நண்பர் திடீர் எனக் கேட்டார். பலரையும் போலவே கொஞ்சம் சுவையாகச் சாப்பிடும் விருப்பம் உள்ளவர்கள் நாங்கள்.
அவர் சொல்லும் சாப்பாடு என்னவென்று விளக்கமளிக்கத் தொடங்கிய போது - பழைய கதைகளில் வருவது போலச் சொல்ல வேண்டுமானால் - நாக்கில் ஜலம் ஊறியது.
“நாளைக் காலை தயாராக இருங்கள். காலையுணவு எங்கள் வீட்டில்.”
நண்பர் இதைச் சொல்லிவிட்டுப் பிரிந்த போது இரவு எட்டு மணியளவில் இருக்கும்.
தனது மனைவியை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். நாங்கள் உணவு முறையில் பொதுப் பார்வையில் கொஞ்சம் கிறுக்குத் தனமானவர்கள் என்பதை அவரது மனைவியும் தெரிந்துதான் இருந்தார். ஆனால் மற்றொரு நபருக்கு சாதாரண உணவுகளை வழங்க நமது பெண்கள் ஒப்புக் கொள்வதில்லை.
வீட்டுக்கு வேறொருவர் சாப்பிட வருகிறார் என்றால் அது ஒரு விருந்து. எனவே அதற்குரிய வகையில் சிறந்த முறையில் உணவு வழங்கவில்லையென்றால் சம்;மதம் கொள்ள மாட்டார்கள். அப்படியேதான் குறித்த உணவைத் தயார் படுத்தினாலும் கூட இன்னும் சில விசேட உணவு வகைகளையும் தயாரித்து வைத்து விடுவார்கள்.
காலை எட்டரைக்கு வந்து வாகனத்தில் என்னை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நான் நினைத்தது போல்தான் நடந்திருந்தது.
குறிப்பிட்ட உணவுக்கு அப்பால் முட்டைப் பொரியல், மீன் கறியென்று வேறு சில ஐட்டங்களும் இருந்தன.
சுடச் சுட இருந்த சோற்றில் தேங்காய்ப் பூவைப் போட்டுப் பிதறி சுட்ட கருவாட்டுடன் வெட்டியெறிய ஆரம்பித்தோம்.
