Tuesday, January 31, 2012

சுப்ரமண்ய ராஜூ



ஒரு சிறந்த இலக்கிய வாசகனுக்கும் படைப்பாளிக்கும் சுபரமண்ய ராஜூவைத் தெரியாதிருக்க முடியாது.


அவர் தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர். தனித்துத் தெரிபவர்.

பாலகுமாரனின் நாவல்களை ஒன்றும் விடாமல் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சுப்ரமண்ய ராஜூ பாலகுமாரனின் நெருங்கிய இலக்கிய நண்பர் என்பதை அறிய வந்தேன். அவரது எழுத்துக்களைத் தேடியதில் ஒன்றிரண்டு கதைகள் எங்கெங்கோ படிக்கக் கிடைத்தன. அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் அவரது எழுத்துக்களை ஆவலடங்குமளவாவது படித்துக் கொள்வதற்கும் வாய்ப்பிருக்கவில்லை.

2009ல் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த போது சுப்ரமண்ய ராஜூ கதைகள் முழுத் தொகுப்பு கிடைத்தது. 486 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் சுப்ரமண்ய ராஜீவின் 32 சிறுகதைகள் அடங்கியுள்ளன. 2008ல் கிழக்கு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் நூல்களில் இதுவும் ஒன்று.

இந்த நூலில் முன்னுரையை சுப்ரமண்ய ராஜூவின் நண்பரும் எழுத்தாளருமான தேவகோட்டை வா. மூர்த்தி எழுதியிருக்கிறார். இந்த முன்னுரையைப் பலமுறை நான் படித்து விட்டேன். அவ்வளவு உயிரோட்டம் அதில்.

சுப்ரமண்ய ராஜூபற்றி அவர் எழுதியிருக்கும் சில பந்திகளைத் தரலாம்:-

“எல்லோருக்கும் புன்முறுவல்தான். எல்லோருக்கும் உதவி. எல்லோருக்கும் இன் சொல். எவரிடமும் வெறுப்பில்லை. யாரிடமும் காழ்ப்பில்லை. யாரையும் குறை சொல்வதில்லை. யாரையும் கடிந்ததில்லை. இவைதான் சுப்ரமண்ய ராஜூ.”

“தனக்குப் பரிசாகக் கிடைத்த, தான் உபயோகிக்கத் தொடங்கியிருந்த ஒரு விலையுயர்ந்த பேனாவை ராஜூவுக்குத் தந்தார் பிரபஞ்சன். ‘இந்தப் பேனாவுக்கு நிங்கள்தான் தகுதி’ என்பது போல.”

“ராஜூவின் சிறுகதைத் தொகுதியைப் படித்து விட்டு “வாழ்க்கையில் சதா சலிக்கும் கேள்விகளை இவ்வளவு அடக்கமான தொனியில் சித்தரித்த சமகாலத்து எழுத்தாளர் யாரும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது” என்ற ரீதியில் கவிஞர். ந. ஜெயபாஸ்கரன் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை ராஜூவிடம் கொடுத்தேன். ‘சமகாலத்து எழுத்தாளர் யாருமில்லை என்று ஜெயபாஸ்கர் எபப்டிச் சொல்ல முடியும்?’ என்று என்னுடன் விவாதித்தான்.”

“பிரபஞ்சனின் பேனா, கல்யாண்ஜியின் கடிதம், ஜெயபாஸ்கரனின் சிநேகம், தீபப்பிரகானின் திருப்தி - இவையெல்லாம்தான் தனக்குத் தங்க மெடல்கள் போலப் பரவசப்பட்டான். ஆனால் அவனது சிறுகதைத் தொகுதிக்கு தமிழக அரசின் முதற்பரிசு கிடைத்ததும் அவனது இயல்பான தன்னடக்கத்தின் விளைவாக ஆச்சரியம் அடைந்தான். அசலான இலக்கியத்துக்கு அரசு பரிசு தந்தது எனக்கும் வியப்புத்தான். ஆனால் ராஜூவின் வியப்பு எனக்கு வியப்பில்லை.”

“ராஜூவின் எழுத்துலக வாழ்க்கையில் முக்கிய மைல் கல் - 1976ம் ஆண்டு கணையாழி இதழ் ஒன்றில் தனது ஆதர்ச சிறுகதைத் தொகுதி என்று சுஜாதா ஒன்றை விவரித்து அதில் சுப்ரமண்ய ராஜூவின் பெயரைச் சேர்த்திருந்ததுதான். புதுமைப் பித்தனுக்கு அத்தொகுதியில் இடமில்லை என்று கூறியிருந்த சுஜாதா, ராஜூவின் பெயரை அதில் சேர்த்திருந்தார்.”

“பின்பற்றியது போலவே ராஜூ உடைத்தெறிந்த நியதிகளும் ஏராளம். ‘வித்தியாசமானதெல்லாம் விசேசமானதல்ல’ என்பது ராஜூ, அடிக்கடி குறிப்பிட்ட இன்னொரு நியதி. ஆனால் இந்த நியதியை உடைத்தெறிந்த முதல் ஆளும் அவனே. சுப்ரமண்ய ராஜூ எல்லா விதத்திலும் வித்தியாசமானவன். அதனாலேயே விசேசமானவன்.”
சுப்ரமண்ய ராஜூ கதைகள் நூலின் பின்னட்டைக் குறிப்பைப் பார்க்கலாம்.

“சுப்ரமண்ய ராஜூ வாழ்ந்த காலம் (6.6.48 - 10.12.1987) எழுதியவை இரண்டுமே கொஞ்சம்தான். ஆனால் ஒரு பெரும் தலைமுறையைப் பாதித்த எழுத்தாளர் அவர்.

அவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முதல் இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் தலைமுறை வரை அவரைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் செய்கிறார்கள்.

‘காலத்தைக் கடந்தும் படிக்கக் கூடிய மாதிரியாக இருக்கக் கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துத்தான் தேறியிருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜூவின் கதை ஒன்று’ என்று சுஜாதா சொன்னதையும் ‘ராஜூவுக்கு முன்மாதிரிகள் யாருமில்லை’ என்று அசோக மித்திரன் சொன்னதையும் எண்ணிப் பார்க்கலாம்.

பாண்டிச்சேரியில் பிறந்தவரான சுப்ரமண்ய ராஜூ (இயற்பெயர் - விஸ்வநாதன்) சென்னை கிளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றியவர். மனைவியும் இரு பெண் குழந்தைகளும் அவருக்கு உண்டு.”

அதே புத்தகக் கண்காட்சியில் நவீன விருட்சம் சிற்றிதழ் தொகுப்புகள் (பழையவை) இரண்டையும் வாங்கிக் கொண்டேன். கடந்த தமிழகப் பயணங்களில் புத்தகக் கடைகளுக்குச் சென்றால் இலக்கியச் சிற்றிதழ்களைக் கொண்டு வருவது எனது வழக்கம். அவ்வாறு எனக்கு அறிமுகமானதுதான் நவீன விருட்சம் சிற்றிதழ். நவீன விருட்சம் வாங்கிய புத்தகக் கடையில்தான் அதன் ஆசிரியரான அழகிய சிங்கரைச் சந்தித்தேன். (கெஷியராக இருந்தவர் பில்லை எழுதிவிட்டு அழகு என்று கையெழுத்திட்டதும் நீங்கள்தான் அழகிய சிங்கரா? என்று நான் கேட்டதும் அவர் ஆம் என்றதும் தனிக்கதை.)

இவ்வாறு கொண்டு வந்த பைன்ட் செய்யப்பட்ட சஞ்சிகைத் தொகுதியில் ஒன்றை வாசி;க்கத் தவறியிருந்தேன். அண்மையில்தான் படிக்க ஆரம்பித்தேன். சஞ்சிகையின் 64வது இதழில் அசோகமித்திரன் எழுதியிருந்த பத்தி எனது கவனத்தைத் தொட்டது. அந்தப் பத்தி சுப்ரமண்ய ராஜூவைப் பற்றி எழுதப்பட்டிருந்ததும் ராஜூவின் இறப்புக்குக் காரணமான விபத்து - விபத்துப் பற்றிய தனது பார்வை என்று மிக அழகாகவும் நயத்துடனும் எழுதப்பட்டிருந்ததுமே அதற்கான காரணம்.
-------------------------------------------------------------------------------------------------------------

இதோ அசோக மித்திரன் பத்தி:-

முதல் முறை சோகம். அதுவே இரண்டாம் முறை நிகழ்ந்தால் கேலிக் கூத்து என்று மேலையப் பழமொழி உண்டு.

ஆனால் வாழ்க்கையில் பல நகழ்ச்சிகளுக்கு இரண்டாம் வாய்ப்புக் கிடையாது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டது பல அப்புறம் பார்த்துக் கொள்ள முடியாமல் போயிருக்கிறது.

ஒரு வாரம் அல்லது பத்த நாட்களுக்கு ஒரு முறை சுப்ரமண்ய ராஜூ என்ற நண்பரை நான் அவருடைய அலுவலகத்தில் சந்திப்பேன். பொதுவாக அது பிற்பலில்தான். அவருடைய அலுவலகம் சென்னை கதீட்ரல் சாலையில் சோழா ஓட்டல் வரிசையில் இருந்தது. அத்தெருவின் மேற்குக் கோடியில் எதிர் வரிசையில் அமெரிக்க நூலகம். அந்த நாளில் அமெரிக்க நூலகத்துக்கு உள்ளேயே சென்று சைக்கிளை வைக்கலாம்.

உங்கள் உடைமைகளைச் சோதனை போடமாட்டார்கள். அமெரிக்க நூல்களையும் அமெரிக்க வெளியீடுகளையும் கண்ணியமாகப் படித்து விட்டு வரலாம். (இப்போது அந்த நூலகம் ஒரு சிறைச்சாலை போலக் காவல் போடப்பட்டிருப்பது உயர்வு நவிற்சி) கையில் ஒரு குடை எடுத்துச் சென்றால் கூட அதை ஒரு மைல் தள்ளி ஓரிடத்தில் வைத்த விட்டுச் சித்தார்த்தன் துறவு பூணுவது போல உள்ளே நுழைய வேண்டும்.

நான் பிற்பகல் ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு நூலகம் சென்று நான்கு மணியளவில் சுப்ரமண்ய ராஜூவைப் பார்க்கப் போவேன். சிறிது காலமாகவே நான் அவ்வளவு நிம்மதியாக இல்லை என்று கூற வேண்டும்.காரணம் அவர் அலுவலகத்துக்கு முன்னால், என்னால் சைக்கிளுடன் சாலையைக் கடந்து அவரைப் பார்க்கப் போவது நாளுக்கு நாள் திகிலெழுப்புவதாக இருந்தது. சாரிசாரியாக வேகமாக கார்களும் மோட்டார் சைக்கிள்களும் இரு திசைகளிலும் பாய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு மின்சார சிக்னல்கள் பெருத்தப்படவில்லை. ஆதலால் சாலையைக் கடப்பது அந்த நபரின் சாமார்த்தியமும் சாகசத்தையும் பொறுத்திருந்தது. நான் குறுக்கே ஒருவர் நடந்து வந்தால் கூட அவருக்கு வழி விட்டுப் பிறகுதான் நடப்பேன். உலகத்தில் உள்ள எல்லோருக்கும் அவசரம். எனக்கு மட்டும் கிடையாது.

அந்தக் குறிப்பிட்ட தினம் சென்னையில் எல்லா வண்டிகளும் கதீட்ரல் சாலையில் போகிறது போன்ற உணர்வு. என் சாலையைக் கடக்கும் சமயோசித ஆற்றல் மீது நம்பிக்கை மிகவும் தளர்ந்து இருந்தது. இன்னொரு நான் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் சாலையைக் கடக்காமல் இடது புறமாகவே சென்று வீட்டுக்குத் திரும்பி விடடேன்.

அடுத்த நாள் அதிகாலையில் தொலைபேசி மணியடிக்கிறது. நான் அறியாத குரல் எனக்குத் தகவல் தருகிறது. சுப்ரமண்ய ராஜூ முந்தைய இரவு சாலை விபத்தில் இறந்து வி;ட்டார்.

----------------------------------------------------------------------------------------------------------

சுப்ரமண்ய ராஜூ சென்னை நந்தனம் சிக்னல் அருகே நடந்த ஒரு மோசமான வாகன விபத்தில் இறந்த போது அவருக்கு வயது 39.

-------------------------------------------------------------------------------------------------------------

இலக்கிய ஆர்வமுள்ள இளம் படைப்பாளிகளுக்கு நான் சுப்ரமண்ய ராஜூவைப் படிக்கச் சிபார்சு செய்கிறேன்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

‘வித்தியாசமானதெல்லாம் விசேசமானதல்ல’

நியதிகளின் தொகுப்பு அருமை..

Pasumaiveli said...

நீண்ட நாட்களுக்கு பின் வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

விரும்பிப் படித்தேன் ! பகிர்வுக்கு நன்றி Sir !

Lareena said...

மிகச் சிறந்த/ பயன் நிறைந்த ஒரு பதிவு. நன்றி.