Thursday, January 20, 2011

திசைதோறும் துலங்கிய நட்சத்திரம்


“நான் பேராசிரியர் பதவி வகித்த நாட்களில் எந்தவொரு குப்பையையும் ஆய்வு என ஏற்பதற்கு என்னிடமிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாள்வதே போதுமானதாயிருந்தது.”

கேலிக்குரியதும் கேவலத்துக்குரியதும் அவ்வப்போது நடப்பதுமான மேற்குறிப்பிடப்பட்ட பல்கலைக் கழகப் பின்னணியைப் பகிரங்கச் சொற்பொழிவில் தைரியமாகச் சொல்ல அண்மையில் மறைந்த காஸி அல் குஸைபியைப் போல் வேறு ஒருவரை நாம் காண முடியாது.

பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த போது மட்டுமல்ல, பிரிட்;டனுக்கான சவூதி அரேபியத் தூதுவாராகப் பணியாற்றிய போதும் அந்தப் பதவியைத் தாண்டி அவர் இப்படித்தான் நடந்து கொண்டார். அயாத் அக்ராஸ் என்ற பலஸ்தீனியத் தற்கொலைதாரி இளைஞன் இஸ்ரேலிய பல்பொருளங்காடியில் தன்னை வெடிக்க வைத்த போது “நீ ஓர் உயிர்த் தியாகி” என்று அவனுக்கு இரங்கல் கவிதை எழுதினார் அவர். அந்தக் கவிதை பிரிட்டனின் சீற்றத்தைக் கிளறியது. முழு மத்திய கிழக்கு அரசியல் அரங்கிலும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த இளைஞனை ‘சுவர்க்கத்தின் மணவாளன்’, ‘கிரிமினல்களுக்கு எதிராக எழுந்தவன்’, ‘புன்னகையுடன் மரணத்தை முத்தமிட்டவன்’ என்றெல்லாம் அக்கவிதையில் போற்றியிருந்தார் குஸைபி. அதேவேளை செப்டம்பர் 11 அமெரிக்க வர்த்தக மையத் தாக்குதலை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘வரம்பு மீறிய கொடுமை’ என்று அதை வர்ணித்தார். அதுதான் குஸைபி.



காஸி அல் குஸைபி சவூதி அரேபியாவின் அல் அஹ்ஸாவில் 1940ல் பிறந்தார். தந்தையார் ஒரு வணிகர். தாயார் மக்காவில் காத்திப் குடும்பத்தைச் சேர்ந்தவர். குஸைபி ஒன்பது மாதக் குழந்தையாக இருந்த போது தனது தாயை இழந்தவர். பிறகு பாட்டியின் வளர்ப்பில் விடப்பட்டார். அவரது முதல் ஐந்து வருடங்கள் ஹ_ஃபுஃப் நகரில் கழிந்தது. அவரது கல்வி நலன் கருதி பஹ்ரெய்னுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து 1961ல் கெய்ரோ சென்று சட்டக் கல்வி பயின்றார். பின்னர் கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்திலும் சர்வதேச உறவுகளிலும் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றபின் லண்டன் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.

“இளம்பராயத்திலிருந்து அல் குஸைபியிடம் ஒரு கனவு இருந்தது. உலகத்தின் கண்ணீர் துடைப்பதும் அதைப் புன்னகைகளால் நிரப்புவதுமே அது. அதற்காகத்தான் அவர் இயங்கினார். இதற்காக நான்கு படிகளை அவர் வைத்திருந்தார். திட்டமிடல், ஏற்பாடு செய்தல், செயற்படுதல், அதைத் தொடர்தல் ஆகியனவே அந்த நான்குமாகும். இதற்காக அவர் ஒரு திறவுச் சொல்லை வைத்திருந்தார். அந்தச் சொல் - ‘ஹோம்வேர்க்’. எந்த ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டாலும் அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதிலும் அது குறித்து விசாலமாகத் தெரிந்து கொள்வதிலும் அந்த வீட்டு வேலை - ‘ஹோம் வேர்க்’ அவருக்கு உதவிற்று” என்கிறார் முகம்மத் அல் அலி ஜிப்ரி.

1984 முதல் 1992 வரை பஹ்ரெய்னிலும் 1992லிருந்து 2002 வரையில் பிரிட்டனிலும் சவூதி அரேபியாவின் தூதுவராகப் பணிசெய்த குஸைபி மரணிக்கும் வரை தொழிற்துறை அமைச்சராகக் கடமை செய்தார். சவூதி இளைஞர்கள் இலகுவானதும் அதிக பணம் கிடைக்கக் கூடியதுமான தொழில்களையே நாடுவதாகச் சொன்ன குஸைபி, 2008ம் ஆண்டு ஜித்தாவில் ஒரு ‘பாஸ்ட் ஃபூட்’ கடையில் மூன்று மணிநேரம் வேலை செய்து காட்டினார். பொதுவாக சவூதியில் இவ்வாறான தொழில்களில் வெளிநாட்டவரே ஈடுபட்டு வந்திருந்தனர். அவரது இவ்வாறான நடவடிக்கைகளில் தடாலடிச் செயற்பாடோ அரசியல் ஸ்டன்டோ இருப்பதில்லை என்பதுதான் சிறப்பு.

இறுக்கம் கொண்ட அரச ஆட்சியில் உள்ள சவூதி மக்களது பிரச்சினைகள் எண்ணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசும் தன்மை அவரிடம் இருந்தது. இதனால் பரந்த அளவில் சிந்திப்பவர்களாலும் படித்தவர்களாலும் மிகவும் விரும்பப்பட்ட மனிதராக இருந்தார்.

அமைச்சராக, அரச நிறுவனங்களின் தலைவராக, இராஜதந்திரியாக, பேராசிரியராக என்றெல்லாம் அவரது வாழ்நாளில் பெரும் பகுதி நிர்வாகம் செய்வதிலேயே கழிந்து போயிருக்கிறது. இந்த அனுபவங்கள் குறித்து 300 பக்கங்களில் அவர் எழுதிய நூல்தான் “வாழ்நாளெல்லாம் நிர்வாகம்.” நிர்வாகத்தை இரண்டு விதமாக அவர் வகைப்படுத்தினார். ஒன்று சார்புப் பார்வையுடன் கூடியது. மற்றையது, எதிர்ப் பார்வை கொண்டது. அவர் எதிர்ப் பார்வை கொண்ட நிர்வாக முறையையே தேர்ந்தெடுத்தார். அதாவது எதிரிகளை உருவாக்குவதன் மூலம் தன்னைக் கூர்மைப்படுத்திச் செயலூக்கத்தில் தள்ளுவது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம்.

முடிவெடுப்பது, நேரக்கட்டுப்பாடு ஆகியவற்றில் அவர் மிகவும் கறாரானவராக இருந்தார். “உங்கள் பிள்ளை வெளியே சென்று விளையாடுவதற்கு அனுமதி கேட்டால் ஆம் அல்லது இல்லை என்று சொல்வதற்கு ஐந்து நிமிடங்கள் கூட நீங்கள் தாமதிக்கக் கூடாது” என்கிறார் குஸைபி. அவர் அமைச்சராக இருந்த வேளை அவரைச் சந்திப்பதற்கு வழங்கப்பட்ட நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாக வந்த ராஜரீக மட்ட முக்கியஸ்தர் ஒருவர் அதற்காக மன்னிப்புக் கேட்கும் மனநிலையில் கூட இல்லாததை அவதானித்தார் குஸைபி. கடைசியில் அவரது நோக்கம் நிறைவேறாமலேயே திரும்பிச் செல்ல நேர்ந்தது.

1965ல் ரியாதிலுள்ள கிங் சவூத் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாகம் கற்பிப்பதற்கு குஸைபி அழைக்கப்பட்டார். பொறுப்பேற்பதற்கு முன்னர் பீடாதிபதியிடம் அவர் வைத்த வேண்டுகோள், ‘பாடத்தை ஒன்று நீங்கள் எடுக்க வேண்டும் அல்லது நான் எடுக்க வேண்டும்’ என்பதுதான். நிர்வாகம் என்பது ஒரு நாட்டின் நாடி நரம்பு. ஆளுக்காள் ஒவ்வொரு கருத்தைத் திணித்து மாணவர்களைத் திணறடித்தால் அது நாட்டுக்குக் கேடு என்பதை உணர்ந்தே அவர் இவ்வாறு சொல்லியிருக்க வேண்டும். கடைசியில் ‘நீங்களே படிப்பியுங்கள்’ என்று புன்சிரிப்புடன் பீடாதிபதி அனுமதி கொடுத்தார்.

1974ல் சவூதி ரயில்வேயின் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டவுடன் அவர் செய்த முதற் காரியம் ஏற்கனவே அப்பதவி வகித்த பணிப்பாளர்களைச் சந்தித்து விபரங்களைப் பெற்றுக் கொண்டதுதான். காரியாலயத்தில் ஏற்கனவே கூட்டங்களில் எடுக்கப்பட்ட அனைத்துத் தீர்மானங்கள், குறிப்புகள் அனைத்தையும் அள்ளிக் கொண்டு வீட்டுக்குச் சென்று ‘ஹோம் வேர்க்’ செய்தார். தனிப்பட்ட யாருடைய நலன் குறித்தும் கவனம் செலுத்தப்படக் கூடாது என்பதே அவரது பணிப்புரையாக இருந்தது.

