Tuesday, September 20, 2011

பட்டாக்கத்தி மனிதர்கள்



ஜூவான் கொரோனா தீர்ப்புக்காகக் காத்திருந்தான்.

முதல் விசாரணையின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்திருந்தான் கொரோனா. ஆறு வருடங்கள் கழிந்த பிறகு விசாரணை ஆரம்பமாகி மற்றுமொரு தீர்ப்பு வழங்கப்படுவதற்கிடையில் ஒன்பது வருடங்கள் சென்றிருந்தன.

அடிக்கடி மனோநிலை பாதிக்கப்பட்ட மனிதன் என்ற அடிப்படையிலும் இது வரை சிறையில் கழித்த காலத்தையும் கருத்திற் கொண்டு தான் விடுதலை செய்யப்படலாம் என்று ஒரு நம்பிக்கை அவனிடம் இருந்தது.

அவன் சுதந்திர உலகில் வாழ்வதா இல்லை சிறையிலேயே செத்து மடிவதா என்பதை நீதிபதி தீர்மானிக்கப் போகின்ற கட்டம் அது.
 
000
 
மெக்ஸிகோவில் பிறந்தவன் கொரோனா. 16 வயதிலே அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்குள் சட்ட விரோதமாக வந்து சேர்ந்தான். பண்ணைகளின் மரக்கறி மற்றும் பழ வகைகளை இடத்துக்கு இடம் கொண்டு சென்று ஒப்படைத்துப் பிழைப்பு நடத்தி வந்தான்.

சில காலத்தின் பின்னர் வடக்கு கலிபோர்னியாவின் யூபா பிரதேசத்துக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள பண்ணைகளில் தொழில் புரிந்தான். எதிர்பாராமல் அப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் சிக்குண்டு தெய்வாதீனமாக உயிர் தப்பினான். அதற்குப் பின் அவனது மனோநிலை பாதிக்கப்பட்டது.

 எல்லோரும் வெள்ளத்தில் இறந்து விட்டதாகவும் தான் பேய்களின் உலகத்தில் இருப்பதாகவும் அவன் நம்பினான். மூன்று மாதங்களாக மின் அதிர்ச்சிச் சிகிச்சை அவனுக்கு வழங்கப்பட்ட பிறகு சாதாரண உலகுக்கு மீண்டான். அவன் சட்ட விரோதக் குடியேற்றக்காரன் என்பதால் அரச அதிகாரிகளால் அவனது சொந்த நாடான மெக்ஸிகோவுக்கு அனுப்பப்பட்டான். தனது நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டுக்குப் போவதன் மூலமே பட்டினியிலும் பசியிலுமிருந்து தன்னை மீட்கலாம் என்பது அவனது ஒரே முடிவாக இருந்தது. சில மாதங்களில் மீண்டும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தான்.

ஆறு வருடங்களில் அவன் இரண்டு திருமணங்களை முடித்தான். இரண்டாவது மனைவி மூலம் நான்கு பெண் குழந்தைகளுத் தந்தையானான்.

கலிபோர்னியாவின் யூபா பிரதேசத்தின் கிராமப்புறங்கள் பண்ணைகளால் நிறைந்தது. பண்ணைகளில் தொழில் புரியப் பலர் தேவைப்பட்டார்கள். கொந்தராத்துக்காரர்கள் இப்பண்ணைகளுக்குத் தொழிலாளிகளை விநியோகித்து வந்தார்கள். அவ்வாறான தொழிலாளிகளும் கொரோனாவைப் போலத் தொழில் தேடி வருவோரும் இப்பெரும் பண்ணைகளில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்கள்.

இரண்டாவது முறையாகவும் அவன் மனநிலைப் பாதிப்புக்குள்ளானான். அவனுக்குத் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் நிலையில் மாறுதல் ஏற்பட்டுத் தொழிலில் கவனம் செலுத்தினான் கொரோனா. பின்னர் இவனே ஒரு கொந்தராத்துக்காரனாக மாறினான். தொழில் தேடி அலைபவர்கள், மதுவிலும் போதை வஸ்துகளிலும் சீரழிந்து திரிபவர்கள், வீடுகளை விட்டு ஓடி வந்து தெருக்களில் அலைந்து திரிபவர்கள், வீடற்றவர்கள் என்று அடையாளம் கண்டு அவர்களைத் தொழிலுக்கெனப் பண்ணைகளுக்குக் கொண்டு வந்தான்.

கோரேனா தனது கொந்தராத்து விவகாரத்தை தனக்கு வாய்ப்பானதாக ஆக்கிக் கொண்டான். தொழிலாளிகளின் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டு அவர்களின் வேலைக்கான பணத்தை மொத்தமாக பண்ணை முதலாளிகளிடமிருந்து அவன் பெற்றுக் கொண்டான். அநத்தொழிலாளிகளுக்கு உணவும் தங்குமிடமும் வழங்கினான். ஒரு சிறிய தொகையை ஊதியமாகக் கொடுத்து வந்தான்.

அவர்கள் கொரோனாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தார்கள். அத்தொழிலாளர்களின் வாழ்க்கை சிறை வாழ்வுக்கொப்பானது. காலையில் பண்ணைகளுக்கு வேலைக்குச் சென்று மாலையில் திரும்பி விடுவார்கள். நாட்கள் செல்லச் செல்லக் கொத்தடிமைகளைப் போல கொரோனா அவர்களை நடத்த ஆரம்பித்தான்.

அந்தத் தொழிலாளிகளின் உழைப்பின் மூலம் அவன் தன்னளவில் பொருளாதார வசதி கொண்டவனாக உயர்த்திக் கொண்டான். சில வீடுகள் அவனுக்குச் சொந்தமாயிருந்தன. வங்கியிலும் நல்ல ஒரு தொகை வைப்பில் இருந்தது.


000
 
கொரோ கெகேஹிரோ ஜப்பானிய வம்சாவழி அமெரிக்கர். யூபா நகரின் முக்கிய வியாபாரிகளில் ஒருவர். யூபா நகருக்குச் சற்றுத் தொலைவில் அவருக்குச் சொந்தமான ஒரு பெரிய பழத்தோட்டம் இருந்தது.

ஒரு நாள் காலை தனது பண்ணைக்கு அவர் வந்த போது பண்ணையில் எல்லையில் ஒரு புதிய குழி தோண்டப்பட்டிருந்ததைக் கண்டார். ஏழு அடி நீளமும் மூன்றரை அடி ஆழமுமான அந்தக் குழியில் எதுவும் இருக்கவில்லை. குப்பைகளைக் கொட்டி மூடுவதற்காக அதை யாராவது தோண்டியிருக்கலாம் என்று வெகு சாதாரணமாக அவர் நினைத்தார்.

அன்றிரவு மீண்டும் அவர் தோட்டத்துக்கு வந்த போது அந்தக் குழி மூடப்பட்டிருந்தது. அவரது மனதில் ஒரு சிறிய சந்தேகப் பொறி தட்டியது. அவர் பொலிஸ_க்கு அறிவித்தார். காலையில் பொலிஸ் வந்தது. குழியைத் தோண்டிய போது அதற்குள் 40 வயதான ஓர் அமெரிக்கனின் உடல் கிடக்கக் கண்டனர். அவனது உடல் அடையாளம் காணப்பட்டது. நாடோடியாக வெறுமனே சுற்றித் திரியும் நபர் அவன். அவனது தலை பட்டாக் கத்தியால் பிளக்கப்பட்டிருந்தது.

நான்கு தினங்களின் பின்னர் மற்றொரு பண்ணையில் இதே போன்ற ஒரு குழி கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 60 வயதான அப் பிரதேசத்தில் ஒரு சோம்பேறி என அறியப்பட்டவன் ஒருவனின் உடல் கிடக்கக் காணப்பட்டது. மற்றும் இரு தினங்களில் இன்னும் ஒரு குழி. அதனுள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நபர். பிறகு இன்னொரு குழி.....

ஒவ்வொரு நாற்பது மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் 25 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். எல்லோரது தலைகளும் பின்புறமாகப் பட்டாக் கத்தி கொண்டு பிளக்கப்பட்டிருந்தன. முதுகுகளில் கத்திக் குத்துக்கள் இருந்தன. குழிகளுக்குள் பிணங்கள் மல்லாக்கக் கிடத்தி வைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்தன. இந்தக் கொலைகள் அனைத்தும் ஆறு வாரங்களுக்குள் நிகழ்த்தப்பட்டிருந்தன.

பொலீஸார் சில பிணங்களின் ஆடைகளின் பக்கற்றுகளுக்குள் ஜூவான் கொரோனாவை அடையாளப்படுத்தும் சில காகிதத் துண்டுகள் இருக்கக் கண்டனர்.

எழுபதுகளில் இக்கொலைகள் அமெரிக்காவைக் குலுக்கியெடுத்தன. பத்திரிகைகளும் வானொலிகளும் சதா இதையே பேசின. அமெரிக்க வரலாற்றில் நடந்தேறிய அதிபயங்கர நிகழ்வுகளில் ஒன்றாக இக்கொலைகள் அமைந்தன.
 
000
 
கொரோனாவின் வீட்டுக்குள் புகுந்தது பொலீஸ்.

