Wednesday, October 23, 2013

கோபக்காரக் கவிஞனின் செய்யுள்

நிஸார் கப்பானி

நிஸார் தௌபீக் கப்பானி சிரிய தேசத்தின் பிரபல கவிஞரும் ராஜதந்திரி யுமாவார். 1923ம் ஆண்டு டமஸ்கஸில் பிறந்த நிஸார் கப்பானி 34 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டவர். இவரது பாடல்கள் பிரபல பாடகர்களால் பாடப்பட்டுள்ளன.

அமெரிக்க மத்தியஸ்தத்தின் பெயரில் இஸரேல் - பலஸ்தீன் உடன்படிக்கை ஒஸ்லோவில் கைச்சாத்திடப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்துக் கவிதை எழுதினார் நிஸார் கப்பானி. எதிரிகளுக்குப் பணிந்து சமரசம் செய்து கொள்வதை அவர் அவமானமாகக் கருதினார். மிக எளிமையான சொற்களைக் கொண்டு நேரிடையாகத் தாக்கம் மிக்க கவிதைகளைத் தருவதில் வல்லரான அவரது கவிதை கவிதைத்துறையில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.

இங்கே தரப்பட்டுள்ள இந்தக் கவிதை அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் காலித் எம்.அமைராஹ். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்தவர் கவிஞர் எம்.கே.எம். ஷகீப். இரண்டு மொழி தாண்டியும் மிகுந்த கோபத்துடன் நிஸார் கப்பானியின் வார்த்தைகள் வந்து விழுகிறன. ஜாமிஆ நளீமியாவின் மாணவர்களில் ஒருவரான எம்.கே.எம். ஷகீப் 'சரிநிகர்' பத்திரிகையில் பணிபுரிந்தவர். தற்போது தொழில் நிமித்தம் கட்டாரில் வாழ்ந்து வருகிறார். 1997ல் 'நிகரி' வெளியீடாக வந்த 'நாளை இன்னொரு நாடு' என்ற ஷகீபின் கவிதைத் தொகுதியில் இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது.

எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்றான இக்கவிதையை நான் மீண்டும் மீண்டும் படிப்பதுண்டு. கப்பானியின் கோபத்திலுள்ள நியாயங்கள் எப்படியிருந்த போதும் அவரது கோபமும் அதை அவர் வெளிப்படுத்தியுள்ள விதமும் போற்றத்தக்கது, ரசிக்கத் தக்கது. உணர்வு குன்றாமல் கவிதையை அதற்கேயுரிய உயிரோட்டத்துடன் மொழிபெயர்த்த இரண்டு கவிஞர் களுக்கும்தான் அதற்கான நன்றி உரித்துடையது.

கோபக்காரக் கவிஞனின் செய்யுள்

எமது இறுதிக் கண்ணியச் சுவரும்
வீழ்ந்து போனது
நாம் சந்தோஷித்தோம்!
ஆடிக் களித்தோம்
ஒப்பமுமிட்டோம்
'கோழைகளின் சமாதானம்' என
எம்மை ஆசீர்வதித்தார்கள்
இதைவிட
...எதுவும் எம்மை தலைகுனிந்து
வெட்கப்பட வைக்காது...
எம் பெருமிதத்தின்
இரத்தக் குழாய்களெல்லாம்
வரண்டு வற்றியாயிற்று

2
ஐம்பதாவது தடவையாகவும்
எம் மானம், நேர்மை, ஒழுக்கம், கண்ணியம்
எல்லாம் போயாகி விட்டது
எதுவிதப் பதற்றமோ
எந்தச் சத்தங்களோ... எம்மிடம் இல்லை
எல்லாம் இழந்து...
இரத்தத்தைப் பார்க்கையில் ஏற்படுகிற
அற்ப அதிர்வுமற்று
மொத்தமாய் எல்லாம் போயிற்று
ஐம்பதாவது தடவையாகவும்
நாம் ஓடித் திரிகின்ற காலத்தில்
நுழைந்தோம்
அறுவைக் கடைக்கு முன்னால்
ஆட்டு மந்தைகளைப் போல
வரிசையாய் நாம் நின்றோம்
கொலைகாரர்களின் சப்பாத்துக்களை
முத்தமிடுவதற்காய்
மூச்சுத் திணறத் திணற
நாம் போட்டி போட்டுக் கொண்டு ஓடினோம்

3
ஐம்பது ஆண்டுகளாய் அவர்கள்
எம் பிள்ளைகளைப்
பட்டினி போட்டார்கள்
நீண்ட நோன்பிருப்பின் இறுதியில்
ஒரு வெங்காயத்தை அவர்கள்
எமக்கு எறிந்தனர்

4
ஐம்பதாவது தடவையாக
அராபியர் கைகளிலிருந்து
கிரனாடாவும் வீழ்ந்தது
வரலாறும் வீழ்ந்தது
எம் ஆத்மாக்களின் தூண்களும்
எமது சுயத்தினது தூண்களும்
மொத்தமாய்
ஐம்பதாவது முறையாகவும்
வீழ்ந்தன
வீரப் பாடல்கள் இனி இல்லை

இஷபெய்ல்யா  அண்டாக்யா
ஹட்டின் - அம்மோரியா
எல்லாம் எதுவுமற்று வீழ்ந்தன
'மேரி'யும் அவர்களது சிறைக் கைதியானாள்
வானத்து அத்தாட்சிகளைக் காக்க
எந்த வீரனும் இல்லை

5
எம் இறுதிக் கன்னிகையும்
ரோமர்களிடம் வீழ்ந்து போனாள்
இனிச் சண்டையிட என்னதான் இருக்கிறது?
எம் மாளிகையில் தேநீர் ஊற்றுகிற
பெண் கூட இல்லை
இனி யாரைத்தான் காக்க?

6
ஓர் அந்தலூசியா கூட
எம் கரங்களில் இல்லை
அவர்கள் கதவுகளைத் திருடினார்கள்
சுவர்களைத் திருடினார்கள்
மனைவிகளைத் திருடினார்கள்
பிள்ளைகளைத் திருடினார்கள்
ஒலிவ் மரங்கள், எண்ணெய் வளங்கள்
வீதிகளில் உள்ள கற்கள்
எலுமிச்சைச் செடியின் ஞாபகங்கள்
எல்லாவற்றையும் திருடினார்கள்
இலந்தைப் பழங்களை
நாணயங்களை
பள்ளிவாசல் விளக்குகளின்
எண்ணெயைகைகூட
அவர்கள் திருடினார்கள்

7
காஸா எனப்படுகிற
ஒரு மீன் சாடியை
அவர்கள் எம் கையில்
விட்டு விட்டுப் போனார்கள்
'ஜெரிக்கோ' என்றழைக்கிற
ஒரு காய்ந்த எலும்பும் கிடைத்தது
கூரைகள் அற்ற
ஒழுங்காகக் கட்டப்படாத
பலஸ்தீன் என்ற ஹோட்டலையும்
எம்மிடம் வட்டுச் சென்றார்கள்
இன்னும்
எலும்புகளற்ற ஒரு செத்த உடம்பையும்
விரல்கள் அற்ற ஒரு கையையும்
அவர்கள்
எமக்குத் தந்து விட்டுச் சென்றார்கள்

8
நினைத்து அழுவதற்கு
ஒரு துண்டுச் சின்னமும்
எமக்காக இல்லாமல்
அவர்கள் கண்களையே
எடுத்துச் சென்றுவிட்ட போது
ஒரு சமூகத்தால் அழ முடிவதெப்படி?

9
ஒஸ்லோவில்
இந்த இரகசிய மன்றத்தின் பின்
மொத்தமாய் நாம் கருகிப்போனோம்
ஒரு கோதுமை மணியை விடச்
சின்னதாய்
ஓர் இருப்பிடத்தை
எமக்கவர்கள் தந்தனர்
ஓர் அஸ்பிரின் குளிசையைப்போல்
தண்ணீரின்றி
விழுங்கி விடுமளவு
அவர்கள்
எமக்கோர் இருப்பிடத்தைத் தந்தனர்

10
ஐம்பது வருடங்களின் பின்னரும்
இடமற்ற ஆயிரம் ஆயிரம்
நாய்களைப் போல்
வறண்ட நிலமே
எம் வசிப்பித் தீர்ப்பாயிற்று



11
ஐம்பது வருடங்களின் பின்னரும்
ஓர் உறைவிடத்தை நாம் காணவில்லை
ஒரு கானலைக் கண்டோம்
ஆனால் அது சமாதானம் அல்ல
எம் இதயங்களை ஊடறுத்துச் செல்கிற
ஓர் ஈட்டி அது
இன்னும்
அது ஒரு பலாத்காரமும் கூட

12
கடுகளவேனும் பெறுமதியற்றது
ஒஸ்லோவில் பொறித்தவைகள்
மக்களின் ஆத்மாக்கள்
உயிரோடிருக்கையில்
ஓடித்திரிவதில்தான் பயனென்ன

