Saturday, May 5, 2012

புதிய பாலங்கள் - கிண்ணியா ஒன்றுகூடல்


ஏப்ரல் விடுமுறையில் திருமலை மாட்டத்தில் இரண்டு தினங்கள் கழி(ளி)ப்பது என்று எனது குடும்பம் ஏகமனதாக முடிவெடுத்தது. இந்தப் பயணத்தில் முக்கியமான அம்சம் கிண்ணியாவுக்குச் செல்வது.

கிண்ணியா எனக்கும் பாரம்பரிய பூமி. எனது தாய்வழிப் பாட்டனாரான அப்துஸ்ஸமது ஆலிம் புலவர் கிண்ணியா நாச்சிக்குடாவில் பிறந்தவர். எனது இரத்த உறவுகள் வாழும் நிலம் அது.

நாளை அதிகாலை பயணம் என்றிருந்த நிலையில் பிற்பல் இந்தோனேசிய நில அதிர்வும் சுனாமி எச்சரிக்கையும் என்ற உயிரை அச்சுறுத்தும் செய்தி ஒலி, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நில அதிர்வு இலங்கையையும் ஒரு முறை அசைத்துவிட்டுப் போயிருந்தது. ‘சுனாமி’ நிச்சயம் என்ற முடிவில் கரையோரத்தவர் தங்களிடங்களிலிருந்து அகன்றும் அகற்றப்பட்டும் கொண்டிருந்தனர்.

ஆசியப் பிராந்தியமே கலங்கிப் போயிருக்க நான் வெளிநாட்டுச் செய்தி அலைவரிசைகளில் மூழ்கியிருந்தேன். ‘சுனாமி’ தாக்கவில்லையென்றால் திட்டமிட்ட பயணத்தைத் தொடர்வது என்று நான் உறுதியாக இருந்தேன். பி.ப. 5.00 மணிக்கு இந்தியா ‘சுனாமி’ எச்சரிகையை மீளப் பெற்றுக் கொண்டது. எனக்குத் திருப்தி! ஆனால் இலங்கைத் தொலைக் காட்சிகளின் அறிவிப்பாளர்கள் முன்னிரவு வரையும் ‘கோர்ட் சூட்’ சகிதம் நாற்காலி போட்டு அமர்ந்து மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு இலங்கை ஊடகங்களுக்கு “பிறேக்கிங் நியூஸ்” கிடையாது. இப்படியொரு வாய்ப்புக் கிடைத்திருக்கும் போது அதை விடலாமா... என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

‘யாத்ரா’ கவிதை இதழின் முதலாவது அறிமுக ஒன்று கூடலைக் கிண்ணியாவில் நடத்துவதற்கு நானும் ‘யாத்ரா’ நிர்வாக ஆசிரியர் நாச்சியாதீவு பர்வீனும் திட்டமிட்டிருந்தோம். ஆயினும் அத்திட்டம் நிறைவேறியிருக்கவில்லை. எனது குடும்பப் பயணம் பற்றித் தெரிந்து கொண்ட பர்வீன் ‘யாத்ரா’ ஒன்றுகூடலையும் இத்துடன் நடத்தி விடுவோம், நானும் கிண்ணியா வருகிறேன் என்று எனக்கு உற்சாகம் தந்தார்.

12. 04. 2012 அன்று பி.ப. 1.00 மணிக்குக் கிண்ணியாவை அடைந்தோம். சகோதரர் பத்தீஸ் அவர்களின் சகோதரி பிர்தௌஸியா வீட்டில் பகல் விருந்து. சகோதரர் பத்தீஸ் கிண்ணியாவிலிருந்து நாம் திரும்பும் வரை உறுதுணையாக எம் கூடவே இருந்ததை மறக்க முடியவில்லை. நாம் அங்கு வந்தது அறிந்ததும் கவிஞர் ஏ.எம்.எம். அலி அவர்களும் கவிஞர் நஸ்புல்லாஹ்வும் நேரே வந்து சந்தித்ததுடன் மாலை கிண்ணியா கடற்கரையில் ‘யாத்ரா’ ஒன்று கூடலை ஏற்பாடு செய்யத் தொடங்கினார்கள்.


அஸர் தொழுகைக்குப் பின்னர் எமது ஒன்றுகூடல் ஆரம்பமாயிற்று. கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். குறுகிய அழைப்பின் பேரில் நேயம் நியாஸ், எம்.எம். அலி அக்பர், எம்.ஈ.எச். தௌபீக், ஏ.நஸ் புள்ளா, நாஸிக் மஜீத், ஜே.பிரோஸ்கான், ஐ.இர்ஷாத், எச்.எம். ஹலால்தீன், பி.ரி. அஸீஸ், ஏ.கே. முஜாரத், எம்.ரி. சஜாத், ஹஸன்ஜி, சத்தார், நிஸார் முகமட், எப். பதீஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கடற்கரையில் சதுர வடிவில் பாய்களை விரித்து அமர்ந்துகொண்டோம்.

கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்கள் தலைமையுரையை ஓர் அறிமுகவுரையாக நிகழ்த்தினார். தொடர்ந்து நானும் நாச்சியாதீவு பர்வீனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். வருகை தந்திருந்த கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் தத்தமது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். இவ்வொன்றுகூடலில், ‘தமிழ் இலக்கியம் இன்று எத்திசை நோக்கி நகர்கிறது, இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அல்லது முஸ்லிம் இலக்கியம் எத்திசை நோக்கி நகர்கிறது?’ என்று நேயம் நியாஸ் அவர்கள் எழுப்பிய கேள்வி முக்கியமானது. இன்றைய தமிழ் இலக்கியப் போக்கில் ஒரு தேக்க நிலை அதாவது எல்லாமே திசையறியாமல் நிலைகொண்டிருப்பது போன்ற தோற்றம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். ஒரு சிறந்த விமர்சகராகத் தமது கருத்துக்களை முன் வைத்தமை  - எனது கருத்தில் ஒன்றுகூடலுக்கு வலுவூட்டியது என்று சொல்வேன்.

சகோதரர் நாச்சியதீவு பர்வீன், “யாத்ரா” வின் பயணத்தில் பங்கு கொள்ளக் கிண்ணியா இலக்கிய நெஞ்சங்களுக்கு அழைப்பு விடுத்தார். “யாத்ரா” இன்று பலரதும் பங்களிப்புடன் வெளிவருவதையும் எடுத்துக் கூறியதுடன் கிண்ணியாவில் அதற்கான ஒரு வாசகர் வட்டத்தை அமைக்கும் யோசனையையும் தெரிவித்தார்.

கிண்ணியாவின் இலக்கியப் பாரம்பரியத்தையும் அதன் வளத்தையும் அது குறித்த செயற்பாட்டின் இடைவெளிகளையும் பற்றியதாக எனது கருத்து அமைந்திருந்தது. கிண்ணியாவில் உள்ள இலக்கியவாதிகள், ஆர்வலர்களை ஒன்றிணைத்து ஒரு பொதுவான, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று இலக்கியச் செயற்பாடுகளுக்காக இயங்கும் ஓர் இலக்கிய அமைப்பை ஏற்படுத்துவது பற்றிச் சிந்திக்குமாறு கோரினேன். கிண்ணியா நிலப்பரப்பைப் போல இலக்கியவாதிகளும் தீவுகளாக இராமல் சேர்ந்து ஒன்றுபட்டு இயங்கும் போது இலக்கியப் பாரம்பரியமும் இலக்கிய வளமும் மிக்க அந்தப் பூமியில் மேலும் பல இளைய திறமைசாலிகள் வெளிவருவார்கள் என்பது எனது எண்ணமாக இருக்கிறது. அதையே ஒன்று கூடலில் நான் அதிகம் அழுத்திச் சொன்னேன்.

நாமும் கிண்ணியா இலக்கிய நண்பர்களும் இணைந்திருந்த அந்தப் பொழுது தோற்றுவித்த ஆர்வமானது மஃரிபுத் தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்தது என்பது மகிழ்ச்சியாக இருந்தது. சகோதரர் எம்.ரி. சஜாத் வீட்டில் மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தனை சகோதரர்களும் அங்கு பிரசன்னமாகி மீண்டும் எமது கருத்துப் பரிமாறல் இஷாத் தொழுகை வரை தொடர்ந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. “யாத்ரா” வுக்கான பிரதிநிதியாகச் செயற்பட சகோதரர் எம்.ரி. சஜாத் பொறுப்பேற்றுக் கொண்டார்.


கிண்ணியாப் படைப்பாளிகளதும் இலக்கிய நெஞ்சங்களதும் ஆர்வம் குறித்து நானும் சகோதரர் நாச்சியாதீவு பர்வீனும் வியப்படைந்தோம். ‘யாத்ரா’ சார்பாக ஒரு சிறிய இலக்கிய விழாவொன்றைக் கிண்ணியாவில் நடத்துவது குறித்துப் பேசினோம். கிண்ணியா இலக்கியவாதிகள் ஒன்றிணைந்து ஓர் அமைப்பாக இயங்க ஆரம்பித்ததும் அவ்வாறான ஒரு நாள் இலக்கிய விழாவைத் திட்டமிடலாம் என்று முடிவு செய்தோம்.

கிண்ணியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான கிண்ணியா ஸபருல்லாஹ் அவர்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று ஒரு கவலை மனதில் இருந்தது. அவர் ‘உம்ரா’ செய்வதற்காக மக்கா சென்றிருந்தார் என்று அறிய வந்தோம்.

நான் குடும்பத்துடன் சென்றிருந்த காரணத்தால் மற்றும் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. பர்வீன் கிண்ணியாவின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான எம்.எம்.ஏ. கஹ்ஹார் அவர்களைச் சந்தித்ததாக எனக்குச் சொன்னார். கஹ்ஹார் அவர்களின் ‘நபிகள் நாயகரின் நான்மணிக்கடிகை’ என்ற நூலை 2002ம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் வெளியிட்டிருந்தோம்.

இரவு விருந்தை சகோதரி பாயிஸா அலி ஏற்பாடு செய்திருந்தார். இன்று அழகிய நவீன கவிதைகளை எழுதி வரும் முஸ்லிம் பெண் படைப்பாளிகளில் முக்கியமானவர் இவர். அவரது சகோதரியின் வீட்டில் விருந்து நடந்தது. நான் குடும்பத்துடன் அங்கேயே தங்கினேன். காலை பாயிஸாவின் சகோதரியின் கணவரான அமீன் ஆசிரியர் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினேன். ஆழ்ந்த அனுபவம் உள்ள மனிதராகத் தெரிந்தார். நீண்ட நாளைக்குப் பிறகு கிழக்கின் பாலப்பம் அமீன் ஆரிசியர் வீட்டில் கிடைத்ததானது அவருடன் பேசிக் கொண்டிருந்த வேளை கிடைத்த அனுபவப் பகிர்வுக்கு ஒப்பானது.

இரவு விருந்தின் போது பாயிஸாவின் சகோதரர் ரியாட்டைக் காண நேர்ந்தது. ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அவரை அன்றுதான் சந்தித்தேன். ரியாட், கிண்ணியா அமீர் அலியின் மிக நெருங்கிய நண்பன். இவரது பெயரைத்தான் அமீர் அலி தனது மூத்த புதல்வனுக்குச் சூட்டியிருக்கிறார் என்றால் நட்பு எப்படியானது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

காலை கிண்ணியாவிலிருந்து எனது உறவினர்களைச் சந்திக்க வெள்ளை மணல் நோக்கி எனது பயணத்தை ஆரம்பித்தேன். பர்வீன் அன்று மதியம் வரை கிண்ணியாவில் தங்கியிருந்தார்.

கிண்ணியாவில் நின்ற பொழுதுகளில் மூன்று கவிதை நூல்கள் கைகளை அடைந்தன. கிண்ணியா நஸபுள்ளாஹ்வின் ‘கனவுகளுக்கும் மரணம் உண்டு’, ஜே. பிரோஸ்கானின் ‘தீ குளிக்கும் ஆண் மரம்’, ஏ. ஜே. முஜாரத் எழுதிய ‘பூக்களால் ஒரு புகைப்படம்’ ஆகிய கவிதைத் தொகுதிகளே அவை.

2010 நவம்பரில் வெளியிடப்பட்டுள்ள நஸ்புல்லாஹ்வின் கவிதைத் தொகுதி கெட்டி அட்டையுடன் கூடிய அழகிய தொகுதி. புத்தகத்தின் பின் அட்டையில் “யாரும் இல்லாத - அரச மரத்தில் காவலுக்கு நின்றன - சில வெளவால்கள்!” என்கிற மிக ஆழமான வரிகள் பதிவாகியிருக்கின்றன. அழகிய அந்த நூலின் வாசிப்பைக் கெடுப்பது ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு எழுத்துதுரு பயன்படுத்தப்பட்டிருப்பதுதான். ‘அனு’ எழுத்துருக்களின் எல்லா எழுத்துக்களையும் பயன்படுத்தியிருப்பது கவிதை வாசிப்புக்கு இடையூறுதான். இதே துயரம் கிண்ணியா அமீர் அலியின் ‘மனையாளும் மறு பதிப்பும்’ கவிதைத் தொகுதிக்கும் நிகழ்ந்து விட்டிருக்கிறது. நஸ்புள்ளாஹ் நல்ல கவிஞராக அடையாளம் பெற்றவர். அடுத்த தொகுதியில் இத்துயர் நிகழாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஏனைய இரு தொகுதிகளும் ஏப்ரல் 2012ல் வெளிவந்தவை. ‘நேற்றுச் செய்த தவறிலிருந்து - எவர் கண்களுக்குள்ளும் மாட்டிக் கொள்ளாமல் - வீடு வந்ததும் மாட்டிக் கொண்டேன் - மனச்சாட்சியிடம்’ என்று எழுதும் ஜே. பிரோஸ்கானும் ‘தீச்சுவாலையும் அழகென்பதால் - மகனின் பிஞ்சு விரல்கள் - தீக்குச்சியை உரச - தீப்பிடித்திருந்தது - என் இளம் மனசு’ என்று எழுதும் ஏ.கே. முஜாரத்தும் கவிதை மனம் வாய்க்கப் பெற்றவர்கள். இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய இளவல்கள். தமது வாசிப்பை மேலும் விரிவாக்கிக் கொள்வார்களாயின் அவர்களில் சிறந்த இரண்டு கவிஞர்களை நம்மால் காண முடியும்.

கிண்ணியாவில் கவிதை இலக்கியமே முனைப்புப் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. மொழியின் உச்சம் கவிதை அல்லவா? அவர்கள் உச்சத்தை நோக்கியே பயணிக்கிறார்கள். எனவேதான் கிண்ணியா இலக்கிய வளம் நிறைந்தது என்று நான் முதலிலேயே குறிப்பிட்டேன்.

கிண்ணியாவுக்குப் புதிய பாலங்கள் இடப்பட்டு அழகூட்டப்பட்டிருப்பதைப் போல இலக்கியத்துக்கும் அழகூட்ட அவர்களால் முடியும். ஆனால் புதிய பாலங்களை அவர்கள் இடுவதன் மூலமே அது சாத்தியமாகும்.

நான் எந்தப் பாலத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்பது அவர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் கவிதை வளம் மிக்க பூமியில் பிறந்தவர்கள்!

----------------------------------------------------------------------
நன்றி - கிண்ணியா நெற்.

இப்பதிவைப் பின்வரும் இணைப்பிலும் நீங்கள் படிக்க முடியும்.
http://www.kinniya.net/index.php?option=com_content&view=article&id=396:2012-05-05-11-11-54&catid=8:2011-11-08-16-33-47&Itemid=9

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

சுவையான ஒரு பதிவை வாசித்த நிறைவு!

நன்றி, பதிவுக்கும் பகிர்வுக்கும்.