தொழிற்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக 1975ல் பதவியேற்றார் அல்குஸைபி. இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை அவர் வகித்துக் கொண்டிருக்கும் போதே 1982ல் பதில் சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமையானது அவரது செயற் திறமைக்கும் நேர்மைக்கும் நல்ல எடுத்துக்காட்டாகும். 1984ல் ‘வாங்கி விற்கப்பட்ட ஒரு பேனை’ என்ற அவரது கவிதையொன்று நேரடியாக அரச மட்டத்தின் ஊழல்களை உடைத்தெறிந்தது. அது சவூதியில் ஒரு தீயைக் கிளப்பி விட்டது. அந்த வேளை அவரிடம் மூன்று அமைச்சுக்கள் இருந்தன என்பது குறித்துக் கொள்ளப்பட வேண்டியது.

சவூதி பாதுகாப்புத் துறையிலும் அவர் ஓர் ஆலோசகராக விளங்கினார். 1965ம் ஆண்டில் யெமனில் நிலை கொண்டிருந்த எகிப்தியப் படையினரோடு சுமுகப் பேச்சுவார்த்தை நடத்திய சவூதி அரேபியக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் குஸைபி. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ரியாத், கெய்ரோ, சன்ஆ ஆகிய நகரங்களுக்கிடையில் ஓய்வில்லாமல் ஓடித்திரிந்துள்ளார். எகிப்துக்கும் எமனுக்குமிடையிலான போர்ச் சூழலுக்குள் துப்பாக்கி ரவைக@டாக சமாதானத்தை ஏந்திச் சென்று பெரும் பணியாற்றினார்.

இவை எல்லாவற்றையும் விட மேலாக அரபுலகம் காஸி அல் குஸைபியைக் கொண்டாடுவதற்குக் காரணம் அவர் தன்னிகரற்ற கவிஞராகத் திகழ்ந்தார் என்பதுதான். அவர் எழுதி வெளியிட்ட நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களில் அநேகமானவை கவிதை நூல்கள். அவர் மத்திய கிழக்கின் சிறந்த கவிஞராகவும் நாவலாசிரியராகவும் உலகம் முழுதும் அறியப்பட்டிருந்தார். எந்தப் பதவியை வகித்த போதும் அவ்வப்போது இலக்கியச் சொற்பொழிவுகளுக்காகப் பல்கலைக் கழகங்கள் அவரை அழைத்துப் பயன்படுத்தி வந்தன.

குஸைபி ஒரு பதவியிலிருந்து இன்னொரு பதவிக்கு மாறி மாறி அனுப்பப்பட்டதையும் அந்தக் கால கட்டங்களையும் பார்க்கும் போது அவர் ஒரு நேர்மையாளராக, மக்களினதும் தேசத்தினதும் பக்கம் நின்று சிந்திப்பவராக இருந்திருக்கிறார் என்பது புலனாகின்றது. அவரது எழுத்தினாலோ பேச்சினாலோ செயற்பாடுகளினாலோ உயர் மட்டத்தின் கருத்துக்கு மாற்றமான கருத்துடன் இருக்கிறார் என்று தெரிய வருகையில் வேறு ஒரு பதவிக்கு மாற்றப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் அவரை ஒழிக்கவோ தவிர்க்கவோ உயர் மட்டத்தினால் முடியவில்லை . இதுதான் குஸைபியின் வெற்றி என்று சொல்ல வேண்டும். மன்னராட்சி நிலவும் ஒரு தேசத்தின் அரசியலைப் பொறுத்த வரை அரச குடும்பத்தில் பிறக்காத ஒரு தனிமனிதன் தவிர்க்க முடியாத சக்தியாக ஆளுமை கொண்டிருப்பது அவ்வளவு எளிதான விடயமும் அல்ல.

