Friday, September 16, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 2


இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 2

காயல்பட்டின மாநாட்டுக்கான இலங்கைச் செயற்பாடுகளை டாக்டர் ஜின்னாஹ்வும் மானா மக்கீனும் முன்னெடுத்தார்கள். இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நான் ஒத்துழைத்தேன். மானா மக்கீனுக்கு ஹாஜி பாயிக் மக்கீனும் தோள் கொடுத்தார். கவிஞர் யாழ். அஸீமும் உதவி செய்தார்.

மாநாடு நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்குக் கப்பல் பயணமும் ஆரம்பமாகி விட்டது. தூத்துக்குடிக்கும் காயல் பட்டணத்துக்கும் இடையே குறுகிய பயணத்தூரமே இருப்பதாலும் ஒரு தொகையினர் கப்பலில் பயணம் செய்ய விரும்பக் கூடும் என்பதால் கப்பலில் செல்ல விரும்பும் குழுவினரை மானா மக்கீன் பொறுப்பெடுப்பதாகவும் விமான மார்க்கமாக சென்னை சென்று அங்கிருந்து பஸ் மூலம் காயல்படடினம் செல்ல விரும்புவோரை டாக்டர் ஜின்னாஹ் பொறுப்பெடுப்பதாகவும் முடிவெடுத்தார்கள்.


இந்தியா வீசா நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள்தாம் பலரது பயணத்துக்கு இடையூறாக இருந்தன. ஒன் லைனில் வீசா விண்ணப்பம் பெறுவது, அதில் ஒரு எழுத்தேனும் பிசகாமல் இருப்பது, இறங்கும் இடம் ஆகியன பலரைக் குழப்பத்தில் தள்ளின. அடையும் இடம் சென்னை என்று குறிப்பிட்டால் வீசாவிலும் அதைக் குறிப்பிடுவார்கள். அவ்வாறு வீசா பெற்றவர்கள் கப்பலில் பயணம் செய்ய முடியாது. ஆனால் வீசாவுக்கான படிவத்தை நிரப்பும் போது விரிவாகச் சொடுக்கிப் பார்த்தால் All ports என்று ஒன்று இருக்கிறது. அவ்வாறு நிரப்பினால் கப்பலிலும் போகலாம், விமானத்திலும் செல்லலாம். இந்த விடயத்தை சென்று வந்த பிறகுதான் நான் அறிய வந்தேன்.


நான் விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன். குழுவினர் பயணப் படுவதற்கு இரண்டு தினம் முன்னரே நானும் அல் அஸ_மத்தும் சென்னை சென்று விட்டோம். எனது நூல் வெளியீட்டை சென்னையில் நடத்தவிருந்தமையால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் காயல்பட்டினம் செல்வதற்கான பஸ் ஏற்பாடுகளைச் செய்வதும் எங்கள் நோக்கமாக இருந்தது.

காயல் பட்டினம் செல்வதற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உப செயலாளர் பேராசிரியர் அகமது மரைக்காயர் தனது வேலைப் பளுவுக்கு மத்தியில் சொகுசு பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து வைத்திருந்தார். நான் அவரை இரவு 10.30 அளவில் ஒரு கணினி மையத்தில் சந்தித்த போது மாநாட்டு ஆய்வுக் கட்டுரை நூலுக்குரிய பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

அவர் காயல் பட்டினத்தைச் சேர்ந்த மைதீன் ஹாஜியிடம் இலங்கையிலிருந்து விமானத்தில் வருவோரை அழைத்துச் செல்லும் பொறுப்பை வழங்கியிருந்தார். காயல்பட்டினம் சென்று மீண்டும் திரும்பும் வரை மைதீன் ஹாஜி போக்குவரத்து வசதிகளைச் செய்து தருவதில் மிகவும் அக்கறை செலுத்தினார்.


மைதீன் ஹாஜியுடன்

இலங்கைக் குழுவினர் யாவரும் ஒரு நாள் முன்னரே காயல்பட்டினம் சென்று சேர்ந்தனர். விமான மார்க்கமாகச் சென்ற எமது குழுவே முதலில் காயல்பட்டினத்தை அடைந்தது. காலையுணவுடன் எம்மை வரவேற்ற மாநாட்டுக் குழுவினர் பதிவுகளை மேற் கொண்டனர். பேராளர்கள் தங்குவதற்கு வசதியாக வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்தந்த வீடுகளின் இட வசதிக்கேற்ப குழுக் குழுவாகப் பிரித்து வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். நாங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு முன்னரே கப்பல் குழுவும் வந்த சேர்ந்தது.

நாங்கள் மரைக்கார் பள்ளித்தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டோம். எங்கள் குழுவில் டாக்டர் ஜின்னாஹ், அல் அஸ_மத், நாச்சியாதீவு பர்வீன், யூனுஸ் கே.றகுமான், அகமட் எம். நஸீர், நான் - ஆகிய அறுவரும் உள்ளடங்கியிருந்தோம். அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் அவ்வீட்டு இளைஞர் எம்மை அகமும் முகமும் மலர வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.


சிற்றுண்டி, வேளை தவறாமல் தேநீர் ஆகியன அந்த வீட்டிலே எமக்கு வழங்கப்பட்டன. அங்கு தங்கியிருந்த நாட்களில் சொந்த வீட்டில் தங்கியிருப்பதைப் போன்ற உணர்வே எங்களிடம் இருந்தது. அதற்குக் காரணம் காயல்பட்டினம் நமது முஸ்லிம் கிராமங்களைப் போலவே இருந்ததும் காயல்பட்டினத்து மக்களின் உபசரிப்புமேயாகும். இடைக்கிடையே வந்த எமது தேவைகளை அந்த இளைஞர் கேட்டுக் கொள்வார். சில வேளைகளில் எம்முடன் உரையாடல்களில் கலந்து கொள்ளுவார். ஆனால் சமதையாக கதிரையில் அமராமல் மிகவும் மரியாதையுடன் நின்று கொண்டே உரையாடுவார். அந்த இளைஞர் சென்னையில் கல்லூரியொன்றில் கற்றுக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவரது பெயர் சுல்தான்.
 

நாம் தங்கியிருந்த வீடும் சகோதரர் சுல்தானும்

ஏழாம் திகதி பகலுணவு, இரவுணவு ஆகியவற்றை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பொறுப்பு நண்பர் பாதுஷாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. மிகவும் சீனேகபூர்வமாக உரையாடி உணவை வழங்கிச் செல்வார் பாதுஷா. எட்டாம் திகதி வெள்ளிக் கிழமை மாநாட்டின் துவக்க நாள். அன்றிலிருந்து அனைத்துப் பேராளர்களுக்கும் உணவு வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டுத் திடலிலிருந்தும் தங்கியிருந்த வீடுகளிலிருந்தும் பேராளர்கள் வாகனங்கள் மூலம் உணவுக்காக இந்தக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உணவு வேளையில் பல படைப்பாளிகளையும் முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கதைக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்தது.நண்பர் பாதுஷாவுடன்

மிகச் சிறந்த உணவு வகைகள் பரிமாறப்பட்டன. விருந்தோம்பல் குழுத் தலைவர் ஹாஜி ராவண்ணா அபுல் ஹஸன் அவர்கள் ஒரு கதிரையில் ஒரு சுல்தானைப் போல் அமர்ந்திருந்து கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார். ஹாஜி. எல்.எம்.இ. கைலானி மேற்பார்வை செய்து கொண்டிருப்பார். இரண்டு வகுப்பறைகளில் இருநூறுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு மேசை காலியானதும் உடனடியாகவே மற்றொரு குழுவினருக்கு அந்த மேசை தயாராகும். எந்த விதத் தாமதங்களோ இடையூறுகளோ இன்றி உதவியாளர்கள் செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். எதுவும் தீர்ந்த விட்டது என்ற தகவல் ஒரு போதும் இல்லை. இன்னும் கொஞ்சம் வைக்கவா? என்ற குரல்களே மேலோங்கியிருந்தமை காயல்பட்டினத்தின் உபசரிப்பின் உன்னதம் என்பேன்.டாக்டர் ஜின்னாஹ்வுடன் ராவன்னா அபுல் ஹஸன்

எட்டாம் திகதி வெள்ளிக் கிழமை மாநாட்டின் துவக்க தினம்.


வெள்ளிக் கிழமை ஜூம் ஆ முடிந்து வெளியே வந்த போது மாநாட்டை விமர்சித்து ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்துண்டுப் பிரசுரத்தின் பின்னணியில் மார்க்க ரீதியான இயக்கம் ஒன்று தென்பட்டது. இரண்டு பக்கங்களில் வெறும் காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்த்திருந்ததை அவதானிக்க முடிந்தது. இதன்காரணமாக இத்துண்டுப் பிரசுரம் குறித்து வெளிநாட்டுப் பேராளர்களோ உள்@ர்க்காரர்களோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.ஹாஜி கைலானியுடன்

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்கத் திடலில் மாநாட்டுக்கான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கக் கூடிய அந்தப் பந்தல் குளிர்பதன மண்டபங்களை விட அழகாகவும் இயற்கையாகவும் இருந்தது. பந்தக் கால்கள் நடப்பட்டு தென்னோலைகளால் கூரை வேயப்பட்ட பந்தலின் உட்புறமாக வெள்ளைப் படவை கொண்டு ஓலை மறைக்கப்பட்டு அதில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அசல் கிராமியத்தின் அழகு ததும்பும் அந்தப் பந்தலைப் பார்த்தால் உடனே நுழைந்து அமர்ந்து விடுவதற்கு ஆசை வரும்.பந்தலுக்கு நுழைவதற்கு முன்னால் சில புத்தகக் கடைகளும் சிற்றுண்டி- தேநீர்க் கடை, மற்றும் யூனானி மருந்துக் கடை ஒன்றும் இருந்தது. புத்தகக் கடைகளில் ஒன்று எழுத்தாளர் தாழை மதியவனுக்குச் சொந்தமானது.

மாநாட்டுத் துவக்க நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரகுமான் அவர்களது உரை. அவர் மட்டுமன்றி அனைத்து இந்திய அரசியல்வாதிகளதும் இலக்கிய ரசம் ததும்பும் உரைகளை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அவருடையதும் நாஞ்சில் சம்பத் என்ற அரசியல்வாதியினதும் உரைகள் சபையைக் கட்டிப் போட்டிருந்ததை அவதானித்தேன்.
....................................................................................................................... தொடரும்.

நன்றி - எங்கள் தேசம் - 205 - செப்டம்பர் 15 - 30
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: