Friday, June 19, 2009

என்னுயிர்க் கண்ணம்மா

“காற்றின் முகத்தில் - ஒரு கடுதாசி எழுதி விடு கண்ணம்மா - காத்திருக்கிறேன்” என்று முடிகிற கவிதையொன்று “போர்க்காலப் பாடல்கள்” என்ற கவிதைத் தொகுதியில் உள்ளது. புத்தகக் குவியல்களுக்குள் இத்தொகுதியைப் பார்த்தால் ஒரு சிட்டுக் குருவி போல் தோன்றும். 1998ம் ஆண்டு வெளியான இந்தக் கவிதைத் தொகுதிக்கு அவ்வாண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுதிக்கான “விபவி” பரிசு கிடைத்தது ஞாபகமிருக்கிறது. 1995ல் எழுதப்பட்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமான அன்பின் கண்ணம்மாவுக்கு என்ற அந்தக் கவிதை பேசும் சமாச்சாரம் சாதாரணமான ஒன்றல்ல. விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் உருவான கவிதைகளிலும் கதைகளிலும் பல்லாயிரம் துயரச் சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன. எந்தவித எழுத்துக்கும் உட்படாத ஆயிரமாயிரம் சம்பவங்கள் இன்னும் வெளிவராமலும் உள்ளன. இன முறுகலின் விளைவாக ஏற்பட்ட மேனி சிலிர்க்கும் துன்பியல் விவகாரங்களின் பின்னணியில் மனிதாபிமானம் பேணப்பட்ட சம்பவங்களும் ஏராளம் உள்ளன. போராட்டம், இனவெறி என்பவற்றுக்கெல்லாம் அப்பால் மனிதாபிமானம் முன்னிடம் வகித்த ஒரு சம்பவத்தையே மேற்சொன்ன கவிதை பேசுகிறது. கல்குடா ரயில் மறிப்புப் போராட்டம் வாழைச்சேனை - ஏறாவூர் ரயில் நிலையங்களுக்கிடையிலுள்ள தேவநாயக புரத்தில் நடந்தது. விடுதலையின் பெயரால் ஆயுதம் ஏந்திய நபர்கள் ரயிலை வழிமறித்து மற்றொரு சிறுபான்மையினத்தாரைத் துரத்திச் சுட்டனர். “நிசப்தத்தைக் கொன்ற நீசர்கள் - எமது பெண்டிர் நெற்றியில் - குருதியால் பொட்டிட்டனர் கண்ணம்மா.... - ......தொலைந்தனர்மனிதர் - குழந்தைகளாய் - குருதியில் குளித்தனர் மனிதர்” என்று நகர்கிறது கவிதை. “வெம்பி மணலில் கால் புதைய - நெருஞ்சி முள் கிழித்துக் - குருதி கொப்பளிக்க - மூன்று மைல்கள் மூச்சுப் பிடித்து ஓடிவந்து” ஒரு வீட்டின் வாசலில் விழுந்தான் அந்த முஸ்லிம் இளைஞன். அது தமிழ்க் குடும்பம் வாழும் வீடு. அக்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் துரத்தி வந்தவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக தனது கால்களுக்கிடையில் தான் அணிந்திருந்த நீள் பாவாடைக்குள் அவனை மறைத்துக் கொண்டு நிற்கிறாள். வந்தவர்கள் சந்தேகப் பார்வையுடன் திரும்பி விடுகிறார்கள். கவிதை தொடர்கிறது... “இந்தப் பிரதேசத்தை - நமது பிரதேசம் என்று - நம்பிக்கையூட்டியவளே - இரத்தம் சொட்டச் சொட்ட - நான் ஓடிவந்த பாதையை வெறித்து - நீயும் என் ரத்தம்தான் என்றாயே” கடைசியில் ராணுவ முகாமில் அப்பெண் அவனை ஒப்படைத் துத் திரும்பும் போது தூரத்தில் இரு புள்ளிகளாய் யாரோ அவளை நெருங்குவதை அந்த இளைஞன் கண்டான். அப்பெண் குறித்து இரக்கத்துடன் கவிதை வரிகள் பேசுகின்றன. “அப்புறம் - என்ன நடந்தது கண்ணம்மா?” என்ன நடந்திருக்கும்? அவனுக்குப் பதிலாக கண்ணம்மா உயிரை இழந்திருக்கலாம். இல்லையேல் சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம். அவளைத் தண்டித்தவர்கள்; சிலவேளை இறந்து விட்டிருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு மேலைத்தேச நாட்டில் உட்கார்ந்து கொண்டு மனிதாபிமானம் குறித்துக் கவிதை அல்லது கதை எழுதிக் கொண்டிருக்கவும் கூடும். யார் கண்டார்கள்? இக்கவிதையை எழுதியவர் ஏ.ஜி.எம்.ஸதக்கா. கல்குடாப் பிரதேசத்தில் எண்பதுகளுக்குப் பிறகு தோன்றிய குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவர். “இமைக்குள் ஓர் இதயம்” என்ற ஒரு சிறு தொகுதியை 1988ல் வெளியிட்டவர். (இனப் பிணக்குக் குறித்த கவிதைகளை எழுதிய இப்பிரதேசத்தின் ஏனையவர்களுள் வாழைச் சேனை அமர், எஸ்.நளீம், ஓட்டமாவடி அறபாத், பாலை நகர் ஜிப்ரி ஆகியோர் முக்கியமானவர்கள். அமர், “விடுதலையின் நிகழ்வுகள்” என்றொரு சிறு தொகுதியை 1985ல் வெளியிட்டார். இவரது “நீ வரும் காலைப் பொழுது” கவிதைத் தொகுதி 2004ல் வெளிவந்தது. எஸ். நளீமின் கவிதைத் தொகுதிகளாவன “கடைசிச் சொட்டு உசிரில்”-2000, “இலை துளிர்த்துக் குயில் கூவும்” - 2008. அறபாத்தின் கவிதை நூல்கள்:- “எரி நெருப்பிலிருந்து” - 1996, “வேட்டைக்குப் பின்” - 2002. ஜிப்ரி இன்னும் கவிதை நூல் வெளியிடவில்லை.) ஸதக்காவின் கவிதை சொல்லும் கண்ணம்மாவின் மனிதாபி மானம் உன்னதமானது. ஓர் இளம் பெண் தனது அந்தரங்கம் பற்றி ஆதங்கம் கொள்ளாமல் ஓர் அந்நிய இளைஞனின் உயிர் காத்து மறைத்து நின்றாள் என்பது உரக்கச் சொல்லப்பட வேண்டியது. வர்ணங்களுக்கும் வார்த்தைகளுக்கும் அப்பால், அதற்கும் அப்பால் உறைந்த மௌனத்தால் கௌரவிக்கப்பட வேண்டியது. சமாதானம், தியாகம், விட்டுக் கொடுப்பு குறித்துப் பேசும் ஆயிரமாயிரம் புத்தகங்களை விஞ்சி நிற்பது. இந்தக் கவிதை ஏன் மேலெழவில்லை என்பதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டால் நான் சிலரின் சொல் லெறிக்கு ஆளாக நேரலாம் என்பதால் தவிர்த்துக் கொள்கிறேன். இலக்கிய உலகத் துயரங்களும் சாபங்களும் பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன? மனிதாபிமானம் குறித்துப் பேசப்படும் உரைகளாலும் எழுத்துக்களாலும் சட்டங்களாலுமே மனிதாபிமானம் உயிர் வாழ்கிறது என்றா நினைக்கிறீர்கள்? இல்லை! அது கண்ணம்மா போன்றவர்களால் மாத்திரமே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
24.02.2008
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: