மன்ஸூர் ஏ. காதர்
அஷ்ரப் சிஹாபுத்தீன் சமகாலங்களில் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் செலுத்த முனைந்துள்ளார். பலஸ்தீனக் கவிதைகளை மொழி பெயர்க்க பேராசிரியர் நுஃமான் மற்றும் பண்ணாமத்துக் கவிராயர் முதலியோர் செலுத்திய அதே உத்வேகத்தை அஷ்ரப் சிஹாபுத்தீன் அரபு மொழி மூலம் ஆங்கிலத்துக்கு வந்த சிறுகதைகளில் செலுத்தியுள்ளார்.
இத்தொகுதியில் சிறியதும் பெரியதுமான எட்டுச் சிறுகதைகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தன்னுடைய தகைசான்ற ஆங்கிலப் புலமை மட்டுமன்றி இக்கதைகளின் மூலமொழியான அரபியில் இவருக்கிருந்த பரிச்சயமும் நாட்டமுமே இம்முயற்சிக்கான முழுத் தைரியத்தையும் இவருக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.
மன்ஸூர் ஏ. காதர்
இலக்கியங்களை மொழி பெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேக மான மண் வளத்தையும் கால நிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண் வளத்தையும் வேறொரு கால நிலையையும் கொண்ட இன்னொரு வித்தியாசமான சுற்றாடலுக்குக் கொண்டுபோய் மீள் நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும். இந்த ' மீள் நடுகை'யின் பின்னர் அத்தாவரத்தின் தப்பிப் பிழைத்தலை ஒத்ததுதான் மொழி பெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் நிலையுமாகும். அதுவும் கிழக்கத்தைய கலாசாரங்களுடன் பிசையப்படாத ஒரு மொழியின் இலக்கியங்களை கிழக்கத்தைய கலாசார மொழிகளுடன் ஊடுபாவச் செய்வது மிகுந்த சிரம சாத்தியமாகும்.
முதலில் இந்தச் சிரமத்தை பொறுப்புணாச்சியுடன் சிந்தைக்கு எடுத்தவர்களால் மாத்திரமே மொழிபெயாப்பு இலக்கியங்களின் ஆன்மா வைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல் சார் பலங்கள் அல்லது பலவீனங்கள் யாவை என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் இந்தத் தொகுதி பற்றிய எமது சிந்தனைப் போக்கிற்கு நாம் கடிவாளம் இட்டுக் கொள்ள முடியும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல்சார் பலமும் அதேவேளை அதன் பலவீனமும் பின்வரும் எல்லைக்குள் மட்டுப்படுத்தத் தக்கதாகும்.
இலக்கியங்களை மொழிபெயர்த்தல் தொடர்பான புலமைசார் அறிஞராகக் கருதப்படும் யங்ஃபாங் ஹூ இது பற்றிக் குறிப்பிடும்போது நடைமுறைப்படுத்தப்படும் நோக்கங்களுக்காக ' மூலமொழியைச் சார்ந்து செல்லும்' (source language oriented) மொழிபெயர்ப்புக்கள் என்றும், மொழிபெயர்க்கப்படும் ' இலக்கு மொழியைச் சார்ந்து செல்லும்' (target language oriented) என்றும் மொழிபெயர்ப்புக்களின் அவசியமான அம்சங்களைக் கட்டுப்படுத்திக் கூறுகின்றார்;.
மொழிபெயர்ப்பாளன் இந்த இரண்டு நிலைகளையும்; முழு அவதானத்துடன் கடைப்பிடிக்க வேண்டிய தவிர்க்க முடியாமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். தவறும் பட்சத்தில் விளையும் ஆபத்து, வித்தைக் காரனுக்கு ஏற்படும் ஆபத்தைப் போன்றதே. இந்த சமநிலைத் தன்மையில் காட்டப்பட வேண்டிய அதீத கவனம் மூலமொழி ஆசிரியனின் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு வாசகனைக் கொண்டுவந்து சேர்க்கும்.
மொழி பெயர்ப்பு இலக்கியங்களுக்கான மேற்படி வரையறை களைக் கொண்ட இந்த பரிசோதனைக் குழாய்க்குள் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்பவரும் போடப்பட்டே ஆகவேண்டி உள்ளது.
அத்துடன் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் மூலமொழிக்கும் மொழி பெயர்க்கப்படும் மொழிக்கும் இடையிலான முழுமையான மனவெழுச்சிசார் நெருக்கடிகள,; ஒருமைப்பாடுகள,; பழக்கங்கள், வழக்கங் கள், ஒழுக்கங்கள், நம்பிக்கைகள், பெறுமானங்கள், சம்பிரதாயங்கள் ஆகிய வற்றுக்கான ' வெளிப்பாட்டுத் திறனுடன்கூடிய வெளிப் படைத்தன்மை' பிரதான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.
அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த முயற்சி பற்றிக் கவனக் குறைவாக கருதுபவர்களுக்குத் தழிழ் வகுப்பொன்றில் பேராசிரியர் சிவத்தம்பி தந்த ஒரு பயிற்சியை வாசகர்களிடம் கொடுக்க விரும்பு கின்றேன். அதாவது ' அவள் பூவோடும் பொட்டோடும் வாழ்கின்றாள்' என்பதனை வெறுமனே மொழியியல் ரீதியான தொடர்ச்சியுடன் ஆங்கிலமாக்குவதும் அதனைத் தமிழர் வாழ்வியல்சார் அல்லது இந்திய கலாசாரம்சார் தெளிவான அறிவுடன் ஆங்கிலமாக்குவதும் ஒரே வகை யான மொழிக் கையாளுகையுடன் நடைபெறமாட்டாது. இரண்டும் இரண்டு வகையான ஆங்கில மொழித் தொடர்களைக் கையாள மொழி பெயர்ப்பாளனைத் தூண்டும்.
இந்த அடிப்படை நியமங்களை வைத்துக்கொண்டு அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த எட்டு சிறுகதைகளையும் எனது தராசில் போட்டு நிறுத்துப் பார்க்க நான் ஆசைப்படுகின்றேன்.