13
பசுமை மிகு சமாதானத்தையும்
ஒரு வெள்ளைப் பிறையையும்
ஒரு நீலக் கடலையும்
கப்பல்கள் கட்டும்
ஒரு துறையையும்
நாம் நீண்ட நாளாய்க்
கனவில் கண்டோம்
ஆனால்
திடீரெனப் பார்த்த போது
நாம் சாணக் கும்பல் ஒன்றில்
குந்திக் கொண்டிருந்தோம்

14
பயந்தாங்கொள்ளிகளின்
சமாதானம் பற்றி
யார் அவர்களிடம்
கேள்வி கேட்கப் போகிறார்கள்
தாயக சில்லறை வியாபாரம் பற்றியோ
உடன்படிக்கைகள் பற்றியோ
வியாபாரிகள் பற்றியோ
பங்குதாரர்கள் பற்றியோ
யார்தான் அவர்களிடம்
கேள்வி கேட்கப் போகிறார்கள்
செத்தவரின் சமாதானம் பற்றிக் கூட
யார் கேட்கப் போகிறார்கள்

அவர்கள் வீதிகளை மௌனப்படுத்தினார்கள்
கேள்விகளையும்
கேள்வி கேட்டவர்களையும்
கொன்றொழித்தார்கள்


15
எம் ஈரல்களைச் சப்புகிற
பிறக்கப்போகும் குழந்தைகளைக்
கொன்றொழிக்கப் போகின்ற
ஒரு பெண்ணுக்கு
எம் விருப்பம் இன்றியே
திருமணம் செய்து வைக்கப்பட்டோம்

நாம் அவளைத் தேன் நிலவுக்கு
அழைத்துச் சென்றோம்
அங்கே
குடித்துக் களித்தோம்
ஆடினோம்
மனப்பாடமிட்டிருந்த
காதல் கவிதைகளையெல்லாம்
பாடினோம்
பெற்றோருமாகினோம்
குழந்தைகள் அழகை உருக்குலைத்து
பாய்ந்து திரிகின்ற தவளைகள் ஆக்கினோம்
நா(மு)ம்
ஒரு நாடுமின்றி, ஒரு குழந்தையுமின்றி
துயரங்களின் அருகாமைகளைச்
சுற்றிச் சுற்றி அலைபவர்களானோம்

16
கல்யாண விருந்துக்கு வராதவர்களுக்காய்
ஓரிடத்தும் இல்லாதவாறு
அராபிய நடனம்
அராபிய உணவு
அராபிய சங்கீதம்
ஏன் அராபிய ஒழுக்கம்
எல்லாம் இருந்தன

17
அரைவாசிச் சீதனம்
டொலரில் இருந்தது
வைர மோதிரமும் டொலரில் வாங்கப்பட்டது
திருமணப் பதிவுக்காரரின் கூலியும்
டொலரில் கொடுக்கப்பட்டது
திருமண கேக் - அமெரிக்கா அன்பளித்தது
மணமக்களின் ஆடை, பூக்கள்
மெழுகுவர்த்திகள்
எல்லாம் அமெரிக்கத் தயாரிப்பு

18
பலஸ்தீன் இல்லாமலேயே
திருமணம் முடிந்தது
அவளின் உருவத்தை
எல்லா ஒலிபரப்புக்களிலும் கண்டாய்
அவளின் அழுகை
சமுத்திரமூடே
சிக்காகோ, நியூயோர்க்
பயணித்ததைக் கண்டாய்

அறுவைக்கு வந்த
பறவையாய்ப் புலம்புகின்றேன்
இந்தத் திருமணம் எனது திருமணமல்ல
இந்த ஆடை என்னுடைய ஆடையல்ல
இந்த வெட்கம் என்னுடைய வெட்கம் அல்ல
இந்த வெட்கத்தை
நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்
அமெரிக்காவே!

எம்.கே.எம். ஷகீப்
(ஷகீப் காலித் என்ற பெயரில் முகநூலில் உள்ளார்)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Lareena said...

அற்புதமான பதிவு. //நினைத்து அழுவதற்கு
ஒரு துண்டுச் சின்னமும்
எமக்காக இல்லாமல்
அவர்கள் கண்களையே
எடுத்துச் சென்றுவிட்ட போது
ஒரு சமூகத்தால் அழ முடிவதெப்படி?// மனதை இம்சிக்கும் வரிகள்! பகிர்வுக்கு மனம் நிறைந்த நன்றி! :)

Kross Power Tools said...

salam nana,

everything nice.