Tuesday, September 6, 2011

அடையாத தாள்


எவ்வளவு திட்டமிட்டு இலக்கு வைத்துத் தாக்கிய போதும் சிறு பிள்ளைகள் நிறைந்த அந்த மிஷனரிப் பாடசாலையிலும் சில மோட்டார்க் குண்டுகள் விழுந்து வெடித்தன என்கிறார் கேர்ணல் ஜோன் மன்ஸர். அமெரிக்க ராணுவத்தில் வியட்னாமில் கடமை புரிந்த போது நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூருகையில் இவ்வாறுதான் அவர் ஆரம்பிக்கிறார்.


சம்பவத்தில் போதகர்களும் இரண்டொரு சிறார்களும் உயிரிழந்தனர். காயமடைந்த ஏராளமான பிள்ளைகளுள் ஓர் எட்டு வயதுச் சிறுமி ஆபத்தான நிலையில் இருந்தாள். அதுவோர் மருத்துவ வசதிகளற்ற சின்னஞ் சிறிய கிராமம். அமெரிக்க ராணுவத்தின் ரேடியோத் தொலைத் தொடர்பின் மூலம் அக்கிராம மக்கள் அண்மித்த நகரத்திடம் மருத்துவ உதவிக்காக மன்றாடினார்கள். அமெரிக்கக் கடற் படை வைத்தியர் ஒருவரும் ஒரு தாதியும் ராணுவ ஜீப் ஒன்றில் ஒரு வைத்தியருக்குத் தேவையான அளவு மருத்துவ வசதிகளுடன் அவ் விடத்தை வந்தடைந்தனர்.

மிக மோசமாகக் காயமடைந்திருந்த அச்சிறுமி மீது அவர்களது கவனம் சென்றது. அவசர மருத்துவக் கவனிப்புக் குள்ளாகவில்லை என்றால் அதிக இரத்த இழப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கும் அவள் இறந்து விடுவாள் என்பது புரிந்தது. அச்சிறுமியின் இரத்த வகை கிடைக்க வேண்டும் என்பது வைத்தியர் எதிர் கொண்ட முதற் சவால். அவர்கள் மிகத் துரிதமாகச் செயற் பட்டார்கள். எந்தவொரு அமெரிக்கரிடமும் அவ்வகை இரத்தம் இருக்கவில்லை. ஆனால் அப்பாடசாலையைச் சேர்ந்த காயமடையாத அனாதைச் சிறார்களிடம் அவ்வகை இரத்தம் இருந்தது.

வைத்தியர் எதிர்கொண்ட இரண்டாவது சவால் இச்சிறாரிட மிருந்து இரத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்களுடன் எந்த மொழியில் பேசி விளங்க வைப்பது என்பது. இருந்த போதும் அவர்கள் அனைவரையும் ஓர் மண்டபத்துக்கு அழைத்து மிக எளிதான ஆங்கிலத்தில் வைத்தியரும் தான் கற்றிருந்த பிரெஞ்சுப் பாஷையால் தாதியும் விளக்கமளித்தனர். இதற்கு மேல் தாமதித்தால் அச்சிறுமி இரத்தம் இல்லாமல் இறந்து போவாள் என்பதை பயத்தில் உறைந்து போயிருந்த அச்சிறார்களுக்கு சைகைகள் மூலமும் புரியவைப்பதில் தாதி மிகவும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டாள். பின்னர் உங்களில் யார் இச்சிறுமியைக் காப்பாற்ற இரத்தம் தரப் போகிறீர்கள் என்று கேட்டாள்.

நீண்ட கணங்கள் கழிந்த பிறகு ஒரே ஒரு பிஞ்சுக் கரம் மேலே எழுந்து கீழிறங்கிற்று. பிறகு அக்கரம் மற்றொரு முறை மேலெழுந்து இறங்கியது. தாதி நன்றி சொன்னாள். அக்கரத்துக்குரியவன் பாதிக்கப் பட்ட சிறுமியின் வயதொத்த ஒரு சிறுவன். பெயரைக் கேட்ட போது ஹெங் என்று சொன்னான். ஹெங் ஒரு மேசையில் படுக்க வைக்கப் பட்டான். இரத்தத்தைப் பெறுவதற்காக அவனது கரம் தொற்று நீக்கப்பட்டு நரம்பில்; ஊசி செருகப்பட்டது. அவன் இறுக்கமான அமைதியுடன் காணப்பட்டான்.

சில நிமிடங்களில் அவனிடமிருந்து நடுக்கத்துடன் ஒரு விம்மல் வெளிப்பட்டது. சட்டென தனது முகத்தை மற்றைய கரத்தினால் மறைத்துக் கொண்டான். ஹெங்... உனக்கு வலிக்கிறதா? என்று கேட்டார் வைத்தியர்;. இல்லை என்ற பாவனையில் அவன் தலையசைத்தான். ஆனால் சில வினாடிகளில் மீண்டும் ஒரு விம்மல் அவனிடமிருந்து வெளிப்பட்டது. மீண்டும் அவன் தனது அழுகையை மறைக்க முயற்சித்தான். ‘ஹெங், கையில் குத்தப்பட்ட ஊசி உனக்கு வலிக்;கிறதா’ என்று வைத்தியர் அவனைக் கேட்டார். மீண்டும் அவன் இல்லை என்ற பாவனையில் தலையசைத்தான். ஆனால் வெடித்துக் கிளம்பும் விம்மலையும் அழுகையையும் இறுக மூடிய கண்களாலும் வாயினாலும் அவன் அடக்கிக்கொள்ளப் பிரயத்தனப்படுவதை வைத்தியர் கவனித்தார்.

வைத்தியக் குழு, எங்கோ ஒரு தவறு நேர்ந்து விட்டது என்ற தீர்மானத்துக்கு வந்தது. அதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்த வேளை ஒரு வியட்னாமியத் தாதி அங்கு வந்தாள். அவதியுறும் சிறுவனை ஆதரவுடன் பார்த்தாள். நிலைமையை விளங்கிக்கொண்டவளாக அச்சிறுவனை அணுகி வியட்னாமியப் பாஷையில் மிருதுவான குரலில் பாசத்துடன் உரையாடினாள்.


அமெரிக்கர்களைப் பார்த்து அந்த வியட்னாமியத் தாதி சொன்னாள்:- ‘தான் இறந்து கொண்டிருப்பதாக ஹெங்; நினைக்கிறான். அவன் உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான். அவனது இரத்தம் அனைத்தையும் எடுத்து அந்தச் சிறுமிக்குக் கொடுக்கப் போவதாக எண்ணுகிறான்’ என்றாள். ‘அப்படியானால் எதற்காக அச்சிறுமிக்கு இரத்தம் கொடுப்பதற்கு அவன் முன்வர வேண்டும்’ என்று அமெரிக்கத் தாதி ஆச்சரியத்துடன் வினவினாள். அக்கேள்வியை ஹெங்கிடம் வியட்னாமியத் தாதி கேட்ட போது அவன் சட்டெனச் சன்னமான குரலில் சொன்னான்:-

ஏனெனில் அவள் எனது நண்பி!

21.10.2007

(தீர்க்க வர்ணம் - எனது பத்தி எழுத்துத் தொகுப்பிலிருந்து)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Mohamed Faaique said...

கண் கலங்கிடிச்சு சார்..
இல்ல..இல்ல.. அழுதுட்டேன்..
பகிர்வுக்கு நன்றி

ASHROFF SHIHABDEEN said...

முகப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்ட பின்னூட்டங்கள் -

மன்னார் அமுதன்
தீர்க்க வர்ணம் --- நான் வாசித்த மிகச்சிறந்த பத்தி எழுத்து நூல்களில் ஒன்று... ”ஏனென்றால் அவள் என் நண்பி” என்ற வரியைப் படித்த போது இரு துளிக் கண்ணீர் புத்தகத்தையும், துக்கம் தொண்டையையும் அடைத்துக் கொண்டது... --- காதலெனும் வார்த்தை கூறி எத்தனை நண்பிகளைத் தொலைத்திருப்போம்... :-( — with Ashroff Shihabdeen.

Lareena Abdul Haq ‎

//ஏனெனில் அவள் எனது நண்பி!//- வாசித்து முடிக்கையில் பொங்கிவந்த அழுகையை நிறுத்தும் வழி தெரியவில்லை Sir.


விமர்சனப் பார்வை

‎//அமெரிக்கர்களைப் பார்த்து அந்த வியட்னாமியத் தாதி சொன்னாள்:- ‘தான் இறந்து கொண்டிருப்பதாக ஹெங்; நினைக்கிறான். அவன் உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான். அவனது இரத்தம் அனைத்தையும் எடுத்து அந்தச் சிறுமிக்குக் கொடுக்கப் போவதாக எண்ணுகிறான...்’ என்றாள். ‘அப்படியானால் எதற்காக அச்சிறுமிக்கு இரத்தம் கொடுப்பதற்கு அவன் முன்வர வேண்டும்’ என்று அமெரிக்கத் தாதி ஆச்சரியத்துடன் வினவினாள். அக்கேள்வியை ஹெங்கிடம் வியட்னாமியத் தாதி கேட்ட போது அவன் சட்டெனச் சன்னமான குரலில் சொன்னான்:-

ஏனெனில் அவள் எனது நண்பி!//

மனதை உருகச் செய்யும் வரிகள். சகோ. அஷ்ரஃப் ஷிஹாப்தீனின் எழுத்துக்கள் மிக வலிமையானவை. மொழியின் லாகவம் அவருக்கு மிக அற்புதமாய் வசப்பட்டிருக்கிறது

Lareena Abdul Haq

உண்மைதான். அது அவர் பெற்ற வரம் போலும். மாஷா அல்லாஹ்! அவர் இடும் பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பவள் என்ற வகையில் நானும் இந்தக் கருத்தை 100% ஆமோதிக்கின்றேன்.