Friday, September 30, 2011

இலக்கியச் சந்திப்பும் “கல்வெட்டு“ சஞ்சிகையும்


இடமிருந்து வலமாக கவிஞர் ஜின்னாஹ் சரிபுத்தீன், யுனுஸ் கே. றஹ்மான், அல் அஸூமத், நான், இவள் பாரதி, நடிகர் வெற்றி


கடந்த 15.07.2011 அன்று சென்னை வியாசர்பாடியில் கவிஞர் ஜலாலுத்தீன் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். காயல்பட்டினம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு முடிந்ததும் சென்னையில் தங்கியிருந்த தமக்கு அறிமுகமான இலங்கைப் படைப்பாளிகளையும் சென்னை சார்ந்த சில படைப்பாளிகளையும் ஒருங்கிணைப்பதும் கருத்துப் பரிமாறுவதும் இச்சந்திப்பின் நோக்கமாக அமைந்தது.


வியாசர்பாடியில் உள்ள தமது சகோதரிக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தார் கவிஞர் ஜலாலுத்தீன். கவிஞர் அல் அஸ_மத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாசிம் அகமது, நான், யூனுஸ் கே. ரஹ்மான், பதுருஸ்ஸமான் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டோம்.


சென்னை புத்தகக் கடையொன்றில் தமக்கு நேர்ந்த அனுபவத்தை விளக்கினார் தாசிம் அகமது. இலங்கை முஸ்லிம்களால் தமிழ் பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டு அப்புத்தகக் கடைப் பெண் கேட்டதாகச் சொல்லிக் கவலைப்பட்டார் தாசிம் அகமது.


கவிஞர் சொர்ணபாரதி, நடிகர் வெற்றி, இவள் பாரதி மற்றும் நமக்கு ஏற்கனவே அறிமுகமாயிராத சில இலக்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். மாலை 6.00 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் முதலில் அறிமுகம் இடம் பெற்றது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றியும் தமது இலக்கியச் செய்பாடுகள் பற்றியும் அறிமுகம் செய்து கொண்ட பின்னர் பொதுவான கலை, இலக்கியக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இது அமைந்தது.

இந்தச் சந்திப்பின் போது நண்பர் சொர்ணபாரதி தாம் வெளியிட்டு வரும் ‘கல்வெட்டு பேசுகிறது’ சஞ்சிகைப் பிரதியொன்றை இலங்கை நண்பர்களுக்கு வழங்கினார். ஜனவரி 2011 ல் வெளியான அந்த இதழ் கவிதைச் சிறப்பிதழாக வெளிவந்திருந்தது. 48 பக்கங்களில் ரசிக்கத்தகுந்த பல கவிதைகள் இடம்பெற்றிருந்தன.


கவிஞர் ஜலாலுத்தீனின் மூத்த சகோதரர் இலங்கைச் சிறுபான்மைப் பிரச்சினை குறித்து தனது அவதானத்தைத் தெரிவித்தார்.


இந்த இதழுக்கு ஆசிரியர் நண்பர் சொர்ணபாரதி. சிறப்பாசிரியர்கள் புலவர் உதயை மு.வீரையன், முனைவர் அரங்க மல்லிகா ஆகியோர். இந்த இதழில் உதயை மு.வீரையன்,புதிய மாதவி, தமிழ் மணவாளன், சுப்ரபாரதி மணியன், திலகபாமா, க.ஆனந்த், அரங்க மல்லிகா, அமுதகுணாளன், ஞானபாரதி, இளங்கவி அருள், ச.விஜயலட்சுமி, கவின்கவி, யாழினி முனுசாமி, செல்லம்மாள் கண்ணன், மு.முருகேஷ், வானவன், கதிர்பாரதி, ஜலாலுத்தீன், இரா. தமிழரசி, உமா ஷக்தி, இல. செழும்பரிதி, தச்சன் நாகராசன், வதிலை பிரபா, பவானி தாமோதரன், சந்திரா மனோகரன், கா. அமீர்ஜான், ஜெயக்குமாரி தணிகாசலம், மயிலாடுதுறை இளையபாரதி, வா.மு.கோமு, சித்தன், அன்பாதவன், விஜேந்திரா, கன்னிக்கோயில் ராஜா, அமிர்தம் சூர்யா, சீனி ரவிபாரதி, கனியன் செல்வராஜ், இவள் பாரதி, சொர்ணபாரதி ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. தவிர கவிதையின் மெய்மைகள் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன், சமகாலக் கவிதைகளில் அகமும் புறமும் என்ற தலைப்பில் நண்பர் எழிலரசு ஆகியோரும் கட்டுரைகள் எழுதியிருக்கின்றனர்.

நல்ல கவிதைகளைக் கொண்ட ஒரு கனதியான கவிதை இதழ். சொர்ணபாரதி போன்றோர் ஓயாமல் இயங்கிக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இவ்வளவு தொகையினர் இதழுக்குக் கவிதைகளை வழங்கியிருப்பது சொர்ணபாரதியின் உழைப்பையும் அவர்மீது ஏனைய படைப்பாளிகள் கொண்டிருக்கும் மதிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.



நின்று கொண்டிருப்போரில் தொப்பி அணிந்திருப்பவர் கவிஞர் ஜலாலுத்தீன். அமர்ந்திருப்போரில் இடமிருந்து வலமாகக் கடைசியா அமர்ந்திருப்பவர் - அதாவது அமர்ந்திருப்போரில் வலது புற முதல் நபர்தான் நண்பர் சொர்ணபாரதி.



நிகழ்வு முடியும் போது இரவு 8.30 ஆகிவிட்டது. ஜலாலுத்தீன் வழங்கிய  பர்மா நூடுல்ஸ் இரவு விருந்தில் நானும், ஜின்னாஹ், அஸூமத், யுனுஸ் கே.றஹ்மான் ஆகயோர் கலந்து கொண்டோம்.
 
கல்வெட்டு பேசுகிறது சஞ்சிகையில் இடம்பெற்றுள்ள கவிதைகள் யாவுமே எடுத்துக் காட்டுக்குரியவை என்ற போதிலும் முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த சிலவற்றை இங்கு தருகிறேன்.
 
ஒரு புனை காத்திருக்கிறது
 
- க.ஆனந்த்
 
ஏதோவொரு இரை
எப்போது வெளிவருமென்றோ
 
தேடிப் பிடித்த இரையை
தின்று தீர்த்த களைப்பிலோ
 
யாரோவொரு அந்நியரின்
நடமாட்டத்தைக்
கண்காணித்துக் கொண்டோ
 
தான் இருப்பதே
தெரியாத ஒரு
இடத்தில் இருந்து கொண்டு
 
ஒரு புனை காத்திருக்கிறது
 
எதற்கான காத்திருப்பென்று
எவரும் கண்டறிய முடியாதவொரு
அமைதியுடன்!
-------------------------------------
 
குருதியுமிழ் நிலம்
 
- யாழினி முனுசாமி
 
எம் நிலத்தைக்
குருதியுமிழ் நிலமாக்கினீர்
வெடியில் சிதறுண்ட
எம் தசைகள் உம் கால்களில் நசநசக்கின்றன
 
சமாதானப் புறாக்களைப்
பறக்க விட்டவனின் வாரிசுகள்
எங்கள் வானில் கழுகுகளைப் பறக்க விடுகின்றனர்
நடிப்பும் அரசியலும் ஒன்றாய்ப் பொனதெம் தலைவிதி
 
சாகும் வரை நடிக்கிறீர்
சாவு வீட்டிலும் நடிக்கிறீர்
மகா நடிகர்கள் நீங்கள்
எம் பேரோலத்தை மிஞ்சி விட்டது உம் வசன ஓலம்
 
பதவியை உதற மறுத்தவர்களா
உமக்கென்று ஒரு நாட்டை உருவாக்கித் தருவீர்
எம் உயிரைக் காக்க முடிந்ததா உம்மால்
வீர வசனமெல்லாம் வெற்று வசனமாய்ப் போயின
முடிந்து விட்டன... எல்லாம் முடிந்து விட்டன...
 
நாளை எம்முகத்தோடு வருவீர்
எம் தலைவர்களென?
----------------------------------------------------
 
இப்போதும்
 
-கனியன் செல்வராஜ்
 
ஊருக்கு ஒன்று
உண்டு காந்தி சிலை
 
இருக்கும் போது மட்டும் அல்ல
இப்போதும்
நமக்காகவே வாழ்கிறார்
காந்தி
 
காலை மூன்று மணிக்கு
தேனி பஸ்ஸில் வரும்
கஞசா பொட்டலம்
விற்பவன் கைமாற்ற
மறைவான இடம்
 
காலை 11 மணிக்கு
பதநீர் விற்பவன்
சைக்கிளை நிறுத்திப்
பதநீருக்கு இடையில்
மறைத்து வைத்த கள் கேனை எடுத்து்
மெதுவாய் விற்கத்
தோதுவான இடம்
 
ஆறு மணிக்கு மேலே
லைசசன்சு இல்லாத
வண்டியை ஓரங்கட்டி
லஞ்சம் வாங்கி அனுப்பும்
இன்ஸ்பெக்டருக்கு
காந்தி சிலையை விட
வசதியான இடம் வேறு இல்லை
 
இரவு 11 மணிக்கு மேல்
இருட்டில் ஒதுங்குவதற்கு மன்
எவனையாவது பிடித்துப்
பேரம் பேச நல்ல வேறு இடம்
விபசாரிகளுக்குக் கிடைக்கவில்லை
 
இருக்கும் போது மட்டுமல்ல
இப்போதும்
நமக்காகவே வாழ்கிறார் காந்தி!
-----------------------------------------------------
 
சாபமும் வரமும்
 
- இவள் பாரதி
 
யாருக்கேனும் ஆசையிருந்தால்
நாங்கள் அருகருகே
மரமாக வேண்டுமென சபியுங்கள்
நொடிதோறும்
ஒருவரையொருவர்
பார்க்கும் வரத்திற்காக!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Mca Fareed said...

சமாதானப் புறாக்களைப்
பறக்க விட்டவனின் வாரிசுகள்
எங்கள் வானில் கழுகுகளைப் பறக்க விடுகின்றனர்
நடிப்பும் அரசியலும் ஒன்றாய்ப் பொனதெம் தலைவிதி
இந்த வரிகள்
எமது நாட்டின் தலைவிதியை புரட்டப்போய் , தோற்றுப்போனவர்களை ஞாபகமூட்டுகின்றது