Friday, January 10, 2014

தன்னை ரசிக்காத நடிகன்!


பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை அவ்வப்போது ஆங்கிலப் படங்கள் பார்க்கும் பொழுதுபோக்கு எனக்கிருந்தது. அதற்கும் சற்று முந்திய காலத்தில் ஆங்கிலப் படம் பார்ப்பதை ஒழுக்க மீறலான ஒரு செயலாகச் சமூகம் கருதியது என்பதை என் வயதொத்த, என்னை விட மூத்த நண்பர்கள் அறிவீர்கள். நான் அப்படியொன்றும் மோசமான படங்களை நோக்கிச் சென்றதில்லை. சிறு வயதிலேயே எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்தபடியால் அடிதடிப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். தமிழிலும் அடிதடிப் படங்கள் வருகிறதுதானே என்று நீங்கள் கேட்கலாம். அடிதடியைக் கூட ஆங்கிலப் படங்களில் மிகைப்படுத்தாமல் யதார்த்தமாகத்தான் சித்தரிப்பார்கள். சில நாட்களுக்கு முன்னர் பார்த்த தமிழ்ப் படத்தில் துப்பாக்கியிலிருந்து வரும் குண்டுகளைத் தலையைச் சாய்த்து, குனிந்தெல்லாம் கதாநாயகன் தவிர்ப்பதைக் காண திரையைக் கிழிப்பதா தலையை முட்டிக் கொள்வதா என்று தீர்மானத்துக்கு வர இயலாதவனாக அல்லல் பட்டேன்.

'ஜேம்ஸ் பொன்ட்' படங்களை விடவும் என்னைக் கவர்ந்த படங்கள் சார்ள்ஸ் புரொன்ஸனுடையவை. அந்தக் காலத்துக் கதா நாயகர்களுக்கு (ஆங்கிலத்திலும் கூட) அவசியமாகக் கருதப்பட்ட வசீகரங்கள் எதுவுமற்றவர் புரொன்ஸன். தன்னிடம் இருப்பதையே தனது பலமாக மாற்றிய வல்லமை கொண்ட கம்பீரமான மனிதனாக அவர் இருந்தார். அவரது நடிப்பு ஹொலிவூட்டைத் தாண்டி உலகம் முழுதும் லட்சோப லட்ச மக்களால் போற்றுதலுக்குள்ளானது. பிரான்ஸ் நாட்டு ரசிகர்கள் அவரைச் செல்லமாகப் 'புனித அரக்கன்' என்று அழைத்தனர்.

சார்ள்ஸ் புரொன்சனுக்கும் தனது தோற்றத்தைப் பற்றிய மதிப்பீடொன்று இருக்கவே செய்தது. 'நான் யாரோ டைனமைட் வைத்து உடைத்த கற்குவியலைப் போன்றவன்' என்று தன்னைப் பற்றி அவரே சொல்லியிருக்கிறார். நடிப்பில் அவரது பார்வை, நடை, கம்பீரம் யாவும் சேர்ந்து அவரது குறைபாடுகளை மறைத்து விட்டன. அவர் ஒரு பெருங் கதாநாயகனாக வலம் வந்தார். 'என்னைப் பொறுத்த வரை நடிப்பு என்பது மிக இலகுவான விடயம். அதனால்தான் அதனையே நான் தேர்ந்து கொண்டேன்' என்று ஒரு சமயம் அவர் சொன்னார். 1970 ம் ஆண்டு 'ரைடர் ஒன் த ரெய்ன்' என்ற படத்தில் நடித்து அதி சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோபல் விருதைப் பெற்றுக் கொண்டவர் புரொன்சன்.

லித்துவேனியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த தாய் தந்தையின் 15 பிள்ளைகளில் புரொன்ஸன் பதினோராவது பிள்ளையாக பென்ஸில்வேனியாவில் பிறந்தவர். அவரது இயற் பெயர் சார்ள்ஸ் பச்சின்ஸ்கி. ஹொலிவூட்டின் பரமௌன்ட் ஸ்ரூடியோவின் வட எல்லை வாயிலின் பெயர் புரன்ஸன் வாயில். அந்தச் சொல்லையே தன் பெயருடன் சேர்த்துக் கொண்டார். இந்தப் பெயரில் அவர் நடித்த முதலாவது படம் 1954ல் வெளி வந்த 'ட்ரம் பீட்.'

16வது வயதில்; தந்தையைப் போலவே தனது சகோதரர் களுடன் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்து வந்தார். அவரது தந்தை இறந்த போது புரொன்ஸனுக்கு வயது 10. பின்னர் பிலடல்பியா தியேட்டர் கம்பனியில் அரங்க  வடிவமைப்பாளராக இருந்தார். 1950ல் நடிக்கப் புகுந்தார். 1960ல் வெளிவந்த த மெக்னி பிஸன் செவன், த கிரேட் எஸ்கேப் (1963), த டேர்டி டஸன் (1967), டெத் விஷ் (1974) (இப்பெயரில் பின்னர் 3 படங்கள்), டென் டு மிட்நைட் (1983), மெஸன்ஜர் ஒப் டெத் (1988), த வைற் பபளோ (1977), த ஸ்டோன் கில்லர் (1973), மேர்பிஸ் லோ (1986) ஆகியன அவரது முக்கியமான படங்களில் சில. அவர் நடித்த பல படங்கள இன்றும் அலுப்புக் குன்றாமல் பார்;க்கக் கூடியவை.

அவரது படங்களில் 90 வீதமான பகுதியை சம்பூர்ணமாக அவர் ஆக்கிரமித்திருப்பார். ஆனால் ரசிகனுக்கு அது ஒரு உறுத்தலாக இருப்பதில்லை. அவரது ஒவ்வொரு அசைவோடும் நம்மை இணைத் துக் கொள்ளும் ஆகர்ஷம் அவரிடம் இருந்தது. ஆங்கிலத்துக்கு அப்பால் ரஷ்ய, லித்துவேனிய, கிரேக்க மொழிகளில் சரளமாகப் பேசவல்ல புரொன்ஸன் தனது நடிப்பைப் பற்றிச் சொல்லும் போது 'நான் எனது ரசிகன் அல்லன்' என்று சொன்னார். தன்னளவில் திருப்தி கொள்ளாத மனோ நிலையிலான அவரது முயற்சியே உலகம் முழுக்க அவருக்கு ரசிகர்களைத் தந்திருக்க வேண்டும். அழகற்ற கதாநாயகனின் கவர்ச்சி எத்தகையதென்றால் அவரை நேரிலே கண்டறியாத அவரது தீவிர ரசிகையான ஒரு பெண்மணி 1990ம் ஆண்டு தனது மில்லியன் டொலர் பெறுமதியான வீட்டையும் தோட்டத்தையும் புரொன்ஸ னின் பெயருக்கு எழுதி வைத்து விட்டாள் என்பதுதான்.

அவர் பின்னாளில் நடித்த படங்கள் எதுவும் உள்ளனவா என்று இணையத்தில் தேடினேன். 1998ம் ஆண்டு அவருக்கு இடுப்பில் செய்யப்பட்ட சத்திர சிகிச்சைக்குப் பிறகு நடிப்பதைக் கைவிட்டி ருந்தார். அதை விட எனக்குக் கவலை தந்த விடயம் நியூமோனியாவால் பீடிக்கப்பட்டு எனக்குத் தெரியாமலே 2003 ஆகஸ்ட் 30ம் திகதி தனது 81வது வயதில் காலமாகியிருந்தார்.

சார்ள்ஸ் புரொன்ஸன் விமர்சகர்களைப் பற்றிக் கூறியதை படைப்பாளிகளும் கலைஞர்களும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அவர் சொன்னார்:-

 'நாங்கள் விமர்சகர்களுக்காக படங்களைத் தயாரிப்பதில்லை. தவிரவும் அவற்றைக் கட்டாயம் பாருங்கள் என்று அவர்களுக்குப் பணம் கொடுப்பதுமில்லை!'


11.05.2008
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Abufaisal Sahib said...

சினிமா ஹராம் என்பவர்கள் படிக்க வேண்டாம் என்று தலைப்பை கண்டு நானே யோசித்துதான் இங்கு வந்தேன்... ஆனால் ஒண்ணுமே இல்லையே சேர்.... :( அவரோட பின்னணி மட்டுமே சொல்லி இருக்கிறீங்க... அம்புட்டுத்தான்...