Showing posts with label kayalpattinam conf - 3. Show all posts
Showing posts with label kayalpattinam conf - 3. Show all posts

Monday, October 3, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 3


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 3

அதே போன்றுதான் இந்திய முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொஹிதீன் அவர்களது உரையைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கடைசி நாளன்று ஏறக்குறைய 40 நிமிடங்கள் அவர் உரை நிகழ்த்தினார். இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என்ற ஆவல்தான் என்னில் மேவி நின்றது. அவருடைய பேச்சில் ஆய்வுக்கான தலைப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டி அதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் எவற்றையெல்லாம் அது உள்ளடக்க வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார். அவரது பேச்சின் உச்சக் கட்டமாக வருடா வருடம் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அல்லாமா உவைஸ் அவர்களது ஞாபகார்த்த உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்று அழுத்திப் பேசினார்.



பேராசிரியர் காதர் மொஹிதீன்

இவர்களது உரைகளுடன் நமது அரசியல்வாதிகளின் உரைகளை அருகில் கூட வைக்க முடியாது. வெறுமனே பொம்மைகளாக இருந்து விட்டுப் போகும் நிலையிலும் பிரமுகராக வந்து ஊடக வெளிச்சத்தில் நனைந்து விட்டுப் போகவும் நினைக்கும் நமது அரசியல் தலைவர்கள் இந்த மாநாட்டின் ஒளிப்பதிவு நாடாக்களை எடுத்து இந்திய அரசியல்வாதிகளின் பேச்சுக்களைக் கேட்க வேண்டும். அவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் எத்துணை ஆழமான அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறான அரங்குகளில் பங்கு கொள்ள நினைக்கும் நமது அரசியல்வாதிகள் ஆகக் குறைந்தது எழுத்து மூலமாகவாவது ஒரு உரையைத் தயார்படுத்திக் கொண்டு சென்று படிப்பார்களானால் அவர்களுக்கும் இலங்கையிலிருந்து கலந்து கொள்ளும் இலக்கியவாதிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் கௌரவமாக இருக்கும்.

முதல் நாள் நிகழ்வில் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது கவியரங்கம். தலைமைக் கவிஞர், வரவேற்புக் கவிஞர் உட்பட முப்பத்து ஐந்து கவிஞர்கள் கலந்து கொண்ட அதி பிரம்மாண்டக் கவியரங்கம். அன்றைய தினமே அத்தனை பேரும் கவிதை படித்திருந்தால் அது கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டிருக்கும். இவர்களுள் நமது கவிஞர்கள் நால்வர். மருதூர் ஏ.மஜீத், பாலமுனை பாரூக், மௌலவி காத்தான்குடி பௌஸ், கிண்ணியா ஏ.எம்.எம். அலி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவர்களில் காத்தான்குடி பௌஸ், பாலமுனை பாரூக் ஆகியோரின் கவிதைகள் நன்றாக இருந்ததாக சில நண்பர்கள் எனக்குச் சொன்னார்கள்.