வீட்டை அரித்துத் தேடுதல் நடத்த வேண்டிய தேவை அவர்களுக்கிருக்கவில்லை. இரத்தம் தோய்ந்த சிறிய கத்தி, இரத்தம் தோய்ந்த ஆடைகள், ஒரு பட்டாக் கத்தி, ஒது கைத்துப்பாக்கி என்பவற்றைக் கைப்பற்றிய பொலீஸ் கோரோனாவைக் கைது செய்தது.

அவனது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பேரேட்டில் முப்பத்து நான்கு பெயர்களும் திகதிகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அவனது கட்டுப்பாட்டில் இருந்து பண்ணைகளில் வேலை செய்தவர்கள். குடும்பப் பிணைப்பு இல்லாமல் அலைந்து திரிபவர்களையே தொழிலுக்கு அவன் தேர்ந்தெடுப்பதால் அவர்களை யாரும் தேடப்போவதில்லை என்று கொரோனா நினைத்திருந்தான். ஆனால் கொலை செய்யப்பட்டவர்கள் அத்தனை பேரும் கடைசியாக கொரோனாவின் வாகனத்தில் இருந்தார்கள் என்பதற்குச் சாட்சியங்கள் இருந்தன.

கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், பேரேடு, இறந்தவர்களின் ஆடைகளின் பைகளில் கண்டெடுக்கப்பட்ட காகிதங்கள் அனைத்தும் கொரோனாவே இந்தக் கொலைகளைச் செய்தான் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் போதுமானவையாக இருந்தன. குழிகளில் இருபத்தைந்து உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதை விட அதிகமானோர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது.

இருபத்தைந்து படுகொலைகளைச் செய்தமைக்காக இருபத்தைந்து ஆயுள் தண்டனைகள் அவனுக்கு விதிக்கப்பட்டன. வாழ்நாளில் சுதந்திரமாக உலகத்தில் நடமாடவே முடியாதபடி தீர்ப்பு வழங்கப்பட்டது. நன்னடத்தையில் வெளிவருவதற்கான வாய்ப்பையும் நீதிபதி ரத்துச் செய்தார்.

அவன் மேன் முறையீடு செய்தான்.
 
000
 
அவனது சட்டத்தரணி அவனுக்காக இரக்கப்பட்டுப் பேசினார். நீதிபதியையும் ஜூரிமாரையும் இரக்கப்படும்படி கேட்டுக் கொண்டார். கொரோனா அடிக்கடி மனோ நிலை பாதிக்கப்படுபவன் என்பதை வலியுறுத்தினார். இரண்டு முறைகளில் அரச வைத்தியாலையில் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்றிருப்பதை ஆவணங்களைச் சமர்ப்பித்து வாதாடினார்.

மனோ நிலை பாதிக்கப்படாத நிலையிலேயே இக்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதை ஜூரிகளும் நீதிபதியும் கவனத்தில் கொண்டார்கள். கொரோனாவால் கொலை செய்யப்பட்ட அனைவருமே ஆண் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் கொலை செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதையும் அவதானத்துக்கு எடுத்தனர்.

எனவே ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை வலியுறுத்தி அதுவே சரியான தீர்ப்பாகும் என்று நீதிமன்று அறிவித்தது.
 
000
 
கதையை வாசித்து முடித்தார் ஜோர்ஜ் புஷ்.

‘மாட்டிக்காமச் செய்யுறதுக்கு அமெரிக்காவுல பொறக்கணும்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டபடி எண்ணெய்க் கம்பனியின் கணக்கு வழக்குகளில் மூழ்கிப் போனார்.
-----------------------------------------------------
நன்றி - தாயகம்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

ASHROFF SHIHABDEEN said...

முகப்புத்தகத்தில் இடப்பட்ட பின்னூட்டம் -

Lareena Abdul Haq

ஒரு துப்பறியும் நாவலை வாசித்தது போல் இருந்தது. ஆனால், கடைசிப் பந்திதான் real punch Sir! :D

பி.அமல்ராஜ் said...

நல்லதொரு பதிவு அண்ணா.. முடிவு தூக்கல்..

shenbagam said...

நிஜக்கதை படிப்பதற்கு விறுவிறுப்பாகத்தான் சென்றது.ஒரே மூச்சில் வாசித்தறியச்செய்தது.நீதி அரசர்களின் முடிவும் சரியாகத்தான் இருந்தது.ஈவிரக்கமற்ற கொடுமையான குற்றம் புரிந்த மெக்ஸிகோ கொனார்கோ தண்டிக்கப்படவேண்டியனே.அனைத்தும் சரி.... எழுத்தாளர் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களே.... எதற்காக ஜோர்ஜ்புஷ் இதில் இணைத்துக்கொள்ளப்பட்டார் என்பதை அறியத்தருவீர்களா.....?
கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்.