சவூதியின் அரசின் அங்கமாக அவர் இயங்கிய போதும் அவரது குரல் அவ்வப்போது தனித்துக் கேட்டது. அது நான் சுதந்திரமானவன், நான் கட்டுப்பாடுகளுக்குள் இல்லாதவன் என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தது. அவரது கவிதைகளும் நாவல்களும் இதைத்தான் பேசின. அதற்கு மேலாய் ஒரு படைப்பாளியாக மட்டும் நின்று மத்திய கிழக்கின் அரசியல், மேற்குலகின் கபடத்தனங்கள், மத்திய கிழக்கு ஆட்சியாளர்களின் நாடகங்கள், பலஸ்தீனத்தின் துயர், சாதாரண மக்களின் வாழ்வு என்பவற்றையும் உரத்த குரலில் பேசின. “ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவரை விட ஒரு மரக்கறி வியாபாரி தன்னைச் சிறப்பானவனாக உணர வேண்டும். ஏனெனில் தொழிலாளர்கள்தாம் தேசத்தின் மிகப் பெரிய நம்பிக்கை. ஊடகங்கள் அவர்களுக்கு அழுத்தங்களை வழங்காமல் ஆதரவாகச் செயற்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அதிகார மட்டத்தில் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்த போதும் அவரது கவிதை நூல்களில் ஒன்றிரண்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தது என்பது எத்தகைய வேடிக்கை. காஸி அல் குஸைபியின் நூல்கள் மீதான தடை அவர் மரணிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் நீக்கப்பட்டது என்று Angry Arab News Service

ஐச் சேர்ந்த லெபனானிய அமெரிக்கரான கலாநிதி அஸத் அபூ கலீல் சொல்கிறார். அதாவது தடை நீக்கப்படும் போது குஸைபி மரணப்படுக்கையில் இருந்தார்.

குஸைபி இவ்வருடத்தின் 32ம் வாரம் அதாவது ஆகஸ்ட் பதினைந்தாம் திகதி ரியாத் - கிங் ஃபைஸல் விசேட வைத்தியசாலையில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது எழுபது. இந்த இழப்பானது அவரது மனைவிக்கும் அவரது ஒரே ஒரு மகளுக்கும் மூன்று ஆண்பிள்ளைகளுக்கும் சவூதி மக்களுக்கும் மாத்திரமேயானது அல்ல.

உலகத்தின் பார்வையில் செல்வம் கொழிக்கும் தேசத்தில் களிப்பும் படாடோபமுமாய் வாழும் மனிதர்களுள் அறிவும் ஆழ் புலமையும் பெற்றுச் சர்வதேச ராஜ தந்திரங்களை எதிர் கொள்ளும் வலிமையுடன் செயற்பட்டு வாழ்ந்து மறைந்த குஸைபி உண்மையில் ஒரு மகானுபவர்தான். எந்தத் துறையில் அவர் காலடி எடுத்து வைத்தாலும் அங்கு தேசத்தின் நலன், மக்களின் நலன், உலகத்தின் நலன் என்கிற தனது முத்திரைகளைப் பதிப்பதில் அவர் வெற்றி கண்டவர். சவூதி அரேபியாவைப் பொறுத்த வரை காஸி அல் குஸைபியின் மரணத்துக்கும் இன்னொரு குஸைபி உருவாவதற்குமான காலம் மிக நீண்டதாக இருக்கப் போகிறது. புதிதாக உருவாகும் குஸைபிகளுக்கு மத்திய கிழக்கின் நலன், அங்கு அகதிகளாக அல்லல் படும் மனிதர்களது நலன் குறித்துச் சிந்திக்கவும் செயற்படவும் மேற்கத்தேய நாடுகளுக்கு விலை போகாதிருக்கவுமான இதயத்தை வழங்குமாறு அவர்கள் பிரார்த்திக்க வேண்டும்.

அவரது மரணச் செய்திக்குப் பிறகு இணையத்தில் பலர் இரங்கல் குறிப்புக்களைத் தெரிவித்திருந்தார்கள். “எங்களது பரம்பரைக்கு அரபுலகில் ஒரு நல்ல உண்மையான ரோல் மொடல் இல்லையென்று நேற்றிரவு நான் எனது நண்பனிடம் சொன்னேன். அது ரொம்பத் தப்பு. அந்தப் பெருமைக்குரியவர் இன்று நம்மை விட்டுச் சென்று விட்டார்” என்று பஹ்ரெய்னிலிருந்து யாக்கூப் அல் சிலைஸி என்ற நபர் குறிப்பிட்டிருந்தார்.

காஸி அல் குஸைபியின் வெளிப்படையான பேச்சில் எப்போதும் உண்மையும் கிண்டலும் தொனிக்கும். “ஒரு நூலில் திருடினால் அதற்குப் பெயர் திருட்டு. பல நூல்களில் திருடினால் அதற்குப் பெயர் ஆய்வு” என்று அவர் ஒரு முறை சொல்லியிருக்கிறார்.


(நன்றி: ஞானம் - சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுச் சிறப்பிதழ்)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: