Friday, July 20, 2012

ஜூம்ஆவுக்குப் பிறகு.....“அஸ்ஸலாமலைக்கும் சேர்!”

“வஅலைக்குமுஸ்ஸலாம்”

“லெப்பை இன்டைக்கு நல்லா லேட்டாக்கிட்டாரு குத்பாவை!”

“ம்ஹ்ம்... தலைநகரத்துல மட்டுமில்லை... புறநகர்ப் பகுதியிலேயும் இருக்கிற பள்ளிகளுக்குக் காரியாலயங்கள்ல வேல செய்றவங்க ஜூம்ஆ தொழ வர்ராங்க... அவங்க குறிப்பிட்ட நேரத்துக்குள்ள காரியாலயத்துக்குப் போயிடனும்கிற எண்ணமே சில ஆலிம்களுக்கு வரமாட்டேங்குது!”

“இந்த விசயமா பல தடவை பேப்பர்கள்ல எழுதியிருக்காக்க சேர்!”

“ஆனா ஆலிம்களில் பலர் பேப்பர் படிக்கிறதில்லைங்கிறது ஒங்களுக்குத் தெரியாதா?”

“ஏன் சேர் குத்துபாவை இப்பிடி நீட்டி இழுக்கிறாங்க... இன்டைக்கி நீங்க அவதானிச்சிங்களா... ஒரே விசயத்தை மூணு தரம் திருப்பித் திருப்பிச் சொன்னாரு... அதுவும் ஒரே நேரத்துல இல்ல... ஒரு விசயத்தைச் சொல்லிட்டுப் போய் அப்புறம் வேற விசயத்துக்குத் தாவித் திரும்ப அதே விசயத்தை அதே வசனத்துல....ச்சே... கேட்டுக்கிட்டிருக்கவே கஷ்டமாயிருக்கு!”

“மெதுவாப் பேசுங்க... யாராவது ஒரு அவுலியாக் குஞ்சுட காதில விழுந்திச்சின்னா, ‘பாட்டுக் கேக்கிறதுன்னா நீங்க திருப்பித் திருப்பிக் கேப்பீங்க... குத்பான்னாக் கசக்குதான்னு’ கேட்டுருவான்!”

“சரியாச் சொன்னீங்க சேர்..!”

“அதுசரி குத்பா லேட்டாகிட்டுன்னு சொல்லுற நீங்க... என்னோட கதச்சிக்கிட்டு இன்னும் தாமதமாகிறீங்களே...?”

“இன்டைக்குப் பெரியவன் வரல்ல சேர். அவன் பெரும்பான்மைக்காரன். நம்ம விசயத்துலதான் அடிக்கடி நோண்டிக்கிட்டிருப்பான். சில பெரும்பான்மை இனத்துப் பெரிய அதிகாரிகளுக்குக் காரியாலயக் கடமையில் பிழையென்டாலும் பொறுத்துக்குவான். நாம மார்க்கக் கடமைகளைச் செய்யிறது அவங்களுக்கு மிச்சம் உறுத்துது சேர்!”

“இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு ஹிக்மத்தாத்தான் நடந்துக்கணும்!”

“சில ஆலிம்களுக்கு ‘மைக்’கைப் பிடிச்சா ஒன்டுமே விளங்குதுல்லயே சேர்... ஏன் அப்பிடி?”“ஒரு காலத்துல அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த நோய் இருந்திச்சு... இப்போ அவங்கதான் கொஞ்சமாப் பேசுறாங்க... பள்ளி நிறையச் சனங்களைக் கண்டா சில ஆலிம்களுக்குப் பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்குது... சில இலக்கியவாதிகளுக்கும் இந்த நோய் இருக்கு. அதனாலதான் இலக்கியக் கூட்டங்களுக்கு வாறத்துக்குப் பலர் பின்னடிக்கிறாங்க... ஜூம்ஆவும் கடமையில்லையென்டா ஒரு பயல் பள்ளிக்கு வரமாட்டான். அறுவையை எவ்வளவு நேரந்தான் சகிச்சிக்கிட்டிருப்பான்?”

“உங்களுக்குத் தெரியுமா... எங்க ஊர்ல 27 பள்ளிவாசல்கள் இருக்கு. இருபத்தேழு பள்ளியிலயும் இப்போ ஜூம்ஆத் தொழுகைக்குமாதிரி மைக் போட்டு, ஸ்பீக்கர்ல தொழுவிக்கிறாங்க...”

“ஓஹோ... அப்போ உங்க ஊர்ல இஸ்லாம் ஓஹோன்னு வளந்திட்டுன்னு சொல்லுங்க..!”

“சந்தோசமாகவும் இருக்கு... ஆனாக் கொஞ்சம் உறுத்தலாகவும் இருக்கு...!”

“அதுல என்ன உறுத்தல்?”

“பெரும்பான்மைக்காரன் எடுத்துக்கெல்லாம் இப்போ முஸ்லிம்களிலேயே கண்ணாயிருக்கான். தொழுகை  நேரம்  ஊருக்குள்ள வந்தான்னா இது சவூதியா இலங்கையான்னு கேட்பான். இப்பவே சிங்களப் பேப்பர்கள்ல சாடமாடையா எழுதத் தொடங்கிட்டானுகள். எங்கே கொண்டு போய் விடுமோன்னும் ஒரு பயம் உதைக்குது சேர்!”

“நம்ம மக்களுக்கு ஹிக்மத்தா நடந்துக்கத் தெரியாது! இதைச் சொல்லப்போனா உங்கள ஊரால விலக்கி வச்சாலும் வச்சிருவாங்க... “

“அது இன்னொரு பயம் சேர். நானும் என்ட கூட்டாளிமாருக்கிட்ட இதைச் சொன்னேன். அவங்கள்ல சிலரும் எனக்கு எதிர்ப்புக் காட்டினாங்க...”

“என்ன சொல்லுறாங்க...?”

“இது நம்ம ஊரு... நம்ம பள்ளி... நம்ம மார்க்கம்... என்டு பேசுறானுங்க.... இதுல என்ன விசயம் என்டா ஒவ்வொரு பயலும் ஒவ்வொரு இயக்கத்துல வேற இருக்கானுங்க... அதனால நான் யாருக்கிட்டேயும் இதப்பத்திப் பிறகு வாய் திறக்கல்ல...!”

“பத்திரிகையெல்லாம் வெளியிடுவாங்களே...”

“ஓம் சேர்... அப்பப்ப ஒவ்வொரு அமைப்புட பத்திரிகைகளைக் கொண்டு வந்து ஜூம்ஆவுலயும் விற்பாங்க... வீடுவீடாப் போயும் விற்பாங்க... பலவந்தப்படுத்தியும் பத்திரிகை வாங்கச் சொன்ன சம்பவங்களெல்லாம் இருக்கு... இதுகளைப் பேசப்போனா இன்டைக்கு முடியாது சேர்.”

“உங்க ஊர் ஏரியாவுல எத்தினை ஜூம்ஆ பள்ளிகள் இருக்கு?”

“ஆறு பள்ளிகள் சேர். சிலர் எல்லாப் பள்ளிகளுக்கும் போவாங்க... சிலர் ஒரே பள்ளிக்குத்தான் போவாங்க... மற்றப் பள்ளிக்குள்ள மறந்தும் கால் வைக்கமாட்டாங்க... நான் என்ன சொல்லுறன் எண்டு விளங்குதா சேர்?”

“விளங்குது.... எல்லாப் பள்ளிவாசல்கள்லேயும் ஜூம்ஆவுக்குப் பிறகு பிச்சை வாங்குற ஒரு கூட்டம் நிற்குமே. அவதானிச்சிங்களா?”

“அதுக்கு என்ன சேர் குறைச்சல். இது எங்க ஊர்ல மட்டுமில்ல... இந்தா இங்கே பாருங்க... இங்கேயும்தானே நிற்குது...”

“சரியாச் சரி... இதுல பாருங்க... நோன்பு ஆரம்பிச்சதும் இது டபிள், ட்ரிபள் மடங்காகும். கைவிடப்பட்ட பெண்கள், ஏழைக் குமருகள், வயசானவங்கதான் அதிகம். இதுல தொண்ணூறு வீதமானவங்க உண்மைக்குண்மையாகவே கஷ்டத்தில் வாழுறவங்க... இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டியது யார் பொறுப்பு?”

“இதையெல்லாம் சிக்கலான விசயம். கொடுக்கிறதோட சம்பந்தப்பட்ட விசயம். லேசாப் போஸ் கொடுத்துப் போட்டோ போட ஏலாத விசயம். வியர்க்காம, வேகாம, நோகாமத் தீர்க்க இயலாத விசயம். அதனால யாரும் கவனிக்கிறதில்லை!”

“இது நம்ம சமூகம். நம்ம உறுப்பில் ஓர் அங்கம். என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஆராய்ந்து தீர்க்காமல் அதைப் பற்றிப் பேசாமல் பேப்பர் அடிப்பதும், ஏ.சி. ரூமில் இஸ்லாம் பேசுறதும் ஆளுக்கொரு பள்ளிவாசல் கட்டுறதும் சில ஆலிம்கள் மைக்கைப் பிடிச்சா விடாமல் பேசுறமாதிரித்தான்... புரியுதா?”

“கொஞ்சம் விளங்குது...”

“ஆறுதலா யோசிச்சுப் பாருங்க... விளங்கும். நான் வாறன்!”


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Lareena said...

அது சரி!

உறைக்கிற மாதிரித்தான் Sir எழுதி இருக்கிறீங்க.

ஆனால், மரத்துப் போய்விட்ட மனங்களுக்கு உப்பாவது உறைப்பாவது! :(

ஃபஹீமாஜஹான் said...

"வெள்ளிநாள் என்றாலே, மானம்
வீதிக்கு வீதியாய் நீளும்!
பிள்ளை, தாய், பெரியவர் என்று
பிச்சைக்கே வாழ்கிறார்! ஜூம்ஆ
பள்ளியோ பக்கீர்மார் பண்ணை!
பக்தியோ பிர்தௌஸின் பக்கம்!
கொள்ளை நோய் தீராத மட்டில்.........."

அவர்களைக் காணும் போது நோன்பு காலங்களிலும் எனக்கு இந்த வரிகளே நினைவுக்கு வரும்.

"இந்தப் பிரச்சினையைப் பற்றி ஆராய்ந்து தீர்க்காமல் அதைப் பற்றிப் பேசாமல் பேப்பர் அடிப்பதும், ஏ.சி. ரூமில் இஸ்லாம் பேசுறதும் ஆளுக்கொரு பள்ளிவாசல் கட்டுறதும் சில ஆலிம்கள் மைக்கைப் பிடிச்சா விடாமல் பேசுறமாதிரித்தான்"

எப்போது இப்பிரச்சனை தீரும்? வழி சொல்லப் போவது யார்?