Showing posts with label பாயிஸா அலி. Show all posts
Showing posts with label பாயிஸா அலி. Show all posts

Saturday, March 30, 2013

அழகொளிரும் கவிதைகள்


கிண்ணியா பாயிஸா அலி கவிதைகள் நூலுக்கு
நான் எழுதிய அணிந்துரை


அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டைத் தவிரஇ நவீன தமிழ்க் கவிதைகள் என் கவனத்தை ஈர்த்ததில்லை.

ஒரு படைப்பு எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லைத்தான். எனக்குப் பிடித்த ஒரு கவிதை மற்றொருவருக்குப் பிடிக்காமல் போகலாம். பலருக்குப் பிடித்த கவிதையில் எனது ரசனைக்குப் பிடித்ததாக எதுவும் இல்லை என்றும் ஆகலாம். ஒரு படைப்பின் ஆகர்ஷம் ஒவ்வொருவரின் வாசிப்புப் பரப்பையும் ரசனைத் தரத்தையும் பொறுத்தே அமைகிறது.

ஆயினும் கூட நல்ல கவிதைக்கும் அல்லாத கவிதைக்கும் ஒரு பொதுக் கணிப்பீடு இருக்கவே செய்கிறது. கவிதை என எழுதப்படும் ஒன்றில் கவிதை இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு நடுநிலை வாசகன் கண்டு பிடித்து விடுவான். அப்படிப்பட்ட கவிதை ஒரு நட்சத்திரம் போல் தனித்துத் தெரியும். அது படிக்கும் அனைவரது கவனத்தையும் தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளும். அந்தக் கவிதை துடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதை நமது ஆத்மா நமக்கு உணர்த்தி விடும்.

ஒரு கவிதை - அது சொல்லப்படும் மொழி, விதம், பொருள் ஆகியவற்றால் அழகும் உயிரும் பெறுகிறது. அவற்றை வாசிக்கும் போதெல்லாம் நமது உள்ளம் ஏதோ ஒரு உணர்வுத் தாக்கத்துக்கு உள்ளாகிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் செதுக்கப்படும் ஒரு கவிதை நம்மை கிளர்ச்சியூட்டுகிறது, மகிழ்விக்கிறது. ஓர் இளம் பெண்ணின் நளினத்தை, ஒரு குழுந்தையின் சிரிப்பை, ஒரு மலரின் மென்மையை, ஒரு வாளின் கூர்மையை, இரத்தத் துளியொன்றின் கனதியை, கண்ணீர்த் துளியொன்றின் கவலையைஇ வியர்வைத் துளியொன்றின் உழைப்பை நம்மீது படர விட்டுப் பாடாய்ப்படுத்துகிறது.

நவீன கவிதைகளில் அழகொளிரும் எழுத்துப் போக்கை சகோதரி பாயிஸா அலியின் கவிதைகளில் நான் பார்க்கிறேன். அவர் பேசும் கவிதை மொழி என்னை அசத்தி விட்டிருக்கிறது. இன்று வெளிவரும் நவீன கவிதைகளில் இதுவரை நான் கண்டிராத அழகு அது.

நவீன கவிதைகள் என்றால் பாலுறுப்புக்களைப் பற்றிப் பேசுவது என்று பலர் நினைக்கிறார்கள். எதுவும் மறைக்கப்பட்ட நிலையில் இருக்கும் வரை அல்லது தூரத்தே இருக்கும் வரையே அழகானதாக இருக்கும். தமிழில் எழுதும் சில பெண் கவிஞர்கள் அவ்வாறு எழுதுவதன் மூலம்தான் தான் கவனத்தை ஈர்க்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பது மிகவும் தெளிவானது. இதில் முஸ்லிம் பெண் கவிஞர்களும் அடங்குவார்கள். மற்றவர்களின் முன்னால் தான் தனித்துத் தெரிவதற்கு வேறு ஏதும் இல்லாத பெண்களே உடலழகைக் காட்டுவதற்கு முயற்சிப்பார்கள். இதன் மறுவடிவமாகவே பாலியலைப் பச்சையாக எழுதும் படைப்பாளிகளின் செயலை நான் பார்க்கிறேன்.

ஆண்களில் சிலரும் கூட இவ்வாறான போக்கில் இருப்பதை நாம் கண்டே வருகிறோம். பாயிஸாவுக்கு அப்படி ஒரு நிலைமை என்றைக்குமே வராது என்பதற்கு அவரது கவிதைகள் உயிர்த் துடிப்போடு நின்று சாட்சி பகர்கின்றன.
இந்தத் தொகுதிக்கு ஒரு மதிப்புரை எழுதுவதற்காகக் கவிதைகளைப் படித்த போது நான் பெரிதும் இடர் பட்டேன். எல்லாக் கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவையாக அமைந்ததும் கவிதையொன்றின் பகுதியொன்றை எடுத்துக் காட்ட முடியாமல் (காட்டுவது எனில் முழுக் கவிதையையும் தரவேண்டும்) தடுமாற்றம் ஏற்பட்டதும்தான் அதற்குக் காரணம். ஒரு கவிதையின் பகுதியொன்றை எடுத்துச் சொல்லி மற்றொரு பகுதியை விட்டு விடுவது அந்தக் கவிதையை நான் கொல்வதற்குச் சமானாகும் என்ற உணர்வு என்னில் எழுந்தது.

கடைசி இருக்கை என்று ஒரு கவிதை இருக்கிறது. பொதுவாக கற்பிப்பவர்கள் கடைசி இருக்கை மாணவ மாணவிகளைக் கணக்கில் கொள்வதில்லை. வறுமையும் கற்பதைத் தவிர்க்க முடியாத வலியுமாக உணரும் ஒரு சிறுவனைப் பற்றி இக்கவிதை பேசுகிறது. பாயிஸா ஒரு பெண். ஒரு தாய். ஓர் ஆசிரியை. அவர் கவிஞராக இருப்பதாலும் ஒரு தாயாக இருப்பதாலும்தான் அந்த கடைசி இருக்கை பற்றிப் பேசுகிறார் என்று எனக்குத் தோன்றிற்று. ஏதாவது ஓர் கவிதை பற்றிச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இதை நான் குறிப்பிடுகிறேன். அந்தக் கவிதையில் ஒரு துண்டைப் பெயர்த்து வந்து விளக்கஞ் சொல்ல நான் தயாரில்லை. நிலவை யாராவது உடைக்கத் துணிவார்களா என்ன?

சமகாலத்தில் தமிழ்க் கவிதை இலக்கியத்தில் ஈடுபடும் அநேகர் கவிதை என்ற பெயரால் இருண்மையும் மயக்கமும் உள்ள வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கிறார்கள். எழுதுபவர்களுக்கும் புரியாமல் படிப்பவர்களுக்கும் புரியாமல் பெருந் திண்டாட்டமே நடந்து கொண்டிருக்கிறது. பாயிஸாவின் கவிதைகள் மயக்கமானவையோ படிப்பவரை மயக்கத்துக்குத் தள்ளி விடுபவையோ அல்ல. மாறாக சொல்லும் அழகால் படிப்போரை மயங்க வைப்பவை.

பாயிஸாவின் கவிதை மொழியானது நம்மைச் சொக்க வைப்பது. அவரது கவிதை மனதுக்கு அப்பால் அவர் தனது கவிதைக்குத் தேவையானஇ பொருத்தமான வார்த்தைகளை மட்டும் தேர்ந்து பயன்படுத்துவது அதற்குக் காரணம் என்று சொல்ல முடியும். அல்லது அவரது கவிதை தான் வெளிப்படுவதற்குத் தேவையான வார்த்தைகளை மட்டும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறது என்றும் சொல்ல முடியும்.

கிண்ணியா தமிழ்க் கவிதை வளம் நிறைந்த பூமி. எனது தாய்வழிப் பாட்டனார் அப்துஸ்ஸமது ஆலிம் புலவர் இந்த ஊரிலேதான் பிறந்தார். அண்ணல்இ கிண்ணியா ஏ.எம்.எம். அலிஇ கிண்ணியா அமீர் அலி போன்ற கவிஞர்களைத் தேசத்துக்கு வழங்கிய தமிழ்ச் செழுமை நிறைந்த ஊர் இது. இங்கிருந்து பாயிஸா அலி என்ற கவிதைப் பெண்ணாள் முகிழ்த்திருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லைத்தான். மரபுக் கவிதை மன்னர்கள் நிறைந்த பூமியில் அதே செழுமையோடு நவீன கவிதை வடிவத்தில் அவர் பிரகாசிப்பதுதான் எடுத்துச் சொல்ல வேண்டிய சிறப்பு.

நான் முழுக்கவும் படித்து ரசித்த ஒரேயொரு நவீன தமிழ்க் கவிதைத் தொகுதி இது ஒன்றுதான். அதற்குக் காரணம் பாயிஸாவின் கவிதை சொல்லும் அழகு. கவிதை என்பதே அழகுதானே!

பாயிஸா அலி எனது தூரத்து உறவு என்ற போதும் இன்று வரை அவரை நேரில் நான் கண்டதில்லை. அவரது கவிதைகளை நான் மெச்சிப் பாராட்டுவதற்குக் காரணம் அவர் என் உறவினர் என்பதால் அல்ல என்பதை நீங்கள் இந்நூலில் அடங்கியிருக்கும் கவிதைகளைப் படித்ததும் புரிந்து கொள்வீர்கள்.

நூலின் பெயர் - எஸ்..பாயிஸாஅலி கவிதைகள்
நூலாசிரியர் –எஸ்..பாயிஸாஅலி
வெளியீடு - கிண்ணியாநெட் பதிப்பகம்
விலை – 250.00ரூபாய்
தொடர்பு 0773784030