திடுக்கிட்டு எழுந்த போதுதான் தான் கண்டது கனவு என்பது உறைத்தது அவனுக்கு. ஆனால் அவன் சிந்தை பெருங் குழப்பத்தில் இருந்தது.
ஒன்றும் தோன்றாத நிலையில் எழுந்து அமர்ந்திருந்த நிலையில் கைகளைக் கூப்பி மெதுவாகத் தனக்குள் பாடத் தொடங்கினான்...
பொன்னார் மேனியனே... புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொண்டையணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே...
மனசு லேசானது போல் இருக்க மெல்லச் சாய்ந்து உறங்கிப் போனான்.
கடந்த சில வாரங்களாக கிறீஸ் மேன் பற்றிய செய்திகளை அவன் ஆர்வத்துடன் படித்து வந்தான். இதற்குள் இருக்கும் சூட்சுமம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவனது பேராவலாக இருந்தது. எல்லாப் பத்திரிகைகளிலும் கிறீஸ்மேன் பற்றிய செய்திகள் இடம் பிடித்திருந்தன.
எதற்காக இந்தச் செயலில் சிலர் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்பது பற்றிய வாய்வழிக் கதைகள் பத்திரிகைச் செய்தி களை விட முக்கியமாக இருந்தது அவனுக்கு. அவற்றை மனதுக்குள் பட்டியல் போட்டபடி அவன் உறங்கிய போதுதான் அந்தக் கனவை அவன் கண்டான்.
அவன் கண்ட கனவாவது -
அவன் பிறந்து வளர்ந்த வீட்டில் முன் திண்ணையில் அவன் படுத்திருந்தான். கண் விழித்த போது தனக்கு முன்னால் உள்ள சுவரில் உள்ள சதுரக் கம்பியாலான, கதவுகள் அற்ற ஜன்னலுக்கு அப்பால் இருட்டில் இருவர் நின்றிருந்தனர். வெளியில் நிலவெறித்த போதும் அவர்களது முகங்கள் தெரியவில்லை. அவர்களில் ஒருவன் கமரா ஒன்றை உயர்த்தி அவனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். 13 வயதில் அவனது தோற்றத்தில் அவன் இருந்ததாக ஞாபகம். ஆனாலும் இன்றைய கிறீஸ்மேன் நினைவு வர அவன் சத்தமிட்டுக் கத்தினான்...
திடுக்கிட்டு எழுந்த போதுதான் தான் கண்டது கனவு என்பது உறைத்தது அவனுக்கு.
அன்றைய தினம் முழுவதும் அந்தக் கனவு அவனது மனதில் உறைந்திருந்தது. கிறீஸ்மேன்கள் கமராவுடன் ஏன் வந்தார்கள்? எதற்காகத் தன்னைப் படம் எடுத்தார்கள்? இந்தக் கனவின் அர்த்தம் என்ன? என்று அவவ்வப்போது யோசித்துக் கொண்டிருந்தானேயொழிய யாரிடமும் இதுபற்றி அவன் சொல்ல விரும்பவில்லை.
கிறீஸ்மேன்கள் பற்றி வடபுலத்தில் வாழும் நண்பனிடமிருந்து பல்வேறு தகவல்கள் அன்று பகல் அவனுக்குக் கிடைத்தன. நேரடி அனுபவமற்ற பலர் சந்தேகங்களுடனுனான தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்த போதும் நண்பரின் நேரடி அனுபவம் அவற்றை மறுதலிக்கத் தூண்டின.
இணையத் தளங்களில் பதிவிடப்பட்டிருந்த கிறீஸ்மேன் பற்றிய பதிவுகளை அடுத்த நாள் இரவு படித்தான். இந்த நபர்களின் நோக்கங்கள் பற்றிய ஊகங்கள் எதையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நடவடிக்கைக்குப் பின்னால் ஏதோ ஒன்று... மர்மமான ஒன்று... யாருக்கோ நன்மை பயக்கும் ஒன்று இருப்பதாகவே பட்டது அவனுக்கு.
அன்றிரவு உறங்கி எழுந்த போது குழப்பமான கனவுகள் எதுவும் வந்ததாக அவனுக்கு ஞாபகம் இல்லை. ஆனால் காலையில் அப்பா சொன்ன தகவல் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“ரெண்டு நாளா இரவில ஏன்டா சத்தம் போட்டுக் கத்துறாய்...?”
அவன் பேசாமலிருந்தான். அதுவே வேறு பிரச்சினையாக உருவெடுத்தது. அன்று பிற்பகல் அவனை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் அப்பா.
“எதற்கும் சும்மா ஒரு முறை கன்சல்ட் பண்ணிக் கொள்வோம்” என்று அவனுக்குச் சொன்னார்.
வைத்தியர் சில கேள்விகளைக் கேட்டார். எல்லாக் கேள்விகளுக்கும் பட்டுப்பட்டென்று பதில் சொன்னான். எந்தப் பிரச்சினையும் இல்லையென்ற டாக்டர் சிரித்தார். பிறகு அப்பாவைப் பாரத்துச் சொன்னார் -
“மாப்பிளைக்குக் கல்யாணம் முடிச்சுக் குடுங்க...!”
டாக்டரின் மூஞ்சில் ஓங்கி ஒரு குத்து விட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
வீட்டுக்கு வந்தும் அப்பாவின் முகம் பார்க்க வெட்கப்பட்டான். ‘இந்த டாக்டரைத்தான் இன்னொரு நல்ல டாக்டரிடம் காட்ட வேண்டும்’ என்று நினைத்தான்.
அன்றிரவு உறங்குவதற்கு அவனுக்குப் பயமாக இருந்தது...
எல்லா விளக்குகளும் அணைந்த பின் தனது அறையில் உள்ள கதிரையில் அவன் கொட்டக் கொட்ட விழித்தபடி உறங்காமல் உட்கார்ந்திருந்தான்!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment