Friday, October 25, 2013

மார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்

மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் அவர்கள். ஆளுமையும் பேணுதலும் மார்க்க மற்றும் உலக அனுபவ ஞானம் மிக்கவர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார்.

மஸ்ஊத் ஆலிம் சாஹிப் ஓரிடத்தில் நிற்கிறார் என்றால் அல்லது வருகை தருகிறார் என்றால் அந்த இடம் மரியாதைக்குரிய இடமாக மாறிவிடும். தயங்கித் தயங்கி மரியாதையுடன் அவரிடம் உரையாடிய பல விற்பன்னர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னைப் போன்றவர்கள் அவர்களை எதிர்கொள்ளவே தயங்கினோம். அதற்குக் காரணம் அவர் மீதிருந்த கண்ணியமேயாகும்.

மிகச் சாதாரண ஒரு மனிதராகத் தோற்றமளிக்கும் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் பேச ஆரம்பித்தால் கணீர் என்ற அவரது குரலில் கேட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் கட்டுண்டு கிடப்பார்கள்.  சன்மார்க்க விடயங்களில் அவர் சமரசம் செய்து கொண்டதில்லை. பிழையைப் பிழை என்றும் சரியைச் சரி என்றும் நேரடியான மொழியில் எடுத்துச் சொல்வதில்தான் அவர் கவனமாக இருப்பார். பிற்காலத்தில் மஸ்ஊத் ஆலிம் அவர்களைப் பின்பற்றி அவரைப் போலவே சில ஆலிம்கள் பேச முயன்றிருக்கிறார்கள் என்றால் அவரது ஆளுமை எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இன்றுவரை விமர்சனத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஆலிம்களின் பேச்சு மொழியை அந்தக் காலத்திலேயே அவர் மிக அழகாகக் கையாண்டார். அவர் எடுத்தாளும் விடயங்கள் மிகத் தெளிவாகவும் கேட்போர் மனதில் இயல்பாகப் பதிவும் வண்ணமும் அவரது மொழி அமைந்திருக்கும். அதற்குக் காரணம் அவரது ஓயாத வாசிப்பு. முதன்முதலாக அவர்களது வீட்டுக்குச் சென்ற போது அவர்களது நூலகத்தைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். 'ஷஜருத்துர்' என்றொரு முஸ்லிம் வரலாற்று நாவல். சலாஹூத்தீன் ஐயூபியின் மருமகளைப் பிரதான பாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட பெரிய நாவல் அது. அந்த நாவலை ஜாமிஆ நளீமியாவில் கற்கும் காலத்தில் ஜாமிஆ நூலகத்தில் படித்திருக்கிறேன். மஸ்ஊத் ஆலிம் அவர்களின் வீட்டு நூலகத்தில் தவிர வேறெங்கும் அந்நாவலின் மற்றொரு பிரதியை நான் கண்டதில்லை. இதில் குறித்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனில் அந்நாட்களில் நாவல் படிப்பது அதுவும் ஆலிம்கள் படிப்பது வீண் வேலை அல்லது விரும்பத்தகாத செயலாக இருந்தது என்பதுதான்.

பல நூறு ஆலிம்கள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பேசியிருக்கிறார்கள், பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் மஸ்ஊத் ஆலிமின் உரை என்றால் அதற்கு ஒரு தனி மரியாதையும் கண்ணியமும் இன்றுவரை இருக்கிறது. அவர்கள் வழங்கிய ஸஹர் சிந்தனைகள், ஹஜ் பற்றிய வழிகாட்டல் உரைகள் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அறிவிப்பாளர்கள் பொதுவாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாகவிட்டு அடுத்த நிகழ்ச்சியில் கவனம் செலுத்துவது அல்லது வேறு வேலைகளைக் கவனிப்பது வழக்கம். ஆனால் மஸ்ஊத் ஆலிம் அவர்களது உரை ஒலிபரப்பாகும் வேளை நான் அதையே கேட்டுக் கொண்டிருப்பேன். அதற்குக் காரணம் அவரது பேச்சு ஆரம்பிக்கும் போதே அவரது குரல் நம்மை அவர் அருகே இழுத்துச் சென்று விடும் வல்லமையுள்ளதாக இருந்தது. ஏனைய அறிவிப்பாள நண்பர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்று நம்புகிறேன்.

எல்லா ஆலிம்களும் மௌலவிகளும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வந்தே தமது உரைகளை ஒலிப்பதிவு செய்வது வழக்கம். ஆனால் மஸ்ஊத் ஆலிம் அவர்களது உரையை ஒலிப்பதிவு செய்வதற்குத் தயாரிப்பாளர் அவர் இருக்குமிடத்துக்குச் செல்வார். அங்கேதான் ஒலிப்பதிவும் நடைபெறும். பின்னாளில் முஸ்லிம் சேவையின் பணிப்பாளராகப் பணிபுரிந்த மௌலவி இஸட்.எல்.எம். முஹம்மத் அவர்கள்தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தபோது மஸ்ஊத் ஆலிம் அவர்களின் அநேக உரைகளை அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று ஒலிப்பதிவு செய்தவர். இந்த அனுபவங்களை மௌலவி இஸட். எல்.எம். முகம்மத் அவர்கள் என்னிடம் பகிர்ந்துள்ளார்.

மஸ்ஊத் ஆலிம் அவர்களது மூத்த புதல்வனோடு ஒரே வகுப்பில் படித்த காரணத்தினால் குறுகிய காலம் அவர்களது குடும்பத்துப் பிள்ளைகளில் ஒருவனாக இருந்திருக்கிறேன். அப்போதும் கூட மஸ்ஊத் ஆலிம் அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் நான் மிகுந்த சங்கோஜமுடையவனாக இருந்திருக்கிறேன். அகஸ்மாத்தாக சந்தித்துக் கொண்டல் 'வாப்பா எப்படியிருக்காரு?' என்பதே அவரது முதலாவது கேள்வியாக இருக்கும். காலி, பஹ்ஜத்துல் இப்றாஹீமிய்யாவில் மஸ்ஊத் ஆலிம் அவர்களின் ஜூனியர்களில் ஒருவராக என் தந்தை இருந்தது அந்த விசாரிப்புக்குக் காரணம். 'எனது ஸலாத்தை வாப்பாவுக்கு எத்தி வையுங்கள்!' என்பது அவரது அடுத்த வார்த்தையாக இருக்கும். படிப்பு விடயங்களை விசாரிப்பாரோ என்ற பயத்தில் அவரது மூன்றாவது வார்த்தைக்கு முன்னர் நாங்கள் இடம் மாறிவிடுவோம். ஜாமிஆ நளீமியாவின் ஆலோசகர் குழுவில் மஸ்ஊத் ஆலிம் அவர்களுக்கு முக்கிய இடம் இருந்தது.

ஒரு முன்மாதிரி ஆலிமாக விளங்கிய மஸ்ஊத் ஆலிம் அவர்களைப் பற்றி பின்னால் வந்த பரம்பரையினரில் அநேகருக்குத் தெரியாது. குறைந்தது ஆயிரக் கணக்கில் பெருகியிருக்கும் ஆலிம்கள் கூட அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. குறிப்பாக ஆலிம்கள் மஸ்ஊத் ஆலிம் சாஹிபைப் பற்றித் தெரிந்திருக்க வெண்டும் என்று நான் குறிப்பிடுவது பெயர்பெற்ற ஒரு மார்க்க அறிஞராக அவர் விளங்கினார் என்பதற்காக மட்டும் அல்ல, அவர் தன்னை எத்தகைய ஆளுமையுள்ளவராக மாற்றியிருந்தார் என்பதைப் புரிந்து அவர்களும் தம்மை அவ்வாறு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவாவினாலேயாகும்.

சமூக சேவையில் ஈடுபட்ட பலரை அவ்வப்போது சமூகம் ஞாபகப்படுத்திய போதும் மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் அவர்களின் உரையை வானொலியில் கேட்பதோடு அவரைச் சமூகம் மறந்து விட்டதா என்றொரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மஸ்ஊத் ஆலிம் அவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் இன்னும் பலர் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு மஸ்ஊத் ஆலிம் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்று அவர்களைப் பற்றிய ஒரு நூல் வெளிக் கொணரப்பட வேண்டும் என்று முன்மொழிகிறேன்.

(மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்களது புகைப்படம் அவரது பேத்தியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. நன்றி!)

Wednesday, October 23, 2013

கோபக்காரக் கவிஞனின் செய்யுள்

நிஸார் கப்பானி

நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி 34 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டவர். இவரது பாடல்கள் பிரபல பாடகர்களால் பாடப்பட்டுள்ளன.

அமெரிக்க மத்தியஸ்தத்தின் பெயரில் இஸரேல் - பலஸ்தீன் உடன்படிக்கை ஒஸ்லோவில் கைச்சாத்திடப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்துக் கவிதை எழுதினார் நிஸார் கப்பானி. எதிரிகளுக்குப் பணிந்து சமரசம் செய்து கொள்வதை அவர் அவமானமாகக் கருதினார். மிக எளிமையான சொற்களைக் கொண்டு நேரிடையாகத் தாக்கம் மிக்க கவிதைகளைத் தருவதில் வல்லரான அவரது கவிதை கவிதைத்துறையில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.

இங்கே தரப்பட்டுள்ள இந்தக் கவிதை அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் காலித் எம்.அமைராஹ். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தவர் கவிஞர் எம்.கே.எம். ஷகீப். இரண்டு மொழி தாண்டியும் மிகுந்த கோபத்துடன் நிஸார் கப்பானியின் வார்த்தைகள் வந்து விழுகிறன. ஜாமிஆ நளீமியாவின் மாணவர்களில் ஒருவரான எம்.கே.எம். ஷகீப் 'சரிநிகர்' பத்திரிகையில் பணிபுரிந்தவர். தற்போது தொழில் நிமித்தம் கட்டாரில் வாழ்ந்து வருகிறார். 1997ல் 'நிகரி' வெளியீடாக வந்த 'நாளை இன்னொரு நாடு' என்ற ஷகீபின் கவிதைத் தொகுதியில் இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது.

எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்றான இக்கவிதையை நான் மீண்டும் மீண்டும் படிப்பதுண்டு. கப்பானியின் கோபத்திலுள்ள நியாயங்கள் எப்படியிருந்த போதும் அவரது கோபமும் அதை அவர் வெளிப்படுத்தியுள்ள விதமும் போற்றத்தக்கது, ரசிக்கத் தக்கது. உணர்வு குன்றாமல் கவிதையை அதற்கேயுரிய உயிரோட்டத்துடன் மொழிபெயர்த்த இரண்டு கவிஞர் களுக்கும்தான் அதற்கான நன்றி உரித்துடையது.

கோபக்காரக் கவிஞனின் செய்யுள்

எமது இறுதிக் கண்ணியச் சுவரும்
வீழ்ந்து போனது
நாம் சந்தோஷித்தோம்!
ஆடிக் களித்தோம்
ஒப்பமுமிட்டோம்
'கோழைகளின் சமாதானம்' என
எம்மை ஆசீர்வதித்தார்கள்
இதைவிட
...எதுவும் எம்மை தலைகுனிந்து
வெட்கப்பட வைக்காது...
எம் பெருமிதத்தின்
இரத்தக் குழாய்களெல்லாம்
வரண்டு வற்றியாயிற்று

2
ஐம்பதாவது தடவையாகவும்
எம் மானம், நேர்மை, ஒழுக்கம், கண்ணியம்
எல்லாம் போயாகி விட்டது
எதுவிதப் பதற்றமோ
எந்தச் சத்தங்களோ... எம்மிடம் இல்லை
எல்லாம் இழந்து...
இரத்தத்தைப் பார்க்கையில் ஏற்படுகிற
அற்ப அதிர்வுமற்று
மொத்தமாய் எல்லாம் போயிற்று
ஐம்பதாவது தடவையாகவும்
நாம் ஓடித் திரிகின்ற காலத்தில்
நுழைந்தோம்
அறுவைக் கடைக்கு முன்னால்
ஆட்டு மந்தைகளைப் போல
வரிசையாய் நாம் நின்றோம்
கொலைகாரர்களின் சப்பாத்துக்களை
முத்தமிடுவதற்காய்
மூச்சுத் திணறத் திணற
நாம் போட்டி போட்டுக் கொண்டு ஓடினோம்

3
ஐம்பது ஆண்டுகளாய் அவர்கள்
எம் பிள்ளைகளைப்
பட்டினி போட்டார்கள்
நீண்ட நோன்பிருப்பின் இறுதியில்
ஒரு வெங்காயத்தை அவர்கள்
எமக்கு எறிந்தனர்

4
ஐம்பதாவது தடவையாக
அராபியர் கைகளிலிருந்து
கிரனாடாவும் வீழ்ந்தது
வரலாறும் வீழ்ந்தது
எம் ஆத்மாக்களின் தூண்களும்
எமது சுயத்தினது தூண்களும்
மொத்தமாய்
ஐம்பதாவது முறையாகவும்
வீழ்ந்தன
வீரப் பாடல்கள் இனி இல்லை

இஷபெய்ல்யா  அண்டாக்யா
ஹட்டின் - அம்மோரியா
எல்லாம் எதுவுமற்று வீழ்ந்தன
'மேரி'யும் அவர்களது சிறைக் கைதியானாள்
வானத்து அத்தாட்சிகளைக் காக்க
எந்த வீரனும் இல்லை

5
எம் இறுதிக் கன்னிகையும்
ரோமர்களிடம் வீழ்ந்து போனாள்
இனிச் சண்டையிட என்னதான் இருக்கிறது?
எம் மாளிகையில் தேநீர் ஊற்றுகிற
பெண் கூட இல்லை
இனி யாரைத்தான் காக்க?

6
ஓர் அந்தலூசியா கூட
எம் கரங்களில் இல்லை
அவர்கள் கதவுகளைத் திருடினார்கள்
சுவர்களைத் திருடினார்கள்
மனைவிகளைத் திருடினார்கள்
பிள்ளைகளைத் திருடினார்கள்
ஒலிவ் மரங்கள், எண்ணெய் வளங்கள்
வீதிகளில் உள்ள கற்கள்
எலுமிச்சைச் செடியின் ஞாபகங்கள்
எல்லாவற்றையும் திருடினார்கள்
இலந்தைப் பழங்களை
நாணயங்களை
பள்ளிவாசல் விளக்குகளின்
எண்ணெயைகைகூட
அவர்கள் திருடினார்கள்

7
காஸா எனப்படுகிற
ஒரு மீன் சாடியை
அவர்கள் எம் கையில்
விட்டு விட்டுப் போனார்கள்
'ஜெரிக்கோ' என்றழைக்கிற
ஒரு காய்ந்த எலும்பும் கிடைத்தது
கூரைகள் அற்ற
ஒழுங்காகக் கட்டப்படாத
பலஸ்தீன் என்ற ஹோட்டலையும்
எம்மிடம் வட்டுச் சென்றார்கள்
இன்னும்
எலும்புகளற்ற ஒரு செத்த உடம்பையும்
விரல்கள் அற்ற ஒரு கையையும்
அவர்கள்
எமக்குத் தந்து விட்டுச் சென்றார்கள்

8
நினைத்து அழுவதற்கு
ஒரு துண்டுச் சின்னமும்
எமக்காக இல்லாமல்
அவர்கள் கண்களையே
எடுத்துச் சென்றுவிட்ட போது
ஒரு சமூகத்தால் அழ முடிவதெப்படி?

