Showing posts with label எகிப்து. Show all posts
Showing posts with label எகிப்து. Show all posts

Sunday, May 31, 2015

நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்... தலையைக் குனி!


- அகமட் புவாட் நஜ்ம் -
எகிப்து (1929 - 2013)

தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்
தலை குனிந்திருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன்
நாம் உமக்கு சுதந்திரத்தை அருளினோம்

முழுமையான எண்ணத்துடன் செயல்படுவதெனில்
சமூக நலனுக்காக அர்ப்பணிப்பு இருக்குமெனில்
உனது செயல்கள் சல்லடை போன்று பயனற்றது
பணிவுள்ளவர் மாத்திரமே நிமிர முடியும்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

பாதுகாப்பவர்களே அதைத் திருடுவோராக இருக்கையில்
தமது தேசத்தை முதுக்குப் பின்னால் வீசுகையில்
அதிகாரிகளின் சீருடைகளால் பாதுகாகக்ப்படும் அவர்கள்
அதை முழுமையாக விழுங்கி விடுகிறார்கள்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

சிரமப்பட்டுச் சம்பாதித்த எதுவும் உன்னுடையதல்ல
எல்லாப் பாதைகளிலும் பட்டினி உன்னைத் தடுக்கிறது
திரும்பி எல்லாப் புறங்களையும் பார்
திருடர்களையும் அநீதக்காரரையுமே காண்பாய்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

வேறொரு நிலத்தை நீ காண்பாயெனில்
அந்த மனிதர்கள் வேறொரு ரகம்
சங்கிலியில் பிணைக்கப்பட்ட குரங்கைப் போல
அல்லது ஒரு வெளவாலைப்போல
நீ தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவன்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

உனக்கு முன்னால் அல்லது உனக்குமேலே 
புறக்கணிப்பு உள்ளதெனில்
அது உன்னைக் கயிற்றில் கட்டியிருக்கிறதெனில்
அது உன்னை அழிவுக்கு இட்டுச் செல்கிறதெனில்
நீ நஞ்சிலிருந்து அருந்திக் கொண்டிருக்கிறாயெனில்
தலையைக் குனி! உன் தலையைக் குனி!
நீ ஜனநாயக நாட்டில் இருக்கிறாய்

ஒரேயொரு சொல் உன்னைக் குற்றஞ் சுமத்துகிறதெனில்
உனது நெஞ்சுக்குள் உனது நம்பிக்கையை 
மறைத்து வைத்திருப்பாயெனில்
உன்னுடைய கண்களில் நான் அவமதிப்பைக் காணும்போது
உன்னுடைய இழப்புக்களையெல்லாம்
என்னுடைய இழப்புக்களுடன் இணைத்து விடு!

தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்

Monday, August 12, 2013

இஸ்லாமியத் தலைமையின் ஈரம் கசியும் இதயம்!


ஹிஷாம் ஹூஸைன்


இது நம்ப முடியாத உண்மைச் சம்பவம். 

இல்ஹாம் அப்துல் ஹாதி அப்துல் பாகி முஹம்மத் எனும் எகிப்திய பெண்ணின் வாழ்வில் நடந்த இச் சம்வத்தை வாசித்து,  ஈரமாகாத கண்கள் இருக்க முடியாது. அது இச் சம்பவத்துடன் தொடர்புபடும் இன்னுமொரு மனிதரினால் இல்லை ஒரு மகானினால்.

இனி இல்ஹாமின் கதையைக் கேளுங்கள்.

'எனக்கு வீடு, கணவன், குழந்தை என எல்லாம் இருந்தது. அழகான சந்தோசமான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். எனது குடும்பத்தார் மரணித்து, எங்கள் வீடு இடிந்து விழுந்த பின் இந்த உலகில் நான் தனிமைப்பட்ட வயோதிப பெண்ணாக நின்றேன். வீடு வீடாகச் சென்று வேலைகளைச் செய்துகொடுத்தும் சிறிய சில்லரைப் பொருட்களை விற்றும் வறுமையின் அகோரப் பிடியில் நாட்களைத் தள்ளிக்கொண்டும் இருந்தேன்.
தூங்குவதற்குக் கூட சொந்தமாக ஓர் இடமில்லை.

கீஸா சதுக்கத்தில் கைரோ பல்கலைக் கழகத்திற்கு முன்னால் வீதியில் ஒதுக்கமான பகுதி, தெய்வம் தந்த வீடானது. வீதிதான் எனது தங்குமிடமானது. அந்த இடத்தில் ஐந்து வருடங்களாக இரவில் வந்து தூங்குவேன். அங்கிருந்த அனைவரும் என்னை அறிவார்கள்.

அது டிசம்பர் மாதத்தில் ஒரு நாள். எனது முழு உடலையும் மூடிக்கொள்ளும் போர்வைக்குள் தூங்கிக்கொண்டிருந்தேன். வயொதிபப் பெண்ணாக இருந்தாலும் தூங்கும் போது எவரும் என்னைக் கண்டுவிடுவார்களோ என்ற வெட்கம் என்னை வாட்டும்.

அப்போது ஒரு மனிதன் வந்து என்னை தட்டினான்.

நான் அதிர்ந்தவளாக தலையை உயர்த்திப் பார்த்தேன். அவருடைய புகைப் படங்களை சுவர்களில் கண்டுள்ளேன். அவர் தனது காரில் வந்திருந்தார். அவருடன் சாரதியைத் தவிர வெறு யாரும் இல்லை. அவர் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி.

அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்கின்றேன், ஜனாதிபதி வாகன ஊர்வலமாக செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் படை சூழ செல்வார். இப்படி தன்னந்தனிமையில் வந்து நிற்பதை என்னால் நம்ப முடியாமல் வியப்பில் திகைத்து நிற்கும் போது அவர் கேட்டார்,

 'உம்மா, இந்த இடத்தில் ஏன் தூங்குறீங்க?'

அப்போது சாமம் 2 மணியிருக்கும். நான் அவரிடம் எனது  கதையைக் கூறினேன்.

 'இந்த இடத்தில் தூங்குறீங்க என்றால்இ உங்கள் தனிப்பட்டத் தேவைகளை (மலசலம் கழித்தல், குளித்தல்) எப்படி செய்துகொள்றீங்க?' என்று கேட்டார். நான் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் அருகில் இருக்கும் இடத்தைக் கூறினேன். அவர் பதிலேதும் சொல்லாமல் காரில் ஏறி சென்று விட்டார்.

மறு நாள் காலை 8 – 9 மணியளவு இருக்கும். நேற்று இரவு வந்த சாரதி அதே காரில் வந்திறங்கினார். அவர் என்னை அழைத்து சொன்னார், 'நீங்கள் தங்குவதற்கு ஓர் இடமும் உங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவும் வழங்குமாறு ஜனாதிபதி கூறினார். நீங்கள் வெளியே சென்று அவதிப்படத் தேவை இல்லை. அல்லாஹ் தனது பொறுப்பில் ஏற்றுக்கொள்ளும் வரை ஜனாதிபதி உங்களுக்கான அனுசரனையை வழங்குவார்'.


எனக்கு வழங்கிய தங்குமிடத்திற்குச் சென்றேன். ஒரு படுக்கை, அதில் புனித குர்ஆனும் தொழுகை விரிப்பும் இருந்தது. தங்குமிடத்திற்கான ஒப்பந்தப் பத்திரத்தையும் மாதக் கொடுப்பனவையும் காகித உறையில் போட்டு தந்தார். ஒவ்வொரு மாதமும் தவறாது தங்குமிடத்தின் வாடகைக்கான பற்றுச் சீட்டையும் மாதக் கொடுப்பனவையும் கையில் கொடுத்துவிட்டுப் போவார்கள்.

நான் இக்வான் கட்சியைச் சேர்ந்தவள் அல்ல. வாழ்க்கையில் தனிமைப்பட்டு விட்ட வயோதிபப் பெண். என்னை தனது தாயைப்போல் பராமரித்த அந்த மனிதன்இ முஹம்மத் முர்ஸி, யார் என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும். அன்று, அந்த நடு நிசியில் டிசம்பரின் கடும் குளிரில் என்னைப் போர்த்துவதற்கு மேலதிக போர்வை இருக்குமா என்று தனது காரில் தேடினார்...

 யா அல்லாஹ்'.

இப்பெண் சொல்லும் இத்தகவலை ஒளிப்பதிவில் பார்க்கச் சொடுக்குங்கள்
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=LaJ-La1kGa8#at=126

நன்றி - புத்தளம் ஒன்லைன் மற்றும் ஹிஷாம் ஹூஸைன்.

Saturday, July 6, 2013

கனவு மெய்ப்பட வேண்டும்!


உறக்கம் கொள்ளவில்லை!

 உறங்கினேன், எகிப்து கண்முன்னால் விரிந்தது...

அலை கடலென மக்கள் திரளும் எதிரணியின் தாக்குதலும் நடைபெறுவதாகக் குட்டிக் குட்டியாகச் செய்திகள் கசிகின்றன.

மீண்டும் கலாநிதி முர்ஸி அவர்கள் பதவிக்கு வரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஒரு செய்தி பேசுகிறது.

 ஒரு வருடம் கூட நிறைவடையாத இஹ்வான்களின் ஆட்சி, தசாப்தங்களின் கனவு என்பதைச் சில கற்றுக் குட்டிகள் தெரிந்து கொள்ளாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இஹ்வான்களையும் இஸ்லாத்தையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் இஹ்வான்களைக் கோரமாகக் கொன்று புதைத்து விட்டு அமெரிக்கக் கனவான்களாக ஆட்சி நடத்தியதே எகிப்தின் வரலாறு.

கப்றுகளுக்குள் புதைக்கப்பட்ட குமுறல்களதும் அடக்கி வாசிக்கப் பணிக்கப்பட்ட இதயங்களதும் பெரு மூச்சுதான் ஒரு குறுகிய கால இஹ்வான்களின் அரசு.

 எகிப்தும் அதன் மக்களும் எனது தேசத்தையும் அதில் வாழும் ஒரு மனிதனையும் எனது அயலானையும் விட முக்கிமானவர்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு இஸ்லாமியனும் சர்வதேசத்தின் பிரஜை என்ற அடிப்படையில் எகிப்து பற்றியும் ஒரு கவனத்தைக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உண்டு.

 எல்லாவற்றுக்கும் மேலாக இறை நீதியே ஆள வேண்டும் என்ற அழகிய கனவோடு வாழ்க்கை முழுவதுமாகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அறிஞர் பெருமக்களும் இறை நம்பிக்கையாளர்களும் காலங் காலமாக வஞ்சிக்கபட்டே வந்தார்கள் என்பதையும் கொலையுண்டு வந்தார்கள் என்பதையும் சர்வதேச முஸ்லிம் உம்மத் எங்ஙனம் மறக்கவியலும்?

 அறபுத் தேசங்களில் இடம் பெற்று வரும் மாற்றங்களால் தமது நலன்கள் ஆபத்தை நோக்கி நகர்வதைத் தெளிவாகக் கண்டு கொண்ட மேற்குக்கு இம்முறை வியர்க்கவில்லை. அது நடுங்கத் தொடங்கி விட்டது.

எதிர்காலத்தில் ஆழ வேரூன்றிய அராபியத்தை இன்னும் பகிரங்கமாக அழித்தொழிப்பதில் அது தனது முழுச் சக்தியையும் செலவிடும்.

 குறுகிய கால ஆட்சியை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக நேரிட்டமைக்கு பலநூறு காரணங்களை ஒவ்வொருத்தர் சொல்ல முடியும். கலாநிதி முர்ஸி மட்டுமல்ல, அவருக்குப் பக்க பலமாக நின்ற இஹ்வான்களும் நேராகவோ மறைமுகமாகவோ தங்களது ஹிக்மத்துகள் மூலம் அரசைக் கொண்டு நடத்தத் திட்டமிட்டது சரியாக இருக்கலாம். நியாயமாக இருக்கலாம். அதுவே சரியானதும் நேர்மையானதும் இஸ்லாமிய வழிகாட்டல் என்றும் கருதியிருக்கலாம்.

 ஆனால் பகைவன் எத்தகையவன் என்ற கணிப்பீட்டுக்கு அவர்கள் சரியான மொழியில் பதில் தரவில்லை. அதாவது பகைவனின் மொழியில் அவனுக்குப் புரியும் மொழியில் இஹ்வான் அரசு பதிலளித்திருக்க வேண்டும்.

 அரசை ஏற்றுக் கொண்ட பிறகு எல்லா எதிரிகளுக்கும் (அரசியல் எதிரிகள் உட்பட) மன்னிப்பு வழங்கிக் கருணை புரிந்தது மாபெரும் தவறு என்பதையே நான் அழுத்தியுரைக்க விரும்புகிறேன்.

 விரும்பியோ விரும்பாமலோ நாம் வாழ்வதெல்லாம் மேற்கத்தேயங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே என்பதை எந்தப் புத்தி ஜீவியும் மறுக்கப் போவதில்லை. அவ்வாறான ஓர் உலகத்தில் அரசியல் நடத்துவது என்பது - அது இஸ்லாமிய அரசாக இருந்த போதிலும் - அதே பாணியிலான ஆட்டத்தோடு ஆரம்பிக்கப்பட வேண்டியது என்பதே எனது கருத்தாகும்.

 இன்னும் சரியாகச் சொல்வதானால் அரசியல் எதிரிகள் ஒழித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதை இன்னும் அழகாகச் சொல்வதானால் எவன் எவனெல்லாம் மேற்கின் அடிவருடியாக இருக்கிறானோ அவன் மீது ஓர் வலையை விரித்து வைத்திருந்திருக்க வேண்டும். ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், இஸ்லாமியப் பேரரசின் நலனை விட, சொந்த நாட்டின் நலனை விடத் தனதும் தனக்குப் பக்க பலமாக மேற்கும் இருக்கும் என்று கருதியவர்களைப் போட்டுத் தள்ளி விட்டு மறுவேலை பார்த்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது பத்துப் பதினைந்து பேரைப் பிடித்து உள்ளே போட்டு வைத்திருந்திருக்க வேண்டும்.

 ஆபத்தானவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை நெடுங் கயிற்றில் விட்டு வைத்திருந்ததன் பலனாக நூற்றாண்டுக் கனவு நொடிக்குள் முடிவுக்கு வந்துவிட்டது.

 நாளையே கலாநிதி முர்ஸி மீண்டும் பதவிக்கு வந்து விடலாம். அல்லது பலநூறு கொலைகளுக்குப் பிறகு இஹ்வான்களின் கபுர்களால் எகிப்தின் இன்னொரு பகுதி நிறைந்த பிறகு வேறொரு இஹ்வான் சகோதரர் பதவிக்கு வரலாம்.

எதிரிக்கான பாஷையைக் கற்றுக் கொள்ளாமல் அவனுக்குப் பதிலடி கொடுத்த படி அரசு செய்யவில்லை என்றால் காலம் முழுவதும் இஹ்வான்களின் கபுர்களால் எகிப்தின் புகழ்பூத்த நிலம் நிறைவதைத் தடுக்க யாராலும் முடியாது.

 என்னுடைய கருத்தோடு யாரும் முரண்படலாம். என்னைத் திட்டலாம். எனக்கு இஸ்லாம் போதிக்க வரலாம். ஆனால் எனது கருத்தில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.

 ஏனெனில் அழிக்கப்பட்ட அல்லது முடித்து வைக்கப்பட்ட அழகிய கனவின் நனவாதலை ஆழ அவாவி நின்றவர்களின் நானும் ஒருவன்!