Tuesday, May 3, 2011

நன்றி சிறிதெனினும்....

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள்... உங்களுக்கு விருப்பமான அணிக்கு உற்சாகமளிக்க கை தட்டி ஊக்கப்படுத்துகிறீர்கள். நீங்களும் மகிழ்ச்சியடைகிறீர்கள்...


ஒரு பேச்சாளர் நன்றாகப் பேசுகிறார். மகிழ்ந்து அவ்வப்போது கைதட்டி நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறீர்கள்...

கவியரங்குக்குச் செல்கிறீர்கள். இலக்கிய நயமும் பொருட் செறிவும் மிக்க வசனத்துக்குக் கரவோசை எழுப்புகிறீர்கள். இதில் உங்களுக்கும் மகிழ்ச்சி. கவிஞருக்கு உற்சாகம்.

ஒரு நண்பரின் அல்லது உறவினரின் வீட்டுக்குச் செல்கிறீர்கள். இருப்பதைக் கொண்டு உபசரிக்கிறார்கள். அது வடையாக, கேக்காக, பழமாக, வட்டிலப்பமாக எதுவாகவும் இருக்கலாம். விடை பெறும் போது என்ன செய்கிறீர்கள்.... நன்றி சொல்வீர்கள். அது ஒரு நன்றியுள்ள மனிதனின் நல்ல பண்பு என்பதில் என்னுடன் உடன்பாடு காண்பீர்கள்.

விருந்துக்குச் சென்றால் மகிழ்ச்சியில் அல்லது அந்த விருந்தை நமக்காகத் தயார் செய்த அந்த வீடடுக்கார அம்மாவின் உழைப்புக்கு நன்றி சொல்ல விடை பெறும் வேளை அவரை அழைத்து விசேட நன்றி சொல்வீர்கள்.

இப்படியெல்லாம் அன்புடனும் பண்புடனும் நடக்கும் நீங்கள் எனது வீடான வலைப்பூவுக்கு வந்தால் மட்டும் வாசித்து விட்டுச் சுவடே இல்லாமல் போகிறீர்களே... ஏங்க?

உங்கள் கருத்தைச் சொல்லலாம், நன்றாக இருந்தால் ரசித்தீர்கள் என்றால் ஒரு பாராட்டுக் குறிப்பை இடலாம். எனது கருத்துப் பிழை என்றால் சுட்டிக் காட்டலாம். சரியான ஒரு கருத்தை நீங்கள் சொல்லலாம். இதுக்கெல்லாம் பணம் செலவாகாதுங்க.

நன்றி என்று சொன்னால் நாக்கு, பல்லு எதுவும் தேய்ந்து போய்விடுவதில்லை. விரல் சுளுக்குவதில்லை. வாய் கோணுவதில்லை. கருத்துச் சொல்ல வலைப் பூவில் காசு கேட்பதுமில்லை. நாலு பேரோடு பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் எழுதுகிறோம். அதை வாசிக்கும் நீங்கள் ஒரு சின்னக் குறிப்பைப் போட்டு ஒரு உற்சாகம் தரவேண்டாமா? அப்படித் தரும் போது நமக்கிடையேயான ஓர் அன்புப் பாலம் அறிவுப் பாலம் உருவாகிறது. அது உலகத்தின் உறுதி மிக்க எல்லாப் பாலங்களையும் விட உறுதியானது.

உலகத்தில் அநேகர் இப்படித்தாங்க... எட்டிப் பார்த்துவிட்டுச் சத்தமே இல்லாமப் போயிட்டே இருக்காங்க. சரி என்பதை ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்துவதற்கோ பிழை என்பதைச் சுட்டிக் காட்டாமலோ நமக்கெதற்கு வீண் வேலை என்றுஎண்ணி நகர்ந்து விடுகிறார்கள். அப்படிச் சொல்வது கௌரவக் குறைவு என்பது சிலரது எண்ணம். ஆனால் ஒரு வீட்டுக்குச் சென்று விருந்தாடிவிட்டு நன்றி சொல்லாமல் போவதற்கொப்ப செயலைச் செய்வதே கௌரவக் குறைவு என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. இது மிக மிக ஆபத்தான, தப்பான மனோ நிலை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

நீங்களே முடிவு செய்யுங்கள்.

அவ்வப்போது தமது குறிப்பை இடுபவர்களுக்கு எனது நன்றி!இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

8 comments:

பி.அமல்ராஜ் said...

அஹா... எப்பிடி அண்ணா உங்களால மட்டும் முடியுது... கடைசி பந்திகள் வரும்வரைக்கும் நீங்கள் இப்பிடியொரு சாதாரண விடயத்தைத்தான் சொல்ல வாறீர்கள் என்று தோணவே இல்லை. அருமை. உங்களிடம் பிடித்ததே, சிறிய விடயமோ பெரியவிடயமோ அதை ரசனையோடு வாசிப்பவர் மண்டைக்குள் சாதூரியமாக புகுத்துவதுதான். சரி சரி.. நன்றாக இருக்கிறது என்று மட்டும் சொல்லாமல் இனி வாசித்தபின் எனது கருத்தையும் தெரிவிக்கிறேன். ஆகக்குறைந்தது ஒரு நன்றியாவது.

sinnathambi raveendran said...

நகைச்சுவையோடு கலந்த உள்ளக்குமுறல்.இனிமேல் வாசிப்பவர்கள் அனைவரும்
குறிப்பு போடுவார்கள்.ஏனோதெரியவில்லை எதிலும் சாப்பாடு விடயத்தில்
கவனமாய்இருக்கிறீர்கள்.வாழைச்சேனை, ஓட்டமாவடி உபசரிப்புக்கு பெயர்போன
இடங்கள்.நல்ல தேவையானகட்டுரை.போதுமா அஷ்ரப் சிகாப்டின்.

ASHROFF SHIHABDEEN said...

நண்பர் ரவீந்திரன்,
இலவச உணவு அது எந்த வகையினதாயினும் பலரைக் கவனங் கொள்ளச் செய்கிறது. இது பற்றிய சில அவதானிப்புகளை உங்களிடம் நேரில்தான் சொல்வேன். நானும் ஓர் உணவுப் பிரியன். நீங்கள் சரியாகச் சாப்பிடுவதில்லை என்பதால்தான் அவ்வளவு ஒல்லியாய் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறீர்கள்.

yogesh said...

நண்பர் அமல் கூறியதைப் போல் நானும் பெரிதாக எதிர் பார்த்துக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். கடைசியில் இப்படியொரு குண்டைப் போடுவீர்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை.என்னவொரு லாவகமான சொல்லாட்சி!

ம்ம்... இருப்பினும் நாங்க அப்பப்ப கருத்து சொல்லுறம்ல!!

Shaifa Begum said...

வந்த தடயம் தெரியாமல் திருட்டுத்தனமாக வாசித்து விட்டு ஓடறவங்களுக்கு நல்ல ஒருஅடி.
வலிக்காது .... ஆனால் வலிக்கும்.
நானும் தான் பக்கம் பக்கமாக புரட்டி பார்க்கிறேன். யாருமே ஒரு வார்ததை கூட பேசாமல்
மாயமாக மறைந்து விடுகிறார்கள்.. இது என்னா நியாயம்..? கேட்டு்க் கொடுப்பதல்ல நன்றி.
கேளாமல் கொடுப்பதில் தான் அதன் சிறப்பு இருக்கிறது. வந்தது தான் வ்ந்தாங்க ஏதாவது ஒன்று
சொல்லிவிட்டு போகலாம்ல ..? ” வந்தோம் வாசித்தோம்” என்பதற்கான ஒரு குறிப்பை இடுவதிலுமா கஞ்சத்தனம்..? அவர் என்ன உங்க Account balance கேட்டடாரா..? இல்லையே !!
எழுத்ததை உயிராக மதித்து தான் எழுதுகிறார்கள்.
என்வே தயவுபண்ணி வாசிப்பவர்கள் அவர்கள் உணர்வுகளை கௌரவப்படுத்துங்கள்.
இதெல்லாம் கேட்டு வாங்குவதல்ல. மனதால் உணர்ந்து பண்ணும் விசயம்.. இனி,ஒரு வார்த்தையிலாவது இதை
பண்ணுவீர்கள் என்ற நம்பிக்கை என்னுள் இருக்கிறது.

நான் மனதி்ற்குள் வெதும்பிக் கொண்டிருந்த விசயம்..யாரைப் போய்க் கேட்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த ஒரு விசயம்..சேர் மூளையில் பட்டுத் தெறித்து
”நன்றி சிறிதெனினும்.... ” தலைப்பில் ஆக்கமாக வந்தது கண்டு வியந்து போனேன். நான் எதைப்பற்றி
நினைத்து ஆதங்கப்படடக் கொண்டேனோ அது இங்கே...

கவிஞர்கள் என்ற பெயரோடு, எழு்ததாளர்கள் என்ற முத்திரையோடு, அறிஞர்கள் எனற பட்டத்தோடு,
நிறைய பேர் இங்கே உலா வருகிறார்கள். ஆனால் மனசாட்சியே இல்லாதவர்களாக இருக்கிறார்கள்
என்பது தான் உண்மையும், கவலைக்குரிய விடயமாகவும் இருக்கிறது.தட்டிக்கொடு்த்து சுட்டிக்காட்டி,
ஒருவருக்கொருவர் ஒரு அன்புப்பாலத்தை அமைத்து ஆரோக்கியமான சூழலில் ஜொலிக்கலாம் என்பதை இவர்கள் மறந்தே இருக்கிறார்கள்.எது சட்டியில் இருக்கிறதோ அதுதான் அகப்பைக்கு வரப்போகுது.யாரிடம் அறிவு, திறமை இருக்கிறதோ, அவர் வளர்ச்சியை யாரும் தடை செய்ய முடியாது. எனவே போட்டி, பொறாமை விட்டு ஒரு புதுயுகத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள்..


”காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது”

நல்லவவை நடக்கட்டும்...

IT from Shibly said...

நீங்களே முடிவு செய்யுங்கள்.

அவ்வப்போது தமது குறிப்பை இடுபவர்களுக்கு எனது நன்றி!

sinnathambi raveendran said...

நண்பரே,
இன்று உங்கள் வலைப்பூவை பார்வையிட்டேன்.நான்ஒருபருத்தமனிதன் உங்கள்
பிரதேசத்தில் வாழும்போது என்னை அடையாளம்காணமுடியாது.இப்போஉடம்பு
மெலிந்துவிட்டது.ஏற்றத்தால் இறங்கிவிட்டேன்.வாட்டம்தான் என்னசெய்ய?
நன்றி.

dsdgsdg said...

athan nangalum unga elutha rasikamle.. Eluthin meethu konda thidir aarvam. Insha allah thodarnthu commence adippomle..