9
ஒஸ்லோவில்
இந்த இரகசிய மன்றத்தின் பின்
மொத்தமாய் நாம் கருகிப்போனோம்
ஒரு கோதுமை மணியை விடச்
சின்னதாய்
ஓர் இருப்பிடத்தை
எமக்கவர்கள் தந்தனர்
ஓர் அஸ்பிரின் குளிசையைப்போல்
தண்ணீரின்றி
விழுங்கி விடுமளவு
அவர்கள்
எமக்கோர் இருப்பிடத்தைத் தந்தனர்

10
ஐம்பது வருடங்களின் பின்னரும்
இடமற்ற ஆயிரம் ஆயிரம்
நாய்களைப் போல்
வறண்ட நிலமே
எம் வசிப்பித் தீர்ப்பாயிற்று

Thursday, October 17, 2013

உனக்காகவே வாழ்கிறேன்!


எல்லோருக்குமாக வாழ்வதில்
இருக்கும் இன்பம்
தனக்காக மட்டும் வாழ்வதில் இருப்பதில்லை

தனக்காக வாழ்வது சுயநலம்
பிறர்க்காக வாழ்வதாகச் சொல்வது
பொய்
தனக்கும் சேர்த்து
எல்லோருக்குமாக வாழ்வதே சுகம்

ஆதி மனிதர்கள்
ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக வாழ்ந்தார்கள்.
அங்கு
கபடத்தனமும் இருக்கவில்லை
கலகமும் இருக்கவில்லை

நதியோரங்களுக்கு வந்த பின்னர்
நாகரிகங்களுக்கு நழுவினார்கள்
நாகரிகம் வந்த பிறகுதான்
நாறிப் போனது மனித இனம்

அரசர்கள் ஆகினர்: அடிமைகள் ஆகினர்
இனங்கள் ஆகினர்: மதங்கள் ஆகினர்

ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக
என்பது
எல்லோரும் ஒருவருக்காக என்றானது
மன்னர் ஆண்டார்: மற்றவர் மாண்டார்

மன்னர்கள் ஆசை மட்டுப்படாதது
மற்றவனின்
மண்ணைப் பிடித்தார்கள்
சிலர் அவர் பெண்ணையும் பிடித்தார்கள்

கலகங்கள் வந்தன
தலைகள் உருண்டன

இனங்கள் என்றொரு இழையைக் கீறினர்
எங்களுக்காக நாங்கள் என்றனர்
அவரவர் நினைத்ததை அவரவர் செய்தனர்
சில மனிதர் வாழ்ந்தார்
பல மனிதர் வீழ்ந்தார்

மகத்துவமான மனிதர் தோன்றினர்
மதங்கள் தோன்றின
சிலர் மதங்கள் வழியே மாண்புற்றெய்தினர்
பலர் மதங்களை வைத்தே மல்லுக் கட்டினர்

இன்று வரைக்கும் இதுவே நம்கதை

ஒருவருக்காக எல்லோரும் என்பதைப்
பின்னர்
மக்களுக்காக மக்கள் என்றோம்
மக்களை மக்கள் ஆள்வது என்றோம்

மன்னர்கள் வீழ்ந்தனர்
மக்கள் தலைவர் மன்னர்களாயினர்
மக்களாட்சியில் மயங்கி நின்றோம்
வாக்கு என்பது வல்லமையென்றோம்
மானிடர் யாவரும் சமனெனக் கொண்டோம்
இனத்துவ இழைகளை இறுக்கிப் பிடித்து
மதமெனும் மதத்தை முன்னிலைப்படுத்தி
மக்களுக்காக மக்கள் என்று
மது அருந்தாமலே மயங்கிக் கிடந்தோம்

மன்னர் ஒருவன் கீழே வீழ்ந்தான்
மக்களின் தலைவர்கள் அரியணை ஏறினர்
கொள்ளையன் ஒருவன் வீழ்த்தப்பட்டான்
கொள்ளையர் நூறுபேர் அரியணை யேறினர்
மக்களாட்சியின் மகோன்னதத்தாலே
மக்கள் தேர்ந்த மாபெரும் தலைவர்கள்
மாறுவேட மன்னர்களாயினர்!

முடியாட்சியில் ஒருவனே கொள்ளையன்
குடியாட்சியில் ஒரு நூறு கொள்ளையர்கள்!

மக்களின் மன்னர்கள் வாழ்வாங்கு வாழ
மக்கள் என்றும் ஏமாந்து நிற்கிறார்

இன்று வரைக்கும் இதுவே நம்கதை

ஜனநாயகம் என்பது
ஒரு கேலிக் கூத்து
ஜனநாயகம் என்பது
கூத்தாடிகளின் கும்ப மேளா
ஜனநாயகம் என்பது
சட்டப்படி கொள்ளை கொள்வது
ஜனநாயகம் என்பது
நவீன உலகின் முகமூடி
ஜனநாயகம் என்பது
எல்லோருக்குமாகவே நாங்கள் என்கிற
ஏமாற்று வித்தையின் இயங்கு தளம்

எல்லாத் தேசங்களிலும்
ஜனநாயகம் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்
மக்கள்
குனிந்து நடக்கவே கோரப்படுகிறார்கள்
நீதி
ஆளுக்கு ஒன்றாய் அர்த்தம் தருகிறது
வாக்குகள்
கொள்ளையிடப்படுகின்றன
மனித உரிமை
மன்னர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது
மக்களரசுகள்
வல்லரசாவத்ற்கே வாஞ்சையுறுகின்றன

எல்லாத் தேசங்களிலும்
ஜனநாயகம் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்
ஆனால் அவை
ஆயுதம் வாங்குவதற்கே ஆசைப்படுகின்றன
ஒரு தேசம்
நீ எனக்காகவே என்று மற்றொரு தேசத்திடம்
சொல்லிக் கொண்டிருக்கிறது
உனது வளம்
எனது தேசத்துக்காகவே என்று அச்சுறுத்துகிறது
நான் சொல்வதைக் கேட்கவில்லையெனில்
நீ கற்காலத்துக்குப் போய்விட வேண்டும் என்று
பயமுறுத்துகிறது

எல்லாத் தேசங்களிலும்
ஜனநாயகம் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்
அத்தேசங்களிலெல்லாம்
இரத்த ஆறே ஓடிக் கொண்டிருக்கிறது...

பத்திரிகைகளில் அடிக்கடி வரும்
படங்களில் இருப்போரைக் காண
எனக்குப் பயமாக இருக்கிறது

அவர்கள்
தொலைக்காட்சிகளில் வரும்போது கூடத்
தூர அமர்ந்து கொள்கிறேன்

அவர்கள்
உயிர் பெற்று வந்து
என் குரல்வளையைக் கடித்து விடுவார்களோ
என்று அச்சப்படுகிறேன்

இந்த அச்சம் பரவி
யாருடையவாவது குரல்வளையை
நான் கடித்து விடுவேனோ என்று
எனக்கு அச்சமாக இருக்கிறது

சிந்தித்துப் பார்த்தேன்
இப்போது
ஒவ்வொருவரும் எல்லோருக்குமாக
வாழ்வதாக இல்லை

காதலனோ காதலியோ
ஒருவரிடம் ஒருவர்
திருமணத்துக்கு முன்பாகவும்

அரசியல்வாதிகள்
தேர்தலுக்கு முன்பாகவும்

சொல்லிக் கொள்கிறார்கள் -

உனக்காகவே வாழ்கிறேன் என்று!

(கவியரங்கு ஒன்றில் படிக்கப்பட்ட கவிதை)