கவிஞர் தக்கலை ஹலீமா
நேற்று (03-08-2016) காத்தான்குடி (ஷஹீதுகளின்) அமரத்தியாகிகளின் 26 வது நினைவு தினத்தையொட்டி கவிஞர் அஷ்ரஃப் ஷிகாப்தீனின் கவிதையொன்றை அவரது முகநூலில் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். வார்த்தை மாமிசங்களிலிருந்து இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது.
காத்தான்குடி ஷஹீதுகளின் ரத்தம்.
”நதிக்கரைகள் ஓரமெல்லாம் மனிதகுலம்
நாகரீகத் தொட்டில்கட்டி ஆடுமுன்பே
உதித்தெழுந்த மொழிக் குடும்பத் தலைவியான
ஓங்குபுகழ் தமிழினத்தின் திருநாள் வருக”
கடைவீதி சென்றிங்கே கரும்பை வாங்கி
காணுகின்ற தமிழரெல்லாம் பொங்கலோ பொங்கலென்றார்- ஈழ
படைவீதி கண்டு நிற்கும் புலிகள் கைகள்
பற்றியது கரும்பல்ல தோக்குகளாகும்
செந்நெல்லோ ரவை துளைத்த ரத்தத்துளிகள்”
என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு நான் தமிழ் ஈழ விடுதலைப் போரின் மறம்பாடிக் கொண்டிருந்த 1980கள். 1990களில் விடுதலைப் புலிகள் இலங்கை இஸ்லாமிய தமிழினத்தை மதத்தின் அடையாளம் கொண்டு காணமுற்பட்டதின் விளைவாக தமிழ் இஸ்லாமிய குடும்பங்களும் கிராமங்களுமே கூட புலிகளின் தாக்குதலுக்குரிய இலக்குகளாகின.
அதில் ஒன்றுதான் காத்தான்குடி. பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த வாலிபர்கள், முதியவர்கள், பாலகர்கள், என மொத்தம் 103 முஸ்லீம்களை புலிகள் சுட்டு வீழ்த்தியது மட்டுமல்ல புலிகள் நடத்திய மின்கம்ப கொலைகள். - இந்த சம்பவங்களுக்கு பிறகுதான் என் போன்ற மானுடம் நேசிக்கும் பாடிகளெல்லாம் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்தின் திசைமாறியப் பயணத்தை உணர்ந்து கொண்டோம்.
2002 ல் இலங்கை கப்பற்துறை அபிவிருத்திஅமைச்சும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் இணைந்து நடத்திய முதலாவது உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டின் கவியரங்கில் பங்கேற்கும் பந்நாட்டு கவிஞர்களில் ஒரு கவிஞராக அங்கு சென்றிருந்தேன்.
அந்தக் கவியரங்கமும் காத்தான்குடி துயர நினைவுகளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. அன்றுதான் நார்வே அமைதிக்குழுவும் இலங்கைக்கு வந்திருக்கிறது. கவியரங்கம் தொடங்குகிறது. அரங்கில் கவிஞர்கள் பத்து பேர் இருக்கின்றோம். கீழே பார்வையாளர் வரிசையில் B.H. அப்துல் ஹமீது மாண்புமிகு அமைச்சர் ரவூப் ஹக்கீம், காப்பியக்கோ ஜின்னா ஷரீபுதீன், கவிக்கோ அப்துல் றகுமான் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் அமர்ந்திருக்கிறார்கள்.
என்னுடைய முறை வருகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிவப்புக் கம்பளத்துக்கு சாயம்பூசிட பக்தாத் குழந்தைகளின் பச்சை ரத்தம் பர்மாறப்பட்ட துயரங்கள், பாலஸ்தீன பிள்ளைகள் கழித்தல் குறிகளாக கபறுஸ்தானத்தில் கிடத்தப்பட்ட துயரங்கள். ஜார்ஜ் புஸ்ஸை பிர்அவ்னாக நினைத்துக் கொண்ட ஆவேசம் என் நரம்புகளில். மூஸாவின் கைக்கோலாக என் பேனா திமிர்கிறது. எனக்கு கவிதை தலைப்பு “மூஸாவின் கைக்கோல்” இலங்கையில் காத்தான்குடி துயரத்தின் நினைவு என் கண்ணீரை திராவகம் ஆக்கியபோது அந்தக் கவிதையில்....
“காத்தான்குடி ஜனாஸா அடுக்குகளிலிருந்து எழுந்து வந்திருக்கும் – என் காலத்தின் கிழக்குகளே” என்று மேடையில் நான் அழைக்கின்றேன். ஆயிரம் பேர் இருந்த அந்த அரங்கமே அதிர்கிறது. பார்வையாளர் வரிசையிலிருந்த கவிக்கோ மெதுவாக இருக்கையிலிருந்து எழுகிறார். அன்றுகாலைதான் அவருக்கு லேசாக நெஞ்சுவலி வந்து டாக்டர் ஹிமானா சையத் மருத்துவம் பார்த்தார். கவிக்கோ மேடையை நோக்கி மெதுவாக நடந்து வருகிறார். மாநாட்டின் செயலாளர் அஷ்ரப் ஷிகாப்தீன் ஓரமாக நின்றவர் நின்றபடி நிற்கிறார். நானும் படிப்பதை நிறுத்திவிட்டு கவிக்கோவையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன்.
என்னை மேடையில் இறுகத் தழுவிய கவிக்கோ அன்று மாலை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே அவருக்கு அணிவித்த பொன்னாடையை எனக்கு போர்த்திவிட்டு உண்ர்ச்சிகள் கொப்பளிக்க அமைதியாக அப்படியே இறங்கிச் செல்கிறார். அவர் இருக்கைக்கு திரும்பி சென்று இருந்தபின் கவிதையை மீண்டும் தொடர்ந்தேன்.
அந்த பொன்னாடையை மட்டும் என் காலத்திற்குப் பிறகும் பாதுகாத்திட என் மனைவி பிள்ளையிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஏனென்றால் அது காத்தான்குடி ஷஹீதுகளின் கபனிலிருந்து நெய்த பொன்னாடை
அஷ்ரப் ஷிகாப்தீனின் நேற்றைய முகநூல் நினைவாஞ்சலி ஏனோ எனை நேற்று தூங்கவிடவில்லை.
(நண்பரும் பிரபல மேடைக் கவிஞருமான தக்கலை ஹலீமா அவர்களின் இந்தக் குறிப்பு அவரது முகநூல் பக்கத்திலிருந்து நட்புரிமையுடன் இங்கு மீள்பதிவாகிறது. ஒரு சில இடங்களில் சிறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளேன். உதாரணமான - அமைச்சின் பெயர், இலக்கிய ஆய்வகத்தின் பெயர். நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்.)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment