Thursday, September 8, 2011

அடங்கும் பெண்டிரும் அடங்கா ஆடவரும்



          நெருக்கமுள்ள நண்பர்களான ஸைதும் அகமதும் ஒரே காலப் பிரிவில் திருமணம் செய்து கொண்டவர்கள். சில காலங்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்துக் கொண்ட போது ஆர்வத்துடன் சுக நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

அகமட், திருமண வாழ்க்கை எப்படிப் போகிறது என்று ஸைதிடம் கேட்டான்.

“எனது மனைவி மிகவும் கீழ்ப்படிவுள்ளவள். அவள் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள்” என்று ஸைத் பதில் சொன்னான்.

“அப்படியானால் அவளை நீ அடித்ததே இல்லையா... ஒரு முறையாவது?”

“எதற்காக அவளை நான் அடிக்க வேண்டும். எனது எல்லாத் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றுகிறாள். அவளை நான் மிகவும் நான் விரும்புகிறேன்” என்றான்.

பதிலைக் கேட்ட அகமட் சொன்னான்:-

“நான் என்றால் வாரத்துக்கு ஒரு முறை மனைவியை அடித்து விடுவேன்!”

“ஏன் அப்படி அடிக்க வேண்டும்?” - ஸைத் கேட்டான்.

“வீட்டின் ஆண்பிள்ளை யார் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா... அதற்காகத்தான்!” என்றான்.

அத்துடன் அவர்களது சந்திப்பு முடிந்தது.

அந்தச் சந்திப்புக்குப் பின் இரண்டு வருடங்கள் கழிந்து மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள்.

“ஸைத்... இப்போ மனைவியை அடிக்கிற அளவுக்கு நீ முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்...” என்றான் அகமட்.



“இல்லை... எந்தக் காரணமும் இல்லாமல் அவளை என்னால் அடிக்க முடியாது” - ஸைத் சொன்னான்.

“நீ நல்ல மனிதன்தான். அடிப்பதற்கு நான் உனக்கு ஒரு வழி சொல்லித் தருகிறேன். மூன்று கிலோ மீன் வாங்கு. வீட்டுக்கு விருந்தினர் வருவதாகச் சொல்லிச் சமைக்கச் சொல்லு. ஆனால் அவள் விபரம் கேட்பதற்கு முன் வீட்டை விட்டுப் புறப்பட்டு விடு. வீட்டுக்கு வந்ததும் நீ எதிர்பார்த்த மாதிரிச் சமைக்கவில்லை என்று சொல்லி அடிக்க முடியும்.”

அகமட் சொன்னதைப் போல் செய்து பார்ப்பது என்று ஸைத் முடிவு செய்தான்.

மூன்று கிலோ மீன்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

மீன்களை எப்படிச் சமைப்பது என்று ஸைதின் மனைவி குழம்பிப் போனாள். சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்து விட்டு ஒரு கிலோ மீனடகளைக் கறியாக்குவது என்றும் அடுத்த கிலோ மீன்களை நெருப்பில் வாட்டுவது என்றும் மீதி மீன்களைப் பொரிப்பது என்றும் முடிவு செய்தாள்.

இரவு வீட்டுக்கு நண்பன் அகமதுடன் வந்த ஸைத் உணவை வைக்குமாறு மனைவியிடம் சொன்னான்.

அவள் உணவு பரிமாறத் தயாரான போது ஸைதின் மகன் தனக்கு ‘மலங்கழிக்க வேண்டும்’ தாயிடம் சொன்னான். அவள் அவசர அவசரமாக அவனை அழைத்துச் சென்று ஒரு பழைய சட்டியை வைத்து மலங்கழிக்குமாறு ஏற்பாடு பண்ணிவிட்டுக் கணவருக்கும் அவனது நண்பனுக்கும் உணவை வைக்க ஆரம்பித்தாள்.

முதலில் தக்காளி சோஸiயும் வாட்டிய மீனையும் அவர்கள் முன்னால் வைத்தாள்.

“ஐயோ... மீனை வாட்டினாயா... இதை நான் சாப்பிட முடியாது” என்றான் ஸைத்.

அவள் அவசரமாகச் சென்று பொரித்த மீன்களைக் கொண்டு வந்து வைத்தாள்.

“அடடா.. இவ்வளவு மீனைப் பொரித்து விட்டாயே... சோறும் கறியுமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று சத்தமிட்டான்.

அடுத்த நிமிடம் சோற்றையும் மீன் கறியையும் கொண்டு வந்து வைத்தாள்.

தனது திட்டம் தோல்வியடைந்து விட்டதை உணர்ந்தான் ஸைத்.

“இதை விட மலத்தைத் தின்னலாம்!” என்று கோபம் காட்டிச் சத்தம் போட்டான்.

உள்ளே சென்ற ஸைதின் மனைவி மகன் கழித்த மலச் சட்டியைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தாள்.

நண்பர்கள் இருவரும் ஆடிப் போனார்கள். ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள்.

அகமட் ஸைதிடம் சொன்னான் -

“உண்மையில் உலகத்தில் உள்ள சிறந்த மனைவிகளில் உனது மனைவியும் ஒருத்தி!”

பின்னர் இருவரும் அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்....

(Source: Al Ashhab, Rushdi. Kan Ya Ma Kan: popular stories from Jerusalem, Alloush publishing company,Jerusalem 1996.)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: