இருபத்தேழு வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக மன்னார் செல்ல வேண்டி வந்தது மன்னார் தமிழ் செம்மொழி விழாவுக்காக. கொழும்பிலிருந்து ஏறக்குறைய 300 கிலோ மீற்றர்கள். தனி வாகனத்தில் ஒரு குதூகலப் பயணம் அது.
மூத்த படைப்பாளிகளான ஜின்னாஹ் ஷரிபுத்தீன், அந்தனி ஜீவா, அல் அஸ_மத், கலைவாதி கலீல், தாஸிம் அகமது மற்றும் சட்டத்தரணியும் இலக்கிய ஆர்வலருமான மர்ஸ_ம் மௌலானா ஆகியோருடன் நானும் இணைந்து கொண்டேன். அக்டோபர் 22ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெற்ற இவ்விழாவில் மூன்று முழுத் தினங்கள் நாங்கள் கலந்து கொண்டோம். விழாவின் ஆரம்ப தினமான வெள்ளியன்று பிற்பகலில் புறப்பட்ட பயணம் நள்ளிரவு 12.00 மணிக்கு மன்னாரில் முடிந்தது. இதனால் தொடக்க விழாவையும் இசை விழாவையும் நாங்கள் இழந்தோம்.
செம்மொழி விழாவாக இதை மன்னார்த் தமிழ்ச் சங்கம் நடத்திய போதும் இவ்விழா ஒரு மாநாட்டின் எல்லையைத் தொட்டு நின்ற அழகைச் சொல்லியாக வேண்டும்.
கலை, கலாசார, பொது நிகழ்வுகள் அனைத்தும் மன்னார் நகர மண்டபத்திலும் ஆய்வரங்கங்கள் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியிலும் நடைபெற்றன. இரண்டாம் நாளிலிருந்து நகர மண்டபத்தில் நிகழ்வுகள் இடம் பெற்ற அதே வேளை சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் ஆய்வரங்குகளும் நடந்ததால் இங்கு கொஞ்ச நேரம் அங்கு கொஞ்ச நேரம் எனப் பங்கு கொண்டோம். மாலை நிகழ்வுகளில் முழுமையாகக் கலந்து கொள்ளக் கிடைத்தது.