Tuesday, January 22, 2013

கிட்னி வாங்கலையோ... கிட்னி...!



ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் அந்த நாடு சல்லடையாகிவிட்டது. ஈராக்கின் புகழ்பூத்த எழுத்தாளர் மஹ்மூத் சயீத் வழங்கியிருந்த ஒரு பேட்டியில் ஈராக் மக்கள் தீராத வறுமையில் வாடுவதாகவும் உணவுக்காகத் தமது கிட்னியொன்றை விற்பதாகவும் ஓர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருந்தார்.

மஹ்மூத் சயீதின் எழுத்துக்கள் சதாம் ஹூஸைன் அரசினால் தடைவிதிக்கப்பட்டவை. அவரும் அடிக்கடி சிறைவாசம் அனுபவித்தவர். சதாம் காலத்திலேயே நாட்டை விட்டு வெளியேறி வேறு ஒரு தேசத்தில் வாழ்ந்து வருகிறார்.

“கிட்னி” விற்று மக்கள் பசி போக்கும் நிலையை “சபாஹ் அல் முர் - கசந்த காலை”என்ற தனது கதையில் அவர் சித்தரித்திருந்தார். ஏற்கனவே “விசர்நாய்க் கடி”, “புகையிரதம்” ஆகிய அவரது இரண்டு கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அக்கதைகள் இரண்டும் “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்” என்ற நான் மொழிபெயர்த்த அரபுக் கதைகளின் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

அண்மையில் அவரது “கசந்த காலை” என்ற கதையையும் மொழிபெயர்த்தேன். இக்கதை “விடிவெள்ளி” பத்திரிகையில் அண்மையில் வெளிவந்தது. அக்கதையை இத்துடன் இணைத்துள்ளேன். கதை முடிந்த பிறகு உள்ள குறிப்பையும் சேர்த்தே படியுங்கள்.
----------------------------------------


கசந்த காலை
மஹ்மூத் சயீத் (ஈராக்)


கொக்கரக் கோ...கோ.... கொக்கரக் கோ... கோ...

சேவலின் கூவலுடன் அவள் கண்விழித்தாள். அவளிடமிருந்து ஒரு கேலிச் சிரிப்பு வெளிப்பட்டது. தனது கண்களை ஜன்னல் பக்கம் திருப்பிச் சேவலைப் போல் கூவிப்பார்த்hள். சேவலிடமிருந்து பதில் வரவில்லை. ஜன்னலுக்கு அருகே கிடந்த மெத்தையில் அவள் படுத்திருந்தான். ஜன்னலுக்கு வெளியே நின்ற மாதுளை மரத்தின் கிளையில் பூத்திருந்த மலர்கள் காற்றில் அசைந்து ஜன்னல் கம்பிகளில் உரசி விளையாடிக் கொண்டிருந்தன. சேவல் மீண்டும் கூவியது. மீண்டும் அவளிடமிருந்து அந்தச் சிரிப்பு வெளிப்பட்டது. சேவல் போல் மீண்டும் அவள் கூவிப் பார்த்தாள். ஆனால் சேவலிடமிருந்து பதில்தான் கிடைக்கவில்லை.

ஒரு சின்னக் குருவி ஜன்னலில் வந்தமர்ந்து குரல் கொடுத்தது. அது தனது வால் பகுதி மேலும் கீழும் அசைத்துக் கொண்டேயிருந்தது. அவள் மீண்டும் சிரித்துக் கொண்டு அக்குருவியை அழைத்தாள். குருவியை நோக்கி அவளது கரங்கள் நீண்டன. அதை அக்குருவி கவனிக்கவில்லை. சிரிப்புச் சத்தம் கேட்டுக் குருவி தனது கீச்சை நிறுத்திக் கொண்டது. அது ஒரு பக்கமாகத் திரும்பிப் பார்த்தது. பின் சுற்றிச் சுற்றித் தனது அழகான கண்களால் சத்தம் வரும் இடத்தைத் தேடியது. ஜன்னலின் கிராதி குருவியின் பார்வையைத் தடுத்ததால் ஜன்னலூடாகப் பார்க்க அதற்கு முடியவில்லை. குருவி மீண்டும் உற்சாகமாகக் குரல் கொடுக்க ஆரம்பித்தது. அவள் மீண்டும் குருவியை அழைத்தாள். குருவியிருந்த திசை நோக்கித் தனது கரத்தை நீட்டினாள். ஆனால் அக்குருவி தனது இணையை அழைத்து இனிமையாகக்  குரல் கொடுத்தபடி அதை நோக்கிப் பறந்து சென்றது.

அவளது தந்தையார் குறட்டையை நிறுத்தியிருந்தார். மிக நீண்ட மூச்சை உள்வாங்கி மெதுவாக வெளிப்படுத்தினார். பலகையொன்றில் லேசாகத் தட்டுவது போன்ற அவளது தாயாரின் நித்திரைச் சுவாசத்தை விடவும் உறங்கிக் கொண்டிருக்கும் அவளது சகோதரனின் சாதாரண சுவாசத்தையும் விடவும் தந்தையார் உள்வாங்கி விடும் மூச்சு வித்தியாசமாக இருப்பதை அவதானித்தாள். ஆனால் அவளது பார்வை ஜன்னலோடு ஒட்டியிருந்தது. குருவியும் அதன் இணையும் மரத்திலிருந்து இன்னும் ஜன்னலுக்குத் திரும்பவில்லை. குருவிகளின் சத்தத்தை அவள் மிகவும் விரும்பி ரசித்தாள். அவள் அழைத்த போது அவை வராத போதும் ஜன்னலருகே அவை வரும்வரை காத்திருந்தாள்.

அவளுடைய தந்தையை நோக்கி ஒலித்த தாயாரின் குரல் கேட்டு அவள் தலையைத் திருப்பினாள்.

'நீங்கள் தூங்குங்கள்.. ஏன் இவ்வளவு நேரத்தோடு எழும்புகிறீர்கள்? ..............

'நான் தயாராக வேணும்.'

'நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு!'

'தூக்கம் கலைந்தால் எனக்கு மீண்டும் தூக்கம் வராது!'

அவர் எழுவதற்கு முயன்ற போது அவள் அவரது கையில் தொங்கினாள். அவளிடமிருந்து இனிமையான ஒரு செல்லச் சிரிப்பு வெளியானது. அந்தச் சிரிப்பின் ஈர்ப்பில் அவரது கவனம் மகளின் மீது குவிந்தது. அளவில்லாத ஆனந்தம் கொப்பளிக்கும் சிரிப்பு... அவளது சின்னஞ்சிறிய கரங்களைத் தட்டி வெளிப்பட்ட குதூகலம்... அந்தக் கரங்களைத் தந்தையை நோக்கி நீட்டித் தழுவும் பாவனை... முத்துக்களைப் போன்ற அவளது சின்னப் பற்கள் இரண்டு... பெரிய கருமையான வெளிச்சக் கண்கள்... தந்தையின் சுவாசத்தை அவர் அருகே உணர்ந்த அவள் அக்காற்றை அவளது சின்னக் கன்னங்கள் உப்பிச் சிவப்புப் பந்து போலாகும் வரை தனது வாய்க்குள் உள்வாங்கி எச்சில் தெறிக்க அவரது முகத்தில் ஊதி விளையாடினாள். அச்செயலில் அவளுக்குக் கிடைத்த சிறிய வெற்றி மீண்டும் ஒரு செல்லச் சிரிப்பை வரவழைத்தது.

'அடி போக்கிரிப் பெண்ணே... நீ என்ன செய்திருக்கிறாய் பார்...'

சொல்லியபடி அவர் சிரித்தார்.



தந்தையைப் பார்த்தவாறே குனிந்து அவரது கால்களை அவள் பற்றினாள். காலடியில் முகம்பதித்து அவரது பெருவிரலொன்றை வாய்க்குள் செலுத்திச் சூப்பினாள். ஒரு கணம் தாமதித்து அவரைப் பெருமையுடன் பார்த்து மழலை பேசினாள்:-

'பிப்... பி... பிப்...'

மீண்டும் அவரது பெருவிரல் அவளது வாய்க்குள் சென்றது.

மனைவி அவரைச் சற்றுப் பின்னாள் தள்ளிவிட்டபடி முணுமுணுத்தாள்:-

'காலங்காத்தாலேயே சித்திரவதை பண்ண ஆரம்பிச்சிட்டியா... கொஞ்ச நேரம் மறந்திருக்க ஏலாதா? நாங்க படுக்கிற நேரமாவது.... விலகுங்க... இவளைக் கழுவி எடுக்கணும்.'

'முகத்தில் சினம் காட்டாதே... அவளுக்கு எல்லாம் விளங்கும்... அவளுக்குக் கஷ்டம் இல்லாமப் பார்த்துக்கோ...!'

தாயார் தன்னை நோக்கிக் குனிவதையும் தாயாரின் கூந்தல் கலைந்து மொத்தமாகத் தன் முகத்தை மறைப்பதையும் அவள் கண்டாள். முடிக் கற்றையைப் பிடித்து இழுத்துத் தனது வாயருகே கொண்டு சென்றாள். பிள்ளையின் கிழிந்த கீழாடையைக் களைந்ததும் தாயார் சிரித்தாள். பின் கணவனை நோக்கிச் சொன்னாள்:-

'இங்கப்பாருங்க.. இவளுடைய கீழாடை ஈரமாகவேயில்லை... மூணு நாளா நான் பார்க்கிறேன்.. ஈரமாகுறதேயில்லை.. என்னால நம்ப முடியல்ல..'

'பிள்ளைக்கு உன்ட கண்ணே பட்டுடும்... கவனம்.'

'அவளுக்கு இப்பதான் ஏழு மாதம் ஆகுது...'

பிள்ளை எல்லையைத் தாண்ட முடியாதபடி வைத்துவிட்டுச் சமையலறைக்குச் சென்றாள் தாய். குழந்தை காலை எட்டி  நிலத்தில் இறங்க முயற்சித்தது. குழந்தைக்கு ஊட்டுவதற்குப் பாலைத் தயார் செய்துகொண்டு வந்தவள் சொன்னாள்:-

'கடைசிக் கரண்டி மாவினால் ஊற்றிய பால் இது...!'

- அவளது விழிகளில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

'அவளுடன் பேசும் போது சிரித்துக் கொண்டே பேசு என்று உனக்குச் சொல்லியிருக்கிறேன். அவளுக்கு எல்லாம் விளங்கும்..'

தாய் எந்த வார்த்தையும் பேசவில்லை.

'பிள்ளைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் என்பதை நீ எப்போது  உணரப் போகிறாய்?'

'எதை உணர்வது.. இப்பதான் அவளுக்கு ஏழுமாதமாகிறது. இந்த வயதில்; எல்லாவற்றையும் புரிந்து கொள்வாளா? மடத்தனமாக இல்லையா இது?'

குழந்தையின் கண்களில் ஒளிர்ந்த பிரகாசம் போய்விட்டது. தந்தையார் குழந்தையை நெருங்கி ஒரு புன்னகையை அவள் மீது சிந்தினார். குழந்தையின் முகத்தில் ஊதினார். சின்னத் திடுக்கத்துக்குப் பின் குழந்தை சிரித்தது. அவரும் சிரித்தார். தாயாரிடமிருந்த பால் போத்தலை எடுத்த குழந்தை அதை தனது விரல்களால் இறுகப்பற்றியது. அப்போத்தலின் கீழ் படாதபடி தந்தையார் கையை வைத்துக் கொண்டார். குழந்தை ஒரு மிடர் அருந்திய பின் நிமிர்ந்து பார்த்தது. குழந்தையின் மேலுதட்டில் பால் படிந்திருந்தது. 'நான் என்ன செய்கிறேன் பார்' என்பது போல் அவரைப் பார்த்தது குழந்தை.

அவர் குழந்தையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே அதன் கையில் முத்தமிட்டார்.

'நீ ஒரு கதாநாயகி... உன்னிடம் ஒரு பால்போத்தல் இருக்கிறது... நீ ஒரு கதாநாயகி...!'

முட்டிக் கொண்டு வரும் அழுகையுடன் கீழே கிடந்த மெத்தையில் அமர்ந்தாள் குழந்தையின் தாய். அவளது இரண்டு கரங்களிலும் தனது முகத்தைத் தாங்கிக் கொண்டபடி உட்கார்ந்திருந்தாள். குழந்தைக்குத் தரவேண்டிய பால் மற்றும் மூன்று வயது மகனுக்குத் தரவேண்டிய உணவு பற்றியும் எதிரே நீண்டு தெரியும் இருண்ட எதிர்காலம் பற்றியும் அவள் சிந்திக்கிறாள் என்று அவர் அனுமானித்தார்.

'நான் உங்களுக்குக் கொஞ்சம் தேநீர் தரட்டுமா?'

'நான் எதையும் உட்கொள்ளக்கூடாது. அப்படித்தான் டாக்டர் சொன்னார்.'

'நீங்கள் அதை விற்கக் கூடாது.'

'என்ன...? நாம் சும்மா விளையாட முடியாது... நான் அவர்களுக்கு வாக்களித்துவிட்டேன்..'

'நீங்கள் அதை விற்கக் கூடாது.'

'ஆனால் நீ நேற்று உடன்பட்டாய்...'

அவரை நெருங்கிய அவள் குழந்தையின் மெத்தையில் அமர்ந்தாள்.

'இரவு முழுக்க நான் யோசித்தேன்.... நீங்கள் நித்திரை கொண்ட பிறகு நான் அழுதேன்... விடியற்காலை நான்கு மணிவரையும்.... உங்களிடம் எத்தனை கிட்னி இருக்கிறது? ஆ...? இரண்டேயிரண்டு! உங்களுக்கு இப்போது இளம் வயது. இன்னும் மூன்று, நான்கு அல்லது பத்து வருடங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? உங்கள் கிட்னிக்கு ஏதாவது நடந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் இறந்து போவீர்கள். நிறையப்பேருக்குக் கிட்னி வருத்தம் வருகிறது. நீங்கள் உங்களைத் தியாகம் செய்யப்போகிறீர்கள்... சரி அப்படியே பார்த்தாலும் ஒரு கிட்னியைக் கொடுப்பதால் உங்களுக்கு எவ்வளவு கிடைத்துவிடப்போகிறது? மிஞ்சினால் சில மாதங்களுக்குத்தான் அது போதுமாயிருக்கும். இரவு கணக்குப் போட்டுப் பார்த்தேன். நான்கு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது. அதுக்குப் பிறகு நீங்கள் எதை விற்கப் போகிறீர்கள்? கண்களையா? நாம் இதுக்கு மேல் விற்பதற்கு எதுவும் கிடையாது. குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, விரிப்புகள், கட்டில்கள், குளிர்பதனச் சாதனம்... எல்லாவற்றையுமே விற்றாயிற்று. நாம் நிலத்தில் படுக்கிறோம். போதும்!'

'பிள்ளைகளைப் பட்டினி கிடந்து சாகவிட முடியாதுதானே...?'

'நான் ரஜாவை உம்மு அலிக்குக் கொடுக்கப்போகிறேன்!'

'நம்ம பிள்ளையை விற்கப் போகிறோமா?'

- அவநம்பிக்கையும் கோபமும் கேள்வியில் தொனித்தது.

'இல்லை.. நாம் அவளை விற்கவில்லை... உம்மு அலியோடு ஒரு புரிந்துணர்வுக்கு வந்து விட்டேன். உம்மு அலியும் அவளது கணவனும் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள். எமக்குத் தேவையான போது... நமக்கு வசதி வாய்ப்பு வந்தவுடன் அவளை நாம் திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம். நாம் விரும்பினால் அவர்களோடு வந்து இருக்கலாம் என்றும் உம்மு அலி சொன்னாள். அவர்களது நான்கு பிள்ளைகளும் வெளிநாடுகளுக்குப் போன பிறகு வீடு வெறுமையாகக் கிடக்கிறதாம். இரண்டு மாடி வீடு அது. இரண்டாவது மாடி சும்மாதான் இருக்கிறது. நாலு படுக்கையறைகள். வெறிச்சோடிக் கிடக்கும் அந்த வீட்டில் மனிதர்கள் நடமாட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.'

'நான் எனது குழந்தையை விற்க மாட்டேன்...!'

'அப்படியென்றால் நான் வேண்டுமா... அல்லது கிட்னியை விற்பதா என்று இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போனால் நீங்கள் மீண்டும் என்னைக் காணவே மாட்டீர்கள்!'

----------------------------------


கடந்த சனியன்று கொழும்பு - 13 ஜம்பட்டா வீதியில் பகல் 11.30 அளவில் நின்று கொண்டிருந்தேன். நான் எதிர்பார்த்திருந்த நபரைச் சந்திக்க இன்னும் அரை மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் கையிலிருந்த தமிழ்ச் சஞ்சிகையொன்றைப் புரட்டிப் படித்தபடி மர நிழலில் நின்றிருந்தேன்.

அருகே ஒரு பெண்மணி வந்தாள். முப்தைத் தாண்டிய வயதினளாகத் தெரிந்தாள். சட்டென் என் கையிலிருந்த சஞ்சிகையைப் பார்த்து விட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

“அண்ணே... நீங்க தமிழா?”

“ம்....” என்றேன்.

“உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது கிட்னி தேவையென்றால் சொல்லுங்கள்..”

நான் அதிர்ந்து போய் அவளை நோக்கினேன்...

“ரெண்டு குடும்பம் அண்ணே... அவுங்களுக்கு தொழில் வீடு எதுவும் கிடையாது.. தமிழர்கள்... அதான் கிட்னி விற்கப் போறதாச் சொல்லி என் கைத்தொலைபேசி நம்பரையும் குடுத்திருக்காங்க...”

நான் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் உறைந்து போய் நின்றிருந்தேன்.

அவளே தொடர்ந்தாள்...

“பிறைவேற் ஹொஸ்பிட்டல்ல விசாரிச்சாத்தான் தெரியும் எனண்ணே...!”

“ம்...”

அவள் நகர்ந்தாள்.... சென்று மறைந்து விட்டாள்...

நான்கு நாட்கள் கடந்து விட்டன.

நான் இன்னும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்!




இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

படித்துவிட்டு மிகவும் அதிர்ந்துபோய் விட்டேன்.

யாரை நோவது?