லண்டன் செல்ஸீ பிரதேசத்தின் ஐவ்ஸ் தெருவில் அமைந்திருந்தது குவைத்தின் ‘அல் கப்பாஸ்’ பத்திரிகையின் பிராந்தியக் காரியாலயம்.
1987ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி அக்காரியாலயத்திலிருந்து வெளியே வரவிருந்த ஒருவருக்காகத் துப்பாக்கியை மறைத்துப் பிடித்தபடி தெருவில் காத்திருந்தான் ஓர் இளைஞன். 50 வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் தெருவைத் தொட்ட சில நொடிகளில் அவரது முகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. கீழே சாய்ந்த அந்த மனிதர் உலகப் புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர் நஜி அல் அலி.
அவரது கூடார்ந்த சித்திரங்களைப் பார்க்கும் ஆவலில் எப்போது பொழுது புலரும் என்று மத்திய கிழக்குக் காத்துக் கிடந்ததுண்டு.
எழுத்தறிவற்ற அறபிகளின் அரசியல் ஆசிரியனாக, அடக்கு முறைக்குச் சிரம் பணியாத இளைஞர்களின் வழிகாட்டியாக, சமரசஞ் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக, அடக்குமுறையாளர்களின் கண்களில் விழுந்த ஒரு கந்தலாக, துரத்தப்பட்ட மக்களின் ஆன்மாவாகவெல்லாம் அவர் தோற்றங் கொண்டிருந்தார்.
இழந்த மண்ணுக்கான போராட்டத்தை, அதனை அழித்தொழிப்பதற்கான வஞ்சகச் சூழ்ச்சியை, அதன் மீது நடத்தப்பட்ட அரசியலை மிகச் சாதாரண மகனும் புரிந்து கொள்ளும் விதத்தில் கூடார்ந்த சித்திரத்தில் உலகத்தின் உணர்வுக்கும் வாழ் நிலத்தை இழந்தோரின் எதிர்பார்ப்புக்கும் முன்னால் பத்திரிகைகளில் பரிமாறினார். நஜி அல் அலி ‘பலஸ்தீனத்தின் மல்கம் எக்ஸ்’ என்று சொல்லும் எழுத்தாளர் ஆமினா இஷ்தாயி, பலஸ்தீனர்களின் எண்ணத் துடிப்பாக விளங்கிய அவரை ‘இன்றும் மத்திய கிழக்கு மக்களின் இதயத்தில் வாழும் பேறு பெற்றவர்’ என்று சொல்கிறார்.


