Wednesday, September 14, 2011

சித்திரவதை... சித்திரவதை...!


ஒரு குடம் கண்ணீர் - உண்மைக் கதைகள் நூலுக்கான எனது பார்வை

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

சித்திரவதைகள் என்ற வார்த்தை இக்காலத்தில் யாவருக்கும் பொதுவாக தெரிந்திருக்கும் விடயமாக இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்துக்கு முதலாளி வர்க்கம் கொடுக்கும் சித்திரவதைகள், நலிவுற்ற நாடுகளுக்கு வல்லரசுகள் கொடுக்கும் சித்திரவகைள், அப்பாவி பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படும் பாலியல் சித்திரவதைகள் என்று பல்வேறு கோணங்களில் அதன் தாக்கத்தை வரையறுத்துக்கொண்டு போகலாம். சொந்த தகப்பனாலேயே வல்லுறவுக்குட்படுத்தப்படும் அப்பாவி பெண்களின் கதைகைளை தினசரிகளுக்கூடாக தினமும் அறிந்து வருகிறோம்.


இவ்வாறான சில யதார்த்த பூர்வமான விடயங்களை உள்ளடக்கி சர்வதேச ரீதியில் இடம்பெற்ற சித்திரவதைகள் சார் நிகழ்வுகளை ஆவணப்படுத்து கின்றதொரு பொக்கிஷமாக வெளிவந்திருக்கிறது அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் ஒரு குடம் கண்ணீர் என்ற உண்மைக் கதைகளின் தொகுப்பு.

தனது தாய்மாமன் செய்யது ஷரிபுத்தீன் மற்றும் அவரது புதல்வன் அஜ்மல் ஷரிபுத்தீன் ஆகிய இருவருக்குமாக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூல் யாத்ரா வெளியீடாக 250 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

கற்பனை சேர்க்கையும் அலங்காரங்களும் இல்லாது யதார்த்தத்தை அதன் உள்ளமை குன்றாது முன்வைக்கும் நூலாசிரியரின் எழுத்துப்பாணி ஒரு பரிசோதனை முயற்சிக்கு ஒப்பானதாகும். மனதை நெகிழ வைக்கும் வேதனைகளும், அவலங்களும் இங்கு பதிவாகியுள்ளன. துயரத்தையும், உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இலக்கியப் பதிவுகள் அவை. செய்திகளின் சம்பவங்களின் வெறும் பதிவுகள் என்ற வரட்சியை இந்நூல் வெல்ல முயன்றுள்ளது. ஆவண பதிவுகளுக்கு அப்பால் சம்பவங்களின் சோகங்களையும், நிகழ்ந்துள்ள அநீதிகளையும் மீளாக்கம் செய்து உலகின் கவனத்திற்கு இது கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தையும் தாண்டி இந்நூல் ஓர் ஆவணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த நூற்றாண்டின் கொடுமைகளின் ஒரு பகுதியை இது மக்களுக்குச் சொல்கிறது என்கிறார் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள்.

தனது நூல் பற்றி உண்மையைத் தவிர வேறில்லை என்ற பதிவினூடாக நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். மனிதன் இயல்பாகவே மற்றொருவனை அல்லது மற்றொன்றை அடக்கியாளவும், ஆதிக்கம் செய்யவும் விரும்பியவனாக இருக்கிறான். அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் முதல் ஒரு சில்லறைக் கடை உரிமையாளர் வரை இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் கூட ஒருநாளில் நமக்குக் கீழேயுள்ள யாரையாவது அதட்டிப் பார்க்கிறோம் அல்லது அதற்கு முற்படுகின்றோம். அதற்கு வாய்ப்பற்றவர்கள் கால்நடைகளையாவது அதட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பண்பு அவரவர் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப மனித ரத்தத்தில் கலந்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.

உலக மகா யுத்தம் தொடக்கம் இன்று வரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழித்தும், பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களை அழித்தும் பொது ஜனங்களுக்கு செய்யப்படுகின்ற சித்திரவதைளை தினமும் நாம் கேள்விப்படுகிறோம். நம் நாட்டிலல்லாது பிற நாடுகளில் நடக்கும் இவ்வாறான பயங்கர சம்பவங்களை எம்மில் பலர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனினும் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் மனிதத்துவப் பண்புடன் அயல்நாட்டு பிரச்சனைகளை தமது எழுத்தினூடாக எமக்கெல்லாம் அறியத் தந்திருக்கின்றார்.

முதல் சம்பவமான அவன் ஒரு நட்சத்திரம் என்ற கதையில் முஹம்மத் என்ற பலஸ்தீனச் சிறுவனைப் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெறுவதையே தன் இலட்சியமாகக் கொண்டிக்கும் அந்தச் சிறுவனுக்கு பன்னிரண்டு வயதுதான் ஆகிறது. தனது தந்தையுடன் கடைவீதிக்குச் செல்லும் முஹம்மதையும், முஹம்மதின் தந்தையையும் இஸ்ரேலிய இராணுவத்தினன் ஒருவன் தனது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாக்குகின்றான். ஆக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது எப்படிப் போனாலும் தனது ஆரம்பப் பாடசாலை அணியில் கூட விளையாடும் அதிர்ஷ்டம் இன்றி இறந்து போகிறான் சிறுவன் முஹம்மத். மற்ற பிள்ளைகளுக்காக வாழும் முஹம்மதின் தாய் அவர்களிடம் இப்படிச் சொல்கிறாள். 'முஹம்மத் இப்போது சுவர்க்கத்தில் இருக்கிறான். ஒரு நட்சத்திரமாக' இதயத்தை கசக்கிப்பிழியும் சம்பவம் இது. ஒரு அப்பாவிச் சிறுவனின் ஆசை இங்கே நிராசையாகிப்போகிறது.

பிஞ்சுகளும் பிசாசுகளும் என்ற கதையில் 1988 இல் பிறந்த ரீட்டா, ருத் என்ற இரு யுவதிகளின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. டுட்சி இனத்தவரான இவர்கள் மீது ஹூட்டு இனத்தவர்கள் தாக்குதல்களை மேற் கொள்கின்றார்கள். தமது உயிரைக் காத்துக்கொள்வதற்காக அப்பா, அம்மா, பதினொறு வயதான மாமி கேத்தி எல்லோரும் காடுகளுக்கூடாவும், மலைகளுக்கூடாவும் எந்தவித வரைபடங்களோ, இலக்குகளோ இன்றி செல்கின்றார்கள். டுட்சி இனத்தவர்களை வலை விரித்துத்தேடும் ஹூட்டு இனத்தவர்களிடமிருந்து தம்மை பாதுகாக்க பெரும்பாடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் தாயும் தந்தையும் இறந்துவிட மாமியான கேத்தியுடன் வேறிடம் தேடி செல்கையில் ஜேன் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. எனினும் அதுவும் தமக்கு உகந்த இடமல்ல என்பதுபோல அவர்களைத் தேடி ஹூட்டு இனத்தவர்கள் ஜேனின் வீட்டுக்கு வருகின்றார்கள். அதனால் தம்மால் ஜேன் என்ற பெண்ணுக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக மீண்டும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். இந்தக் கதையினிடையே சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களை வாசிக்குமிடத்து இவ்வாறான பயங்கரங்கள் நிகழுமா என்ற அச்சம் தோன்றுகிறது. காட்டுப் பாதையை ஊடுறுவி அவர்கள் வரும்போது காணாமல் போயிருந்த தந்தையின் சடலத்தைக் காண்கின்றனர். அஞ்சலி செலுத்தவோ, கதறியழவோ வழிகளின்றி அவரது பிணத்தை அநாதரவாக விட்டுச்செல்லும் அந்த நிலைமை அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

ஒரு மணிப்புறாவின் மரணம் என்ற கதையில் வல்லுறவுக்கு உட்பட்டு அநியாயமாக இறந்துபோன இளம் நங்கையின் சோகத்தை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். அதாவது பெயரில் மாத்திரம் பசுமையாக (கிறீன்) வாழுகிறான் ஒரு அமெரிக்க இராணுவ வீரன். ஜோர்ஜ் புஷ்ஷின் ஊர்க்காரன் என்பதால் அவனுக்கு இராணுவத்தில் இடம் கிடைத்ததா அல்லது குற்றம் புரிவதற்காகவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டானா என்ற கேள்வி சாட்டையடியாக இருக்கின்றது. அபீர் ஹம்சா என்ற பதினான்கு வயது இளம்பெண் மீது குறியாக இருக்கும் கிறீன் அவளை துவம்சிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். திட்டத்தை அமுல்படுத்தும் நாளன்று தனது சகாக்களுடன் செல்லும் கிறீன், அபீர் ஹம்சாவின் பெற்றோரையும், ஐந்து வயதேயான அவளது சகோதரியையும் சுட்டுக்கொன்றுவிட்டு தனது நண்பர்களுடன் இணைந்து அவளை மானபங்கப்படுத்துகின்றான். காரியம் முடிந்த பின் அந்த அப்பாவிப் பெண்ணின் முகத்தின் மீது தலையணையை வைத்து ஏ.கே 47 துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகின்றான்.

சராசரி மனிதர்களுக்கு நேரும் இக்கொடுமைகளுக்கும் அப்பால் ஒரு பிக்குவுக்கு நேர்ந்த துன்பகரமான விடயங்களை தப்பிப் பிழைத்த பிக்கு என்ற கதையில் அறியக் கிடைக்கிறது. பிக்குவின் கரங்கள் பின்னால் விலங்கிடப்பட்ட நிலையில் அவரது நெஞ்சிலும் முகத்திலும் இராணுவத்தினர் ஓங்கி உதைககின்றனர். மூர்க்கத்தனமாக அறைந்து காதுகளில் ஏறி மிதிக்கின்றனர். அகில பர்மா துறவிகள் அமைப்பின் தலைவர் யார், நீ அதில் அங்கத்துவம் வகிக்கின்றாயா போன்ற கேள்விகளைக் கேட்டு அந்த பிக்குவை படுத்தும்பாடு மிகவும் வேதனைக்குரியது. அதிஷ்டவசமாக அந்த சிறையிலிருந்து தப்பி விடுகின்றார் பிக்கு. எனினும் அதிகார வர்க்கதினருக்கு அந்த பிக்கு சொல்லும் போதனை இதுதான். அதாவது 'அராஜகங்களைக் கைவிடுங்கள். இல்லையேல் நீங்கள் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவீர்கள்' என்பதுதான்.

உபகாரம் என்ற சம்பவம் லூசியா என்ற பெண்ணின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. ஷெல்களும், துப்பாக்கி ரவைகளும் கொண்டு இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துவிட்டால் லூசியாவின் குடும்பத்தினர் பைபிளோடு சங்கமமாகிவிடுவார்கள். சேர்ச்சுக்குப் போகும் ஒருநாளில் குண்டுச் சத்தம் காதைப் பிளக்க தனது குழந்தைகளுக்கு ஒன்றும் நிகழக்கூடாது என்று எண்ணியவாறு கிட்டத்தட்ட மூர்ச்சையான நிலையை எய்துகிறாள் லூசியா. புனித பூமி மன்றம் என்ற அமைப்பினால் லூசியாவைப் போன்ற பலருக்கு உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டி ருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த உதவியும் இல்லாமல் போகிறது. ஆம். ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கட்டளையின் பேரில் புனித பூமி மன்றம் மூடப்படுகிறது. மன்றத்தின் பணம் ரமழான் மாதம் முழுவதற்கும் முடக்கப்படுகின்றது. தனது வாழ்வையும், சுவாசத்தையும், நம்பிக்கையையும் யாரோ தூர எடுத்துச் சென்றுவிட்டதாக லூசியா உணர்கின்றாள். நீண்ட நேரத்துக்குப் பின் அவளது மகனான ஜோனை தேடுகிறாள் லூசியா. தூரத்தில் குண்டுச்சத்தம் கேட்கிறது. அவளால் எதையும் அனுமானிக்க முடியாத அளவுக்கு அவள் பலவீனமாக இருக்கின்றாள். எனினும் போதகர் அவளை நோக்கி ஓடி வருவதாக காண்கிறாள். ஜோன் இறந்து விட்டானா? என்ற அச்சத்தை வாசகர்களின் மனதுக்குத் தந்து விடுகிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள்.

இவ்வாறான பல நிகழ்வுகளை உள்ளம் உருகும் விதத்தில் தந்திருக்கும் நூலாசிரியரை பாராட்டாமல் இருக்க முடியாது. அவரது எழுத்துப் பணி மென்மேலும் சிறந்து விளங்கவும், இன்னும் பல படைப்புக்களைத் தர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்!!!


நூலின் பெயர் - ஒரு குடம் கண்ணீர் (உண்மைக் கதை)
நூலாசிரியர் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
தொலைபேசி - 0777 303818
வெளியீடு - யாத்ரா
விலை - 300 ரூபாய்

மேலுள்ள சிறுகதைத் தொகுதியின் விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15342:2011-06-28-06-00-53&catid=4:reviews&Itemid=267

நன்றி - தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா - வீரகேசரி - கீற்று
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: