குள்ளாகிருக்கிறது. அதன் தொடர்ச்சி இன்னும் நீண்டு செல்கிறதே தவிர குறைந்து விடவில்லை. மெச்சத் தக்க மாற்றங்கள் எவையும் ஏற்பட்டு விடவுமிவில்லை.

வானொலிகளில் விளம்பர நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் போது அந்நிகழ்ச்சி பற்றிய முன்னோட்ட விளம்பம் ஒன்றை ஒலிபரப்புவது வழக்கம். அதாவது குறித்த விளம்பர நிகழ்ச்சி பற்றிய தகவல் அது. நெடுங்கால நிகழ்ச்சியாக இருப்பின் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அந்த முன்னோட்ட அறிவித்தல் அவ்வப்போது ஒலிபரப்பாகும். இவ்வாறான நிகழ்சியொன்றின் முன்னோட்ட அறிவித்தலில் “புராதன” என்ற சொல்லுக்குப் பதிலாக அறிவிப்பாளர் “புரதான” என்று சொல்லியிருந்தார். இந்த முன்னோட்டம் மிக நீண்ட காலமாக வானொலியொன்றில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சாதாரண ஒரு பள்ளிப் பிள்ளை இதைக் கேட்டாலே இச்சொல் குறித்துப் பெரும் மயக்கத்துக்குள்ளாக நேரும். ஆனால் அது குறித்து யாரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

தொலைக் காட்சிகளில் அவ்வப்போது திரையின் அடியில் ‘செய்திப் பட்டி’ ஓடிக் கொண்டிருக்கும். அவ்வப்போது எழுத்துக்களிலும் தகவல்கள் திரையில் தோன்றும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கருத்துப் பிழையை ஏற்படுத்தக் கூடிய எழுத்துப் பிழைகள் ஏராளமாகக் காணக் கூடியதாக இருக்கிறது. கணினியில் தட்டிச் சேர்க்கப்படும் எழுத்துக்களை மீள் பார்வையின்றி அப்படியே சேர்த்து விடுவதாலும் சொல்லுக்குரிய சரியான எழுத்துக்கள் தட்டெழுத்துச் செய்பவருக்குத் தெரியாமையாலும் இவ்வாறான தவறுகள் நேர்கின்றன.

தடித்த - கட்டைக் குரல் (Base voice) இருந்தாலே தான் ஒரு புகழ்பூத்த அறிவிப்பாளன் என்ற ஓர் எண்ணமும் மயக்கமும் புதிய தலைமுறையினர் பலரிடம் இருக்கிறது. யாருடைய வெறுங்குரலையும் ஜனங்கள் ரசிப்பதில்லை. அந்தக் குரலால் சொல்லப்படும் விடயங்களைக் கொண்டுதான் அக்குரல் மேன்மை பெறுகிறது. அது உண்மையாக இருப்பின் பெண் அறிவிப்பாளர்கள் எவருமே புகழ் பெற்றிருக்க முடியாது. இந்த மயக்கம் ஓர் அறிவிப்பாளன் பெற்றிருக்க வேண்டிய பொது அறிவு மற்றும் மொழியறிவிலிருந்து அவர்களைத் தூரப்படுத்தி விடுகிறது.

வானொலி, தொலைக் காட்சிகளில் நிகழும் மொழிப் பிழைகளுக்கு வெறுமனே அறிவிப்பாளர்கள் மட்டுமே பொறுப்பானவர்கள் அல்லர். செய்தி ஆசிரியர், ஒரு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஆகியோரும் பொறுப்பாளிகளே. அவர்களும் மொழியறிவுடையோராக இருக்க வேண்டும். ஆனால் மொழியானது அறிவிப்பாளரின் அல்லது நிகழ்ச்சித் தொகுப்பாளரின் வாய் வழியாக வெளியே வரும் போது தவறுகள் இருப்பின் அதைத் திருத்தி மொழியக் கூடிய வல்லமையுள்ளவராக அறிவிப்பாளரோ தொகுப்பாளரோ இருக்க வேண்டும்.

04

எல்லாத் தேசங்களிலும் அந்தத் தேசங்களில் பேசப்படும் மொழிகளின் பேச்சு வழக்கு பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபட்டு நிற்கிறது என்பதை நாம் அறிவோம். இலங்கையில் வடக்கில் ஒரு விதமாகவும் கிழக்கின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு விதமாகவும் தெற்கில் ஒரு விதமாகவும் மலை நாட்டில் இன்னொரு விதமாகவும் தமிழ் மொழி பேசப்படுகிறது. இதில் எந்த மொழியை நாம் இலத்திரனியல் ஊடகத்துக்குப் பயன்படுத்துவது என்று ஒரு பிரச்சினை இருக்கிறது.

ஒரு பிரதேசத்தின் பேச்சு வழக்கு இன்னொரு பிரதேசத்துக்குக் கொச்சை வடிவினதாகவும் கேலிக்குரியதாகவும் கூட இருக்கிறது. ஒரே மொழி, பேசும் விதங்கள் வேறு வேறு. இதில் எந்தவொரு பிரதேச மொழியை நாம் பொதுவான ஊடகத்தில் பயன்படுத்தினாலும் அது மற்றொரு பிரதேசத்தவர் மீது ‘திணிக்கப்படுகிறது.’ அல்லது ஏனைய பேச்சு வழக்கைச் சரியற்ற மொழி என்று மறைமுகமாகப் ‘பிரகடனப்படுத்துகிறது.’

தொலைப் பேசிப் பாவனை ஊடகங்களில் வந்த பிறகு இந்தப் பிரச்சினை மேலோங்கியிருக்கிறது. அறிவிப்புத் துறையில் உள்ளவர்கள் தங்களையறிந்தும் அறியாமலும் தமது பிரதேசப் பேச்சையே பேசுகின்றனர். பேசும் நேயர்களும் தமது பிரதேச மொழியையே தயக்கமின்றிப் பேசுகின்றனர். தினம் தினம் இவ்வாறான ஏராள தொலைபேசி நிகழ்ச்சிகளின் மூலம் இந்தப் பிரதேசத்தில் இவ்வாறுதான் பேசுவார்கள் என்ற ஒரு தெளிவு ஏற்பட்ட போதும் பொதுவான தமிழ் அகன்று பேச்சு வழக்கே பிரதானம் பெற்று வருவது தமிழ் மொழியின் ஆயுளுக்கு அவ்வளவு நல்லதாகப்படவில்லை.

இலத்திரனியல் தொடர்பூடகங்களில் குறிப்பாக வானொலி, தொலைக்காட்சிகளில் பொதுவான தமிழ் மொழியே பேசப்பட வேண்டும் என்கிறார் பிரபல ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத். பொதுவான தமிழ் என்று இங்கு குறிப்பிடப்படுவது யாதெனில் இலங்கை வானொலி அது தொடங்கப்பட்ட காலம் முதல் பயன்படுத்தி வந்த ஒரு நேர்த்தியான அனைவருக்கும் புரியக் கூடிய தமிழ் மொழியாகும். அந்த தமிழையே பொதுத் தமிழ் மொழி என்கிறோம். இது தனித் தமிழ் அல்ல. தனித் தமிழை யாராலும் பேச முடியாது. அது வழக்கிலும் இல்லை. ஆனால் இலங்கை வானொலி வளர்த்துப் பாதுகாத்து வந்த பொதுத் தமிழையே ஊடகங்கள் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

இன்று அந்தத் தமிழ் செய்தி அறிக்கையுடன் மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. பொதுவான நேர்த்தியான தமிழைப் பேசும் போது நேயர்களும் இயலுமான வரை அந்தத் தமிழையே பேசுவதற்கு முற்படுவர். வளர்ந்து வரும் சமுதாயத்துக்கு ஒரு வழிகாட்டலாகவும் இது அமையும். இன்று வானொலிகளிலும் தொலைக் காட்சிகளிலும் பாடல் கேட்கும் நிகழ்ச்சிகளே மலிந்திருக்கின்றன. பாடலதானே கேட்கிறார்... அவருடன் எப்படிக் கதைத்தால் என்ன என்ற மனோ நிலை மாற்றப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் சினிமாப் பாடல்களின் இலக்கிய நயம் கொண்டும் சினிமாப் பாடல்களை வைத்தும் அருமையான இலக்கிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. உதாரணமாக ‘அந்தாதி’ என்ற நிகழ்ச்சியைச் சொல்லலாம். ஒரு சினிமாப் பாடல் பேசும் விடயத்தைக் கொண்ட கடந்த கால இலக்கியச் செய்யுள்களை எடுத்தாண்டும் இலக்கிய ரசம் ததும்பும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகியுள்ளன. நான் பாடசாலையில் கற்கும் காலத்தில் ஏதோ ஒரு வகுப்புத் தமிழ்ப் புத்தகத்தில் வானொலிச் சித்திரம் பற்றிய ஒரு பாடம் இருந்ததும் அதைக் கற்றதும் ஞாபகம் இருக்கிறது.

இவையெல்லாம் இல்லாதொழிந்து “ஹலோ... யார் பேசுகிறீர்கள்.... என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.... யார் யாருக்காகவெல்லாம் பாடல் விரும்பிக் கேட்கிறீர்கள்...?” என்ற கேள்விகளோடு ஓர் அறிவிப்பாளன் பணி முடிந்து விடுகிறது. இந்த மூன்று நான்கு வசனங்களையே இப்போதைய அறிவிப்பாளர்கள் வாழ் நாள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வசனங்களைப் பேச அறிவிப்பாளர்கள் தேவையே இல்லை. பாடசாலைகளில் ஐந்தாம் தரம் கற்கும் ஒரு மாணவனாலோ படிப்பறிவற்ற சுவீப் டிக்கற் விற்பவனாலோ கூடப் பேச முடியும். கடந்த காலங்களில் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை மூத்தோர் இன்றும் நினைத்துக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் பொருள் இருந்தது, ரசனை இருந்தது, தமிழ் இருந்தது. இன்று இவற்றில் எதாவது எஞ்சியுள்ளதா என்பதைத்தான் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

5

இன்று இளவயதினர் ஊடகத் துறைக்கு வருவது அதிகரித்திருப்பது வரவேற்கத் தக்கது. ஆனால் இவர்களில் எத்தனை பேர் மொழியறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. கொழும்புப் பல்கலைக் கழகத்தில் ஓர் ஊடகத்துறை டிப்ளோமாவை முடித்ததும் தாம் ஒரு ஊடகவியலாளராகிவிட்டோம் என்று பலர் எண்ணிக் கொள்கிறார்கள். இவர்களில் அநேகர் தமது மொழியறிவின் நிலை என்ன என்பது குறித்துச் சிந்தித்தே பார்ப்பதாகத் தோன்றவில்லை.

தமிழில் ஆரம்ப நிலை மாணாக்கருக்கு இடறும் ர,ற, ல,ள,ழ, ன, ண ஆகிய எழுத்து வேறுபாடுகளில் பல்கலைக்கழகப் படிப்புத் தாண்டியும் சிலருக்குத் தெளிவு ஏற்படவில்லை என்பதை ஒரு சில ஊடகவியலாளர்களின் எழுத்துக்களிலிருந்தும் பேச்சுக்களிலிருந்தும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இந்தச் சிக்கலிலிருந்து ஒருவர் விடுபட வேண்டுமாயின் ஆழமான வாசிப்பு மிக அவசியமானது. வாசிக்கும் பழக்கமற்ற ஒருவரால் சிறந்த ஊடகவியலாளராக ஆகவே முடியாது. வாசிப்பானது மொழி வளத்தைப் பெருக்குவதுடன் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளவும் வழி செய்கிறது. வேறு ஒரு தொழிலில் ஈடுபடும் ஒருவரை விட ஊடகவியலாளருக்கே வாசிப்பு மிகவும் தேவைப்படுகிறது.

06

ஊடகங்களில் மொழியின் பயன்பாடு என்று பேச ஆரம்பித்ததும் உச்சரிப்புப் பிழைகள், எழுத்துப் பிழைகள் பற்றி மட்டுமே நாம் எண்ணுவது வழக்கம். ஆனால் ஒரு தகவல் சொல்லப்படும் போதும் எழுதப்படும் போதும் பொருத்தமானதும் சமநிலைப்படுத்தப்பட்டதுமான வசனங்கள் பயன்படுத்தப்படுவது அவசியம். அவ்வாறு தகவலுக்குச் சரியானதும் சமநிலைப்படுத்தப்பட்டதுமான வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை என்றால் அதைக் கேட்பதற்கும் படிப்பதற்கும் ஆர்வம் இல்லாது போகும்.

மிக அண்மையில் அரச வானொலியில் நான் ஓர் செய்தியறிக்கையைக் கேட்டேன். அந்த அறிக்கையின் தலைப்புச் செய்திகளுக்கு ஒத்ததாக உதாரணத்தைத் தர விரும்புகிறேன்.

01. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஆசிய அபிவிருத்தி வங்கி 38 மில்லியன் டாலர்களை வழங்க உடன்பாடு கண்டுள்ளது.

02. சிரேஷ்ட பிரஜைகளுக்கான புதிய திட்டம்.

03. காலி, மாத்தறை, வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் கற்கும் உயர்தர மாணவர்களுக்கு சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இலவச கணினிப் பயிற்சிகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

மேற்கண்டவாறு வாசிக்கப்பட்ட ஐந்து தலைப்புகளில் நான்கு தலைப்புகள் மிக நீளமானவையாகவும் ஒரு தலைப்பு மிகச் சிறியதாகவும் அமைந்திருந்தது. இது சமநிலைப்படுத்தப்பட்ட வசனங்கள் அல்ல என்பதை படிக்கும் போதே நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள். ஒன்றில் ஐந்து தலைப்புக்களுமே சுருக்கமானவையாக அல்லது நீளமானவையாக அமைந்திருப்பதே பொருத்தமாகவும் சமநிலையானதாகவும் இருக்கும். சுருக்கமான தலைப்பை, ‘சிரேஷ்ட பிரஜைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை நடைமுறைக்கிட அரசு தீர்மானித்துள்ளது’ என்று மாற்றியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

செய்தி ஆசிரியரால் இது சொல்லப்பட்டுத் தயாரிக்கப்பட்ட செய்தியறிக்கையாக இருந்த போதும் அதைப் பொருத்தப்பாட்டுடனும் சரியாகவும் மாற்றி வாசிக்கும் உரிமை அறிவிப்பாளருக்கு உண்டு. ஓர் அறிவிப்பாளரின் வாயினூக வெளிவரும் வார்த்தைகளையே பொது மக்கள் கேட்கிறார்கள். யார் தவறு விட்டிருந்தாலும் அதனைத் திருத்தாமல் வாசிக்கும் அறிவிப்பாளருக்கு அறிவோ மொழியோ தெரியாது என்றுதான் நேயர்கள் நினைப்பார்கள். இந்தச் செய்தியறிக்கையை வாசித்தவர் ஒரு பெண்மணி. இச்செய்திகள் வாசிக்கப்படும் போது இப்பெண்மணி ஊடகத் துறைக்குப் பொருத்தமற்றவர் என்ற முடிவுக்கே என்னால் வர முடிந்தது.

மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு சம்பந்தமாக வாரப் பத்திரிகையொன்றில் ஒரு செய்தி பிரசுரமாகியிருந்தது. அங்கு கவிதை படித்த இருவருக்கும் வழி நடத்துக்கும் குழுவினருக்கும் ஓர் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவது குறித்த செய்தி அது. அந்தப் பத்திரிகை அந்தச் செய்திக்கு, “மலேசிய மாநாட்டில் சாதனை படைத்தவர்களுக்குப் பாராட்டு” என்று தலைப்பிட்டிருந்தது.

சாதனை என்ற பதம் எதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற பொது அறிவு கூட இல்லாதவரால்தான் இவ்வாறு தலைப்பிட முடியும். கவிதை படிப்பதும் ஒரு குழுவினரை அழைத்துச் செல்வதும் சாதனை என்றல் உலகில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளுமே சாதனை என்றாகிவிடும் அல்லவா? உலகத்தில் அபூர்வமாக நிகழ்த்தப்படும் விடயங்களைக் குறிப்பதற்கே சாதனை என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும். எல்லோராலும் செய்ய முடியாத ஒன்றை ஒருவர் செய்வதே சாதனை. மாநாடு ஒருவேளை சந்திரமண்டலத்திலோ செவ்வாய்க் கிரகத்திலோ நடைபெற்றிருக்குமாயின் இந்தத் தலைப்பு பொருத்தமானதாக இருந்திருக்கும்.

இவ்வாறு பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதும் கூட ஊடகங்களில் நிகழும் பிழைதான். இது சொல்லின் அர்த்தத்தையே பிழையாக வியாக்கியானம் செய்கிறது. இவ்வாறான பிழையான சொல் மற்றும் வார்த்தைப் பயன்பாடுகளும் மொழியைச் சிதைக்கவே செய்கின்றன.

இணையத்தில் யாரும் தனக்கென ஒரு வலைப் பதிவுக்கான தளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். இணைத்தில் பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தனிப்பட்ட பதிவுகளும் என்று பல தளங்கள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. பத்திரிகைகளில் நிகழும் தவறுகள் இவ்வாறான தளங்களிலும் நிகழ்வதை நாம் காண்கிறோம். குறிப்பாக கணினித்துறையில் அனுபவம் உள்ள ஆனால் மொழியறிவுக் குறைபாடுளள்வர்கள் பலர் இத்தளங்களை நிர்வகிக்கிறார்கள். ஒரு சிற்றுண்டிச் சாலை பற்றிய தகவலைக் குறிப்பிட்டுச் செய்தி பகிர்ந்துள்ள ஒரு தளத்தில் “சிற்றூன்றிச்சாலை” என்று எழுதப்பட்டிருப்பதை நான் கண்ணுற்றேன். இதற்கு என்ன அர்த்தம் என்பததை எந்த அகராதியில் நாம் தேடுவது?

7

இப்போது நீங்கள் எனது கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட சம்பவத்துக்கு வாருங்கள்.

ஒரு தகவலைச் சொற்களைப் பிழையாகப் பயன்படுத்தினாலும் கூடப் புரிந்து கொள்ள முடியுமாயின் அது ஏற்கத் தக்கது என்ற எனது நண்பரின் கருத்தை நான் முற்றாக மறுக்கிறேன். தகவலைப் புரிந்து கொள்ள முடியும்தான். அப்படியாயின் மொழியின் கதி என்ன? நமது மொழி உயிர்ப்புடன் இருக்கும் போதுதான் நாமும் இருப்போம் என்பதைப் பூரணமாவும் சரிவரவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இணையத்தால் உலகம் சுருங்கி விட்டதும் நொடிக்குள் தகவல்கள் கிடைப்பதும் தொழிநுட்ப வளர்ச்சியின் பிரதிபலன் என்பதெல்லாம் உண்மைதான். விடயத்தைப் புரிந்து கொள்ள முடியுமாயின் தவறான சொற்பிரயோகம் கூடப் பரவாயில்லை என்று சமரசம் செய்து கொள்வதற்காக ‘பரவை முனியம்மா’வை ‘பறவை முனியம்மா’ என்று சொல்ல முடியுமா என்ன?

30.06.2011
(நன்றி - நீதி முரசு - 2011 - இலங்கைச் சட்டக் கல்லுரி - தமிழ் மாணவர் மன்றம்)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

7 comments:

Junaid M Haris - SLBC said...

மொழிதான் ஊடகங்களின் உயிர். எனவே ஊடகங்கள் மொழியைச் சரியாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சரியாக அல்லாமலும் கவனக் குறைவாகவும் அவைதான் கையாளுகின்றன.

இது உங்களுடைய விமர்சனம்..

அதேபோல் நீங்கள் உங்களின் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் ஒரு சில வாக்கியங்களின் இலக்கணம் சரியா என்பதை எனக்கு விளக்கி வைப்பீர்களா?


....தொலைக் காட்சி அலைவரிசையொன்றில் செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது

.......மொழிப் பாவனை ஆகியன கடந்த காலங்களில் பலராலும் விமர்சனத்துக்குள்ளாகிருக்கிறது

இவ்வாறு சுட்டிக்காட்டுவது என் அறியாமைக்காக... குறை பிடிப்பதற்காக அல்ல...

ASHROFF SHIHABDEEN said...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திகளுக்கிடையில் “நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்” என்று அறிவிப்பாளர்கள் காலாதிபாலமாகச் சொல்லி வருகிறார்கள். இலக்கணப்படி “நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பவை” என்று வர வேண்டும்.
இதை மறைந்த மூத்த செய்தியறிவிப்பாளரும் தயாரிப்பாளருமான ஜோர்ஜ் சந்திரசேகரிடம் ஒரு முறை கேட்டேன். “செய்திகள்“ ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையிலேயே இவ்வாறு சொல்லப்படுகிறது என்று விளக்கம் தந்தார். அந்த அடிப்படையிலேயே “செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது“ என்று நான் இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன். நன்றி.

ASHROFF SHIHABDEEN said...

Hi ashroffshihabdeen,

Congrats!

Your story titled 'தானாய் அழியும் தமிழ்' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 3rd September 2011 12:07:02 PM GMT
...
Here is the link to the story: http://ta.indli.com/story/545740

Thanks for using Indli

Regards,
-Indli

Shaifa Begum said...

சேர் நீங்கள் சொன்ன விசயங்கள் அனைத்தும் உண்மை முரண் படுவதற்கு ஒன்றுமே இல்லை. நான் பார்த்தவர்களில் அநேகமானவர்கள் இந்தத் தவறைச் செய்கிறார்கள்... பணயக் கைதியை பயணக் கைதி என்று தான் உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன்.. அது ம்டடுமல்லாம்ல் விவாகரத்து இதை எப்படி சொல்கின்றார்களென்றால், விவகாரத்து.. இதை யெல்லாம் யாருகிட்ட போய் சொல்றது..? பார்த்து வாசிப்பதைக் கூட அதன் பொருளுணராமல் சொதப்புவர்களை.... என்ன பண்ணுவது..? இவர்களை எப்படி அறிவிப்பாளர்கள் வரிசையில் சேர்ப்பது..? மொழியை அறியாதவர் அதாவது வேற்று மொழி பேசுபவர் ஒருவர் பிழைவிட்டால்.. சொன்னவிசயம் புரிந்து தானே என்று சொல்லி சமாதானப்படுவதில் தப்பில்லை..ஆனால் நாள்முழுக்க தமிழையே பேசும் ஒருவர் இந்த மாதிரி பிழைவிட்டால் சொன்ன விசயம் புரிந்ததுதானே என்று சொல்லி தலையாட்டிக் கொள்வது தான் தமிழுக்கு பெருமையா..?

“ஹலோ... யார் பேசுகிறீர்கள்.... என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.... யார் யாருக்காகவெல்லாம் பாடல் விரும்பிக் கேட்கிறீர்கள்...?” என்ற கேள்விகளோடு ஓர் அறிவிப்பாளன் பணி முடிந்து விடுகிறது. "

சரியாகச் சொன்னீர்கள் சேர்....நீங்கள் சொன்ன மாதிரி இது ஒரு அறிவிப்பாளன் என்ற போர்வைக்குள் இருந்து செய்யத் தேவையில்லை. 5 வயது பிள்ளை கூட இதைச்சரியாகவே பண்ணும்.. 5 பாடல்களை ஒலிபரப்பிவிட்டு அறிவிப்பாளன் என்று சொல்லிக்கொண்டு பண்ணுகிற பந்தா தாங்கவும் முடியல..சகிக்வும் முடியல.சில நேரங்களில் எரிச்சல் கூட வரும்...
அறிவுபூர்வமான விசயங்களையோ.. ஆக்கபூர்வமான விசயங்களையோ ஆளுமையை வளர்க்கும் விசயங்களையோ இவர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது.. மூளைக்கு வேலை இல்லாது.. தானும் அசையாது.. தன் கதிரையும் அசையாது, உட்கார்ந்து பாடல் போடுவதில் இவர்கள் என்ன திருப்தி தான் கண்டார்களோ..? தொழிலாக எது செய்தாலும் அதில் திருப்தி இருக்க வேண்டும்.நாளு பேருக்கு எதையோ பண்ணினோம் என்ற சந்தோசம் இருக்க வேண்டும. இங்கு எதுவும் இல்லை . தான் வளருவதும் இல்லை.. மற்றவர்களை வளர விட்டதும் இல்லை.....( நானும் ஒரு வானொலியில் தான் வெலை பார்க்கிறென்.. ஆனால் பாடல்களை ஒலிபரப்பி அறிவிப்பாளர் , தொகுப்பாளர் என்ற போர்வைக்குள் என்னை அடையாளம் காட்டுவதில் ஒரு சதவீதம் கூட எனக்கு உடன்பாடு இல்லை. ம்ட்டுமல்லாமல் என்னை நானே மழுங்கடித்துக் கொண்டு, என்னுடைய ஆக்கத்திறனை, அறிவுத்திறனை தூங்கப்போடுவதிலும் கண்டிப்பாக நான் உடன்படப் போவதில்லை. இதை நான் ஏன் சொல்கின்றேனென்றால்........“‘ஹலோ ....யார் பேசுகிறீர்கள்..???? இந்த ரகத்திற்குள் நான் இல்லை என்று சொல்லி ஆக வேண்டும்...)

”கடந்த காலங்களில் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை மூத்தோர் இன்றும் நினைத்துக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் பொருள் இருந்தது, ரசனை இருந்தது, தமிழ் இருந்தது. இன்று இவற்றில் எதாவது எஞ்சியுள்ளதா என்பதைத்தான் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்”

சேர் சொல்ல வேண்டிய விசயங்களை காயப்படாமல் சொல்லியிருக்கிறீங்க.. கண்டிப்பாக..இதில் உள்வாங்க வேண்டிய விசயங்கள் நிறையவே இருக்கின்றது..உச்சரிப்பில் என்பக்கமாகக் கூட நிறைய தவறுகள் என்னை அறியாமலே என்னுடன் ஒட்டி இருப்பது எனக்குத் தெரியும்.. இதை வாசித்தபின் சரி பண்ணிக் கொள்வதில் சிரமம் எதுவும் இல்லைஎன்று நினைக்கிறேன்..காரமான ஒரு ஆக்கம் படித்ததில் மகிழ்ச்சி....பதிவுக்கு நன்றி...

Anonymous said...

தற்கால ஊடகங்களில் தமிழ் படும் பாடு குறித்ததான உங்கள் ஆக்கம் மிகவும் பயனுள்ளது .

நீங்கள் குறிபிட்டது போல "செய்திகள்", பண்பியல் ஊடகங்களை பொறுத்த வகையில் பலதரப்பட்ட தொகுப்புகளின் ஒட்டுமொத்த நிகழ்ச்சியாக கொள்ளப்படுவது (கொல்லப்படுவது), ஒளி, ஒலிபரப்பில் கோட்பாட்டு நியதியாக சில முரண்பாடுகள் திணிக்கபடுவது போன்ற சங்கடங்களின் மத்தியில் சில ஊடகவியலாளர்கள் முழி பிதுங்கி நிற்பதை தங்கள் அறியாததா?!

shenbagam said...

எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு.அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களே!தங்களது “ தானாய் அழியும் தமிழ்“ கட்டுரையையும் அக்கட்டுரைக்கு நான் எழுதிய கருத்துக்களையும் வெளிநாட்டு வானொலி ஊடகவியலாளர் ஒருவருக்கு நகல் எடுத்து எனது மின்னஞ்சலின் ஊடாக அனுப்பிவைத்தேன். கட்டுரையை அறிவிப்பாளர் ஒருவர் ஏறத்தாழ முக்கால் மணித்தியாலத்திற்கும் மேலாக என்னிடம் மிக ஆர்வமாக படித்துக் காண்பித்ததோடு மட்டுமின்றி தங்களின் பல கருத்துக்களுக்கு உடன்பட்டார்.இவ்வளவு சமாச்சாரங்கள் இருக்கின்றதா? என்று தனது ஆச்சரியத்தினையும் அவர் பகிர்ந்துகொண்டார். மட்டுமல்லாது இதனை தனது சக அறிவிப்பாளர்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.விளம்பரங்களை வழங்கவிருக்கும் சில நிறுவனத்தார் ஏன் சுத்தத் தமிழில் சிலர் அறிவிப்புச் செய்கிறீர்கள் என்றும் இலங்கையைச் சார்ந்தவர்களே உங்கள் வானொலியில் அறிவிப்பாளர்களாக ஏன் உள்ளனர்? மற்ற நாட்டினரையும் உங்கள் வானொலியில் அறிவிப்பாளர்களாக பணியமர்த்தலாமே என்ற ஆதங்கத்தினையும் அந்நிறுவனத்தார் வெளிப்படுத்தியதாகவும் தனது வருத்தத்தினையும் என்னோடு பகிர்ந்து கொண்டார். நான் எங்கள் மூத்த அறிவிப்பாளர்கள் திரு.பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களும் திரு.அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களும் ஊடகங்களில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சுட்டிக்காட்டியிருக்கின்றனரோ அதை அறிவிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள முன் வந்தாலும் விளம்பரம் என்ற போர்வையில் சில நிறுவனத்தார் தடம் புரள வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர் என்ற எனது ஆதங்கத்தையும் நான் முன் வைக்கத்தவறவில்லை.இப்போது இல்லையெனினும் தங்களின் அறிவுரைகளை வருங்காலங்களில் படிப்படியாக கடைபிடிக்கவிருப்பதாகவும் (பின்னர் என்பது எவ்வளவு தூரம் நிச்சயம் என்பதை நானறியேன்)நம்பிக்கையளித்துள்ளார்.அறிவிப்பாளர் அவர்களே எனது கருத்துக்களைத் தாங்களே கருத்துப்பகுதியில் வெளியிட்டிருந்தால் நான் எனது கருத்தினை இணைத்து அனுப்பவேண்டியதிருக்காது அல்லவா?
கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்.(இலங்கை வானொலி நேயர்)

shenbagam said...

அறிவிப்பாளர்/எழுத்தாளர் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களே! தங்களால் எழுதப்பெற்ற தானாய் அழியும் தமிழ் என்னும் கட்டுரையைப் படித்தேன். புலம் சிலிர்த்தேன். ஏன்?. இன்று உலகெங்கிலும் உள்ள தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அநியாயத்திற்கு நடைபெறும் உலகத்தின் முதல் மொழியாம் என் தமிழ் மொழியின் கொலையினைக் குறித்து மிக யதார்த்தமான நிஜங்களை சில பேரின் கண்களுக்காவது காட்சிப்படுத்தி கண்டு திருந்தி கொள்ளட்டும்: திருத்திக்கொள்ளட்டும் என்ற மகோன்மத மனப்பான்மையில் உருவாகியுள்ள கட்டுரையைப் படித்திடும் ஒரு வாய்ப்பை வழங்கியமைக்காக எங்கள் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருவாளர். அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.ஓரளவு ஒழுங்காகத்தான் இருந்தது தமிழ்.இத்தனை தூரம் பாரிய அழிவுப்பாதையை நோக்கிப் பயணிக்கவில்லை தமிழ். எப்போது? தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது வரை. என்றைக்கு இந்த ஊடகங்களை நடத்திக்கொள்ள தனியாருக்கு அனுமதியளிக்கப்பட்டதோ அன்று தான் தமிழுக்கு பிடித்தது தடிமன். அன்றிலிருந்து தடிமன் உருவெடுத்து வளர்ச்சியுற்று காய்ச்சலாக மாறி பின்னர் டைபாயிடாக மாறி பின்னர் அதிலிருந்தும் கிளைவிட்டு பல்வேறு உருவகங்களில் நர்த்தனமாடி தீர்த்து இறுதியாக காசநோயாக தோற்றமளித்துக்கொண்டிருக்கிறது. இந்த காசநோய் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படுமா? அல்லது தனது வாரிசுகளைக் காற்றினூடே தூவிச்சென்று கொண்டேயிருக்குமா? இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வைத்தியத்தைத் தான் தாங்கள் சுட்டிக்காட்டுகின்றீர்கள். ஆனால் நோய் பீடித்திருக்கும் ஊடகங்களோ அதனால் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நாங்கள் இருமி இருமி நச்சுக்கிருமிகளைப் பரப்பிக்கொண்டே தான் இருப்போம். எங்களோடு சேர்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் அவர்களும் அவர்களது சந்ததியினரும் தலை தூக்க வழியின்றி அழிந்து நாசமாய் போகட்டும் என்று நல்ல மனதுடன் அல்லவா சேவை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த கட்டுரையை எத்தனை அன்பர்கள் உங்களது வலைத்தளத்தில் பார்வையிட்டு தம்மைத் திருத்திக்கொள்ளப்போகின்றார்கள். பத்திரிகைகளோ, வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ, இணையதளங்களோ இன்ன பிற ஊடகங்களோ சுத்தமான தமிழில் நாம் வழங்கினால் எங்கே நமது வருவாய் பாதிக்கப்பட்டு விடுமோ படிப்பதற்கோபார்ப்பதற்கோ, கேட்பதற்கோ, ஆளில்லாமல் போவிடுமோ என்ற (நற்சிந்தனையில்) தங்களுக்குள்ளேயே ஒரு வளையத்தை அமைத்துக்கொண்டு அடுத்த தலைமுறைக்கு மீதமின்றி இத்தலைமுறையிலேயே நாசப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஒரு தமிழ்த் தாய்க்குப் பிறக்கும் சிசுக்களுக்கு இலைவிட்டு, மலர் விட்டு, கனிவிட்டு என அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியின் போதும் துணை நின்று, பேச்சு கற்றுக்கொடுத்து, நல்ல பழக்க வழக்கங்களை, புத்திமதிகளைக் கூறி வளர்க்கும் தாய் தம் குழந்தைகளுக்கு முதலில் தமிழ் கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகள் தமிழ் பேசாது போய்விடுமா?அடுத்ததாக ஆசிரியர் பொறுப்பிலிருக்கும் ஊடகங்கள் அத்தமிழை வளர்க்கும் அரும்பணியை ஆற்றவேண்டும். தமக்குத் தாமே எல்லை அமைத்துக்கொள்வதை இனி வருங்காலங்களிலேனும் விட்டொழிக்க வேண்டும். இல்லையெனில் நம் தமிழ் அதல பாதாளத்தில் விழுந்து மாய்ந்து போகும். ஒரு காலத்தில் டைனோசர் என்ற ஒரு பாரிய மிருகம் இருந்ததாக நாம் கேட்டும் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பெற்ற எலும்புக்கூடுகளைப் பார்த்தும் படங்களிலும் பார்த்தும் அறியக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோமோ அதே நிலை தான் இன்னும் சில வருடங்களில் தமிழுக்கும். ஊடகங்களே உணர்ந்து செயலாற்றுக. தொன்மையான இனிய மொழியாம் எம் தமிழ் மொழியைப் புதை குழிக்குத் தள்ளாது காத்திடுக.
தானாய் அழியவில்லை தமிழ். அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே மெய். காலத்தே பயிர் செய் என்பதைப்போல் காலத்திற்கேற்ற கட்டுரை.பாராட்டுக்கள் எழுத்தாளர் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களே!

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இதுவே என் கருத்து.இதற்கும் எத்தனை பேர் வரிந்து கட்டிக்கொண்டு ஆர்ப்பரிக்கப்போகின்றார்களோ? யாமறியோம் பராபரமே!
கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்.
(இலங்கை வானொலி நேயர்)