ஆதம் ஆதில் (ஈராக்)
எனது ஆத்மாவைக் கொண்டு
சிந்தித்துப் பார்க்கிறேன்
வாழ்வைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன்
அலைக்கழிக்கும் ஒரு பாதையில்
எனது ஆத்மா பயணிப்பதைக் கண்டு கொண்டேன்
எண்ணங்களும் சொற்களும்
என்னிடமுள்ளன.
வெளிப்படையாகச் சொல்வதானால்
அவை
ஒரு சிறிய பாதத்தின் கீழ் வைத்து
நசுக்கி விடக் கூடியவை
ஆனால் அவை அச்சுறுத்துபவை அல்ல
அச்சுறுத்தப்பட்டவனாகவே இருக்க
என்னை அனுமதியுங்கள்
குழந்தைகள் வளர்ந்த பிறகு
மனிதர்களின் நல்லவற்றைப் பார்த்துக் கொள்ளட்டும்.
தொழுகையும் நோன்பும் மாத்திரமே
மார்க்கம் அல்ல என்பதை
அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்
மார்க்கம் என்பது எல்லோர் முகங்களிலும்
உள்ள புன்னகையாகும்
மார்க்கம் என்பது ஒரு விம்மற் பெருமூச்சும்
ஓர் உணர்ச்சிப் பாடலுமாகும்
இல்லை..
நாம் அச்சுறுத்தப்படவில்லை
கருணையுள்ள இறைவனானவன்
எல்லா இடங்களிலும் இருக்கிறான்
ஆனால் சில வேளைகளில்
பலர்
அதைக் காணமுடியாதோராக இருக்கிறார்கள்
உலகத்தை நோக்கிச் செல்லும் போது
அது விலங்குகளால் ஆனது என்பதைக் காண்கிறேன்
அதன் சுகவியல் நிலைமையோ -
தாண்டிச் செல்லும்
ஜன்னலுக்குப் பின்னால் தெரியும்
மரித்த கரம் ஒன்றைப்போலவும்
பின்னாலிருந்து வரும் ஒரு பெண்ணின்
அவலக் குரல்போலவும்
அழுகையின் அமைதி போலவும்
தரை விரிப்பில் விழுந்து கிடக்கிறது
எனது தாயாரின் முகத்தை முதலில் பார்த்த வேளை
வாழ்வின் கருணை நிறம் எதுவென்று கண்டேன்
வாழ்ந்து கொண்டோ அல்லது மரித்த பின்போ
மனிதம் ஓய்வாக இருக்க முடியாது
என்று புரிந்து கொண்டேன்
தொட்டிலில் நான் கிடந்த காலமெல்லாம்
எனது தாய் சொன்ன வார்த்தை
'அமைதி!' என்பதுதான்!
மனிதர்கள் வெளிப்படையாகப் பேச விரும்பாத
வாழ்க்கையையும் உலகத்தையும்
நான் படித்தேன்
பயந்திருப்பதையே மனிதர்கள் விரும்புகிறார்கள்
மனிதர்கள்
உயரமாக வளர்வதற்கே விரும்புகிறார்கள்
சிந்தனை இல்லாத மரங்களைப் போல!
கனிவு கொள்வதற்கோ ஆவல்கொள்வதற்கோ
அல்லாமல்
வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமே
அவர்களுக்குக் கண்கள் தேவைப்படுகின்றன
ஒரு பெரிய புன்னகையைக் கூட
முகங்களில் காணக் கிடைக்கவில்லை..
அவர்கள் எனக்குச் சொன்னதெல்லாம்
'வாழ்க்கை சீக்கிரமாகக் கடந்து செல்கிறது
கனவு கண்டு கொண்டிராதே!' என்பதைத்தான்!
பண்டிகைச் சந்தோஷம் என்பது கூட
அர்ப்பணிப்புக்கும் இரத்தச் சகதிக்கும்
மட்டுப்படுத்தப்பட்டது என்றும்
உணர்ச்சி கொண்டு கவிதை வடிப்பது
தடுக்கப்பட்டது என்றும் கற்பித்தார்கள்
மூடிக் கொண்டு வாழ்வு காலத்தைக்
கழிக்கும்படி சொன்னார்கள்
'காலம் வேகமாகக் கழிந்து கொண்டிருக்கிறது
மனுக்குலம் விரைவில் அழிந்து விடும்'
என்று அவர்கள் எனக்குச் சொன்னார்கள்
'உனது அந்தம்
கப்ரிலும் நெருப்பிலுமே முடிவடையும்.
எனவே நீ எப்படி இருக்க ஆசைப்படுகிறாயோ
அதற்கெதிராக உறுதியாக நடந்து கொள்'
என்று சொன்னார்கள்
உன்னுடைய ஆத்மாவுடன் இணங்கியிருப்பது
வெட்கக் கேடானது என்றார்கள்
'மகனே..
உனது விதி ஏற்கனவே எழுதப்பட்டு விட்டதால்
அதை நம்பாலிருக்கவோ கேள்வி எழுப்பவோ
முற்படாதே' என்றார்கள்
'நல்லதை நோக்கிய பாதையில்
ஒரு வழிகாட்டும் கரம் உனக்குத் தேவை
அதைத் தனியே உன்னால் அடைய முடியாது' என்றார்கள்
'மனித குலம் தனது இயல்பைப் பின்பற்றிச் செல்வது
நல்லதாயிருக்காது ' எனறும்
'பூக்களின் ஒரே நோக்கம்
மடிவது மட்டுமே' என்றும் சொன்னார்கள்
வணங்குவது எப்படி என்று கற்பித்தவர்கள்
ஒன்றில் நரக நெருப்பிலிருந்து தப்புவதற்கோ
அல்லது பேராசையுடன் சுவர்க்கத்தில் நுழைவதற்கோ
எப்படி இயல்பாக இறைவனை வேண்டுவது என்று
சொல்லித் தரவில்லை.
வாழ்க்கையை
நியாயத் தீர்ப்பு நாளுடனும் நரகத்துடனும்
ஏன் அவர்கள் வரையறை செய்தார்கள்?
காதடைக்கும் திட்டங்கள் கொண்டு
பெண்கள் ஏன் மீண்டும் எரிக்கப்படுகிறார்கள்
ஏற்றுக் கொள்ளாதவன்
விலக்கி வைக்கப்படுவதும்
எதிர்த்து நிற்பவன்
நம்பிக்கையற்றவனாக்கப்படுவதும் ஏன்?
சிந்தித்துப் பார்த்தால்
இது வெட்கக் கேடானது அல்லவா
இழிவுண்டாக்கும் செயல் அல்லவா?
கிலியுண்டாக்குவதிலும் அச்சப்படுத்துவதிலும்
ஈடுபடும் தொகையினரைப் பார்த்தால்
மார்க்கம் என்பது
வஞ்சம் தீர்க்கும் ஒரு வழிமுறை என்றே
எண்ணத் தோன்றுகிறது
மார்க்கம் என்பது
வஞ்சம் தீர்க்கும் ஒரு வழிமுறை என்று
புரிந்து கொள்வது மோசமானது
மார்க்கம் என்பது
சுவர்க்கமாகவும் நரகமாகவும் பார்க்கப்படுவது
மோசமானது
மார்க்கம் என்பது
ஆடையின் நீளத்தால் விளங்கிக் கொள்ளப்படுவது
மோசமானது
இறைவன் ஆத்மாவுடன்தான்
நம்மைப் படைத்திருக்கிறான்
ஆகவே நாம் பறப்போம்!
நமது இதயங்களை
வர்ணமயப்படுத்துவோம்
ஒவ்வொன்றாக வாழ்வோம்
மனித மனத்தை
ஊசியும் நூலும் கொண்டு வழிநடாத்த முடியாது
மனம் என்பது சிந்தனைக்கானது
மனிதர்கள் கொடியவர்கள் என
மலக்குகள் சொல்லும் போது
'இல்லை.. அவர்கள் களிமண்ணால் ஆனவர்கள்
நல்ல அம்சங்களைக் கொண்டவர்கள்'
என்று அவன் பதிலளித்தான்
-----------------------------------------------------------------
(மொழைிபெயர்ப்பு)
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
No comments:
Post a Comment